ஃபாஸ்டேக்கில் என்ன பிரச்னை?



சமீபத்தில் இந்தியா முழுவதும் ‘ஃபாஸ்டேக்’ முறை அமல்படுத்தப்பட்டிருப்பதுதான் ஹாட் டாக். விரைவுப்பயணம், எரிபொருள் சேமிப்பு, காற்று மாசுபாட்டை தவிர்ப்பது, டிஜிட்டல் பரிவர்த்தனை போன்ற சாதகங்களை அரசு பிரச்சாரம் செய்தாலும், ஃபாஸ்டேக்கில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை சமூக ஆர்வலர்கள் தொர்டந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். உதாரணமாக, கடந்த டிசம்பர் 15ம் தேதியை ஃபாஸ்டேக் முறைக்கான கடைசி தேதியாக மத்திய அரசு அறிவித்தது.

‘‘அந்த நாளில் மட்டும் வாகனங்கள் அதிக நேரம் சுங்கச்சாவடியில் காத்திருக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டன...’’ என்ற உண்மையைப் போட்டுடைத்தது ஒரு வடநாட்டுப் பத்திரிகை. இந்நிலையில் ஃபாஸ்டேக்குக்கு ஆதரவு இருந்தாலும் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து நிபுணர்களிடம் பேசினோம்.

‘‘இந்திய நெடுஞ்சாலைகளில் சுமார் 465 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. மும்பையில் 15 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகளுக்கு 45 சாவடிகள். ஆனால், 5 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள தமிழகத்தில் 46 சாவடிகள் உள்ளன. இது மத்திய அரசின் தமிழக துரோகத்தைக் காட்டுகிறது...’’ என்று ஆரம்பித்தார் வேல்முருகன். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் இவர். ஃபாஸ்டேக் தொடர்பாக பல போராட்டங்களை
முன்னெடுத்தவர்.

‘‘புதிதாக வாகனம் வாங்கும்போது மோட்டார் வரி என்று சாலைக்காக பல ஆயிரம் ரூபாயை வாங்குகிறார்கள். இந்தப் பணத்தைக்கொண்டு அரசாங்கத்தால் சாலைகளை மேம்படுத்த முடியாதா? சாலைக்கான பொறுப்புகளைத் தனியாரிடம் ஓர் அரசு ஒப்படைப்பது அந்த அரசை கேலிக்குள்ளாக்குகிறது. காசு இருப்பவர்கள் மட்டுமே சுங்கச்சாவடிகளைப் பயன்படுத்த முடியும் என்றால் காசு இல்லாதவர்கள் எங்கு போவது? அவர்களுக்கும் சாலைகள் வேண்டுமல்லவா. சுங்கச்சாவடிகள் இல்லாத சாலைகளை அரசு போடவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை...’’ என்ற வேல்முருகன், சுங்கச்சாவடிகளில் 70 சதவீதம் தனியார்மயமாகிவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்.

‘‘இந்திய அரசு எத்தனை சுங்கச்சாவடிகளைக் கட்டுகிறது, எத்தனை தூரத்துக்கு ஒரு சுங்கச்சாவடி கட்டப்படுகிறது, ஒரு சுங்கச்சாவடியை கட்ட எவ்வளவு செலவாகிறது, ஒரு சுங்கச்சாவடிக்கு ஒருநாளில் எத்தனை வாகனங்கள் வருகிறது, ஒரு நாளில் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது, ஒரு சாவடி எத்தனை நாட்களுக்குள் தான் செலவழித்த பணத்தை திரும்ப எடுக்கிறது போன்ற தகவல்களை அரசாங்கம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

ஆனால், இந்த தகவல்களைப் பெறுவது கடினம்...’’ என்ற வேல்முருகன், வெளிநாடுகளில் உள்ள சுங்கச்சாவடிகளைப் பற்றியும் பேசினார்.
‘‘வெளிநாடுகளில் உள்ள ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் பலவிதமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. இதை அரசே முன்னின்று செயல்படுத்துகிறது. உதாரணமாக, ஒவ்வொரு சாவடியிலும் ஆம்புலன்ஸ், குடிநீர், மருத்துவம், தங்கும் விடுதி, இலவச தொலைபேசி என்று பல வசதிகள் உண்டு. அத்துடன் வாகனங்களுக்கு ஏற்ப தனித்தனியான வழிகள் இருக்கின்றன.

உதாரணமாக, அரசு வாகனங்கள், ஆம்புலன்சுகள், கனரக வாகனங்களுக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. இந்தியாவில்கூட சுங்கச்சாவடிகளுக்கான பல விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக, 30 நொடிகளுக்கு மேல் ஒரு வாகனம் ஒரு சாவடியில் காத்திருக்க வேண்டியிருந்தால் கட்டணம் செலுத்தவேண்டியதில்லை என்கிறது ஒரு விதி. ஆனால், இந்தியாவின் சுங்கச்சாவடிகள் அரசின் விதிகளில் ஒன்றைக்கூட பின்பற்றுவதில்லை...’’ என்று அவர் முடிக்க, மேலும் பல சிக்கல்களைப் பற்றிப் பேசினார் நுகர்வோர் ஆர்வலரான சோமசுந்தரம்.

‘‘2016ம் ஆண்டிலிருந்தே ஃபாஸ்டேக் முறையை சில மாநிலங்களில் மத்திய அரசு சோதனை செய்தது. ஆனால், இப்போதுதான் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 7 லட்சம் வாகனங்கள் எல்லா சாவடிகளையும் கடந்து செல்கின்றன. ஃபாஸ்டேக் முறை சிறந்ததுதான்.

ஆனால், அதை சிறப்பாக நடைமுறைப்படுத்த இந்தியா தவறுகிறது என்பதைத்தான் நாங்கள் சொல்கிறோம். உதாரணமாக, ஃபாஸ்டேக்கை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் ரேடியோ அதிர்வலைகள் எனும் கருவியில் தொழிநுட்பரீதியாக பல கோளாறுகள் இருக்கின்றன. ஒரு வாகனம் ஒரு சாவடியில் இருந்து விரைவாகச் செல்லவேண்டும் என்றால் ரேடியோ அதிர்வலைகள் அந்த வாகனத்தை சரியாக அடையாளம் காணவேண்டும். ஆனால், இந்தியாவில் இருக்கும் ரேடியோ அதிர்வலைகளுக்குச் சரியாக கணிக்கும் திறன் இல்லை.

காரணம், பெரும்பாலும் சுங்கச்சாவடிகள் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில்தான் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் அதிர்வலைகள் வேலை செய்ய நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. அத்துடன் ஒரு பயணி பல்வேறு விதமான நிறுவனங்களின் மொபைல் நெட்வொர்க்கை பயன்படுத்துவார். அவர் பயன்படுத்தும் நெட்வொர்க்கின் டவர்கள் சாவடி இருக்கும் ஊரில் இல்லை என்றால் அவர் கட்டிய பணத்துக்கான மெசேஜ் உடனடியாக வராது. சிக்னல் கிடைக்கும் இடத்துக்குச் செல்லும்போதுதான் மெசேஜ் வரும்.

அதனால் எவ்வளவு பணம் பிடிக்கப்பட்டிருக்கிறது, தவறுதலாக பிடிக்கப்பட்டிருக்கிறதா என்பதை ஒருவர் சரிபார்க்க முடியாது...’’ என்ற சோமசுந்தரம் மேலும் சில தொழில்நுட்பக் கோளாறுகளைப் பட்டியலிட்டார்.‘‘நம்ம ஊரில் ஃபாஸ்டேக் இருக்கும் வாகனம், இல்லாத வாகனம் எல்லாம் ஒரே பாதையில்தான் நிற்கின்றன. ஒருவேளை ஃபாஸ்டேக் இல்லாத வாகனம் பணம் கட்டாமல் சாவடியைத் தாண்டிச் சென்றுவிட்டால் அந்த வண்டிக்கான கட்டணம் ஃபாஸ்டேக் உள்ள வாகனத்தின் கட்டணத்துடன் சேர்ந்துவிடும்.

மட்டுமல்ல; வெளிநாடுகளில் இருக்கும் ரேடியோ அலைகள் மிகத் துல்லியமாகச் செயல்படுகிறது. அங்கே எல்லாம் இங்கே இருப்பது மாதிரி தடுப்புக்கம்புகள் இல்லை. ரேடியோ கருவிகள்கூட சாலையின் அடிப்பகுதி யில் அமைக்கப்பட்டிருக்கும். வாகனங்கள் ஒரு நொடிக்கு அங்கே நகர்ந்து சென்றால் போதுமானது. உண்மையில் இந்திய சுங்கச்சாவடிகள் ஃபாஸ்டேக் வந்தபிறகு ரொம்பவே சொதப்புகிறது...’’ என்று அவர் முடிக்க, ஃபாஸ்டேக்கின் பாதுகாப்பு  குறித்து சைபர் நிபுணரான வினோத் ஆறுமுகம் பேசினார்.

‘‘ஆன்லைன் பரிவர்த்தனை 100 சதவீதம் பாதுகாப்பானது என்று யாரும் உறுதியாகச் சொல்ல  முடியாது. ஆனால் அரசும், அரசு சார்ந்து செயற்படும் நிறுவனங்களும் பாதுகாப்புக்கான உறுதி கொடுத்தால் ஆன்லைன் சேவையை நாம் ஓரளவு பயன்படுத்த முடியும். இந்தியாவில் தகவல் பாதுகாப்புக்கான சட்டம் நிலுவையில் இருக்கும் நிலையில் இந்திய அரசு எல்லாவற்றையும் டிஜிட்டல் மயமாக்கி வருவது நுகர்வோருக்கு பாதுகாப்புப் பிரச்சனைகளைத்தான் கொண்டுவரும்...’’ என்று ஆரம்பித்த வினோத், ஃபாஸ்டாக்கைப் பயன்படுத்தும் நுகர்வோர்களின் சைபர் பாதுகாப்பு குறித்து
விளக்கினார்.

‘‘இப்போதைக்கு ஃபாஸ்டேக்கை சில பொதுத்துறை வங்கிகளும், பேடிஎம், கூகுள் பே போன்ற தனியார் பணச்சேவை நிறுவனங்களும் செய்து வருகின்றன. இதில் வங்கிகள் மூலம் ஃபாஸ்டேக்கை ஒருவர் வாங்குவது ஓரளவு பாதுகாப்பானது. காரணம், தனியார் வழங்கும் சேவைகளுக்கு ரிசர்வ் வங்கி பொறுப்பாகாது என்று சொல்லி விட்டது. ஆகவே டிஜிட்டல் முறைகளில் குறைபாடு இருந்தாலும் ஓரளவு பாதுகாப்பானது வங்கிகளே. அங்கேயும் ஆதார் திருட்டு சம்பவங்கள் நடந்தாலும் தனியாரைவிட வங்கிகள் பாதுகாப்பானது...’’ என்ற வினோத், ஃபாஸ்டேக்கில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளைப் பற்றிப் பேசினார்.

‘‘கணிப்பொறிகள் 100 சதவீதம் துல்லியமானது என்று சொல்வது தவறானது. உதாரணமாக, சுங்கச்சாவடியில் ஒரு வாகனத்தை படம் பிடிக்கும் கேமரா மங்கலாக படம் பிடித்தால் அந்த தகவல் கணிப்பொறியில் தவறாகத்தான் பதியும். வண்டியில் இருக்கும் ஒன்று என்ற எண்ணை ஏழாகக்கூட காட்டிவிடும். இந்த தவறுகளைக் களைய வேண்டுமென்றால் தகவல் பாதுகாப்பு சட்டங்கள் வரும்வரை ஃபாஸ்டேக் முறையில் மத்திய அரசு தீவிரம் காட்டாமல் இருப்பதே சரியானது ...’’ என்று அவர் முடிக்க, வாகன உரிமையாளர்கள் தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவரான யுவராஜ் பேசினார்.

‘‘ஃபாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டபோது நாங்கள் முதலில் வரவேற்றோம். ஆனால், போகப்போக இதில் போலி ரசீதுகள் போன்ற முறைகேடுகள் இருப்பதாக உணர்ந்துகொண்டோம். டோல்கேட் பணம் அரசுக்கு முழுமையாகப் போய்ச்சேர்கிறதா என்ற சந்தேகம்கூட ஏற்பட்டது. அத்துடன் படிப்பறிவு இல்லாத லாரி டிரைவர்களால் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்வது கடினம். அவசரக் காலங்களில் ரீசார்ஜ் செய்ய முடியாமல் லாரி டிரைவர்கள் திண்டாடிப்போகிறார்கள்.

தவிர, ரீசார்ஜ் செய்வதில் சிக்னல் பிரச்சனை, பணம் எவ்வளவு போகிறது போன்ற தகவல்கள் எல்லாம் மிகத் தாமதமாகவே வருகிறது. டிரைவர்களால் நிலைமையைச் சமாளிக்கமுடியாமல் நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலை. இந்தப் பிரச்னைகளை எல்லாம் முன்னிட்டுத்தான் வருடந்தோறும் டோல்கேட்டுக்கான கட்டணத்தைக் கட்டுகிறோம் என்று கேட்டோம். இது அரசுக்கும் ஆதாயமாக இருக்கும் என்று பல வருடங்களாகச் சொல்லி வருகிறோம். இது மாதிரியான கோரிக்கைகளை வைத்து விரைவில் போராட்டம் செய்ய இருக்கிறோம். இல்லை எனில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவிப்போம்...’’ என்று காட்டமாக முடித்தார்  அவர்.

டி.ரஞ்சித்