ஆபத்தான நிஜங்கள்



அவளை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான். ஞாயிறு மதியம், வேலை முடித்து, உண்ட களைப்பில், படுக்கையில் ஒரு குட்டித்தூக்கத்துக்கு முன்பான நேரம். அது அவள் சந்தோஷமாக குளிர்ந்து இருக்கும் ஒரு பொழுது. இப்போதெல்லாம் சாதாரணமாக பேசுவதற்குக்கூட நேரம் காலம் பார்க்க வேண்டி இருந்தது. இல்லை என்றால், ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பித்த பேச்சு, கிளைகள் விட்டு, வேர் விட்டு, காய் விட்டு, ஒரு பெரிய ஆலமாகச் சண்டை வளர்ந்து விடுகிறது.

கல்யாணம் ஆன புதிதில் இப்படி இல்லை. இருவரில் யாரோ ஒருவர் மற்றவரைத் தாஜா செய்ய, கோபம் பத்து நிமிடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்காமல் ஓடிவிடும்.அவள் நெற்றியில் வியர்வை முத்துக்கள் அழகாகக் கோர்த்து நின்றன. ஒரு புறம் பார்ப்பதற்கு பாவமாகத்தான் இருந்தது. நல்லவள்தான், வாயை மட்டும் கட்டுக்குள் வைத்திருந்தால்.

“வெயில் அதிகமாகத்தான் இருக்கு...”
லேசுப்பட்டவளில்லை. இப்படி ஓர் அபத்தமான ஆரம்பமே அவன் எண்ணங்களை அவளுக்குப் படம் போட்டுக் காண்பித்து விட்டன.“என்ன, ப்ராப்ளமா?”“இல்லை... ஒரு  சின்ன அசெளகர்யம்...”“சின்ன..? முதலில் என்னன்னு சொல்லுங்க. அது சின்னதான்னு அப்புறம் பாக்கலாம்...”


“என்னை ஆடிட்டிற்கு மாத்திட்டாங்க. வேலையைப் பொறுத்து நான் மாதக்கணக்கில் வெளியூர் போகவேண்டி வரும். அதான்... நீ, இதுபோல் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஓர் இடத்துல குழந்தையோடு தனியாக எப்படி இருப்பே? கொஞ்சம் பயமா
பதில் பேசாமல் முறைத்தாள். முகத்திலிருந்து ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“முடிந்தவரை மறுக்கப் பாத்தேன். இந்த மாற்றம் ஜாப் ரொடேஷனில் ஒரு விதியாம். அடுத்து ப்ரமோஷன் கிடைக்க இந்த வேலையையும் நான் செஞ்சிருக்க வேண்டுமாம். சரி, ப்ரமோஷன் வேண்டாம்ன்னு சொல்லி மறுத்தால், இதை காரணமா காட்டி வேலையிலிருந்து அனுப்பவும் முடியும். இந்த வயசுக்கு மேல வேற வேலை தேடி... திராணி இல்லை. சரின்னுசொல்லிட்டேன்...”அவள் முகம் தெளிந்தது. வேறு எதையோ எதிர்பார்த்து அது இல்லாமல் போன ஒரு நிம்மதியும் தெரிந்தது.

“அதுதான், அம்மாவைத் துணைக்கு வரச்சொல்லலாம்ன்னு யோசனை. உனக்கும் அது சரியாகத்தானே தெரியுது?”கடைசியில் இதுதான் சமாசாரமா... எளக்காரமாக ஒரு பார்வையை வீசினாள். “வேண்டாம். தனியாக சமாளிக்கமுடியும்...”

“எனக்கென்னவோ சரியாக வரும்ன்னு தோணலை. யோசிச்சுப்பார், நீதான் பப்பியை ஸ்கூல் கொண்டு விட்டு அழைச்சுகிட்டு வரணும். பாட்டு, டான்ஸ் க்ளாஸ் இதெல்லாம் வேற...”“ஏன், கார் இருக்கில்ல?”“அது எங்கே போகும்? இங்கேதான் இருக்கும். ஆனால், ஓட்ட நான் இருக்கமாட்டேனே. இப்ப, அதையும் நீதான் செய்யணும். ரெண்டு பேரும் தனியா வேறு இருக்கப்போறீங்க.

அம்மாவை அழைச்சு வந்தா செளகர்யம் தானே?”“வேண்டாம். டிரைவர் போடுங்க...”மத்தியமாக அன்று தலை அசைத்தாலும், அந்த வேலை அவ்வளவு எளிதானதாக இல்லை. பெண்களைப்புரிந்துகொள்வது கடினம்தான். ஆனாலும் இவ்வளவு வருடங்களுக்குப் பின்னும் அவளைப் புரிந்துகொள்ள முடியாமல் குழம்பித்தான் போனான்.“போன வாரம் டிரைவிங் ஸ்கூல் ஆள் வந்தான். வேண்டாம், சின்னப்பையன் குழந்தையை ஜாக்கிரதையாக அழைத்துச்செல்ல மாட்டான்னு சொன்னே, எனக்கும் சரின்னு தோணித்து. அடுத்து வந்தவர் சம்பளம் அதிகம்ன்னு சொன்னே. அடுத்து ஒருவர், அவருக்கு ஏதோ ஒரு காரணம்.

உன் காரணங்களைக் கேட்டுக்கேட்டு... எதற்கு, எப்போதுன்னு கூட மறந்துபோச்சு. இப்ப திடும்ன்னு இந்த வயசானவரை சரின்னு சொல்றே. இவரோட வயசு என்ன இருக்கும்... குறைந்தது அறுபது...? கண்கள் சரியாகத் தெரியுமான்னே சந்தேகம்? இவர் எப்படி வண்டியை ஒழுங்கா ஓட்ட முடியும்?”அவள் பிடிவாதக்காரி.

பிடிவாதத்தால், ஒன்றாக இருந்த குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியே ஊருக்கு வெளியே, ஏதோ ஓர் கோடியில் வீட்டைக்கட்டிக் கொண்டு வந்தாகி விட்டது. இதே பிடிவாதத்தினால் எட்டு வயது கூட நிரம்பாத குழந்தையை வேறு ஒரு கோடியில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்தாகிவிட்டது. அவளின் பெண் டாக்டர் ஆகவேண்டும், ஐஏஎஸ்... இப்படியான கனவுகளுக்கு அந்தப் பள்ளிதான் சரியாக வருமாம். ஆனால், இந்தக் கிழவரை நம்பி, குழந்தையை அவ்வளவு தள்ளி காரில் அனுப்புவது அவனுக்கு ஏனோ சங்கடத்தைக்கொடுத்தது.

‘‘ஸ்கூல் பஸ் ஏற்பாடு செஞ்சால் என்ன?” ஹீனமாக எதிர்க்குரல் எழுப்பினான்.“இந்த அத்துவானக் காட்டுக்குள்ளே அது எங்கே வரும்?”இதையே அவன் சொல்லி இருந்தால் வேறு ஒரு பிரச்னை வெடித்திருக்கும்.“ரொம்ப வயசானவர் போல் தெரியுது...”“பாருங்க... பப்பி என் பொண்ணு. இப்படி ஒரு வயசானவர் கூட அனுப்பினால்தான் பயம் இருக்காது. பப்பியைக் கேட்டேன். ‘இந்தத் தாத்தாவை ரொம்ப பிடிச்சிருக்கு’ன்னு சொன்னா. அதுக்குள்ளே ராசியாகப்போய் விளையாட ஆரம்பிச்சுட்டா. அவரும் ‘என் பேத்திபோல’ன்னு மிட்டாய் எல்லாம் வாங்கிக்கொடுத்தாரு.

எல்லாம் சரியாக வரும். ஒண்ணு செய்யலாம். நாளைக்காலை நீங்க அவர் கூட ஸ்கூலுக்கு போங்க. கண் பார்வை, மிதமான ஸ்பீடு, பார்த்து ஜாக்கிரதையாக ஓட்டுறாரா, இப்படி எல்லா விஷயத்தையும் கவனிங்க. நான் மாலைல கூடப் போகிறேன். என் புத்திக்கு தோணும் விஷயத்தை கவனிச்சுப்பார்க்கிறேன். அப்புறமா ஒரு முடிவு எடுக்கலாம்...”இருவருக்கும் பிடித்துப்போயிற்று. கவலைகொள்ள காரணம் இல்லை என்று தோன்ற, அவர் ஆஸ்தான வண்டி ஓட்டியாக அமர்த்தப்பட்டார்.

“அய்யா... பாப்பா பின்னாடி ஒக்காற வேணா... என் பக்கமா ஸீட் பெல்ட் போட்டுக் குந்தட்டும்.... நா ஒரு பார்வை வெச்சுக்குறேன்...”
‘‘வேண்டாம்... குழந்தைகள் முன்னால உட்காரக் கூடாது. பின்னாடியே இருக்கட்டும்...” அவள் அவனை முறைக்க, கவனிக்காதது போல் திரும்பி நின்றான்.“சரி... அய்யா சொல்லிட்டாரில்ல. ..கண்ணாடி வழியா பாப்பாவை ஒரு கண்ணு வெச்சுக்கிறேன்...”
“பார்த்தீங்களா. வயசானவர், பேரன் பேத்தியை பார்த்தவர். அதான் நம்ம பொண்ணு மேல அக்கறை...” அவன் காதில் எச்சில் மழைபொழிய வார்த்தைகள் இட்டாள்.

இருந்தும் மனதில் ஏதோ ஓர் நெருடல். ஒதுக்கிவிட்டு ஊருக்குக் கிளம்பினான்.“ராஜி... டிரைவர் ஒழுங்கா வர்றாரா? பப்பிக்கு பிடித்திருக்கா. ஏதும் கஷ்டமா இருக்குன்னு சொன்னாளா? அவளை அவ்வப்போது ஒரு வார்த்தை கேள்...”‘‘போதுமே... அக்கறை பொங்கறது. உங்க ஆபீஸ் வேலையைப்பாருங்க. நான் அவளோட அம்மாதானே, சித்தி கித்தி இல்லையே? எல்லாம் பார்த்துப்பேன்.

என்னங்க அந்த டிரைவர் ரொம்ப நல்லவர். நேத்து வீட்டில் செஞ்சதுன்னு ஏதோ பணியாரம் பப்பிக்கு கொண்டு தந்தார். நான்தான் புள்ளைக்கு வயிறு சரியில்லைன்னு சொல்லி அவளுக்குக் கொடுக்காமல் இருந்துட்டேன். ரொம்ப நல்லவருங்க. கவலை இல்லாமல் இருங்க...”

மறுபடியும் ஏதோ நெருடியது. ஆச்சர்யமாக இருந்தது. யாரையும் அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ள மறுக்கும் குணம். இவ்வளவு நாள் சென்ற பின்னும் அவனால் சாதிக்க முடியாததை, ரெக்கார்ட் டைமில் செய்து முடித்து, மூட்டை மூட்டையாக நல்ல பெயர் எடுத்த அந்த டிரைவர். எப்படி சாத்தியம் ஆயிற்று?

இப்பொழுதெல்லாம் காலை மாலை இரு வேளையும் அவளிடம் இருந்து அதிசயமாகப் போன் கால்கள். எல்லாவற்றிலும் டிரைவர் புராணம். ஆனால், அவனுக்கு ஏதோ சரியில்லை என்றேதான் தோன்றியது. பிரிவு, தனிமை, தொலைவு... காரணம் சொல்லத் தெரியவில்லை.
“நாளைக் காலை திரும்பறேன். வேலையை ஒருவழியாக முடிச்சுட்டேன். காரை ஸ்டேஷன் அனுப்பிடு...” அவனுக்குள் இருந்த பரபரப்பு வார்த்தைகளில் சரியாக வரவில்லை என்றே தோன்றியது.

‘‘பப்பி ஸ்கூல் போகணுங்களே. நீங்க ப்ரீபெய்டுலே வந்துடுங்க...”அந்த மூன்று மாதத்தில் தெருவே மாறிப்போயிருந்தது. அவன் வீட்டின் முன் மணல் குவித்துப் போடப்பட்டிருந்தது. பக்கத்து ப்ளாட் பெரியதாகத் தோண்டப்பட்டிருந்தது. அங்கே... இங்கே என்று சிறியதாக கல் குவியல்கள்...

“தெருவில் நிறைய வீடுகளுக்கு அடித்தளம் போட்டிருக்கு. நீ சொல்லவே இல்லை?”“என்னாத்த கேக்குறீங்க? நாள் முழுவதும் சத்தம். ராத்திரியும் விட்டு வைக்க மாட்டேங்கிறானுங்க. உடைக்கறதும், அரைக்கிறதும்...”“பப்பி விளையாடப் போகும் போது பாத்துக்குறல்ல?”

“அட. பப்பி கவலை இனிமேல் உங்களுக்கு வேண்டாம். நம்ம டிரைவர் அவளை விட்டு இங்க அங்க போறதில்ல. கண்பார்வையிலேயேதான். காலைலே ஏழு மணிக்கு வந்தார்ன்னா, பப்பி கூடவேதான். தெரியுமா, மாலதி போன வாரம் வந்திருந்தா. இவரைப்பார்த்து திகைச்சுப் போயிட்டா. இவ்வளவு நல்ல டிரைவர் எப்படி கிடைச்சார், எனக்கும் சொல்லுன்னு இப்ப தினம் போன்தான்...’’‘‘சரிதான், பப்பிக்கு செட் ஆயிடுச்சில்ல. சாயந்தரம் ஸ்கூல் விட்டு வந்ததும் பேசலாம். ராஜி, தனியா சமாளிக்க முடியுதா? அம்மாவைக் கூப்பிட வேண்டாமா?”

“வேண்டாங்க. இன்னும் ஒரு வருசத்திலே இங்கே எல்லா இடமும் வீடாத்தான் மாறியிருக்கும். ஒரு கவலையும் இல்லேங்க, சமாளிச்சுடுவேன். இருங்க சாப்பிட ஏதாவது எடுத்தாரேன்...”அவனுக்குப் பிடித்த மர மல்லிகைகள் பூமியில் சிதறிக்கிடந்தன. மெல்லிய வாசம் அவ்வப்போது முகத்தைத் தொட்டுச்சென்றது. அது யார்? டிரைவர் போல் தான் தெரிகிறது. சாப்பிடுகிறார் போல. ஏன் வீடு செல்லவில்லை? ராஜியிடம் கேட்கவேண்டும். நாள் முழுவதும் இங்கே இருக்கப்போகிறார் என்றால், நிச்சயமாகச் சம்பளம் போதவில்லை என்ற பிராது எழுப்பத்தான் போகிறார்.

ஆனால், நல்லவர் போல்தான் தெரிகிறது. பக்கத்தில்... நான்கு, ஆறு மற்றும் எட்டு வயதில் கைகளை அவரிடம் நீட்டியபடி மூன்று பெண் குழந்தைகள், கட்டட வேலை செய்யும் பெண்ணின் குழந்தைகளாக இருக்கவேண்டும். மூன்று பெண் குழந்தைகளா? ஒரு பெண் குழந்தையை நினைத்தே மனதில் பயம். மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

டிரைவர் அந்த மூன்று குழந்தைகளையும் தன் பக்கத்தில் அமர்த்தி டிபன் பாக்ஸிலிருந்து எதையோ அவர்களுக்குக் கொடுத்தபடி... ஆனால், அவரின் மற்றொரு கை..? அந்த சின்னப் பெண்ணின் தொடைகளைத் தடவியபடி... மேலே... மேலே....அதிர்ந்து எழுந்து நின்றான்.“இந்தாங்க காபி...”“நாம வேறு டிரைவர் பார்க்கலாம்...”அவள் கத்த ஆரம்பிக்கப்போவது தெரிந்தது.

அது எதில் போய் முடியும் என்பதும் தெரிந்தது. உன் அம்மாவை வரவேண்டாம்ன்னு சொன்னதற்குப் பழியா? நான் சொல்லி என்ன கேப்பதுன்னு இளக்காரம். இதைப்போல் குற்றச்சாட்டுகள் அடுக்கப்படும். இருக்கட்டும். உண்மையான காரணம் அவளுக்கு இப்போது தெரியவேண்டாம்.

புரிந்துகொள்ளும் நிலை வரும் ஒரு தருணம் நிதானமாகப் புரியவைக்கலாம்.அவன் மனம் கனத்துத்தான் கிடந்தது. காரில் அவள் எங்கு அமர்ந்து வந்தாள் என்று பப்பியைக் கேட்க வேண்டும். டிரைவருடன் விளையாடினாளா என்று பப்பியைக் கேட்கவேண்டும். அவன் தொட்டானா என்று...கடவுளை வேண்டிக்கொண்டான். தன் கேள்விகளுக்கு பப்பியின் பதில் “ஆம்” என்று இருக்கக்கூடாது என்று.

லதா ரகுநாதன்