சிறுகதை - இரண்டாவது...
கொரோனாவுக்கு முந்தைய பொற்காலம் என்பதால் கிராண்டான மண்டபத்தில், ரிஸப்ஷன் நடந்து கொண்டிருந்தது.சுனந்தாவும் விஜயேந்திரனும் அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு, போட்டோவுக்குச் சிரித்து... அவசியம் சாப்பிட வேண்டுமா என்பது பற்றி யோசித்து, “நீ சாப்பிட்டாகணும்...” என்று விஜய் சொன்னதால் டைனிங் ஹாலை நோக்கிச் சென்றார்கள்.
அப்படிப் போயிருக்காவிட்டால் அந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்காது.ஷாண்டிலியர்களின் ஒளிச்சிதறலில் சுனந்தா மின்னி மினுக்கினாள். வயலெட் நிறச் சேலை அவளை மேலும் பளீர் செய்தது. மிதமான அலங்காரம்.புஃப்பேயில் வரி…சையாக டிஷ்கள்.விஜய் காதில் கிசுகிசுத்தான். “யார் வந்திருக்காங்க பாரு...”திரும்பினாள்.
மா...மி...யா…ர்!பகீர் என்றது. “அம்ம்ம்மா…” தன்னிச்சையாய்க் கன்றுக்குட்டி மாதிரித் துள்ளி நெருங்க… பாம்பு நெருங்கியதுபோல் மஞ்சுளா அம்மாள் பின்வாங்கினார்.“சீ நீயா..? உன்னைப் பார்க்கவே விரும்பவில்லை...” என்று ஆரம்பித்து ஆயிரம் வசனங்கள் பேசியது அந்த ஒற்றைக் கனல் பார்வை.“அம்மா...” கண்களில் துளிர்த்த நீரை அடக்கிக்கொண்டாள்.
‘நீ யார் என்றே எனக்குத் தெரியாதே’ என்பதுபோல் அந்த அம்மாள் திரும்பிக்கொள்ள... சுற்றியிருந்தவர்கள் பார்ப்பார்களோ என்ற சங்கடத்தில் நகர்ந்தாள் சுனந்தா.அவள் அம்மா என்று கூப்பிட்டாளே... அது சம்பிரதாய அழைப்பு இல்லை. அம்மாவைவிட அன்பாயிருந்தவர். அம்மாவைவிட செல்லம் அதிகம் தந்தவர்.“நீங்க வந்து அவங்ககிட்ட பேசுங்களேன்...” கெஞ்சலாய்க் கேட்டாள்.
“வா வீட்டுக்குப் போகலாம்...” “இல்லைங்க... பேசிட்டுத்தான் வரப்போறேன்...” “அவமானப்படப் போறியா?” “அவங்க அவமானப்படுத்த மாட்டாங்க...” பரிதாபம் காட்டும் பார்வையை வீசினான்.
முன்பெல்லாம் ‘அம்மா’ இப்படி இல்லை. மருமகளுக்குச் சாப்பாடு பிசைந்து வாயில் ஊட்டியிருக்கிறார். கல்யாணத்துக்கு அடுத்த நாளே பெட்டி முழுக்க நகைகளை எடுத்து மருமகளுக்கு அளித்தார்.பாப்பா பிறந்தபோது சுனந்தாவின் அம்மா ஒப்புக்குத்தான் ஆஸ்பத்திரியில் இருந்தாள். அவளின் ரோலை முழுவதும் ஏற்றுச் செய்தது மாமியார்தான்.
“வயிற்றுக் குழந்தைக்காகவாவது கொஞ்சமாய்ச் சாப்பிடு...” கணவனின் வார்த்தை காதிலேயே விழவில்லை. கண்கள் மட்டும் மாமியாரைத் தொடர்ந்து கொண்டே இருந்தன.சாப்பிடாமல் அந்தம்மாள் வெளியேறுவது தெரிந்தவுடன் “வாங்க போகலாம்...” என்றாள் கணவரிடம். அவள் வேகத்துக்கு அவனால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஒரே தாவாய்த் தாவி மாமியாரைப் பின்தொடர்ந்தாள்.வாசலில் நின்று யாருக்கோ போன் செய்துகொண்டிருந்தவரை நெருங்கினாள். “அம்மா... ப்ளீஸ் பேசுங்கம்மா. இங்கேயே காலில் விழறேன்மா...” திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
முன்பெல்லாம் காலில் விழுந்து வணங்கும் சமயங்களில் “தீர்க்க சுமங்கலியாய்... ஆயுள் ஆரோக்ய ஐஸ்வர்யம்... மன நிம்மதியுடன் அஞ்சு தலைமுறை பார்த்து அமோகமாய் இருடா...” என நிறைவாக ஆசீர்வதித்த வாய்! இப்போது இறுக மூடியிருந்தது. டாக்ஸிக்குக் காத்திருக்கிறார் என்று புரிந்தது.
“நம் வண்டியில் வாங்கம்மா... ப்ளீஸ்...” நிறைவேறாது என்று தெரிந்தும் கேட்டாள். மேடிட்டிருக்கும் தனது வயிற்றைப் பார்த்திருப்பாரோ? முகத்தைத் திருப்பிக்கொண்டால் எப்படிப் பார்த்திருக்க முடியும்? “அம்மா... நாலு மாசம் ஆயிருக்கும்மா. உங்க கையால் சாப்பிடணும்னு ஆசையா இருக்கும்மா...” கண்ணீருடன் மறுபுறம் திரும்பிக்கொண்டார் அந்த அம்மாள்.
இதற்குள் டாக்ஸி வந்துவிட்டது. இவளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஏறி அமர்ந்து எதிர்ப்புறம் பார்த்துக்கொண்டிருந்தார். தாம்பூலப்பையை நீட்டிய கேட்டரிங் பெண்ணைக் கண்டுகொள்ளாமல் வெளியேறினாள். “ப்ளீஸ் அழாதே... வயிற்றில் பிள்ளை இருக்கு...” கணவன் கெஞ்சினான்.
முதலிலிருந்தே கொடுமைக்கார மாமியாராய் இருந்திருந்தால் எத்தனையோ நன்றாய் இருந்திருக்குமே? இவள் பார்த்துக்கொண்டிருந்தபோது அந்த வண்டியின் டிரைவர் புயல்போல் கதவைத் திறந்து, ஓடி வந்தார். “அவங்க கூடப் பேசிக்கிட்டிருந்தீங்களே... உங்களுக்கு வேண்டியவங்களா..?” ”அவங்க என் அம்மா...
ஏன்பா?” “தி.நகர் போகணும்னு சொல்ல ஆரம்பிச்சாங்க... டக்குனு சரிஞ்சுட்டாங்க...” விஜயேந்திரன் பாய்ந்து அந்த வண்டியை நெருங்கினான். “ஐயோ...” பதறினாள் சுனந்தா.
“ப்ளீஸ்... இவங்களை அந்த வண்டியில் ஏத்திடுப்பா...” கெஞ்சலாய்ச் சொன்னான் விஜய். “கண்டிப்பா செய்யறேங்க...”தன் வாட்டர் பாட்டிலிலிருந்து தண்ணீரை எடுத்து மஞ்சுளாம்மாவின் முகத்தில் தெளித்தாள். அசையவில்லை.தன்னால்தானே சாப்பிடாமல்கூடக் கிளம்பினார்கள். சட்டென்று கத்தினாள். “லோ ஷுகர்..?”
உள்ளே போய் வாசலில் இருந்த சர்க்கரைத் தட்டிலிருந்து ஒரு கை அள்ளி வந்து தண்ணீரில் கரைத்துப் புகட்டினாள். பலன் இருப்பதாய்த் தெரியவில்லை.“அடையாறு பிரிட்ஜ் பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்போவோம்...” என்ற விஜய், இரண்டு முறை “அம்மா... அம்மா...” என்று கூப்பிட்டுப் பார்த்தான்.வேகமாய் மூச்சு வந்து கொண்டிருந்தது.
அது ஒன்றுதான் நம்பிக்கை இழை.பறந்தான்.“ஹார்ட் அட்டாக்...” டாக்டர் இவர்களை அழைத்துச் சொல்வதற்குள் அட்மிட் செய்து, கார்ட் தேய்த்துப் பணம் கட்டி முடித்திருந்தான் விஜய்.ஈசிஜியில் ஆரம்பித்து, வரி…சையாய் டெஸ்ட்கள்.“அந்த அம்மா உங்களைக் கூப்பிடறாங்க... ரெண்டு நிமிஷம் பேசிட்டு வந்துடுங்க...” என்றார் டாக்டர்.உள்ளே போனார்கள்.
மெல்லிய குரலில் கேட்டார்- “என்னை ஏன் காப்பாத்தினீங்க?” விஜய் அவரின் கையைப் பிடித்துக்கொண்டான். “நீங்க பிழைச்சுத்தான்மா ஆகணும்... குழந்தையைப் பார்த்துக்கணும்... வளர்க்கணும்... சுனந்தாவின் குற்ற உணர்ச்சியை அழிக்க அது ஒண்ணுதான் வழி...”
“உங்க பிள்ளை உங்களை சூப்பர் வேகத்தில் கொண்டு வந்து சேர்த்தாருங்கம்மா... ஹார்ட் அட்டாக் வந்தால் கோல்டன் அவர்னு சொல்லுவாங்க.. அந்த நேரத்துக்குள் அலுங்காமல் கொண்டு வந்து அட்மிட் பண்ணிட்டாலே எங்க மாதிரி டாக்டருங்களுக்குப் பாதி நிம்மதி...” விஜயேந்திரனின் தோளைத் தட்டிப் பாராட்டினார் டாக்டர்.கண்கள் சுழற்ற அரை மயக்க நிலைக்குப் போனார் அந்த அம்மாள்.
நாத்தனார்களுக்கு போன் செய்தாள் சுனந்தா. வழக்கம்போலத்தான். எவளும் எடுக்கவில்லை. ஆஸ்பத்திரி போனில் அழைத்தாள். புருஷனைப் பேசச் சொன்னாள்.அடித்துப்பிடித்து மூன்று பேரும் ஓடிவந்தார்கள். ‘கிராதகி’ என்பதுபோல் பார்த்தவாறு “எங்கே எங்கம்மா...” என்று ஆத்திரமாய்க் கேட்டார்கள். பக்கத்தில் நின்ற விஜயேந்திரனைப் பார்வைகள் பொசுக்கின.
“அவங்களுக்கு நாளைக்கு ‘ஆஞ்சியோ டெஸ்ட்’ எடுக்கணும்...” என்று டாக்டர் சொன்னபோது மாப்பிள்ளைகள் மெல்ல நழுவினார்கள். விஜயேந்திரன் பணம் கட்டினான். காட்டிய இடங்களில் கையெழுத்துப் போட்டான்.ஆஞ்சியோவுக்குப் பிறகு டாக்டர்கள் சர்ஜரியை நோக்கி இவர்களைச் செலுத்தினார்கள்.கவலையுடன் டாக்டர் முகத்தைப் பார்த்தாள். “எவ்வளவு ரூபாய் செலவாகும் டாக்டர்?” பேக்கேஜ் பயமுறுத்தியது.
“பணத்தைப் பற்றிக் கவலை இல்லை டாக்டர்... அடுத்து என்ன செய்யணும்? எவ்ளோ பணம் கட்டணும்?” என்று விஜயேந்திரன் கேட்டபோது மாப்பிள்ளைகள் மூன்று பேரும் வெளியிலிருந்த கடையில் ஜூஸ் குடித்துக்கொண்டிருந்தார்கள்.அன்றைக்கு இரவு, தான்தான் தங்குவேன் என்று மூன்று சகோதரி களும் போட்டி போட்டனர். இரண்டு நாட்களில் போட்டியின் வலு குறைந்தது.மூவருக்கும் விதவிதமான காரணங்கள் கிடைத்தன.
“நான் பார்த்துக்கறேன் அக்கா...” என்றாள். புழுப்போல் பார்த்து பதில் சொல்லாமல் கிளம்பினார்கள். இவளால் முடியும். மூத்த பெண் குழந்தை லவ்டேலில் படிக்கிறாள். நாளைக்கு வீட்டுக்குப் போய்க்கொள்ளலாம். “நகைகளை வித்துடலாமா விஜய்?”“நான் வாங்கிக் கொடுத்ததை மட்டும்தான் விக்கலாம்...” என்ற கணவனை, ஆஸ்பத்திரி என்றும் பார்க்காமல் அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.மாமியாருக்கு மெல்ல மெல்ல யதார்த்தம் புரிந்தது.
ஆரம்பத்தில் இவர்களை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளப் பழகி... பிறகு இவர்களின் அருமை புரிந்தது.பெற்ற பெண்கள் மாலை நேர விசிட்டர்களாக வருவதும்... சர்ஜரி தினத்தில் இவர்கள் மட்டும் இருந்ததும்…“கங்கிராட்ஸ்... உங்க மகனும் மருமகளும் உங்களைக் காப்பாத்திட்டாங்க...” என்றார் டாக்டர்.இரண்டு பேரின் கைகளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டார் மஞ்சுளா அம்மாள். இவன் என் மகன் இல்லை. என் மகன் இறந்தபிறகு என் மருமகளைக் கல்யாணம் செய்துகொண்ட இரண்டாம் புருஷன் என்ற உண்மையை அந்த அம்மாள் சொல்லவில்லை. மாட்டாள்.
வேதா கோபாலன்
|