நான்...சுப்பு ஆறுமுகம்(வில்லிசை வேந்தர்)



‘பத்மஸ்ரீ’ கிடைத்த இவ்வேளையில்  அடுத்த அங்கீகாரமாக என்னை நானே, ‘நான்’ என என் நினைவுகளை திரும்பிப்பார்க்க வாய்ப்பருளியதற்கு முதலில் வணக்கமும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.எனக்கு மகாகவி பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ மேலே தனி ஈடுபாடு, அதே சாயலில் ஒரு பாடல் தொகுப்பு இயற்ற நினைத்தேன். 16வது வயதிலே ‘கண்ணன் பாட்டு’ சாயலில் ‘குமரன் பாட்டு’ என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டேன். இது ‘பொன்னி’ என்ற இலக்கிய மாத சஞ்சிகையில் வெளியானது. இதுதான் வாழ்வில் கிடைத்த முதல் அங்கீகாரம்.

திரு.ஆ.சுப்பையா பிள்ளை, திருமதி சுப்பம்மாள் தம்பதியருக்கு 28-06-1928 அன்று கடைக்குட்டி மகனாய் பிறந்தவன் நான். என் அப்பா இசைக்கலைஞர், பொம்மை செய்யும் தொழில் செய்தவர் மற்றும் குறிப்பாக ‘ஆசு’ கவி. அவருக்குத் துணையாக துணை நின்றவர் என் அம்மா திருமதி சுப்பம்மாள். எங்கள் பூர்வீகம் திருநெல்வேலியில் உள்ள நெல்லை சத்திரம் புதுக்குளம் கிராமம்.

சிறுவயதில் இருந்தே தமிழ் மீதும், எழுத்து மீதும் தீராக் காதல். கோவில் திருவிழாக்களில் இசைக்கப்படும் வில்லுப்பாட்டு இசை வடிவம் என்னை வெகுவாக ஈர்த்தது. அவ்வப்போது கோவில்களில் தேவாரம், திருவாசகமும் பாடியதுண்டு. அதற்கு வித்திட்டவர்கள் என் அப்பா சுப்பையா பிள்ளை, திரு. நவநீதகிருஷ்ண பிள்ளை- என் ஆசிரியர். திருநெல்வேலி மந்திரமூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியிலும் படிப்பு. அதன் பிறகு ‘மதுரை தமிழ்ச்சங்கம்’ அமைப்பில் மூன்று ஆண்டுகள் தமிழ்மொழி  படித்தேன்.

ஒழுக்கமே முதற்கண் கொண்டு என்னை வளர்த்தார்கள். என் ஒழுக்கத்தின் பரிசாக ஒரு நல்ல சம்பவம் ஒன்றை நினைவு கூறுகிறேன். முன்னாள் டிஜிபி பொன்.பரமகுரு, தன்னுடைய தந்தை, தாயாருக்குக் கோவில் கட்டியிருக்கிறார். வருடா வருடம் அந்தக் கோவிலில் நடக்கும் வில்லுப்பாட்டு கச்சேரிக்கு செல்வதுண்டு.
அங்கே ஒருமுறை மேடையில் பேசிய பொன் பரமகுரு, ‘‘செயின்ட் சேவியர் கல்லூரியில் சின்ன தவறு செய்தாலும்அபராதம் வசூலித்து விடுவர். படித்து முடிக்கும்வரை அபராதம் கட்டாமல் இருந்தவர்கள் இரண்டே நபர்கள்தான். ஒன்று நான், மற்றொன்று சுப்பு ஆறுமுகம்...’’ என என்னைப் பாராட்டினார்.

16 வயதிலேயே கலைவாணருக்கு வில்லுப்பாட்டு எழுதிக்கொடுக்கத் துவங்கிவிட்டேன். அவர் என்னை சென்னை அழைத்து வரும்போது எனக்கு 16 வயது. அதற்குக் காரணம் என் பள்ளிக்கூடத்தின் ஆண்டுவிழா, என்.எஸ்.கே தலைமை, அதில் எல்லாரும் பாடலாம் என்னும் வாய்ப்பு.

நான் பாடிய பாடல் …
‘காந்தி பெயரைச் சொன்னவுடன் கம்பெடுத்து வந்தவங்க!
கண்முன்னால அதே கம்பில் காந்திக் கொடி கட்டினாங்க!!’

இதைக்கேட்ட என்.எஸ்.கே, ‘‘உங்கள் பள்ளியில் இருந்து எனக்கு எந்தப் பரிசும் வேண்டாம். ஒரே பரிசு இந்த சுப்பு ஆறுமுகத்தைத் தாருங்கள்…!’’ என சொல்லியதுடன், என்னுடனே வந்தவர் என் அம்மாவிடமும் அனுமதி பெற்றார். வீட்டின் வாயிலில் அவ்வளவு கூட்டம்…! சூப்பர் ஸ்டார் அல்லவா அவர். அன்றைய தினமே என்னை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்.

கிளம்பும் தருவாயில் என் அன்னை அவருக்கும் எனக்கும் திருநீறும், குங்குமமும் பூசிவிட்டார். அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டார் என்.எஸ்.கே. பகுத்தறிவாளர் எப்படி என் அம்மா கொடுத்த குங்குமத்தை வாங்கிக் கொண்டார் என அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர், ‘‘ஆறுமுகம்…! கண் காணாத தெய்வத்துக்காக கண்கண்ட தெய்வம் அம்மா மனசு கவலைப் படக்கூடாது...’’ என பாசத்துடன் சொன்னார். அன்று அவருடன் பயணிக்கத் துவங்கியவன் நான். கூட்டத்தில் அத்தனை பகுத்தறிவாளர்கள். அத்தனை நபர்களுக்கும் இடையில் குங்குமம், திருநீறு சகிதமாக வைத்துக்கொண்டு சுற்றியவன் அனேகமாக நானாகத்தான் இருப்பேன்.

கலைவாணர் கம்பெனியில் வில்லுப்பாட்டு, சினிமா என நான் பாடல் எழுதத் துவங்கினேன். என்னுடன் உடுமலை நாராயண கவியார், கே.பி.காமாட்சி என இணைந்து நாங்கள் மூவரும் அவருக்கு எழுத்துப்பணி புரிந்தோம். 17 வயதில் என்.எஸ்.கே ஐயா பாடும் பாடலை எழுதும் பாக்கியம் பெற்றேன்.

‘சுப்பு, நீதான் வில்லுப்பாட்டை வளர்க்கணும்’ என அவர் கேட்டுக்கொண்டதின் பெயரில் அதையே வாழ்க்கையாக மாற்றிக்கொண்டேன். ராமாயணம், மகாபாரதம் மட்டுமின்றி பல்வேறு அரசியல் சமூகப் பிரச்சினைகளையும் எமது வில்லுப்பாட்டின் மூலம் வழங்கத் துவங்கினேன்.

1948களில் கலைவாணருக்கு வில்லிசையை எழுதிக்கொடுக்க ஆரம்பித்தேன். கலைவாணர் ஐயாவிற்கு வில்லுப்பாட்டிசையை உலக அளவில் உயர்த்த வேண்டும் எனும் ஆசை. அந்த ஆசையை என்னிடம் ஒப்படைத்தார். பின்னர் அவருக்காக திரைப்படப் பாடல், கதை, வசனம் என சென்றது என் வாழ்க்கை. 1960-70களில் அகில இந்திய வானொலி, 1975 முதல் தூர்தர்ஷன் என வில்லிசை பெருவாரியாக வளர்ந்தது.

1960களில் காஞ்சிப் பெரியவர் நல்லாசியுடன் ஆலயங்களில் தெய்வீகம் மற்றும் பற்பல தமிழ்ச்சங்களில் என் வில்லுப்பாட்டு வியாபிக்க ஆரம்பித்தது. இந்திய வானொலியில் காந்தியின் கதையை வில்லுப்பாட்டாக 54 வாரங்களுக்கும் மேலாக நடத்தினேன். மருத்துவம், அறிவியல்... என பலப்பல பாடுபொருள்களில் வில்லுப்பாட்டு பாடினோம். எனக்கு முதல் ரசிகையாக கிடைத்தார் என் அன்பு மனைவி மகாலட்சுமி. 

என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க வந்தார். என்னை ஒரு கலைஞராகப் பாவித்து எளிய மொழியில் வரலாறாகத் தொகுத்து ‘உண்மை உள்ள ஒரு கவிஞன்’ என்னும் புத்தகமாக வெளியிட்டார். எங்களுக்கு மூன்று வாரிசுகள். மூத்தவர் முனைவர் எஸ். சுப்புலட்சுமி, பள்ளி முதல்வர்.

இளையவர் எஸ்.காந்தி, அவரும் வில்லுப்பாட்டு இசைக் கலைஞர்தான். மூன்றாவதாக என் மகள் ‘கலைமாமணி’ எஸ். பாரதி திருமகன். முழுமையாக குடும்பம் சகிதமாக வில்லுப்பாட்டில் இறங்கியவர் பாரதி. அவர் வில்லிசைத்தொடர் பணிக்காக கலைமாமணி விருது பெற்றவர்.

அவர் மகன் கலைமகனும் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்று வில்லுப்பாட்டில் மற்ற மொழிகளும் இணைய நிகழ்ச்சி செய்கிறார். ஒரு நிகழ்ச்சியில் வில்லுப்பாட்டால் ஈர்க்கப்பட்டு என் குடும்பத்துக்குள் வந்த முனைவர் எஸ். திருமகன் என் மருமகன் ஆனார். அது என் பாக்கியமே. அன்று முதல் என் மகன், என் மகள், மருமகன், பேரனும் எங்களுடன் வில்லுப்பாட்டில் இணைய நிறைய நிகழ்ச்சிகள் நடத்திவிட்டோம்.

முன்னாள் குடியரசுத் தலைவர்  அப்துல்கலாம் அவர்களுடைய வீட்டில் அவருக்காக தனியாக ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். அதில் அவரே எழுதிய பாடலை வில்லுப்பாட்டில் என் பேரன் கலைமகன் பாடினார்.

இதைக்கேட்ட அப்துல் கலாம் ஐயா கைதட்டி ரசித்ததோடு நில்லாமல் ஒரு கோரிக்கையும் வைத்தார் ‘சிரிப்பென்றால் என்னவென்றே தெரியாத கைதிகளுக்கு நீங்கள் வில்லுப்பாட்டு இசைக்க வேண்டும் கவிஞரே’ என்பதே அந்தக் கோரிக்கை. டெல்லியில் கலாம் ஐயா நிகழ்ச்சி முடிந்து சென்னை இறங்கிய மறுகணம் புழல் சிறையில் கச்சேரி. ஐயா அப்துல் கலாம் பூரித்துப் போனார்.

இந்திய அரசின் தேசிய நலத்திட்டங்கள், தேச பக்தி, தெய்வ பக்தி, தொழிற்சாலைகளில் தற்காப்பு முறைகளைக் கையாள்வது போன்ற சமுதாய நிகழ்ச்சிகள், வாக்காளர்களின் உரிமை போன்ற விழிப்புணர்வு தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான நிகழ்ச்சிகளைச் செய்தோம்.

என் மனைவி திருமதி மகாலட்சுமி பெயரில் ‘மகம் பதிப்பகம்’ என்ற நிறுவனத்தின் மூலமாக ‘உண்மை உள்ள ஒரு கவிஞன்’ என்ற நூலையும், ‘வில்லிசையில் சமுதாயப் பாடல்கள்’ என்ற நூலையும் வெளியிட்டேன். திருவையாற்றில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தியாகபிரம்மத்தின் 145வது ஆண்டு நிகழ்ச்சி முதல் ‘ஸ்ரீராம ஜெயம்’ என்ற தலைப்பில் சுமார் இரண்டு மணிநேர வில்லிசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து 7 வருடங்களுக்கு நடத்திய பாக்கியம் பெற்றேன்.

‘நாதத்தில் பேதமில்லை’ என்ற தலைப்பிலும் அம்மகோற்சவத்தில் வில்லிசை நிகழ்ச்சியை நடத்தினேன். அங்கு பஞ்சரத்ன கீர்த்தனை ‘ஜகதாநந்தகாரகா’ என்ற நாட்டை ராக சந்தத்தில் அமைந்த பாடலை ‘வயலே வாழ்கவே’ என்று நான் இயற்ற என் மகள் பாரதி பாடினார்.

85 வயதோடு, வில்லுப்பாட்டு மேடைக்கு செல்வதைக் குறைத்துக்கொண்டு, எழுத்துப் பணியைத் தொடங்கினேன். நான் எழுதி முடித்துள்ள ‘திருக்குறள் அனுபவ உரை’ என்ற நூலை சிவாலயம் மோகன் பதிப்பிட்டுள்ளார். என்னைத் தொடர்ந்து தற்போது வில்லிசைக் கலையை என் மகள் பாரதி திருமகன், மருமகன் திருமகன், பேரன் கலைமகன் மூவரும் தொடர்ந்து செய்து வருவது எனக்கு பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

எனக்கும் சரி எனக்குப் பிறகும் சரி வில்லிசை தொடர்ந்து வளர என் குடும்பம் மிகப்பெரிய வரப் பிரசாதம். என் எழுத்துப்பணியைப் பொறுத்தவரையில் என் வாழ்க்கை வரலாற்றை 15 ஆண்டுகளுக்கு முன்பே என் மனைவி மகாலட்சுமி எழுதிவிட்டார். தற்போது கூடுதல் விவரங்களுடன் எனது சுயசரிதையை நான் எழுதி வருகிறேன். அடுத்த ஆண்டு அந்தப் புத்தகம் வெளிவரும். ஒரு புதினமும் எழுதி வருகிறேன். தினசரி வழிபடும் தெய்வங்களுடன் இந்திய தேசிய வரைபடத்தையும் சேர்த்து தொட்டுக்கண்களில் ஒற்றிக் கொள்பவன் நான்.

‘பொட்டு வைக்குமிடம் டெல்லி!தொட்டுக் கும்பிடும் இடம் கன்னியாகுமரி!!’.
இதையே மந்திரமாகக் கொண்டு வணங்குபவன் நான். ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் இருக்க வேண்டிய படம் இந்திய வரைபடம்... குழந்தைகளுக்கு நாட்டுப்பற்றை அங்கிருந்து துவங்குங்கள். நாம் வாழும் மண் இது என்னும் அதன் உன்னதம் சொல்லிக்கொடுங்கள்.

மக்கள் மிகவும் நல்லவர்கள். அணுகவேண்டிய முறையில் அவர்களிடம் சென்றால், அன்பாக நடந்து கொண்டால் யாவரும் நம் அன்பு மக்களே. ஒரு கலைஞனாக பல ஊர் மக்களை நேரடியாக சந்தித்தவன் சொல்லும் வெற்றி அனுபவ வாக்கியம் இது. அன்பால் அணுகினால் எந்தக் கலைஞனும் நினைத்துப் பார்க்க முடியாத உயரம் தொடுவான். எத்தனை வருடம் சென்றாலும் அவனுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அதற்கு நானே சான்று.

93 வயதிலும் கூட என் கலையும், என் பணியும் தமிழக அரசால் கௌரவிக்கப்பட்டு வில்லிசைக்காக ‘பாரதி’ விருது பெற்றேன். பின்னர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு ‘பத்மஸ்ரீ’ விருதும் கிடைக்கப் பெற்றேன். தொடர்ந்து உங்களிடம் என்னைப்பற்றி நானே கதை சொல்லும்  அந்தஸ்து வரை பெற்றிருக்கிறேன் எனில் அன்பு ஒன்றுதான் காரணம்.

ஷாலினி நியூட்டன்