குப்பையில் கைவண்ணம் காட்டும் இளைஞர்!



“எனது வாழ்நாள் முழுவதும் குப்பை என அழைக்கப்பட்டேன். இப்போது அந்த குப்பையைப் பயன்படுத்தியே கலைப்படைப்புகளை உருவாக்குகிறேன்...” என்று நெகிழ்கிறார் கைவினைக்கலைஞர் ஹர்மிந்தர் சிங் போபாராய்.வீட்டில் பயன்பாடற்ற இரும்பு மற்றும் மரப்பொருட்களைக் கொண்டு விதவிதமான அழகிய கலைப்படைப்புகளை உருவாக்கி வருகிறார்.

பஞ்சாப்பைச் சேர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைதல், கலைப் படைப்புகளை உருவாக்குதல் போன்ற விஷயங்களில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். தற்போது 39 வயதாகும் ஹர்மிந்தர் சிங்கிற்கு, 11 வயதில் பக்கவாதம் ஏற்பட்டதால் அவரது உடலின் வலது பாகம் செயல்திறனை இழந்து, மூன்று ஆண்டுகள் கழித்த பிறகே செயல்படத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையே ஹர்மிந்தர் சிங்கின் ஓவியத் திறமையைக் கண்டு வியந்த ஆசிரியை ஒருவர் ஊக்கம் கொடுத்துள்ளார். இந்த ஊக்கமே பள்ளி, கல்லூரிகளில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

இதனையடுத்து ஃபைன் ஆர்ட் மற்றும் சிலை வடிவமைப்பில் டிப்ளமோ பட்டத்தை பெற்றவர், இந்திய அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட தனது கலைப்படைப்புகள் மூலம் தனக்கான அடையாளத்தைக் கண்டுள்ளார். இந்தியா மட்டுமின்றி பல சர்வதேச கண்காட்சிகள் மூலம் உலக அரங்கிலும் புகழ் பெற்ற கலைஞராக இன்று தனது பயணத்தைத் தொடர்கிறார்.