விண்ணைத் தொடும் பெட்ரோல் விலை... பரிதவிக்கும் Mr.பொதுஜனம்!



இந்தியாவில் பெட்ரோல் விலை மளமளவென உயர்ந்துகொண்டே இருக்கிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலுக்கான கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வே இதற்குக் காரணம். ஒரு பேரல் 63 டாலர் வரை உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பதினைந்து ரூபாய் வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.

ரூபாயாக ஏற்றினால் மக்கள் கொதிப்படைவார்கள் என தினமும் கால் பைசா, அரை பைசா என ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்.டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 89.54 ரூபாயாகவும், மும்பையில் 96 ரூபாயாகவும் சென்னையில் 92 ரூபாயாகவும் உள்ளது. கேஸ் விலையோ ஒரு சிலிண்டருக்கு ஐம்பது ரூபாய் அதிகரித்திருக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வென்பது ஒரு காரணம் மட்டுமே. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கும் கட்டுப்படியாகாத வரியை ஏன் குறைக்கக்கூடாது அல்லது தள்ளுபடி செய்யக்கூடாது என்பதே மக்களின் கேள்வி.

இந்தியாவைப் பொறுத்தவரை பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தங்கள் விற்பனை விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்ற உரிமையை அரசு பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கிவிட்டது. ஆனால், இந்த பெட்ரோல் மீதான வரியை அரசுக்கு மக்கள் செலுத்தியே ஆக வேண்டியதாய் உள்ளது. இந்தச் சுமையை மக்களால் தாங்கவே இயலவில்லை என்பதே உண்மை.

கடந்த வருடம் கொரோனாவால் பெட்ரோல் விலை கடுமையான வீழ்ச்சியடைந்தது. உலகமே வீட்டுக்குள் முடங்கிக்கிடந்ததால் பெட்ரோல் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இந்தச் சரிவு நிகழ்ந்தது. கடந்த ஏப்ரல் 2020ல் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 19 டாலர் வரை குறைந்திருந்தது. இந்தியாவில் சராசரியாக ஆறு ரூபாய் வரை இந்திய சில்லறை வர்த்தகத்தில் குறைந்தது. அப்போது மத்திய அரசு தனக்குச் சேரவேண்டிய பெட்ரோல் மீதான சுங்கவரியை மார்ச் மற்றும் மே என இரண்டு தவணைகளாகக் கட்டலாம் என்றும் சொன்னது.

உதாரணமாக இந்தியன் ஆயில் நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். பிப்ரவரி 16ம் தேதியன்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 89.29 ரூபாயாக இருந்தது. இதில் 53.51 ரூபாய் வாட் வரியாக மட்டுமே அரசுகளின் பாக்கெட்டுக்குச் செல்கிறது என்கிறது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதளம்.இதன் பொருள்- தினசரி நாம் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கும் தொகையில் அறுபது சதவீதத்தை அரசுகளே அபகரித்துக்கொள்கின்றன. டீசலும் அப்படி ஒன்றும் இதற்கு சளைத்ததல்ல. கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து சதவீதத் தொகை டீசலுக்கு அல்ல; அதற்கான வரியாக அரசுக்குத்தான் செல்கிறது.

பெட்ரோல் விலை ஏன் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரி யாக இருக்கிறது என்பது அடிக்கடி எல்லோரும் கேட்கும் கேள்வி. இதற்கான பதில் எளிது. மாநில அரசுகளின் வரிவிதிப்பு முறை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொன்றாக இருப்பதால்தான் பெட்ரோல் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுகிறது. உதாரணமாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 89 ரூபாயாக இருந்தபோது, ஒரு சில மாநிலங்களில் இது நூறு ரூபாயைத் தொட்டுவிட்டது. மத்தியப்பிரதேசமும் ராஜஸ்தானும் இப்படி பெட்ரோலுக்கு அதிகம் வரி விதிக்கும் மாநிலங்களில் குறிப்பிடத்தக்கவை.

பெட்ரோலுக்கு இப்படி அதிக வரி விதிப்பதன் மூலம் மக்கள் தலையில்தானே அதன் பாரம் ஏறுகிறது என்கிற கேள்விக்கு, பெட்ரோல் வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வரி வருவாயைக் கொண்டு இந்தியாவுக்கான அடிப்படைக் கட்டுமானங்களை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது; எனவே, பெட்ரோல் மீதான வரி விதிப்பை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கின்றனர் ஆளும் தரப்பினர். மத்திய பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்கூட இதையே வலியுறுத்துகிறார்.

சில வலது பொருளாதார அறிவுஜீவிகள் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிவிதிப்பை சாதகமான அம்சமாகப் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். பெட்ரோல் விலை உயர்வு மத்தியதர வர்க்கத்தினரின் பாக்கெட்டைக் கடித்தாலும் அது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காது என்கிறார்கள். ஆனால், அது எவ்வளவு பொய்யான வாதம் என்பதை மேலோட்டமாகப் பார்த்தாலே புரிந்துவிடும்.
பெட்ரோலிய பொருட்கள் என்பவை ஒரு நாட்டின் போக்கு வரத்து எனும் ரத்த நாளங்களோடு நேரடித் தொடர்பில் இருப்பவை.

பெட்ரோல், டீசல் விலை உயரும்போது, போக்குவரத்துச் செலவுகள் உயர்வதால் விவசாயத்துக்குத் தேவையான உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் முதலான விவசாயப் பொருட்களின் அடக்க விலை உயர்கிறது. நாட்டின் பெரும்பகுதி மக்களை விவசாயம் சார்ந்த தொழில்களில் வைத்திருக்கும் ஒரு நாட்டுக்கு இது எப்படி நன்மை பயப்பதாக இருக்க முடியும்? மேலும், காய்கறிகள் சந்தைகளுக்கு வந்து சேர்வதற்கான வண்டிச்சத்தமும் அதிகரிக்கிறது. இந்த விலை உயர்வை நகரங்களில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு வரை அனைவரும்தான் சுமக்க வேண்டியதாய் இருக்கிறது.

பெட்ரோலியப் பொருட்களுக்கு ஏன் ஜி.எஸ்.டி இல்லை என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. ஒரே நாடு, ஒரே வரி, ஒரே கொள்கை என்பதை ஒரு மந்திரம் போல் உச்சரித்துக்கொண்டிருக்கும் மோடி அரசு ஏன் ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு வருவதில்லை? ஏன் அவற்றுக்கு மட்டும் இன்னமும் பழைய முறைப்படி இறக்குமதி வரி, சுங்கவரி, விற்பனை வரி, சேவைவரி எனத் தனித்தனியாக இத்தனை வரிகளை மக்கள் சுமக்க வேண்டியதாய் இருக்கிறது? பதில் மிகவும் எளிது. பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவந்தால், வரி விகிதம் குறைவாகிவிடும். இதனால், அரசுக்கு வரி இழப்பு ஏற்படும். இந்த அச்சத்தில்தான் அதனை மட்டும் இன்னமும் பழைய மாடலிலேயே விட்டு வைத்திருக்கிறார்கள்.

நம் நாட்டைவிடவும் மிக ஏழ்மையான நாடுகளில்கூட பெட்ரோலியப் பொருட்களின் விலை நம் நாட்டின் அளவுக்கு கடுமையாக இல்லை. ஆனால், இங்கு மட்டும் வளர்ச்சியின் பெயரால் நம்மிடம் வரிச் சுமையை ஏற்ற அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை. சரி, இவர்கள் வளர்ச்சி, வளர்ச்சி என்கிறார்களே அது யாருக்கான வளர்ச்சி.

இந்தியாவின் அடிப்படைக் கட்டுமானங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இதன் மூலம் சாதாரண ஏழை எளிய கிராம மக்களுக்கு நேரடியான பொருளாதாரப் பலன்கள் இருக்கிறதா? பெரு நிறுவனங்கள் முதல் உயர்தட்டு வர்க்கத்தினர் வரை தங்கள் வணிக நலனைப் பெருக்கிக்கொள்ளவும், துரிதமான சரக்குப் பரிவர்த்தனைக்காகவும் கொள்ளை லாபம் பெறவும் அமைக்கப்படும் வழுவழு சாலைகளுக்காக கால் வயிற்றுக்கஞ்சிக்கு சிங்கி அடிக்கும் ஒரு சாதாரண குடிமகன் பாரம் சுமக்க வேண்டும் என்று அரசு சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

பெட்ரோலியப் பொருட்களுக்கான இத்தனை கடுமையான  வரிவிதிப்பு என்பது முற்றிலும் அநீதியானது. அதனை எந்த வளர்ச்சியின் பெயராலும் நியாயப்படுத்த முடியாது. தேசத்தின் பெயரால் இதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பவர்கள் மிக மோசமான அரசின் சுரண்டலுக்கு துணை நிற்பவர்கள். அரசு நிர்வாகமும் இதனைப் புரிந்துகொள்வதுதான் நல்லது.

இளங்கோ கிருஷ்ணன்