உத்தரகாண்ட் வெள்ளம் மனிதன் உண்டாக்கிய விபத்தா?



கடந்த வாரம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது உத்தரகாண்ட் பனி வெள்ளம். இந்த வெள்ளத்தில் சிக்கி 50 பேருக்கு மேல் பலியானார்கள். காணாமல் போன 154 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் பனி உருகியதுதான் என்று அரசும் ஊடகங்களும் ஆரம்பத்தில் சாதித்தன. ஆனால், இந்தச் சம்பவத்தைக் கூர்மையாக கவனித்த சூழலியல்வாதிகள், வெப்பமான காலங்களில் பனி உருகுவது சகஜம்தான்; ஆனால், வெப்ப காலத்துக்கு முன்பாகவே பனி வெள்ளம் ஏற்பட்டிருப்பதால் இது மனிதன் உண்டாக்கியதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்பினர்.

முக்கியமாக உத்தரகாண்டின் இமயமலைப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் மனித செயற்பாடுகளால்தான் உடைந்து தூள்தூளாகி பனிக்கட்டிகளாக, பனிப்படலங்களாக வீழ்ந்திருக்கும் என்னும் முடிவுக்கு சூழலியலாளர்கள் வந்திருக்கிறார்கள். பனிப்பாறைகளில் இருந்து இவ்வளவு நீர் உருவாகி பெரு வெள்ளத்தை ஏற்படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சியும் நடந்து வருகிறது.

இருந்தாலும் இந்த வெள்ளத்துக்குக் காரணம் பனி உருகியது அல்ல; பனிப்பாறை உடைப்பே என்பதை சூழலியலாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். பனிப்பாறைகள் உடைந்தால் பனிக்கட்டிகளாகத்தானே இருக்கும்... அது எப்படி நீராக உருமாறி இவ்வளவு சேதத்தை ஏற்படுத்தியது என்று சென்னையில் இயங்கும் ‘பூவுலகின் நண்பர்கள்’ குழுவைச் சேர்ந்த சூழலியல் பொறியியலாளரான பிரபாகரனிடம் கேட்டோம்.

‘‘உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள இமயமலையின் ஒரு பகுதியான நந்தா தேவி பனிப்பாறைகள் உடைந்ததால்தான் தவுலி கங்கா, ரிஷி கங்கா, அலக்நந்தா நதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த வெள்ளத்தால் தபோவன் விஷ்ணுகாட் நீர் மின்சார நிலையம் மற்றும் ரிஷி கங்கா நீர் மின்சார திட்டங்களுக்கு பெருத்த சேதம் உண்டாகியது. குறிப்பாக ரிஷி கங்கா திட்டத்திற்காக சுரங்கப் பணிகளில் ஈடுபட்டு வந்த 174 தொழிலாளர்கள் வெள்ள இடிபாடுகளில் சிக்கினர். தபோவன் திட்டத்தின் சேத அளவு சுமார் 1500 கோடி ரூபாய்...’’ என்று ஆரம்பித்த பிரபாகரன், பனிப்பாறை உடைப்பு குறித்து விவரித்தார்.

‘‘பூமி வெப்பமயமாவதால் பனிப்பாறைகள், பனிப்படலங்கள் உருகலாம் என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். உத்தரகாண்ட் உட்பட இமய மலையின் இந்துகுஷ் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கு 2100க்குள் உருகிவிடும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

ஆனால், இப்போது நடந்திருப்பது பனி உருகியதைவிட மோசமான பனி உடைப்பு. காலநிலை மாற்றம், பூமி வெப்பமயமாவதால் பனி உருகுகிறது. ஆனால், பனி உடைவது  என்பது காலநிலை மாற்றத்தையும் தாண்டி, மனித ஊடுருவலால் நிகழும் ஆபத்து.

உத்தரகாண்டில் மார்ச் வரை குளிர்காலம். குளிர்காலத்தில் பனி உருகாது. அந்தப் பிரதேசத்தில் அரசாலும் தனியார் துறையினராலும் செயற்படுத்தப்பட்டுவரும் திட்டங்களால்தான் அங்கே பனிப்பாறைகள் உடைந்திருக்கிறது...’’ என்கிற பிரபாகரனிடம், ‘2013ல் கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். அந்தச் சம்பவமும், இதுவும் ஒன்றா...’ என்றோம்.

‘‘இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியானவைதான். ஆனால், அப்போது இந்தளவுக்கு காரணங்கள் முன்னெடுக்கப்படவில்லை. கமிட்டி எல்லாம் அரசு போட்டது. ரவி சோப்ரா என்னும் நிபுணரை ஆய்வு செய்யச்சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கேதார்நாத் அசம்பாவிதத்துக்கு அணைகள் கட்டியதுதான் காரணம் என்று ரவி சோப்ரா குற்றம்சாட்டியிருந்தார். அதனால் உத்தரகாண்டில் கட்டப்படவிருந்த 24 அணைகளில் 23 அணைகளைக் கட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், போகப்போக மத்திய அரசும், மாநில அரசும் தனியாரும் சேர்ந்து மேலும் பல அணைகள் கட்ட முயன்று வருகிறார்கள். அத்துடன் நீர் மின்சாரத் திட்டங்களைச் செயல்படுத்த தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்...’’ என்றவரிடம், ‘காலநிலை மாற்றம், அணைகள், நீர் மின் திட்டங்களால் இந்தப் பகுதியில் என்ன பிரச்னை...’ என்று கேட்டோம்.

‘‘காலநிலை மாற்றத்தைப் பொறுத்தளவில் இந்தப் பகுதிகளில் இப்போது இருக்கும் வெப்பநிலையைவிட 4 முதல் 6 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். உதாரணமாக கடந்த காலங்களில் இங்குள்ள பனிப்பாறைகளின் வெப்ப நிலை மைனஸ் 6 முதல் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. இப்போது இந்த வெப்பம் மைனஸ் 2 டிகிரி யாக மாறியிருக்கிறது. இது வெப்ப அளவின் அதிகரிப்பைக் காட்டுகிறது.

இந்துகுஷ் பகுதியில் மட்டும் 8,790 பனி ஏரிகள் உள்ளன. இதில் 203 ஏரிகள் மட்டுமே வெடிப்புகள் ஏற்படக்கூடிய அபாய நிலையில் இருக்கின்றன. இவற்றை சூழலியல்வாதிகள் கண்காணித்து வருகின்றனர். ஆனால், இப்போது ஏற்பட்டிருக்கும் வெள்ளம் இந்தப் பனி ஏரிகளில் இருந்து ஏற்பட்டிருப்பதாக சொல்லமுடியாது. பனிப்பாறை உடைந்து பனிப் படலம் மூடிய ஓர் ஏரியிலிருந்து நீர் பீறிட்டு வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

அதேபோல பனிப்பாறைகளில் நீர்பிடிப்புப் பகுதிகள் இருக்கலாம். அதையும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. ஆனால், இந்த அசம்பாவிதங்களுக்கு பனி உருகுதல் என்பதைவிட பனிப்பாறைகள் உடைந்தது என்று சொல்வதே பொருத்தமானது.

மொத்தத்தில் பல்வேறு முறைகளில் வெள்ளம் ஒன்று திரண்டிருக்கலாம் என்ற ஊகத்தை சூழலியல்வாதிகள் வைக்கின்றனர்...’’ என்ற பிரபாகரன்,  பனிவெடிப்புக்கான காரணங்களை அடுக்கினார்.

‘‘இயற்கையாக ஓடும் ஆறுகளை அணைகள் மூலம் தடுத்து திருப்பிவிடுவது, நீர் மின்சார திட்டங்களுக்காக உயரமான இடங்களில் குண்டு வைப்பது, மின் நிலையங்களுக்காக சுரங்கங்களைத் தோண்டுவது, காடு அழிப்பு, மக்கள் குடியேற்றம் போன்றவற்றால் மலைப் பகுதியின் ஸ்திரத்தன்மையில் தளர்வு ஏற்படுகிறது.

அதேபோல கான்க்ரீட் கட்டடங்களால் வெப்பமும் அதிகரிக்கிறது. இந்தக் காரணங்களால் இயற்கையாக இருக்கும் மலைத்தொடர்கள் தம் நிலையைவிட்டு பெயர ஆரம்பிக்கின்றன. அத்துடன் 4 இந்து புனித தலங்களை இணைப்பதற்காக இங்குள்ள மலைப்பகுதிகளில் அகலமான ஒரு நெடுஞ்சாலைத் திட்டத்தைச் செயற்படுத்தப் போகிறார்கள். இது இன்னும் ஆபத்தையே விளைவிக்கும்.

இந்த மலைப்பகுதியில் பல்வேறு இயற்கைப் பிரச்னைகள் ஏற்படும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்தாலும் ஒரு பயனும் இல்லை. மனிதனின் மோசமான காரியங்களால் இந்தப் பகுதியில் இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்கமுடியாது என்றே அறிஞர்கள் கருதுகிறார்கள்...’’ என்று கவலையுடன் முடித்தார் பிரபாகரன்.

டி.ரஞ்சித்