கல்லானாலும் பெண்கள் கழுத்தில் கல்லாவேன்..!



அதேதான். தலைப்பில் இருப்பதுதான் இப்பொழுது டிரெண்ட்!தங்கம், வெள்ளி போலவே பழங்காலம் முதல் வழக்கத்தில் இருக்கும் நகைகளை ஃபேஷன் உலகம் ‘பீட்ஸ்’ என அழைக்கிறது.நம் பாட்டியிடம் கேட்டால் ‘முத்து பாசி, பவள பாசி, நவரத்தின மாலை எல்லாம் எங்கம்மா எனக்குப் போட்டாங்க...’ என பொக்கை வாயைத் திறந்து கனவுகளில் மிதப்பார்கள்.

‘‘உண்மை என்னன்னா நான் இந்த பிஸினஸ்ல பல வருஷங்களா இருக்கேன். நான் பார்த்த வரைக்கும் இப்பதான் இந்த பீட்ஸ்களுக்கு தேவையும், டிரெண்டும் அதிகமாகியிருக்கு...’’ எப்படி தங்கம், வெள்ளி போலவே இன்றைக்கும் தனக்கான இடத்தை இவை தக்க  வைத்திருக்கின்றன என விழிகள் விரிய பேசத் தொடங்கினார் தாரிணி.

‘‘காரணம், பெண்களுடைய வாழ்க்கை மாற ஆரம்பிச்சிடுச்சு. வீட்டை விட அதிகமா வெளியே இருக்கக் கூடிய சூழல். என்னதான் தங்கம், வெள்ளி போட்டுக்கிட்டாலும் அவை ஒரு குறிப்பிட்ட ஆடைகள் கூடதான் பொருந்தும். புடவை, தாவணினு அதனோட மேட்சிங் ரொம்பவே குறைவு.
அதை மீறி வேற எந்த டிரெஸ்ஸுக்கும் பயன்படுத்தவே முடியாது. தவிர தங்கம், வைரம் எல்லாம் வெளில போட்டுக்கிட்டு வர்றது முக்கியமில்ல... அதனோட பாதுகாப்புதான் முக்கியம்.

மாசத்துல ஒரு ஃபங்ஷன், ஏதோவொரு விழாக்காலம்னு இருந்தது போயி இப்ப தினம் தினம் தங்களை அழகா காட்டிக்க வேண்டிய சூழல் பெண்களுக்கு உண்டாகியிருக்கு. இதனாலதான் பெண்களோட பார்வை பீட்ஸ் பக்கம் திரும்பியிருக்கு. ரூ.300ல தொடங்கி மரகதம், வைரம் வரை கற்களின் விலை கூடும். அதாவது லட்சம், கோடி வரை.

இந்த கற்கள் பிஸினஸில் உலகத்திலேயே இந்தியாதான் டாப். நம்ப மாட்டீங்க, ஆனா அதுதான் உண்மை. இப்ப வரைக்கும் எந்த நாடுகளாலும் நம்ம பீட்ஸை பீட் பண்ண முடியலை. காரணம் நம்முடைய கட்டிங் டெக்னிக்.

எவ்வளவு சின்ன அளவுனாலும் அருமையா கட் செய்து கொடுக்கும் அளவுக்கு திறமையான ஆட்கள் இங்க அதிகம். இப்ப வரைக்கும் பல நாடுகள்ல இருந்து... அவ்வளவு ஏன், ஆப்பிரிக்கா மாதிரியான கற்கள் பிஸினஸில் கோலோச்சிய நாடுகள்ல இருந்து கூட... இங்க கற்கள் கொண்டு வந்து வெட்டி வாங்கிட்டுப் போறது அல்லது இங்க விற்பனைக்குக் கொண்டு வருவது, இங்க இருந்து ஏற்றுமதி செய்யறதுனு பிஸினஸ் செய்யறாங்க.
ஒரே வார்த்தைல சொல்லணும்னா கற்கள் பிஸினஸில் எந்த நாட்டாலும் தொட முடியாத உயரத்துல நாம இருக்கோம்...’’ என்ற தாரிணி, அண்டை நாடான சீனாவிலேயே இன்னமும் மெஷின் கட்தான் செய்கிறார்கள் என்கிறார்.

‘‘அதிலும் ஒரு குறிப்பிட்ட சைஸ்தான். உடைகள், ஆக்ஸசரிஸ்கள் உற்பத்தியிலே வளர்ந்த அளவுக்கு அவங்க இன்னமும் நகைகளை செய்வதில் வளரலை. அதுலயும் பீட்ஸ் நகைகளுக்கு அங்க ஆளே இல்ல. இந்தியாவுக்குதான் அவங்க வந்தாகணும்.

வைரம், வைடூரியம், முத்து, மரகதம், மாணிக்கம், பவளம், புஷ்பராகம், கோமேதகம், நீலம்னு அதிக விலையுள்ள கற்கள்ல ஆரம்பிச்சு பச்சை மாணிக்கக் கல், செவ்வந்திக்கல், சிட்ரைன், பிசின் கல், சூரியகாந்தக் கல், லோலைட், கியானைட்னு நிறைய கற்கள் இருக்கு.

இப்ப அடுக்கடுக்கா லைன் போட்டு கல் நெக்லெஸ் அணிவதுதான் டிரெண்ட்...’’ என தாரிணி முடிக்க, பீட்ஸ் நகைகளை எந்த உடைகளுடன் எந்த மேக்கப்புடன் அணிய வேண்டும் என சொல்லத் தொடங்கினார்கள் டிசைனர் ரேகா ராகுலும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ரம்யா அழகேந்திரனும். ‘‘தங்க நகைகளுக்கு எப்பவுமே ஒரு லிமிட் உண்டு. ஜரிகை அல்லது பட்டு வெரைட்டிகளுக்கு மட்டுமே போட்டுக்க முடியும். அதுவே பீட்ஸ்னா என்ன உடைக்கும், எப்படியும் மேட்ச் செய்துக்கலாம்.

டெனிம் பாட்டம், வெள்ளை ஷர்ட் போட்டு ஒரு லைன் கிரிஸ்டல் நெக்லஸை கழுத்தை ஒட்டிப் போட்டுக்கலாம். பென்சில் ஸ்கர்ட், கிராப் டாப், சைட் ஸ்லிட் மாக்ஸி, பார்ட்டி கவுன், டிசைனர் சேலைகள், சல்வார், லெஹெங்கா... ஏன், நம் மாடல்கள் அணிந்திருப்பது போல் கிளாமர் காக்டெயில் உடைகளுக்கும் கூட பீட்ஸ் அணியலாம். ஹார்ட் பீட்டை கண்டிப்பா எகிற வைக்கும்...’’ என ரேகா முடிக்க, இடைமறித்து தொடர்ந்தார் ரம்யா.
‘‘பீட்ஸ்களுக்கு மேக்கப் இதுதான்னு எதுவுமே கிடையாது. டிரெஸ்ஸுக்கு மேட்சிங்கா மேக்கப் போட்டாலே போதும்.

இதுவே தங்கம், வைரம்னா அந்த நகைகளை விட முகம் ஜொலிக்கணும். டிரெடிஷனல் லுக் மட்டும்தான் ஒரே சாய்ஸ். வேற வழியே கிடையாது. பீட்ஸ்களுக்கு இப்படியெல்லாம் எந்த மேக்கப் கட்டுப்பாடுகளும் கிடையாது. குறிப்பா திருட்டு பயம் கிடையாது. நிம்மதியாவும், டிரெண்டியாவும் இருக்கலாம்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் ரம்யா.

மாடல்கள்: தச்சனி சாந்த சொரூபன், சண்முகபிரியா, ஜெஸ்ஸி, அகிலா, அஞ்சனா, திவ்யதர்ஷினி, ஹர்ஷிதா, கஜோல், கிருத்திகா, சந்தியா, சஞ்சனா, சாரா.

நகைகள்: @utharikha_jewellers
ஸ்பெஷல் ஸ்பான்சர்: Ritzy Photography, @madarase_group
இடம் உதவி: @lacabana_chennai

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆகாஷ் தியாகராஜன்