ஆணுக்கொரு அழகுக் குறிப்பு!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


                பெண்களுக்கு தாராளமாக அழகுக்குறிப்புகளை அள்ளித்தருகிற எந்தப் பத்திரிகையும், ஆண்களைக் கண்டுகொள்வதே இல்லை. அழகு விஷயத்தில் அவர்களுக்கும் சந்தேகங்கள் இருக்காதா? பல ஆண்களுக்கும் இன்று 30 பிளஸ் தொட்டதுமே மீசை நரைக்க ஆரம்பிக்கிறது. மீசைக்கு டை அடிக்கலாமா? இளம் வயதில் சிலருக்கு மீசை நரைப்பது ஏன்?
 சி.பாலமுருகன், சென்னை-5.

பதில் சொல்கிறார் ‘கிரீன் ட்ரெண்ட்ஸ்’ கோபாலகிருஷ்ணன்

பொதுவாகவே பெண்களைவிட, ஆண்களுக்கு சீக்கிரம் நரை வரும். காரணம் புகை, குடிப் பழக்கங்கள், அதிக டீ, காபி குடிப்பது போன்றவை. தைராய்டு பிரச்னையோ, ரத்தசோகையோ இருந்தாலும் நரை வரும். மன அழுத்தமும் முக்கிய காரணம். வைட்டமின் பி 12 குறைபாடு இன்னொரு காரணம்.

ரோமங்களின் வேர்க்கால்களில் ‘கெராட்டின்’ என்கிற மெலனின் இருக்கும். அதுதான் கறுமைக்குக் காரணம். வயதாக ஆக, அதன் அடர்த்தி குறைய ஆரம்பித்து, நரை எட்டிப் பார்க்கும். முதல் நரை முடியைப் பார்த்ததும் பலரும் செய்கிற தவறு, அதைப் பிடுங்குவது. அப்படிப் பிடுங்கினால், நரைத்த முடியின் வேர்ப்பகுதியில் இருந்த நிறமி, மற்ற ரோமங்களின் வேர்களுக்கும் பரவி, நரையை அதிகப்படுத்தும்.

ஆர்வக்கோளாறில் சிலர் மீசை நரைக்கு ஹென்னா போடுவார்கள். அது மீசையை சிவப்பாக்கி, அசிங்கமாகக் காட்டும். அம்மோனியா இல்லாத டை வகைகள் இப்போது கிடைக்கின்றன. அவை பாதுகாப்பானவை. வெறும் 5 நிமிடங்களில் மீசையைக் கறுப்பாக்குகிற டை இப்போது பிரபலம். சில வகை டைகள் தற்காலிகமாக மீசையைக் கறுப்பாக்கினாலும், தண்ணீர் படும்போதெல்லாம் கரைந்து வந்து, முகத்தையே கறுப்பாக்கி விடும். ஸ்ட்ராங்கான கெமிக்கல் கலந்த டை உபயோகிப்பதைத் தவிர்க்கவும். மீசைக்கு டை அடிக்க முடிவு செய்வோர், முதல் சில முறைகள் பார்லரில் சென்று அடித்துக் கொள்வதன் மூலம், சருமத்தில் டை பரவுவதைத் தவிர்க்கலாம். அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையுடன் பிறகு வீட்டிலேயே அடித்துக் கொள்ளலாம்.

கோயில்களில் சிலைகள், கலசம் உள்ளிட்ட பலதும் தங்கத்தால் ஆனதாகச் சொல்கிறார்கள். இதெல்லாம் உண்மையிலேயே முழுக்க முழுக்க தங்கத்தினால் செய்யப்படுபவைதானா? வீட்டு பூஜையறையில் உள்ள பழைய சாமி சிலைகளுக்கு தங்க முலாம் பூசி வழிபடலாமா? எந்த மாதிரி உலோகங்களுக்கு தங்க முலாம் பூசலாம்?
 கே.பிருந்தா, கரூர்.

பதில் சொல்கிறார் ‘ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்’ பங்கஜ் பண்டாரி

கோயிலுக்குள் அடியெடுத்து வைத்ததும் முதலில் உங்கள் கண்களில் படுகிற கொடிமரம், பிறகு கலசம், அடுத்து விமானம் என எல்லாமே தாமிரத்தால் செய்யப்பட்டவையே. அவற்றின் மேல் தங்க ரேக் ஏற்றப்பட்டிருக்கும். மிக மிக அரிதாக சில கோயில்களில் மட்டுமே சாமி விக்ரகங்கள் தங்கத்தால் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. மற்றபடி பெரும்பாலான கோயில்களில் அவை பஞ்சலோகத்தால் ஆனவையே.

பிறகு எப்படி தங்கம் போல பளபளக்கிறதே என சந்தேகம் வரலாம். வெண்கலமோ, தாமிரமோ, வெள்ளியோ... எதுவானாலும், காற்று படும்போது நிறம் மாறுவது இயல்பு. அதைக் கருத்தில் கொண்டுதானோ என்னவோ நம் முன்னோர்கள் அபிஷேகம் என்ற ஒரு ஐதீகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிற பல பொருள்களும், உலோகங்களின் நிற மாற்றத்தைத் தடுத்து பளபளப்பாக்கி விடும்.

வீட்டில் ஏற்கனவே வழிபட்டுக் கொண்டிருக்கிற சாமி விக்ரகங்களுக்கும் தங்க முலாம் பூசி, தங்கச் சிலை போலவே மாற்றலாம். ஒருமுறை தங்க முலாம் பூசிவிட்டால் அப்படியே இருக்கும். வெள்ளி, தாமிரம், பித்தளை, அலுமினியம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், மரம்... இப்படிப் பலதிலும் தங்க முலாம் பூசி மெருகேற்ற முடியும்.