ரத்த மகுடம்-138



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

காலம் காலமாக புழங்கும் வீட்டுக்குள் இயல்பாக நடமாடுவதுபோலவே அந்தப் பணிப்பெண் வாதாபிக்குள் நுழைந்தாள். தடுமாற்றமே இல்லை. தடுமாற வேண்டிய அவசியமும் இல்லை.வாதாபி அவளது தாய்வீடு. நினைவு தெரிந்தது முதல் இந்த நகரத்தில்தான் புழங்கிக் கொண்டிருக்கிறாள். தவழ்ந்தது, நடை பயின்றது, நடந்தது, நடப்பது எல்லாம் வாதாபியில்தான். வீதிகளின் நீள அகலத்தை அவளது பாதங்கள் அறியும். வீதிகளின் எண்ணிக்கையும் மாளிகைகளின் சுற்றளவும் இல்லங்களின் அளவும் அவளுக்கு மனப்பாடம்.

காற்றும் புகாதபடி அவளது கண்களை இறுகக் கட்டினாலும் யார் மீதும் மோதாமல் எந்தப்புரவியின் குளம்பிலும் அடிபடாமல் கைகளை வீசி நடப்பாள். செல்ல வேண்டிய இடத்துக்கு சரியாகச் சென்றடைவாள்.பூர்வீகம்..? ஒருவருக்கும் தெரியாது.

பெற்றோர்..? யாரும் அறியார். உடன் பிறந்தவர்கள்..? தகவல் ஏதுமில்லை. ஆனால், வாதாபியை அவளுக்கும் அவளை வாதாபிக்கும் தெரியும். அவள்தான் வாதாபி. வாதாபிதான் அவள். அவள் தவழ்ந்தபோது இமைகளை விரித்து கண்கொட்டாமல் பார்த்து ரசித்ததும் வாதாபிதான். அவள் தத்தித் தத்தி நடந்தபோது கைதட்டி வரவேற்றதும் வாதாபிதான்.

வாதாபிதான் அவளுக்கு அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா, மாமா, மாமி, தோழன், தோழி, காதலன்... எல்லாமே.  பல்லவ மன்னர் நரசிம்மவர்மர் தலைமையில் பல்லவ சேனாதிபதி பரஞ்சோதி படைகளை நடத்தியதாகவும், புழுதியைக் கிளப்பியபடி அப்படைகள் சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசி தலைமையிலான படைகளைத் துரத்தியபடியே வாதாபிக்குள் நுழைந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறாள். பார்த்ததில்லை. அப்போது அவள் ஜனித்திருக்கவில்லை.

ஆனால், ஆண்டுகள் கடந்தும் இப்பொழுது வரை அப்படையெடுப்பே வாதாபி மக்களின் பேசு பொருளாக இருக்கிறது. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பல்லவப் படைகளே காணப்பட்டதாகவும், புரவிப் படைகளும் காலாட்படைகளும் கோட்டைக்குள் நுழைந்து நகரம் முழுக்க பரவியதாகவும், யானைப் படைகள் மட்டும் கோட்டைக்கு வெளியே சாளுக்கியர்களின் நட்பு தேசப் படைகள் வராதபடி அரணாக நின்று காவல் காத்ததாகவும் சொல்வார்கள். சொல்கிறார்கள். சொல்லிக் கொண்டும் இருப்பார்கள்.

மறக்கக் கூடிய நிகழ்வா அது..? சாளுக்கிய மக்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை. அதேநேரம் சாளுக்கியப் படைகளை நடமாடவும் வாழவும் விடவில்லை. தென்பட்ட ஒவ்வொரு சாளுக்கிய வீரனையும் ஒவ்வொரு பல்லவப் படை வீரன் வெட்டிச் சாய்த்தான்.

அரச வீதியில் இருந்த ஒவ்வொரு மாளிகைக்குள்ளும் புகுந்து பல்லவ வீரர்கள் சூறையாடினார்கள். வணிகர் வீதியில் இருந்த மாளிகையின் சேமிப்புக் கிடங்குகள் துடைக்கப்பட்டன.தங்கம், வைரம், வைடூரியமல்ல... ஒரேயொரு செப்பு நாணயத்தைக் கூட விட்டுவைக்கவில்லை. சகலமும் பல்லவர் வசமாகின.

சாளுக்கியப் படைகள் பின்வாங்கத் தொடங்கியதுமே வாதாபிக்கு செய்தி வந்துவிட்டது. தாங்கள் மாமன்னராகப் போற்றிய இரண்டாம் புலிகேசியின் சிரசை போரில் சீவிவிட்டார்கள் என்ற தகவல் கிடைத்ததுமே அரச குடும்பத்தினரும் அமைச்சர் பிரதானிகளும் சுரங்கம் வழியே வெளியேறிவிட்டார்கள். வணிகர்கள் அள்ள முடிந்த செல்வங்களுடன் தலைமறைவானார்கள்.மூர்க்கத்துடன் வாதாபிக்குள் நுழைந்த பல்லவர் படைகளிடம் சிக்கியது அப்பாவி பொது மக்கள்தான்.

ஆனால், ஒன்று சொல்ல வேண்டும். அதுவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பெண்களை மானபங்கப்படுத்தவில்லை.

மாறாக ஆண்கள்தான் வேட்டையாடப்பட்டார்கள். பெண்கள் வாழும் நகரம் என்று சொல்லும் அளவுக்கு வாதாபியை மாற்றியபின்னரே பல்லவப் படைகள் ஓய்ந்தன.ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையுமான சிவகாமி எங்கு சிறை வைக்கப்பட்டாரோ... அங்குதான் நேராக நரசிம்மவர்ம பல்லவரும் பரஞ்சோதியும் முதலில் வந்தார்கள். சிவகாமி அம்மையாரை விடுவித்தார்கள்.

அதன் பிறகுதான் பல்லவர்களின் ரத்த வெறி உச்சத்தை அடைந்தது. எந்தக் கோலத்தில் பார்க்கவே கூடாது என்று நரசிம்மவர்மர் விரும்பினாரோ அந்தக் கோலத்தில்தான் சிவகாமி அம்மையார் இருந்தார்.பல்லவ மன்னரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.தலைவிரி கோலமாக இருந்த சிவகாமி அம்மையாரைப் பார்த்து அதிர்ந்து சிலையான பரஞ்சோதியைப் பார்த்து நரசிம்மவர்மர் கட்டளையிட்டார். இல்லை, கர்ஜித்தார் என்று சொல்வதே சரி. அதன் பிறகு அரங்கேறியது வரலாறல்ல. ரத்த சரித்திரம்.

வால்மீகி எழுதியதெல்லாம் எதுவுமே இல்லை... இலங்கையை அனுமார் தீக்கிரையாக்கியதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வாதாபியை பல்லவப் படைகள் தீ வைத்துக் கொளுத்தின. நகரமே பற்றி எரிந்தது. அரண்மனை முதல் மக்களின் குடியிருப்பு வரை எதுவும் தப்பவில்லை. எதுவும் மிஞ்சவில்லை. மாளிகைகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன. குடியிருப்புகள் எல்லாம்  இடிக்கப்பட்டன. தங்குவதற்கு அல்ல, ஒண்டக் கூட மக்களுக்கு ஓரடி நிழல் கூட  கிடைக்கவில்லை.மிஞ்சியது சாம்பல் மட்டும்தான்.

அதுவரை நரசிம்மவர்மர் ஒரு சொட்டு நீர் கூட அருந்தவில்லை. உறங்கவுமில்லை. பல்லவப் படைகள் உறங்கவும் அனுமதிக்கவில்லை.வாதாபியில் வெற்றிக் கம்பத்தை நட்டு... அதில் பல்லவர்களின் வெற்றியை கல்வெட்டாக செதுக்கினார். அதன்பிறகு அவர் வந்த தேரில் சிவகாமி அம்மையாரை ஏற்றினார்.

அவரே சாரதியானார். மொத்தம் பன்னிரண்டு முறை. வேண்டுதல் போல வாதாபி முழுக்க தேரைச் செலுத்தினார். இடிக்கப்பட்ட... கொளுத்தப்பட்ட... மண்ணோடு மண்ணாகிப் போன வாதாபியை கண்களும் மனமும் குளிரும் அளவுக்கு சிவகாமி அம்மையாரை தரிசிக்க வைத்தார். அதன் பிறகே தன் படைகளுடன் நரசிம்மவர்மர் வெளியேறினார்...

பெருமூச்சுவிட்ட பணிப்பெண்ணுக்கு எப்பொழுதும் போல் அப்பொழுதும் நரசிம்மவர்மர் செய்தது சரியென்றே தோன்றியது.

பல்லவர்கள் மீது சாளுக்கியர்கள் படையெடுத்தது தவறில்லை. அது அரசர்களுக்குரிய தர்மம். ஆனால், பிணையாக ஒரு பெண்ணைப் பிடித்து வந்து வாதாபி யின் மத்தியில் அனைவரும் பார்க்கும் அளவு சிறை வைத்தது எப்படி சரியாகும்..?

அரச குடும்பத்து மகளிரை சிறை எடுப்பதே தவறு என்னும்போது ஏதுமறியாத... நாட்டியமாட மட்டுமே தெரிந்த... பல்லவ இளவரசரைக் காதலித்த ஒரே குற்றத்துக்காக... ஒரு சிற்பியின் மகளைக் கடத்தி வந்து பன்னிரண்டு ஆண்டுகள் வெய்யிலிலும் மழையிலும் இருக்க வைத்தது பஞ்சமா பாதகமல்லவா..? எந்த தர்மமும் இதை அனுமதிக்காதே... எந்த மறை நூல்களும் இதை நியாயப்படுத்தாதே...

அதற்கான விலையைத்தான் வாதாபி கொடுத்தது. மன்னரின் பாவங்களை மக்களே அனுபவிப்பார்கள் என்ற உண்மையையும் உலகுக்கு அறிவித்தது.
மெல்ல பணிப்பெண் கூடையைச் சுமந்தபடி நடந்தாள்.எதிர்ப்பட்ட சாளுக்கிய வீரர்களுக்கு எல்லாம் அவள் கூழ் கொடுக்கவில்லை.

தேர்ந்தெடுத்த இடங்களில் இருந்த வீரர்கள் முன்னால்தான் கூடையை இறக்கினாள். குவளையில் கூழை ஊற்றிக் கொடுத்தாள். குடிக்கும் அவர்களைப் பார்த்தாள். அகன்றாள். நடந்தாள்.அவள் அறியாத வாதாபியைக் குறித்து மக்கள்தான் அறிய வைத்தார்கள்.

ஆனால், அவள் அறிந்த... இப்பொழுதிருக்கும் வாதாபியை அவளே அறிவாள்.சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசி போரில் பல்லவர்களால் தலை சீவி கொல்லப்பட்டதும் தேசமே அல்லாடியது. மன்னரில்லை. தலைநகரும் இல்லை. இளவரசர்களோ எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

என்ன செய்வது என்று மக்கள் தவித்தபோது இளைஞராக விக்கிரமாதித்தர் வந்து சேர்ந்தார். இரண்டாம் புலிகேசியின் மகன். ஆனால், மூத்த மகனல்ல. என்றாலும் தன் சகோதரர்களை வீழ்த்தி அரியணையைக் கைப்பற்றினார்.

எரிந்து சாம்பலாகி மண்ணோடு மண்ணாகிப் போன வாதாபியை மக்களின் துணையோடு மீண்டும் எழுப்பினார். முன்பை விட வலுவான கோட்டை கட்டப்பட்டது.இப்பணிகள் நடந்தபோது அவள் விவரம் புரியும் வயதில் இருந்தாள். எனவே வாதாபியின் வளர்ச்சியை அணு அணுவாகக் கண்டாள்.

அவளும் வாதாபியும் ஒருசேர வளர்ந்தார்கள்.சிற்றரசர்களைப் பணிய வைத்து, சாளுக்கிய தேசத்தைத் தலைநிமிர வைத்து, பல்லவர்களைப் பழிவாங்க பெரும் படையுடன் சில திங்களுக்கு முன் மன்னர் விக்கிரமாதித்தர் இளவரசர் விநயாதித்தருடன் புறப்பட்டபோது வாதாபியே விழாக்கோலம் பூண்டு அவர்களை வழியனுப்பி வைத்தது.

எதிர்ப்பின்றி காஞ்சியை விக்கிரமாதித்தர் கைப்பற்றிவிட்டார் என்று தகவல் கிடைத்தபோது வாதாபி மக்கள் விழா எடுத்துக் கொண்டாடினார்கள். தலைமறைவான பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மரும் அவர் மகன் இராஜசிம்மனும் ரகசியமாக படைகளைத் திரட்டி வருகிறார்கள் என்று அறிந்ததும் கைதட்டிச் சிரித்தார்கள். சாளுக்கியர்களை உங்களால் வீழ்த்த முடியாது என கொக்கரித்தார்கள்.

என்றாலும் மன்னரில்லாத சமயத்தில் வாதாபியை முற்றுகையிட்டு கைப்பற்ற பல்லவர்கள் முயன்றால்..? அதற்காகத்தான் விக்கிரமாதித்தருடன் செல்லாத சாளுக்கிய வீரர்கள் பகலும் இரவுமாக வாதாபியைக் காவல் காக்கிறார்கள்.அந்தப் பணிப்பெண் அனைத்தையும் அசைபோட்டபடி வாதாபியின் மத்திய பகுதியில் இருந்த கொற்றவை ஆலயத்துக்கு வந்து சேர்ந்தாள்.

முன்பு அங்கு கூரை இல்லாமல் நான்கு தூண்கள் மட்டுமே எழுப்பப்பட்ட மண்டபம் இருந்தது. அதில்தான் ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையுமான சிவகாமி அம்மையாரை சங்கிலியால் கட்டி வைத்திருந்தார்கள்.வாதாபி மீண்டும் எழுப்பப்பட்டபோது அந்த இடத்தில் கொற்றவைக்கு ஆலயம் கட்டினார் விக்கிரமாதித்தர்.கோயிலின் வாசலுக்கு வந்த அந்தப் பணிப்பெண், கூடையை இறக்கிவிட்டு நுழைந்தாள். கர்ப்பக்கிரகத்தில் சுடர்விட்ட காளியைப் பார்த்தாள். சிவகாமி அம்மையாரின் தலைவிரிகோலமே அவள் கண்முன்னால் விஸ்வரூபம் எடுத்தது.வணங்கினாள். பிரார்த்தனை செய்தாள். வெளியில் வந்து நிலைப்படியில் அமர்ந்தாள்.

கூழ் குடித்த வீரர்கள் தகவலை அறிந்திருப்பார்கள் என்பதில் அப்பெண்ணுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் கூழ் என்பது குறியீடு. ஒரு மனிதனின் வருகையை அறிவிக்கும் கட்டியங்காரனின் குரல் அது.வரவிருக்கும் அந்த மனிதனுக்காக அந்தப் பணிப்பெண் பொறுமையாகக் காத்திருக்கத் தொடங்கினாள்.அந்த மனிதன் யாரென்பதையும் எப்பணியை அவன் மேற்கொள்ளப் போகிறான் என்பதையும் அவள் அறிவாள். அதுவும் முழுமையாக.அவன், பல்லவ உபசேனாதிபதியும் சோழ இளவரசனுமான கரிகாலன்!

பறவைகள் தன்னைப் பார்த்துவிடக் கூடாது... மீன்கள் தன்னை அறிந்துவிடக் கூடாது என எச்சரிக்கையுடன் ஏரியில் அந்தத் தோணி நகர்ந்து கொண்டிருந்தது.நீருக்கு வலிக்காதபடி துடுப்பைச் செலுத்திக்கொண்டிருந்த சிவகாமியின் செவி மடல்கள் சட்டென தன் அசைவை நிறுத்தின.துடுப்பு போட்டபடியே சிவகாமி திரும்பினாள்.மூன்று தோணிகளில் ஐந்து சாளுக்கிய வீரர்கள் அரைவட்டமாக தன்னை நெருங்குவதைக் கண்டாள்.புன்னகைத்தாள். துடுப்பின் நுனியை லாவகமாக இழுத்தாள்.மெல்லிய வாள் அவள் வலது கையை அலங்கரித்தது.இடது கையால் துடுப்பை போட்டபடியே வலது கையில் இருந்த வாளை அசைத்து வந்தவர்களை வரவேற்றாள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்