இதுதான் எதிர்கால ஃபேஷன்



ஃபேஷன் உலகில் பாலின பாகுபாட்டை உடைத்து சமூக  வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறார் காஸ்டியூம் டிசைனர் சப்யாசச்சி முகர்ஜி. ‘இங்லீஷ் விங்லீஷ்’, ‘ராவண்’, உள்ளிட்ட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் சப்யாசச்சியின் உடைகளுக்கு இந்திய பிரபலங்கள் பலரும் அடிமை. ஃபேஷன் உலகில் தனக்கென தனி முத்திரையுடன் ஜொலிக்கும் சப்யாசச்சியின் ஒருவருட வருமானம் சுமார் 100 கோடி ரூபாய். மேலும் இவர் வடிவமைக்கும் உடைகள்  லட்சத்தில்தான் ஆரம்பிக்கும்.

இவரின் புது வரவு உடைகள் வெளியீடு என்றாலே இணையம் பரபரப்பு காட்டும். சமீபத்தில் தனது ஃபேஷன் உடைகள் கலெக் ஷனை தன் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் சப்யாசச்சி. அங்கே ஆரம்பித்தது நெட்டிசன்களின் களேபரங்கள். பெர்க்டார்ஃப் குட்மேன்(Bergdorf Goodman)  என்னும் பெயரிடப்பட்ட இந்த உடைகள் வித்தியாசம் காட்டுகிறது.

ஓர் ஆண் மாடல் பெண்கள் அணியும் பார்ட்டி ஸ்லிப் உடையில், ஹீல்ஸ் காலணி அணிந்து நிற்க, விவாதம் வெடித்தது. சிலர் இதை ஏற்காமல் சப்யாசச்சியை விமர்சனம் செய்யத் துவங்கினர். இன்னும் சிலர் அவர்களுக்கான புரிதலுடன் வரவேற்று பாராட்டியிருந்தனர்.

இதற்கு சப்யாசச்சி தரப்பில் சொன்ன பதில்: ‘‘இதுதான் எதிர்கால உலகம். இனி ஆண் உடை, பெண் உடை என எதுவும் இல்லை. அவரவருக்கு என்ன உடை பிடிக்குமோ அதை அணிவதே ஃபேஷன். மேலும் நாம் ஆண்- பெண் என்னும் அடிப்படையில் மட்டுமே ஃபேஷன் உலகை அணுகுகிறோம்.

ஆணின் உடலில் இருக்கும் பெண்ணை, அல்லது பெண்ணின் உடலில் இருக்கும் ஆணை மனதில் கொள்வதே இல்லை. பெரும்பாலும் திருநங்கைகள் பெண்களுக்கான உடைகளை மட்டுமே அணிய வேண்டியுள்ளது. நிச்சயம் இதில் ஏகப்பட்ட அளவுப் பிரச்னைகள் உண்டாகும். சாதாரண பெண்ணுக்கும் திருநங்கைகளுக்கும் நிச்சயம் அளவுகள் வித்யாசப்படும். எனவேதான் இந்த கான்செப்ட்டைக் கொண்டு வந்திருக்கிறோம்...’’ என்றார்.
தற்போது சம்பந்தப்பட்ட ஆண் மாடலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.l

ஷாலினி நியூட்டன்