ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை



உலகம் முழுவதும் திரைத்துறைக்கான உயரிய அங்கீகாரமாக பல சர்வதேச திரைப்பட விழாக்கள் இருந்தாலும், சட்டென நம் நினைவுக்கு வருவது ‘ஆஸ்கர்’ விருது. இந்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது நிகழ்வில் ‘ம்ம்ம்…’(சவுண்ட் ஆஃப் பெயின்) என்ற குரும்பா பழங்குடியின மொழி திரைப்படம் மெயின்ஸ்ட்ரீம் போட்டியில் தேர்வாகியுள்ளது. கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட  இயக்குநர் விஜேஷ் மணி, இப்படத்தின் உருவாக்கம் மற்றும் தனது முந்தைய திரைப்படங்களின் அனுபவங்களைப் பகிர்ந்தார்.

‘‘25 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். சில மலையாளப் படங்களைத் தயாரித்தும்  உள்ளேன். இயக்குநராக ‘பவிஸ்வகுரு’ எனது முதல் படம். 51 மணி நேரத்தில் கதை எழுதி, படப்பிடிப்பு நடத்தி  முடித்து, சென்சார் செய்து விளம்பரப்படுத்தி திரை அரங்குகளில் வெளியானது இப்படத்தின் சிறப்பு. இதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடமும் சான்றிதழும் கிடைத்தது.

இரண்டாவது படமாக மலையாள மொழியில் ‘புழயம்மா’. கதை முழுவதும் ஆற்றில் நடப்பதாக அமைந்திருக்கும் இப்படம் கேரள அரசின் பாராட்டுடன், சிறந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான படமாக ‘ஏசியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ புத்தகத்தில் இடமும் பெற்றது.  

இதற்கடுத்து ‘நேதாஜி’ என்று இருளா பழங்குடியினர் மொழியில் ஒரு படம். இது இந்தியன் பனோரமா மற்றும் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது.

அடுத்து ‘நமோ’ சமஸ்கிருத மொழியில் எடுத்த  படம். இது சமீபத்தில் கோவா திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவால் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது...’’ என்று கூறும் விஜேஷ் மணி, தான் எடுக்கும் திரைப்படங்கள் வித்தியாசமாகவும், அடுத்து வரும் தலைமுறைக்கு ஆவணமாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.

‘‘இருளா, சமஸ்கிருதம் எனத் தொடர்ந்து இப்போது குரும்பா மொழியில் படம் எடுத்திருக்கிறேன். இவர்களது கலாச்சாரம், பண்பாடு பற்றி நமக்கு ஆவணமாக எங்கும் இல்லை. குறும்பா மொழியை எடுத்துக்கொண்டால் எழுத்து வடிவிலும்  இல்லை. இப்போது இந்த மாதிரியான படங்களுக்கு வரவேற்பு இல்லை என்றாலும், இதன் வேல்யூ இருபத்தைந்து வருடங்கள் கழித்து தெரியும். இந்தியாவில் இது போல் நிறைய கலாச்சாரம், மொழி, இனங்கள் இருக்கின்றன. அதை அம்மக்களின் வாழ்வியலோடு திரைப்படமாக ஆவணப்படுத்த முயல்கிறேன்...’’ என்று கூறும் விஜேஷ் மணி, ‘ம்ம்ம்’ படத்தின் கருவை விளக்கினார்.

‘‘தேனீக்கள் இல்லையென்றால் உலகம் நான்கு வருடம்தான் இருக்கும் என்று ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். மனிதர்களாகிய நமக்கு மட்டுமின்றிபூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தேனீக்கள் மூலமே உணவுச் சங்கிலி இயங்குகிறது. மலர்களுக்கு  இடையேயான மகரந்தச் சேர்க்கை தேனீக்கள் மூலமே நிகழ்கிறது.  

காட்டில் இன்று தேன் இல்லை. ஆனால், நாட்டில் போலியான தேன் பயன்பாட்டில் இருக்கிறது.  நம்மைச் சுற்றி இருக்கும் சூழலில் தேன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் குரும்பா இன மக்கள். எனவே, மேற்சொன்ன கருத்தின்  அடிப்படையில், அவர்கள் வாழ்வியலோடு சூழலியல் சார்ந்த திரைப்படமாக ‘ம்ம்ம்’  எடுத்திருக்கிறோம்...’’ என்று கூறும் விஜேஷ் மணி, சைன் லாங்குவேஜில் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.

‘‘மனித குலத்தின் முதல் மொழி சைன் லாங்குவேஜ் தான். அதன்பின்தானே இன்று ஒவ்வொருவரும் பெருமையாகவும், பிரிவினையாகவும் சொல்லிக்கொள்ளும் மொழிகள் உருவாகியுள்ளன. அப்படியாக அடுத்து ஐ.டி-யையும், விவசாயத்தையும் தொடர்புபடுத்தி படம் எடுக்கவுள்ளோம்...’’ என்றார் விஜேஷ்.

அன்னம் அரசு