துரோபதி
செய்தித்தாளை மடித்து அனுப்பின மாதிரி திருவிழா அழைப்பிதழை கூரியரில் அனுப்பி இருந்தான் ரஃபிக். டபிள்யூ.முஹமது ரஃபிக் என்ற பெயரை உறையின் மீது பார்த்ததுமே நித்யானந்தனின் மனசுக்குள்ளிருந்த பறவைகள், அவரைத் தூக்கிக்கொண்டு வானத்தில் பறந்தன.மின்விசிறியை நிறுத்திவிட்டு, கட்டில் மீது அழைப்பிதழைப் பரப்பி படிக்க நினைத்தவர், கட்டிலால் தீட்டாகிவிடப் போகிறதென்று, தரையில் உட்கார்ந்து விரித்தார். “செண்பகா! கண்ணாடி எங்க வெச்சேன் பாரு, எடுத்தா...” சமையற்கட்டு வரைக்கும் குரல்அனுப்பினார்.
 “ரெண்டு கையுமே அழுக்கு, நீங்களே எடுத்துக்கறது உத்தமம்...” சமையற்கட்டிலிருந்து பதில் குரல். எண்ணெயில் கடுகுபோட்ட மத்தாப்பு சத்தமும் வந்தது.சலித்துக்கொண்டார். அவருடைய ஆர்வம், மனக் கொண்டாட்டம், நரம்புகளின் துள்ளல், ஞாபகங்களின் ஓசை ஆகியவற்றை எல்லாம் செண்பகவள்ளியால் உணர முடியாது. ஆமாம்தானே? கஸ்தூரியின் வாழ்க்கையை செண்பகவள்ளி எப்படி உணருவாள்..? “எங்கேயும் காணோம் செண்பா...”“டிவி மேல இருக்கு பாருங்க...” “முதல்லயே சொல்ல மாட்டியா?”
 “வெச்சது நீங்கதானே, முதல்லயே டிவி மேல பாக்க மாட்டீங்களா?” அவரிடம் கோபமெல்லாம் போய்விட்டது. கத்துவதெல்லாம் இல்லை, வயது தருகிற ஞானம் அதுதான். தன் கோபம் எவ்வளவு நியாயமோ அவ்வளவு நியாயம் அடுத்தவர்களின் கோபத்திலும் இருப்பதை உணரும் ஞானம்.கண்ணாடியை மாட்டிக்கொண்டு ஊர்த்திருவிழாவின் அழைப்பிதழை தரையில் பரப்பி ஓரத்தில் செல்ஃபோனை வைத்து விட்டு மூச்சு விரியப் பார்த்தார். திருவிழா அழைப்பிதழைப் பார்ப்பது ஏலகிரி மலைமிதேறி மஞ்சாக்கல் பாறை மீது குரங்குபோல் உட்கார்ந்து (வுழுந்துடப் போறீங்கடா...) ஊரையே பார்க்கிற மாதிரி இருந்தது.
ஏழாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிற திருவிழா. ஒரு மாதக் கொண்டாட்டம். காஞ்சி புரம் உபாசகர் கலைமாமணி முத்துக்கண்ணப்பரின் மஹாபாரத சொற்பொழிவு…! இருபத்தியேழு நாட்கள் பதினெட்டு ஊர் ஜனங்களுக்குமான குளுகோஸ். சொற்பொழிவு மதியம் ஒரு மணிக்கு தொடங்கி மாலை ஐந்து மணிக்கு முடியும். ஒவ்வொரு நாள் ஒவ்வொருவரின் பிறப்பை சொல்வார். கிருஷ்ணர் பிறப்பு, கர்ணன் பிறப்பு, திரௌபதி பிறப்பு, பஞ்ச பாண்டவர்கள் பிறப்பு, கௌரவர்கள் பிறப்பு.
“என்னடா சூரியனுக்கு பொறக்கறாங்க, இந்திரனுக்கு பொறக்கறாங்க, நெருப்புக்கு பொறக்காறங்க, வாயுவுக்கு பொறக்கறாங்க, ஆத்துக்கு பொறக்கறாங்க.. இவங்க யாரும் செக்சுக்கு பொறக்கலயே…” எப்போதோ சுப்பிரமணி கேட்டதை இப்போது நினைத்தும் சிரித்துக்கொண்டார்.“வாழ்க்கை ஃபுல்லா நெருப்புல வேகறதுக்கு நான் பொறந்திருக்கம்பா...” கஸ்தூரி சொன்னது அடிக்கடி சுடும்.
“டெஸ்ட் ட்யூப் பேபிமகாபாரதக் காலத்திலேயே இருந்திருக்கு, கௌரவர்கள் நூறு பேரை சட்டில வெச்சிதான் வளத்திருக்காங்க…” “எனக்குப் புடிச்சவரு கர்ணந்தாண்டா...”“எனக்கு ஏகலைவன்தான் பிடிக்கும்..”“கஸ்தூரி! நீ அஞ்சிபேரக் கட்டிக்குவியா?” மாதக் கணக்கில் நண்பர்கள் இப்படித்தான் மகாபாரதத்தையே பேசிக் கொண்டிருப்பார்கள்.பள்ளி விடுமுறைக் காலத்தில் அக்னிவெயில் தீய்க்கிற சித்திரை மாதம்தான் மகாபாரதத் திருவிழா நடக்கும். கதை கேட்பதற்கு சுத்துவட்ட கிராமங்களிலிருந்தெல்லாம் மாட்டுவண்டியில் வந்திறங்குவார்கள்.
பகலில் சொற்பொழிவு, இரவில் தெருக்கூத்து. பொழுது விடியும்போதுதான் தெருக்கூத்து முடியும். எப்பவும் பஃபூன் வேஷம் போட்டவர்தான் பசங்களுக்கு ஹீரோ. வாயைத் திறந்தார்னா பச்சையான விசயம்தான் பேசுவார். பெரியவர்கள் பொளந்து பொளந்து சிரிப்பார்கள். அர்ஜுனன்தபசு பிரசித்தி.
நிலச்சுவான்தார் சின்னாப்ப கவுண்டர்தான் அர்ஜுனனாக வேசம் கட்டுவார். பனைமரத்தை நிறுத்தி படிகள் மாதிரி மரத்தில் கொம்புகள் செருகி வைத்திருப்பார்கள். அர்ஜுனன் தபசு மரத்தில் படிக்கு ஒரு பாட்டைப் பாடிக்கொண்டு உச்சியில் போய் உட்காருவார். மக்கள் “கோவிந்தா… கோவிந்தா...” என வானத்தை நோக்கி கூவுவார்கள். எப்போதுமே கண்களுக்குத் தெரியாத கருடப் பருந்து அப்போது வானத்தில் வட்டமடிக்கும். மேகங்கள் திரண்டு வந்துவிடும். கொஞ்ச நேரத்தில் மழை கொட்டும். தண்ணீர்ப் பஞ்சம் வரும்போதெல்லாம் அர்ஜுனன் தபசு தெருக்கூத்து நடத்துவார்கள். மழை வரும். ஏமாற்றாது.
சுப்பிரமணியின் அப்பா கயிற்றுக்கட்டிலில் பீடி, நெருப்பெட்டிக் கடையும், நித்யானந்தனின் அப்பா பொரிகடலைக் கடையும், ரஃபிக்கின் அப்பா சோடாகலர் கடையும், மகாபாரதம் நடக்கும் வரை கோயில் எதிரில் போடுவார்கள். கஸ்தூரியின் அப்பா…ஆமாம், வெள்ளை கஸ்தூரியின் அப்பா டீக்கடை போடுவார். அம்மா போண்டா வடை. கஸ்தூரி தட்டுக் கூடையில் போண்டா வடை எடுத்துக்கொண்டு சுற்றிச் சுற்றி வியாபாரம் பண்ணுவாள். ரஃபிக் சோடா எடுத்துக் கொள்வான்.
பசங்ககிட்ட காசு புரளும், கஸ்தூரிகிட்ட அதிகமாவே புரளும். பாவாடைக்குள்ளே தோல்பையே செருகி வைத்திருப்பாள். கொலுசு சத்தம் கேட்பதைப் போல சில்லரை சத்தம் கேட்கும்.இவங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். பள்ளிக்கூடம் இல்லை, அடி வாங்கும் வேலை இல்லை, கையில் சில்லரை வேறு. பசங்களோட சுத்திச் சுத்தி வருவதும் குச்சிஐஸ் தின்பதும், ரங்கராட்டினத்தில் உட்காருவதுமென்று செம ஆர்ப்பாட்டம்தான்.
கஸ்தூரிக்கு குதிரையில் உட்காருவதற்கு ரொம்பப் பிடிக்கும். அவளோட அம்மா விட மாட்டாள். தூரத்திலிருந்தாலும் அடுப்பிலிருந்து கொள்ளிக் கட்டையைக் காட்டி மிரட்டுவாள். ஆண்பிள்ளைகள் குதிரையில் உட்கார, கஸ்தூரி ஊஞ்சல் பெட்டியில் உட்காருவாள். எல்லோருமே ஊஞ்சல் பெட்டியில் அவளோடு உட்கார வேண்டுமென்று இழுப்பாள்.
அதற்காக ஒரு தடவை எல்லோருக்கும் அவளே துட்டும் கொடுத்தாள். குதிரையில் உட்கார ரொம்ப ஆசைப்படுகிறாள் என்று நித்யானந்தம்தான் ஒரு யோசனை சொன்னான். “என் டவுசர் சொக்காவ மாட்டினு போய் ஆம்பள பையன் மாதிரி உக்காந்துட்டு வந்துடு. உங்கம்மாவால கண்டுபிடிக்க முடியாது...”
ஆனால், துணி மாற்றுவதற்கு மறைவான இடம்தான் கிடைக்கவில்லை. வாழைத்தோப்பிற்குள் மாற்றிக் கொள்ள அழைத்தான். சம்மதித்து தண்ணீர்க் கால்வாய் வரை வந்தவள். “வேணாண்டா...” என்று ஓடி விட்டாள். அது நித்யானந்தனுக்கு பெரிய ஏமாற்றம்தான். “நான் தோப்புக்குள்ள வரல. வெளியேவே நிக்கிறேன். எங்கம்மா மேல சத்தியம்...” என்றான். கஸ்தூரி ஓடி விட்டாள். பாவாடை வயதிலேயே சத்தியத்தை நம்பவில்லை.
கிருஷ்ணர் பிறப்பு கதை வரும் நாளில் அன்னதானம் இருக்கும். கர்ணமோட்சம் அன்னைக்கு போட்டி போட்டுக் கொண்டு தானம் புரிவார்கள். எத்தனை கர்ணர்கள்? அரக்கு மாளிகை எரியும்போது அதிலிருந்து வேஷம் கட்டியவர்கள் தப்பித்து ஓடி வருவதைப் பார்ப்பதற்கு பரபரப்பாக தகிக்கும். நெஞ்சம் அதிரும்.
அவர்கள் எப்படியாவது தப்பிக்க வேண்டுமே என்று படபடக்கும். சின்ன வயது, நிஜமாக நடப்பது போலவே நம்பத் தோன்றும்.
மாட்டுவண்டியில் ஐம்பது வண்டி மண்ணைக் கொண்டு வந்து மலை போல் கொட்டி துரியோதனனை வடிப்பார்கள். பாரதச் சொற்பொழிவின் கடைசி நாள், துரியோதனின் தொடைக்குள் குங்கும நீர் ஊற்றி பானை வைத்து விடுவார்கள்.
கதை சொல்லி முடிக்கும்போது, ராமசாமிகவுண்டர் பீமன் வேஷம் கட்டிக் கொண்டு கதாயுதத்தை தூக்கி வந்து துரியோதனன் தொடையில் ஓங்கி அடிப்பார். குங்குமத் தண்ணீர் குருதி போல் சிதறியோடும்.பாஞ்சாலி வேஷம் கட்டி வருவது வடிவேல் கவுண்டர். பொட்டச்சி கூட அவ்வளவு அழகா இருக்க முடியாது. முகம், உடம்பு மொத்தமும் எம்ஜிஆர் நிறத்தில் ரோஸ் பவுடர் பூசிக்கொண்டு மஞ்சள் நிற புடவைகட்டி வந்து ரத்தத்தை அள்ளி அள்ளி கூந்தலில் பூசிக் கொள்வா(ள்)ர்.
ஜவுரி முடியெல்லாம் இல்லை. சொந்த முடி! வடிவேல் கவுண்டர், தாத்தாவாகி பல்லெல்லாம் விழுந்தும் கூட, அந்தப் பாஞ்சாலி கூந்தலை வெட்டவில்லை. இன்னும் கூட பருத்திவெள்ளையில் அந்தக் கூந்தல் அவர் தலையில் பத்திரமாக இருக்கிறது. பருத்திக் கொல்லையைத்தான் பிள்ளைகள் விற்று விட்டார்களாம்.மதியம் ஒரு மணியிலிருந்து மாலை ஏழு மணிவரைதான் பெரியவங்க மகாபாரதம். காலையிலிருந்து மத்தியானம் வரை பசங்களோட மகாபாரதம். தாயம் விளையாடி தோற்பதும், துகில் உரிவதும் பிரத்யேகமான கூத்து.
கஸ்தூரிதான் திரௌபதி. ரஃபிக்தான் கிருஷ்ணன், சுப்பிரமணி துச்சாதனன், நித்யானந்தன் தருமன். ரிப்பன் போல் பேப்பரை வெட்டி, வெட்டி ஒட்டி நீளமான சேலையை நெய்வார்கள். ரஃபிக் புங்க மரத்திலேறி சேலை விடுவது போலவும், ரவிச்சந்திரன் கஸ்தூரி உடம்பிலிருந்து சேலையை இழுப்பது போலவும் நடிப்பார்கள்.
‘‘டேய்! மெதுவா இழுடா… எத்தனதாட்டி கிழிப்ப...’’போர் நடக்கும்போது அர்ஜுனன், கர்ணன், கிருஷ்ணனாகி விடுவார்கள். குச்சியை உடைத்து வில்லாக வளைத்து, கயிறு கட்டி தோளில் மாட்டிக் கொள்வார்கள். மூங்கில் குச்சி முனையில் வெயிலில் உருகின தாரை உருண்டை பிடித்து குச்சிகளில் செருகிக் கொள்வார்கள் - அம்புகள். “பாருடா... நாந்தான் தொரோபதி. இப்போ சொயம்வரம் நடக்குது. உங்கள்ல யாரு நான் சொல்ற கொடுக்காப்புளி மேல அம்பு வுடறானோ அவன்தான் அர்ஜுனன்...” கஸ்தூரி இடுப்பு மீது கைகளை வைத்து, சொன்ன அழகு கண்களுக்குள்ளேயே நிற்கிறது. “நீ தொரோபதியா?””ஆமாண்டா…”“அப்போ அஞ்சி பேர கல்யாணம் பண்ணிக்குவியா?”“டேய்…” கோபித்துக்கொண்டு கஸ்தூரி போகும்போது அசைந்த இடுப்பு, ஆடிய ரெட்டை ஜடை, கொஞ்ச தூரம் போனதும் திரும்பிப்பார்த்து கோபத்துடன் உதடுகளைச் சுழித்து கழுத்தை உடைத்து, முறுக்கிக்கொண்டு போகும் அழகு... செத்தாலும் மறக்க முடியாது.
அவள் போனபிறகு மூவரும் ஓர் இலக்கைத் தீர்மானித்து அம்பெய்துவார்கள். வில்லை வளைத்து அம்பு விடுவதில் ரஃபிக் எப்பவும் கெட்டிக்காரனாக இருப்பான்.அப்போதுதான், ‘‘மகாபாரதம் மாதிரி நாம மூணு பேரும் ஒரே பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா பிரியவே மாட்டோமில்ல...” சுப்பிரமணி சொன்னான்.
“ஆமாண்டா. பெரியவங்களானதும் கல்யாணம் பண்ணுவோமில்ல. எந்தப் பொண்ணு மூணு பேரையும் கட்டிக்கிறேன்னு சொல்லுதோ, அந்தப் பொண்ணத்தான் கட்டிக்கணும்…” ஏதும் அறியாத வயது. வானத்தில் நிரந்தரமற்று பேரழகாகத் தெரியும் மேகச்சித்திரத்தைப் போன்று பேசிக் கொண்டார்கள்.“யாரும் பேச்சு மாறக் கூடாது...”“ஆமா...”கொஞ்ச நேரத்தில் ஆளுக்கொரு கமர்கட்டு வாங்கி வந்து சேர்ந்தாள் கஸ்தூரி.
ஊர்பட்ட வெட்கம். “இந்தாங்கடா...”“உன் பேச்சு காய் வுட்டுட்டோம், நாங்க பெரிய மனுசனா ஆயிட்டதும் மூணுபேரும் ஒரே பொண்ண கல்யாணம் பண்ணிக்கப் போறோம். தெரியுமா? எப்பவும் பிரிய மாட்டோம். ஒத்துமையா இருப்போம்...”“நானும் உங்களோட சேந்துக்கிறண்டா, நாம நாலு பேரும் சேந்து ஒரு பொண்ண கட்டிக்குவோம்...”மூவரும் சிரித்தார்கள். “இப்பதான முறுக்கிக்கிட்டு போன?” “அவந்தான தப்பா சொன்னான், அஞ்சி பேர கல்யாணம் கட்டிக்கோன்னு...” “இப்ப நீதான நாலு பேரும் சேந்து கட்டிக்கலாம்னு சொன்ன...” “நாம சேந்து வேற பொண்ண பண்ணிக்கலாம்னு சொன்னேன்...” மூவரும் மரங்கள் குலுங்கினதைப் போல் சிரித்தார்கள்.
“நீ பொட்டச்சி, மறந்துட்டியா?” கஸ்தூரியிடம் அப்போது பார்த்த அந்த வெட்கத்தை வாழ்நாளில் வேறெந்தப் பெண்களிடமும் வேறு எப்போதுமே பார்த்ததே இல்லை. அதுதான் இந்த உலகின் கடைசி வெட்கமோ என்னவோ? அந்தக் குழந்தைத்தனமும் வேறெந்தப் பெண்களிடமும் பார்க்க முடிவதில்லை. “அப்போ நீங்க மட்டும் ஒத்துமையா இருப்பீங்க, என்ன சேத்துக்க மாட்டீங்களா?”
“எங்கள கண்ணாலம் பண்ணிக்கோ…” “மூணு தாலி கழுத்துல தொங்கினா அசிங்கமா இருப்பேன்...” “ஒன்னையே மூணு பேரும் கட்றோம்...” “ஆளுக்கொரு முடிச்சி போடுவீங்களாடா…” “ஏமாத்த மாட்டியே...”
“நித்திகிட்ட சொல்லுடா, அவந்தான் எப்பவும் ஏமாத்தறவன். நம்பள வுட்டுட்டு தனியாப் போயி மூசுருண்ட திங்கிறவன்...”நால்வரும் பஞ்சாயத்து பண்ணி பேசி முடிவெடுத்தார்கள்.கஸ்தூரி வெள்ளந்தியாய் அம்மாவிடம் சொல்லி, போண்டாக் கம்பியில் சூடும் வாங்கினாள். இந்த திரௌபதியும், அர்ஜுனனும், தர்மனும், பீமனும் அப்போது நான்காவதோ ஐந்தாவதோ படித்துக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த ஏழு வருடங்கள் கழித்து திருவிழா வந்தபோது நித்யானந்தன் ப்ளஸ்டூ. ரஃபிக்கும், சுப்பிரமணியும் பத்தாவது முடியாமல் நின்று விட்டார்கள். மூன்று முறை பரீட்சை எழுதிவிட்டார்கள். இங்கிலீசும், கணக்கும் இடைஞ்சலாகவே போயிற்று.கஸ்தூரி தாவணி பாவாடையில் அழகென்றால் அழகு, பார்வையை மாற்றாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு. பேசவே முடியாது. கஸ்தூரியோட அம்மா பக்கத்திலேயே இருப்பாங்க, பசங்களைப் பார்க்கறது கூட பயந்து பயந்து பார்ப்பாள்.
“எப்படிடா இவ்ளோ அழகா மாறிட்டா?” “எப்பவும் அவ அழகுதாண்டா…”
அரக்கு மாளிகை எரியும்போதுதான், வேடிக்கை பார்க்கும் சாக்கில் அவர்களோடு இணைந்தாள். நித்யானந்தனின் முதுகில் பஞ்சுமூட்டை மாதிரி ஒட்டிக் கொண்டாள், தோளில் முகம் வைத்தாள்.அரக்கு மாளிகை எரிந்து முடிந்து ஜனங்கள் கலைந்து போகும்போது “மூணு பேரையும் கட்டிக்கிறேன்னு சொல்லி இருக்கே….” சுப்பிரமணி கேட்டான்.
“ஏன் முப்பது பேர கட்டிக்கிறேன்னு செல்லலியா?”“என்ன, கொடுத்த வாக்க மறந்துட்டியா?”“எனக்கு பாண்டவர்கள் வேணாம், கதையை மாத்திடலாம், சுயம்வரத்துல அர்ஜுனன் தோத்துட்டான். துரியோதனன்தான் ஜெயிச்சான், துரியோதன னோட அம்மா நூறு பேரையும் கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டா… எப்புடி?” சொல்லி சிரித்துக் கொண்டே ஓடி விட்டாள். படிப்பு, வேலை என மூவருமே வேறு வேறு திசைகளில் பறந்து விட்டார்கள். திருமணமாகி மனைவி, பிள்ளைகள், வாழ்க்கை என்று முப்பது நாளில் இந்தி, முப்பது நாளில் ஆங்கிலம் மாதிரியும் முப்பது நாளில் மகாபாரதச் சொற்பொழிவு மாதிரியும் ஓடிவிட்டது.
போன மகாபாரதத் திருவிழாவிற்கு போனபோது, கஸ்தூரி எண்ணெயில் போண்டா விட்டுக் கொண்டிருந்தாள். கஸ்தூரியின் அம்மா ரொம்பவும் பாட்டியாகிவிட்டிருந்தாள். அம்மா பக்கத்தில் இருக்கிற பயமேயின்றி “போங்கடா… மூணு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டீங்க.
ஒருத்தனுக்காவது என்னக் கட்டிக்கணும்னு தோணலியேடா…” என்று வெறுமையாய் சொன்னபோது வாளில் நெஞ்சைக் குத்தின மாதிரி துடித்தார்கள். குடும்பங்களைப் பற்றி துருவித் துருவி விசாரித்தாள். மகாபாரதக் கதையைவிட எங்களின் கதைகளை விரும்பிக் கேட்டாள். எங்களோடு அவளே வாழ்ந்தது போன்று மகிழ்ந்தாள்.
புறப்படும்போது கண் கலங்கின மாதிரியும், கலங்காத மாதிரியும் சொன்னாள். “நான் கொடுத்து வெச்சது அவ்ளோதாண்டா. என்ன கல்யாணம் பண்ணிதான் ஒருத்தனும் பாக்கல. நான் எப்போ செத்தாலும் சரி, எங்கிருந்தாலும் மூணு புருசன்களும் வந்துடுங்கடா…” கஸ்தூரி அழவில்லை, “ஏங்க... மகாபாரதம் டிவில வருது, யூட்யூப்ல வருது.
கேக்கலாம்ல? முப்பது நாள் ஊர்ல போயே கேக்கணுமா?” செண்பகா முணுமுணுத்தாள்.“அது பாக்கற, கேக்கற மகாபாரதம் இல்ல செண்பகா, நாங்க வாழ்ந்த மகாபாரதம்...” நித்யானந்தனுக்கு இப்படி பைத்தியக்காரத்தனமாகத்தான் பதில் சொல்ல முடிந்தது.
நாராயணிகண்ணகி
|