தேர்வு எழுதாமல் இனி I A S அதிகாரியாகலாம்! தனியார்மயமாகிறதா இந்திய ஆட்சிப் பணிக்கான பதவிகள்?சமீபத்தில், மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் யுபிஎஸ்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், மத்திய அரசுத் துறைகளில் உள்ள இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பதவிக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுவரை இத்தகைய பணிக்கு யுபிஎஸ்சி நடத்தும் தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது, இவையெல்லாம் இந்திய ஆட்சிப் பணிக்கான பதவிகள். ஆனால், இப்போது எந்தத் தேர்வும் இன்றி அனுபவம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இதற்கு துறை ரீதியான அனுபவம் உள்ளவர்கள் இருந்தால் அந்தத் துறை வளர்ச்சியடையும் என அரசு கருதுவதாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனாலேயே, கடந்த 2018ம் ஆண்டு ஒன்பது இணைச் செயலாளர்களுக்கான பதவிகளுக்கு இப்படி தனியார் துறையில் பணியாற்றி யவர்களை நியமித்தது மத்திய அரசு.

இப்போது மூன்று இணைச் செயலாளர்கள் மற்றும் 27 இயக்குநர்கள் பதவிக்கான இடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய ஆட்சிப் பணியில் சேர்வதற்காக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அகடமியில் சேர்ந்தும், தனித்தும் ஆர்வமாகப் பயின்று வருகிறார்கள் லட்சக்கணக்கான மாணவர்கள். இவர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என ஒவ்வொன்றையும் கடந்து இந்திய ஆட்சிப் பணியை எட்டிப்பிடிக்க வேண்டும். இதில், சமூக இடஒதுக்கீடு முறை பின்பற்றி பதவிகள் நிரப்பப்படுகின்றன.  

ஆனால், இப்போது தனியார் துறையில் அனுபவம் உள்ளவர்களை எந்தத் தேர்வும் எழுதாமல் மத்திய அரசே நியமிப்பது சமூக அநீதி என அரசியல்கட்சியினர் வேதனை தெரிவிக்கின்றனர். தவிர, இது இந்திய ஆட்சிப் பணியை தனியார்மயமாக்கும் போக்கு என்கின்றனர் சில முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள். இதுகுறித்து ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான எம்.ஜி.தேவசகாயத்திடம் பேசினோம்.

‘‘இப்போதைய மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாவற்றையும் தனியார் கையில் கொடுத்துட்டு வருது. இவற்றை ஐந்தாறு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் கையில் வச்சிருக்காங்க. இந்த ஐந்தாறு பெரிய நிறுவனங்களே எல்லா வணிகமும் பண்ணணும்னு ஆசைப்படுறாங்க. மற்ற சிறிய நிறுவனங்களோ, சிறிய விவசாயிகளோ, சிறிய வணிகர்களோ தேவையில்லனு நினைக்கிறாங்க.

இந்தியாவின் டாப் மோஸ்ட் பப்ளிக் சர்வீஸ்னா அது இந்திய ஆட்சிப் பணிதான். அதையும் தனியார் ஆக்கிட துடிக்கிறாங்க. பொதுவா, ஒரு ஐஏஎஸ் தன் பணியை கிராம அலுவலர் லெவல்ல இருந்தே தொடங்குவார். அங்கிருந்து தாசில்தார் லெவலுக்கு வந்து பிறகு உதவி ஆட்சியர், துணை ஆட்சியர் பதவியைப் பெறுவார். இதெல்லாம் கொஞ்சம் வேகமாக நடக்கும். அப்புறமே, ஆட்சியர் பதவிக்கு வருவார்.

பிறகு, துறை சார்ந்த இயக்குநர் பதவிக்குப் போய், அடுத்து இணைச் செயலாளர், செயலாளர் பதவியை அடைவார். மாநிலச் செயலாளர் பதவிக்கு வந்ததும் மத்திய அரசில் இணைச் செயலாளர், செயலாளர் அளவுக்குப் போவார். மொத்தமா 18 வருட அனுபவம் உள்ள ஒரு ஐஏஎஸ் அதிகாரி யைத்தான் இணைச் செயலாளரா போட முடியும். இயக்குநர் பதவிக்கு 12 வருட சர்வீஸ் தேவை. கீழிருந்து மேலே போவதுதான் அடிப்படை ஜனநாயக முறை. ஆனா, அதை ஓரங்ககட்டிவிட்டு மேலிருந்து தேர்வு செய்யும் போக்கை மத்திய அரசு செய்வது தவறானது.

ஏற்கனவே, 2018ல் ஒன்பது பேரை இணைச் செயலாளர்களாக நியமிச்சாங்க. அவங்க அந்தப் பதவியில் இருந்து என்ன சாதிச்சாங்கனு இதுவரை யாருக்கும் தெரியாது. அதுக்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர்களை நியமிக்கும் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டு இருக்காங்க. இவங்க நோக்கம் அந்த ஐந்தாறு கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்தவங்களை இணைச் செயலாளர்களாகக் கொண்டு வருவதுதான்.

அப்புறம், இந்தப் பணி மூன்று வருட கான்ட்ராக்ட்னு சொல்றாங்க. தேவைப்பட்டால் ஐந்து வருடம் நீட்டிப்பாங்களாம். மூன்று வருட கான்ராக்ட்னு சொல்றது அர்த்தமில்லாதது. ஏன்னா, மூன்று வருடம் பப்ளிக் சர்வீஸ் பண்ண முடியுமா? இந்தத் திட்டம் என்னனா, இப்ப பொதுத்துறையை தனியார் வசமாக்குறாங்க இல்லையா? அதுல அரசின் சொத்துகளை இந்த ஐந்தாறு நிறுவனங்களுக்கு மாற்றிவிடும் ஏற்பாடுதான். அதுக்காகவே, தனியாரை நேரடியா பணிநியமனம் செய்றாங்க. அப்புறம், கான்ட்ராக்ட் முடிஞ்சதும் அந்தச் செயலாளர் பதவியில் இருந்தவர் குறிப்பிட்ட அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கே போயிடுவார்.

இப்படி நேரடியா நியமிக்கிற கான்செப்ட் புதுசு கிடையாது. முன்னாடியும் செய்திருக்காங்க. ஆனா, அப்ப இருந்த நிலைமையே வேற. அப்ப குறிப்பிட்ட துறையில் உயர்மட்ட நிபுணர்களாக இருந்தவர்களை செயலாளராக நியமிச்சாங்க. உதாரணத்துக்கு நம் தமிழகத்தைச் சேர்ந்த எம்.எஸ்.சுவாமி நாதன் ஐஏஎஸ் கிடையாது. ஆனா, அவர் வேளாண் துறையில் நிபுணராக இருந்தார். அதனால், அவரை வேளாண் துறை செயலாளரா நியமிச்சாங்க.

இப்படி வேறு மாநிலத்ைதச் சேர்ந்தவங்களையும் செயலாளராக நியமிச்சிருக்காங்க. பிமல் ஜலன் என்பவர் நிதித்துறை செயலாளரா இருந்தார். இவங்ககிட்ட நிறைய அனுபவமும், நிபுணத்துவமும் இருந்துச்சு. அதனால், இந்தப் பதவிக்கு தகுதியானவர்களா இருந்தாங்க.

ஆனா, இப்ப இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் பதவிக்கான வயது நாற்பதுனு சொல்றாங்க. இப்படி இளம் வயதுள்ளவர்களை அந்த பழைய முறைப்படி எடுத்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்த பயன்படுத்துறது
அரசின் நோக்கம். இந்தத் திட்டம் ரொம்ப ஆபத்தானது.  

அந்தந்தத் துறையில் நிபுணத்துவமும், படிப்பும் உள்ள ஆட்கள் இருந்தால் அந்தத் துறை சிறப்பாகும்னு அரசு நினைச்சா, இப்ப இருக்கிற ஐஏஎஸ்லயே ஐஐடி, ஐஐஎம்ல படிச்சவங்க அல்லது இந்த ரெண்டிலும் படிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க. தவிர, டாக்டர்ல மேற்படிப்பு படிச்சவங்களும், மேனேஜ்மென்ட், பைனான்ஸ், அக்ரி பட்டம் பெற்றவங்களும் ஐஏஎஸ் பதவியில் இருக்காங்க. இவங்களுக்கு சரியான பயிற்சி கொடுத்து அவங்களை இணைச் செயலாளர்களா நியமிக்கலாமே... அரசு அப்படிச் செய்யலையே...

வளர்ந்த நாடுகளைப் பார்த்து இப்படி நேரடியா நியமிக்கிறாங்க. ஆனா, நம் நாடு பாமர மக்கள் உள்ள நாடு. அடித்தட்டு மக்கள்கிட்ட வேலை செய்ற நபர்கள்தான் நமக்குத் தேவை. பாமர மக்கள் பத்தின அறிவு இருந்தால்தான் மக்களோடு மக்களா பழகி, பணிகள் செய்ய முடியும். ஹார்வார்டு பல்கலைக்கழகத்துல படிச்ச ஆட்கள் நமக்கு எதுக்கு?

மேல்மட்டத்துல படிச்சு, மேல உள்ள நிறுவனங்கள்ல வேலை செய்தவங்களுக்கு எப்படி சாதாரண மக்கள் பற்றின படிப்பினை இருக்கும்? இது தவறான மனப்பான்மை. இப்படி, பப்ளிக் சர்வீஸை பிரைவேட்டா மாத்த முயற்சி செய்தால் அது பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அது 80 சதவீத மக்களுக்கு பாதகமாகவே முடியும்...’’ என வேதனையுடன் சொல்கிறார் தேவசகாயம்.

பேராச்சி கண்ணன்