காற்றின் கையெழுத்து



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


அரபிக்கடலின் தாலாட்டு... மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆசீர்வாதம்... அழகின் பரவசம் மும்பை. பெரிய சாலைகள், பெரிய பெரிய வர்த்தகக் கட்டிடங்கள், வைர வியாபாரிகளின் சொர்க்கம், அனுமதி பெற்ற பாலியல் அழகிகள், இளமையின் சுதந்திரம், ஃபேஷன், பொழுதுபோக்கு எல்லாவற்றிலும் மும்பை ஜொலிக்கிறது. 'மிகச் சிறப்பான, பாதுகாப்பான இரவு வாழ்க்கை மும்பையில்தான் இருக்கிறது’ என்று அனுபவித்த நண்பர்கள் அடிக்கடி சிலாகிக்கிறார்கள்.

1993ம் ஆண்டு பதினேழு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு. முன்னூறு பேர் பலியானார்கள். அதிர்வு அடங்காமல் மும்பை அடுத்தடுத்து வெடிகுண்டுகளால் தாக்கப்படுகிறது. இந்த ஜூலை 13ம் தேதியன்று ஜாவேரி பஜார், ஒபேரா ஹவுஸ், தாதர் பஸ் நிறுத்தம் என மூன்று இடங்கள். குறிக்கோளை நோக்கி நகர்த்தப்படும் கால்பந்து போல, வெடிகுண்டு நகர்ந்து கொண்டே இருக்கிறது.

குண்டு வைப்பவர்களுக்கு மும்பை மட்டும் ஏன் இனிக்கிறது? எனக்குள் பல கேள்விகள் வெடித்துச் சிதறுகின்றன.

மும்பை, இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம். அங்கே அடித்தால்தான் அரசாங்கம் அதிரடியாகத் திரும்பிப் பார்க்கும் என்று நினைக்கிறார்களா?

இரண்டு கோடி மும்பையின் மக்கள் தொகையில் ஒரு பெரும்பகுதி நடுத்தர வர்க்கம். இன்னொரு பெரும்பகுதி ‘சவுல்’ என்றழைக்கப்படுகிற குடிசைப் பகுதியில் வாழும் கடைக்கோடி சேரி மக்கள். இவர்களின் வாழ்க்கை நிலை உயரவில்லை. மும்பையின் பொருளாதார நிலையும் அப்படித்தான்; அது கீழ்நோக்கித்தான் வருகிறது என்று புள்ளிவிவரங்கள் பேசுகின்றன. மும்பையில் வாழும் மிச்சமுள்ள பணக்கார மனிதர்கள் ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒரு கால் என்பது மாதிரி மும்பையிலும் மேற்கத்திய பணக்கார நாடுகளிலும் மாறி மாறி வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் மும்பை மீண்டும் மீண்டும் தாக்கப்படுகிறது?

பரபரப்பான மும்பை வாழ்க்கை இஸ்லாமிய தீவிரவாதிகளால் சீரழிக்கப்படுகிறதா?

அப்படியானால் கடந்த காலங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஏராளமான முஸ்லிம் மக்கள் இறந்திருக்கிறார்களே, எப்படி? இறந்தவர்கள் ‘இந்துக்கள்’ என்று சொல்லப்பட்டதால் கொல்லப்பட்டவர்களா?

நிறைய நிறைய மக்கள் கூடும் இடங்களில் குண்டு வைப்பதினால் என்ன பயன்? மக்களைக் கொன்று குவிப்பதால் அவர்கள் எதிர்பார்த்தது நிறைவேறியதா?

ஒவ்வொரு குண்டுவெடிப்பின்போதும், ‘இதை நாங்கள்தான் செய்தோம்’ என்று ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்பு சொல்வது, போலீஸ் அல்லது அரசாங்கத்தின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. அதற்குப் பிறகு என்ன நடந்தது?

‘தோல்வியடைந்தது விசாரணையல்ல; அரசின் கொள்கைதான்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

மும்பையில் இந்துப் பெயர்களிலான தலைமறைவுத் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இஸ்லாமியப் பெயர்களிலான தலைமறைவுத் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இருவருமே காவல்துறையினால் தேடப்படுகிறவர்கள். ஆனால் ‘மும்பையில் அவர்கள் இல்லை’ என்றும் காவல் துறையால் நம்பப்படுகிறவர்கள். இங்கேதான் நம் கேள்வி இன்னும் அழுத்தம் பெறுகிறது... தீவிரவாதிகள் ஏன் மும்பையைத் திருப்பித் திருப்பித் தாக்குகிறார்கள்?

காஷ்மீரில் இதுபோல பல குண்டு வெடிப்புகள் நடந்தி ருக்கின்றன. அவற்றை அந்த மக்களின் பிரிவினைப் போராட்டம் என்று பாகிஸ்தான் சொல்கிறது.

ஒரிசா, அசாம் போன்ற இடங்களில் இப்படி நிகழ்வுகள் நடக்கும்போது, அதை ‘நிலவுரிமைப் போராட்டம்’ என்று அவர்களுக்குச் சாதகமானவர்கள் சொல்கிறார்கள். ‘இல்லை... இல்லை... இந்தியாவின் உள்நாட்டு அமைதியைச் சீர்குலைக்க & இந்தியாவை உடைக்க & வெளிநாடுகளின் தூண்டுதலினாலோ அல்லது வேறெதனாலோ நடக்கும் தீவிரவாதிகளின் முயற்சிதான் இது’ என்று அரசு சொல்கிறது. சரி, மும்பையில் எதற்காக குண்டு வைக்கிறார்கள்? நிலவுரிமைப் போராட்டம் நடக்கிறதா? அப்படியானால் இந்து, முஸ்லிம் என்று ஏன் வகைப்படுத்த வேண்டும்?
இது அரசியல் தீவிரவாதம் இல்லை. ஏனென்றால், எல்லா ஊர்களிலும் இருந்து பிழைக்க வந்தவர்கள்தான் மும்பையில் இருக்கிறார்கள். அவர்கள் பிழைப்புக்குத்தான் போராடுவார்களே தவிர, புதிய அரசியலுக்குப் போராட மாட்டார்கள். அப்படியானால் தீவிரவாதிகள் யாரை பயமுறுத்த & எதை வேண்டி & எதற்காக மும்பையில் குண்டு வைக்கிறார்கள்?

மும்பை மக்கள் மூர்க்கமான கோபத்தில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மரத்தும் போயிருக்கிறார்கள். வெளியே போய்விட்டு வீடு திரும்ப முடியவில்லை. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. மும்பையில் கொட்டும் ஜூலை மாதப் பருவமழையின் மின்னல் இடி போல, தீபாவளிக் கொண்டாட்டத்தின் சரவெடி போல, பிள்ளையார் பஜனையில் கை தட்டும் ஓசை போல வெடிகுண்டுகளின் ஓசையை சர்வ சாதாரணமாகவும் எதிர்கொள்கிறார்கள்.

இரு பத்தாண்டுகளாக நடக்கும் இந்தத் தொடர் குண்டுவெடிப்புக்கு எந்தக் காரணமும் அறியாமல் மும்பை மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்; இருந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆணித்தரமாக, ‘இந்தத் தீவிரவாத கும்பல்... இதற்காகத்தான் இதைச் செய்கிறது’ என்று காரணம் சொல்லப்படவில்லை.

மும்பையில் இந்துக்களும் முஸ்லிம்களும் மட்டுமல்ல... யூதம், சமணம், புத்தம், பார்சி, சிந்தி மதப் பிரிவினரும் வாழ்கிறார்கள். பல மாநிலங்களிலிருந்து வந்து மராட்டியர்களோடு ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

இன்று இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது. வாழ்க்கைக்குப் பாதுகாப்பில்லை. உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

இந்த முறை இறந்தவர்களில் நிறையப் பேர் மராட்டியர்கள். இஸ்லாமிய தீவிரவாதத்தின் பெயரால் இந்துக்களைக் கொல்கிறார்களா, காவி பயங்கரவாதத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கொல்கிறார்களா என்கிற பின்னணி மக்களுக்குத் தெரியவில்லை. சாதாரண மும்பை மக்கள்தான் செத்து மடிகிறார்கள்.

வெடிகுண்டு வைப்பவர்களுக்கு மும்பை மட்டும் ஏன் இனிக்கிறது?

காவல்துறையின் புலனாய்வுகளும் அரசியல்வாதிகளின் பேச்சுகளும் தண்டவாளங்களைப் போல நீண்டு கொண்டே போகின்றன. அடிவானத்தைத் துளைத்து அதற்கப்பாலும் அவை போய்க்கொண்டே இருக்கின்றன.
(சலசலக்கும்)
பழநிபாரதி