நாசாவின் விண்கலனை வழிநடத்திய இந்தியப் பெண்!



கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகளால்  செவ்வாய் கிரகத்துக்கு  விண்கலம் ஒன்று  ஏவப்பட்டது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காகவும் அங்கிருந்து சிறிதளவு மண் மற்றும் கற்களைபூமிக்கு எடுத்து வரவும் அனுப்பப்பட்டது.  சமீபத்தில் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலப் பாதையில் கீழே விழாமல் 7 நிமிடம் பயணித்து வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. இந்த அரிய நிகழ்வை தலைமை தாங்கி வழிநடத்திய பெருமைக்குரியவர் இந்திய அமெரிக்கரான டாக்டர் ஸ்வாதி மோகன்.

“தரையிறக்கம் உறுதி செய்யப்பட்டது. ‘பர்செவரன்ஸ்’ செவ்வாயின் மேற்பரப்பில் பாதுகாப்பாக உள்ளது. கடந்தகால தடயங்களைத் தேடுவதற்கு தயாராக உள்ளது...” என்று மகிழ்ச்சி பொங்க அறிவித்தவரும் இவர்தான்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்த ஸ்வாதியின், சிறு வயதிலேயே இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்துவிட்டது. ஒன்பது வயது சிறுமியாக இருந்தபோது ‘ஸ்டார் டிரெக்’ என்ற அறிவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சி வெளியானது. அதில் விரிந்துகிடக்கும் பேரண்டத்தில் புதிய புதிய பகுதிகளைக் கண்டுபிடிப்பார்கள். அதைக் கண்டபோதுதான் அவருக்கும் விண்வெளி மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

‘‘நானும் அதுபோல செய்ய விரும்பினேன். இந்த பேரண்டத்தில் புதிய, அழகான இடங்களைக் கண்டுபிடிக்க விரும்பினேன். இந்த பரந்து விரிந்து கிடக்கும் விண்வெளி தனக்குள் நிறைய ஞானத்தைப் பொதிந்து வைத்திருக்கிறது. நாம் இப்போதுதான் அதைக் கற்கத் தொடங்கி
இருக்கிறோம்...’’ என நாசா வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்வாதி மோகன்.

அதே சமயம் 16 வயதுவரை ஒரு குழந்தைகள் நல மருத்துவராக  வேண்டுமென்று யோசித்திருக்கிறார். ஆனால், இயற்பியல் ஆசிரியரின் உந்துதலால் பொறியியல் படிப்பில் சேர்ந்து மெக்கானிக்கல் மற்றும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்து பட்டம் பெற்றார். பிறகு விண்வெளித்துறையில் எம்எஸ் மற்றும் பிஹெச்.டி பட்டங்களைப்பெற்றார்.

நாசாவின் ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகத்தில் சேர்ந்ததிலிருந்து பர்செவரன்ஸ் ரோவர் திட்டத்தில் இணைந்து பணியாற்றியது வரை Cassini, GRAIL போன்ற நாசாவின் பல முக்கிய திட்டங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார் ஸ்வாதி.

தொகுப்பு:அன்னம் அரசு