கொரோனாவுக்குப் பிறகான உடல்நல பாதிப்புகள்!
மருத்துவ உலகத்திற்கு வெளியே 2019 வரை அறியப்படாத சொல் ‘கொரோனா வைரஸ்’.ஆனால், 2021ல் கொரோனா என்னும் பெயரைத் தெரியாதவர் யாரேனும் இருந்தால் அவர் வேற்று கிரகவாசியாகத்தான் இருக்க வேண்டும் என்னும் அளவு பழக்கமாகிவிட்டது.புதிய வகை கொரோனா வைரசுடன் நாம் வாழத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது.
 இதைப் படிக்கும் பலரையே கொரோனா தாக்கியிருக்கலாம். உறவினர் குடும்பத்தினர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அன்புக்குரியவர்களை இழந்திருக்கலாம். இந்த ஒரு வருடத்தில் கொரோனாவின் கோவிட் நோய் ஏற்படுத்திய பாதிப்புகளை அத்தனை சீக்கிரம் நாம் கடந்துவிட இயலாது. உடல் அளவில், மன அளவில், பொருளாதார அளவில், சமூக அளவில் பல்வேறு மட்டங்களிலும் கொரோனா பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது. கொரோனாவிற்குப் பிறகான உடல்நல பாதிப்புகள் என்னென்ன... அதற்குரிய மருத்துவக் கவனிப்பு எப்படி இருக்க வேண்டும்..?
 எந்த ஒரு வைரஸ் தாக்குதலுக்குப் பின்னரும், நோய்த் தொற்று சரியாகிவிட்டாலும் நம் உடல் சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். சாதாரண சளி வந்து சரியானால் கூட ‘உடல் அடித்துப் போட்ட மாதிரி வலிக்கிறது’ என நாம் அலுத்துக் கொள்வது அதனால்தான். தட்டம்மை (Measles) வைரஸ்கள் நீண்ட காலம் கழித்தும் மூளை அழற்சியை (subacute sclerosing panenchepalitis- SSPE) உண்டாக்குவதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
நல்வாய்ப்பாக பெரும்பாலான வைரஸ்கள் உடல் அசதி, மூட்டுவலி போன்ற சிறிய பிரச்னைகளைத்தான் ஏற்படுத்துகின்றன. சிற்சில விதிவிலக்குகளைத் தவிர, கொரோனா தாக்குதலுக்குப் பின்னரும் அதுபோன்ற சிறிய பிரச்னைகளைத்தான் மருத்துவ உலகம் இதுவரை கண்டுள்ளது. கொரோனா ஆரம்ப அறிகுறிகள் துவங்கி மூன்று வாரம் கடந்த பின்னர் இருக்கும் உடல் நலக்குறைவுகளுக்கு கோவிட்டிற்குப் பிறகான உடனடி பாதிப்புகள் (post-acute COVID) என்றும்; 12 வாரங்கள் கடந்த பின்பும் தொடரும் பாதிப்புகளுக்கு நீண்டகால கோவிட் பாதிப்புகள் (Chronic COVID-19) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
கொரோனாவிற்குப் பிறகு அதிகமான நபர்கள் உணர்ந்ததாகக் கூறிய அறிகுறிகள் உடல் அசதியும், சோர்வும். கொரோனா நோய்த்தொற்று சரியாகி, பிசிஆர் சோதனைகளில் நெகடிவ் ஆன பின்னரும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் மாறிய பின்னரும் மூன்று வாரங்கள் வரை உடற்சோர்வை பலர் உணர்ந்துள்ளனர். சிலர் அதிகபட்சமாக ஆறுமாதங்கள் வரை உடற்சோர்வு இருந்ததாகப் பதிவு செய்துள்ளனர்.
ஓர் ஆய்வில் பங்கேற்ற 76% பேர் கொரோனாவிற்குப் பிறகு தங்களுக்கு உடற்சோர்வு இருந்ததாகக் கூறுகின்றனர். இதைத்தவிர மூச்சுத்திணறல், நெஞ்சில் இறுக்கம், மறதி, தூக்கமின்மை, படபடப்பு, தலைசுற்றல், மூட்டு வலி, மனச்சோர்வு, பதற்றம், பசியின்மை, இருமல், சுவை தெரியாமல் இருப்பது, வாசனை தெரிவதில் குறைபாடு போன்றவையும் கொரோனாவிற்குப் பிறகான பாதிப்புகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த பாதிப்புகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு ஒரே ஒரு பாதிப்பு மட்டும் ஏற்படலாம். சிலருக்கு பல பாதிப்புகள் நிகழலாம். சிலருக்கு மிகக் குறைவான அளவில் ஏற்பட்டு உடனடியாக சரியாகலாம். சிலருக்கு அதிகமாகவும் நீண்ட காலத்திற்கும் இருக்கலாம். நோய்க்கு எதிராக உடல் காட்டும் எதிர்வினையைப் பொறுத்து இவை மாறுபடும்.
கொரோனாவிற்குப் பிறகு ஏற்படும் இரத்த உறைதல் மாறுபாடு மிகவும் ஆபத்தானது. இரத்தநாளங்களில் இரத்தம் உறைந்து மிக முக்கிய உறுப்புகளான இதயம், மூளை போன்றவற்றில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வரலாம். இதைத்தவிர்க்க இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகள் முன்னெச்சரிக்கையாக தேவையைப் பொறுத்து பயன்படுத்தப்படுகின்றன.
கொரோனாவிற்குப் பிறகும் இத்தகைய பாதிப்புகள் இருப்பதால் நோய் சரியாகிவிட்டதே என அலட்சியமாக இல்லாமல் உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். மருத்துவர்கள் அறிவுரை இன்றி, மருந்துகளை நாமாக நிறுத்தக் கூடாது. அறிவுறுத்தப்பட்ட தேதிகளில் மறுபரிசோதனைக்குச் செல்வது அவசியம்.
குறிப்பாக சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், டயாலிஸிஸ் செய்பவர்கள் போன்றோர் மருத்துவரின் அறிவுரைகளை சமரசமின்றிப் பின்பற்ற வேண்டும்.
கொரோனா பாதிப்பின் போது சர்க்கரையின் அளவு வழக்கத்தைவிட அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே, பாதிப்பிற்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவை முறையாக பரிசோதிக்க வேண்டும். சிலநேரங்களில் மாத்திரைகள், இன்சுலின் மருந்து அளவு ஆகியவை வழக்கத்தை விட அதிகமாக தேவைப்படலாம்.
நுரையீரல் பாதிப்பு முற்றிலும் சரியாகும் வரை அதிக உடற்பயிற்சி, சோர்வை அளிக்கும் வேலைகள், நீண்ட நேரம் சொற்பொழிவு ஆற்றுதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. குணமாகி வரும் உடலுக்கு ஓய்வு மிக அவசியம். முழுக்க குணமடையும் முன் உடலைச் சோர்வடைய வைத்தல் தவறு.கொரோனாவில் மீண்டு வந்த பலர் எதிர்கொள்ளும் பிரச்னை உடல் பருமன்.
உடற்பயிற்சி இல்லாததாலும், ஒரே அறையில் அடைந்து கிடப்பதாலும் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிக உடல் எடை சர்க்கரை, இரத்த அழுத்தம் உடையவர்களுக்கு மேலும் பல பிரச்னைகளை உண்டாக்கலாம். உணவில் கட்டுப்பாடாக இருப்பதன் மூலம் கொரோனாவிற்குப் பிறகான உடல் எடை அதிகரிப்பை தடுக்கலாம். அதிக கலோரி உணவுகளான சிப்ஸ், சாக்லேட், பிஸ்கட், ஐஸ்கிரீம், இனிப்புப் பண்டங்கள், எண்ணெயில் பொரித்த உணவுவகைகளைத் தவிர்க்க வேண்டும்.
பழங்கள், காய்கறிகள், வேகவைக்கப்பட்ட இறைச்சி, மீன் போன்ற சத்தான உணவுவகைகளை எடுத்துக் கொள்ளலாம். வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர் அறிவுரையின் பேரில் அதற்குரிய சப்ளிமெண்ட் மாத்திரைகளை எடுக்கலாம். வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் உற்சாகமாக வைத்துக் கொள்ள இயலும்.
அடிக்கடி உடல் எடையை அளந்து குறித்து வைத்துக் கொள்வது பயனுள்ளது. சூரிய ஒளியில் உடலைக் காட்டுவதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்கலாம் கொரோனா நோய் வந்து சிலகாலம் வரை தடுப்பூசி எடுப்பதை தள்ளிப் போட வேண்டும் என தடுப்பூசி நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. தடுப்பூசி எடுக்கும் எண்ணம் இருந்தால் அதை மருத்துவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ளவும்.
குணமடையும் காலத்தின் போது, துவக்கத்திலேயே கடினமான உடற்பயிற்சி, அதிக வேலைகள் என செய்யாமல், முதலில் எளிய உடற்பயிற்சிகளைத் தொடங்கி பிறகு சிறிது சிறிதாக அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் உடற்சோர்வு, மூச்சுத் திணறல் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.நோய்த்தாக்குதலின் போது, இரத்த ஆக்ஸிஜன் குறையும் அளவு பாதிப்பு ஏற்பட்டவர்கள், வீட்டில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வைத்து தொடர்ந்து ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
கொரோனாவிற்குப் பிறகான மனநல பாதிப்பு களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தனிமைப்படுத்துதல், தொழிலிலும் படிப்புகளிலும் ஏற்படும் பாதிப்புகள், பொருளாதார இழப்பு, சமூகத்தால் ஒதுக்கப்படுதல், குடும்ப உறுப்பினர்களுக்கு நிகழும் பாதிப்புகள் போன்றவற்றால் மனநலம் பாதிக்கப்படலாம்.
நம்பிக்கையின்மை, பதற்றம், மன அழுத்தம் போன்றவற்றின் அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் நிபுணர்களின் உதவியை நாடவேண்டும். மனதை உற்சாகமாக வைக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் குழு அமைத்து கருத்துப் பரிமாற்றம் செய்யலாம்.
சுருக்கமாகச் சொன்னால், ஆரோக்கியமான உணவுப்பழக்கம், தேவையான அளவு உடற்பயிற்சிகள், மனநலம் பேணுதல், மருத்துவரின் அறிவுரைகளை மீறாதிருத்தல், சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் போன்றவற்றை கொரோனாவிற்குப் பிறகான காலத்தில் நாம் கவனத்தில் கொண்டால் குணமடைந்து மீண்டு வருவது எளிதாக இருக்கும்.
டாக்டர் சென் பாலன்
|