ரெயின் கன் பாசனம்… செழிக்கும் விவசாயி!



பொதுவாக, நாம் சொட்டுநீர்ப் பாசனம் பற்றியே தெரிந்து வைத்திருப்போம். தெளிப்புநீர்ப் பாசனம் பற்றி அவ்வளவாக அறிந்திருக்க மாட்டோம். இந்தத் தெளிப்பு நீர்ப் பாசனம் மூலம் நல்ல விளைச்சலை அறுவடை செய்து வருகிறார் மதுரை அருகே கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன்.

பல ஆண்டுகளாக விவசாயத்தில் நஷ்டத்தைச் சந்தித்தவருக்கு இப்போது பெரும் ஆறுதலும், நிம்மதியும் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார். ‘‘சொந்த ஊர் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பக்கத்துல மணப்பசேரி பஞ்சாயத்துல உள்ள வெளினிப்பட்டி கிராமம். எங்க அப்பா திருநாவுக்கரசும்  நானும்  சேர்ந்து விவசாயம் செய்திட்டு வர்றோம். எங்களுக்கு ஆறு ஏக்கர் நிலம் இருக்கு. இதுல மூணு ஏக்கர் வயக்காட்டுல நெல் போட்டிருக்கோம். மீதி மூணு ஏக்கர்ல நிலக்கடலை, உளுந்துனு பயிர்கள் போடுவோம்.

இது வானம் பார்த்த பூமி. மழையை நம்பித்தான் விவசாயம். கடந்த 14 ஆண்டுகளா போதுமான மழையில்ல. அதனால, கண்மாயிலும் தண்ணீர் இல்ல. மழை பெய்ஞ்சு கண்மாயில் தண்ணீர் இருந்தா ரெண்டு போகம் போடுவோம். அதனால, அவ்வப்போது நிலக்கடலை போட்டுட்டு வந்தோம்.

இதுல ரொம்ப நஷ்டப்பட்டேன். அப்புறம், போர்வெல் போட்டேன். மின்சாரத்துக்காக சோலாருக்கு போனேன். ஏன்னா, இலவச மின்சாரம் கிடைக்க சீனியாரிட்டிப்படி நாட்களாகும்னு சொன்னாங்க. அதனால, வேளாண்மை அலுவலகத்துல போய் சோலாருக்குப் பதிஞ்சேன்.

மூணு ஆண்டுகளுக்கு முன்னாடி எனக்கு பத்து சதவீத மானியத்துடன் சோலார் கொடுத்தாங்க. ஆனா, இப்பவும் பிரச்னைதான். ஏன்னா, பைப் லைன்ல தண்ணீர் போய் பாய்ச்சிறதுக்கு சிரமம் ஏற்பட்டுச்சு. பிறகு, கொட்டாம்பட்டியில் இருக்கிற வேளாண் துறைக்குப் போய், ‘விவசாயித்துல நான் போடுறது எல்லாமே நட்டமாகுது. எனக்கு பைப் லைன் வேணும். தண்ணீர் பாய்ச்சிறதுக்கு உதவுங்க. காசு கொடுத்து வாங்குற நிலைமையில நான் இல்ல’னு சொன்னேன்.

அப்ப அவங்க, ‘ரெயின் கன் தர்றோம். அது ரொம்ப பயனுள்ளதா இருக்கும்’னு நம்பிக்கை தந்து 32 பைப்பும் ஒரு ரெயின் கன்னும் இலவசமா கொடுத்தாங்க. தொடர்ந்து எப்படி பயன்படுத்தணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. அதன்படி இப்ப நான் இரண்டு போகம் விவசாயம் பண்றேன்...’’ என்கிறவரிடம் ரெயின் கன் பற்றி கேட்டோம்.

‘‘மழை மாதிரி மேலிருந்து நீரை பைப் வழியா தெளிக்கிற கருவிதான் ரெயின் கன். இதைத் தெளிப்பு நீர்ப் பாசனம்னு சொல்றாங்க. இதை எனக்கு கொடுத்து ரெண்டு வருஷங்களாச்சு. நான் மூணு ஏக்கர்ல ஒரு போகம் நிலக்கடலை, ஒரு போகம் உளுந்துனு மாறி மாறிப் போடுறேன்.

முன்னாடி மூணு ஏக்கர்ல நிலக்கடலை ேபாட்டப்ப ஒரு ஏக்கருக்கு அஞ்சு மூட்டையே கிடைச்சது. நாற்பத்திரெண்டு கிலோ கொண்டது ஒரு மூட்டை. இப்ப ஒரு ஏக்கருக்கு 13 மூட்டை வரை கிடைக்குது.

உளுந்து முன்னாடி ஏக்கருக்கு ஒரு மூட்டைதான் கிடைக்கும். இதுல ஒரு மூட்டைங்கிறது நூறு கிலோ. இப்ப மூணு மூட்டை கிடைச்சிருக்கு. நான் ஏழு மூட்டை வரை கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். கடந்த ஆண்டு பெய்த மழையால் குறைஞ்சிடுச்சு. இருந்தும் முன்னாடியைவிட இப்ப நல்ல விளைச்சல். ரொம்ப சந்தோஷமா இருக்கு.  

எங்ககிராமத்துல நான்தான் முதல் ஆளா இந்த ரெயின் கன் பயன்படுத்தினேன். இதனால, எங்கக் கிராமத்துக்காரங்க, பக்கத்துக் கிராமத்துக்காரங்கனு நிறைய பகுதிகள்ல இருந்து வந்து பார்த்திட்டுப் போனாங்க. இப்ப என்னைப் பார்த்து எங்கக் கிராமத்துக்காரர் ஒருவரும் ரெயின் கன் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்கார். நான் போர்வெல் போட்டு சோலார் வாங்கியிருக்கிறதால அது வழியா தண்ணீர் எடுக்குறேன். இந்த ரெயின் கன் மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சி அடிக்கிறேன்.

ரெயின் கன்னை பைப்ல மாட்டிவிட்டால் போதும். இந்தப் பக்கம் ஏழு மீட்டர், அந்தப் பக்கம் ஏழு மீட்டர் போகும். அதாவது, 21 அடி பாயும். ஒரே ரெயின் கன்தான். அதை வச்சு ஒரு நாளைக்கு ரெண்டு முறை தண்ணீர் பாய்ச்சுற மாதிரி இருக்கும். இப்ப தண்ணீர் பாதிக்கு பாதி மிச்சமாகுது. முன்னாடி நாலு மணி நேரம் தண்ணீர் பாய்ச்சுவேன். இப்ப ரெண்டு மணி நேரத்துல வேலைகள் முடிஞ்சிடுது. தண்ணீர் உள்ளிட்ட  எல்லாமே  மிச்சமாகுது...’’ என்கிற முருகேசன், ‘‘இன்னைக்கு விவசாயம் பத்தி எல்லோருக்கும் தெரியும். அடுத்தவங்ககிட்ட போய் நிற்காத சொந்தத் தொழில் இது.

நான், அப்பா, அம்மா, என் மனைவினு குடும்பமா சேர்ந்து விவசாயத்துல ஈடுபடுறோம். யார்கிட்டயும் போய் கையேந்தாத அளவுக்கு வருமானம் கிடைக்குது. பெரிசா நகையோ, பணமோ சேர்க்கல. ஆனா, வாழ்வாதாரத்தைக் காப்பாத்திட்டு இருக்கோம். இப்ப இந்த ரெயின் கன் தொழில்நுட்பம் மூலம் கொஞ்சம் வருமானம் பார்க்கிற மாதிரி வாழ்க்கை மாறியிருக்கு. விவசாயத்தை நல்லபடியா செய்தால் நல்லாயிருக்கலாம்…’’ என நம்பிக்கையான குரலில் சொல்கிறார் முருேகசன்.

பேராச்சி கண்ணன்