ஆட்டோ ஓட்டுநரின் மகள்தான் மிஸ் இந்தியா ரன்னர்!



சூழ்நிலை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் கனவுகள் நனவாகும் என்பதற்கு மற்றொரு உதாரணம் மிஸ் இந்தியா 2020ல் ரன்னராக வந்த மன்யா சிங். ஆட்டோ ஓட்டுநரின் மகளான மான்யா சிங், உத்தரபிரதேசம் கோரக்பூரைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஆட்டோ ஓட்டி கொண்டுவரும் பணத்தை வைத்துதான் மொத்தக் குடும்பமும் பசியாறியது.

குடும்ப நிலையை உணர்ந்த மன்யா, பகலில் பள்ளிக்குச் சென்று படித்தார். மாலையில் அக்கம்பக்கம் வீடுகளில் பாத்திரம் தேய்த்தார். இரவில் கால்சென்டரில் வேலை பார்த்தார். இப்போது ஒற்றை வரியில் மன்யாவின் பால்ய கால வாழ்க்கையைச் சொல்லிவிடுகிறோம்.
ஆனால், தனது குழந்தைப் பருவத்தில் ஏராளமான கஷ்டங்களைக் கடந்துவந்த இவர், நிதி நெருக்கடி காரணமாக மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை முறையான கல்வியைப் பெற முடியவில்லை என்பதுதான் உண்மை.

“14 வயசுலயே வேலை செய்ய ஆரம்பிச்சுட்டேன். பீட்ஸா ஹட், பாத்திரம் கழுவற வேலைகளோடு காலணிகளை சுத்தம் செய்யற பணியையும் பார்த்திருக்கேன்.ஃபீஸ் கட்ட முடியாம தவிச்சிருக்கேன். ‘சீக்கிரத்துல ஃபீஸ் கட்டிடறோம்... பொண்ணை பள்ளில சேர்த்துக்குங்க’னு அப்பாவும் அம்மாவும் கெஞ்சியிருக்காங்க. இதையெல்லாம் கண்ணால பார்த்தும் அனுபவிச்சும்தான் வளர்ந்தேன். இப்படித்தான் பத்தாவது வரை படிச்சேன்.
மேல படிக்க எங்கம்மா தன்கிட்ட இருந்த ஒரே நகையான வெள்ளிக் கொலுசை கழற்றிக் கொடுத்தாங்க.

இரவு கால்சென்டர்ல வேலை பார்த்தப்ப, ஒருத்தர்கிட்ட எப்படி பேசணும்... மொழியை எப்படி உச்சரிக்கணும்னு கத்துக்கிட்டேன். எனக்குள்ள நம்பிக்கை பிறந்தது...’’ என்ற மன்யா சிங், மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றதற்குக் காரணம் இருக்கிறது.

‘‘வெற்றி பெறணும்னு உழைச்சா கண்டிப்பா வாழ்க்கைல முன்னேறலாம். இதை உலகத்துக்கு நிரூபிக்க நினைச்சேன்... அதனாலதான் மிஸ் இந்தியா போட்டில கலந்துகிட்டேன்...’’ என்னும் மன்யா சிங், பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்பவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ‘மிஸ் டிவா 2020’ போட்டியில் பங்கேற்று அட்லைன் காஸ்டெலினோ வென்றுள்ளார்.

தொகுப்பு: அன்னம் அரசு