யார் இந்த திஷா ரவி ?



இரண்டு மாதங்களுக்கு மேல் இந்தியாவையே உலுக்கிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் இப்போது சர்வதேச அளவில் முக்கிய பேசு பெருளாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் ரியானா, கிரேட்டா தன்பர்க் போன்ற உலகப் பிரபலங்களின் ஆதரவுக் குரல். இதனுடன் இப்போது திஷா ரவியின் கைதும் இணைந்திருக்கிறது.
ஆம்; விவசாயப் போராட்டம் சம்பந்தமான கிரேட்டாவின் பதிவை ஒரு போராட்டக் குழுவின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார் என்று பெங்களூருவைச் சேர்ந்த திஷா ரவியைக் கைது செய்திருக்கிறது தில்லி காவல்துறை.

இப்படியான போராட்டங்கள் நடக்கும்போது, அதில் பங்கு பெறுபவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் ‘டூல்கிட்’ என்ற ஆவணத்தை பகிர்ந்ததாகவும் திஷா ரவியின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

கிரேட்டா தன்பர்க் பகிர்ந்த டூல்கிட்டிற்குப் பின்னணியாக திஷா ரவி இருப்பதாகக் கூட சந்தேகம் எழுந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, திஷா ரவியை உடனடியாக விடுதலை செய்யச் சொல்லி நாலாப்பக்கமிருந்தும் கலகக்குரல் வெடித்துள்ளது.
யார் இந்த திஷா ரவி?

கிரேட்டா தன்பர்க்கின் சுற்றுச்சூழல் அமைப்பான ‘Fridays for Future’ உலகெங்கும் கிளை பரப்பியுள்ளது. இதன் இந்தியக் கிளையைத் தலைமை தாங்கி வழிநடத்துபவர்தான் இந்த திஷா ரவி. இந்தியாவின் இளம் சுற்றுச்சூழல் போராளிகளில் முதன்மையானவர் இவர். கைது செய்யப்பட்ட பிறகுதான் இவரைப் பற்றிய தகவல்கள் வெளியே கசிய ஆரம்பித்திருக்கிறது.

பெங்களூருவில் இருக்கும் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஏரிகளைச் சுத்தம் செய்வது, பருவ நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மரங்களை நடுவது, சூழல் சம்பந்தமான போராட்டங்களை ஒருங்கிணைப்பது என சூழல் சார்ந்த செயல்பாடுகளில் இறங்கி அடித்துக் கொண்டிருந்தார்.

 ‘தி கார்டியன்’, ‘வோக்’ உட்பட பல சர்வதேச பத்திரிகைகளில் சூழல் பிரச்னைகளைக் குறித்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வணிக நிர்வாகம் படித்த திஷா, வீகன் உணவு தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.  இவருடைய வயது 21.

த.சக்திவேல்