நான்...குமரவேல் (நேச்சுரல்ஸ் சலூன் & பார்லர் குரூப்)



உங்களுக்குத் தெரிஞ்ச ஃபார்முலாவை நீங்களே ரகசியமா வெச்சுக்கிட்டா நீங்க மட்டும்தான் வளர்ச்சி அடைவீங்க. உங்களுக்கு அப்புறமும் நீங்க ஆரம்பிச்ச பிஸினஸ் இருக்கணும்னா உங்களைச் சுத்தி இருக்கறவங்களுக்கும் அந்த ரகசியம் தெரியணும். இதுதான் அனுபவத்துல நான் கத்துக்கிட்ட பாடம். சொந்த ஊர் கடலூர். அப்பாவுக்கு ஃபார்மாதான் பிஸினஸ். மொத்தமா மருந்து புராடக்ட்ஸ் வாங்கி சின்னச் சின்ன பாக்கெட்டுகள்ல போட்டு மருந்துக் கடைகளுக்கு சப்ளை செய்வார்.

ஆர்.சின்னிகிருஷ்ணன். உங்களுக்கு எல்லாம் பரிச்சயமான வெல்வெட் ஷாம்பூ உரிமையாளரேதான் எங்கப்பா. ஒருமுறை அப்பா சிங்கப்பூருக்குக் கிளம்பினார். அவர் சூட்கேஸில் இருந்த டாட்டா ஷாம்பூ பாட்டில் உடைஞ்சி சூட்கேஸில இருந்த துணியெல்லாம் ஷாம்பூ ஆகிடுச்சு. அப்பதான் மருந்துகளை பாக்கெட்டுல போடுற மாதிரி ஏன் ஷாம்பூவை சாஷே என்கிற சின்ன பாக்கெட்டுகள்ல போட்டு ஒரு ரூபா விலைக்கு விற்கக் கூடாதுனு யோசிச்சார்.

இந்தியாவிலேயே முதல் முறையா திரவத்தை பாக்கெட்டுகள்ல அடைச்சு... அதுவும் சொந்த ஃபார்முலாவில் ஷாம்பூவை தயாரிச்சு அதை அறிமுகம் செய்தவர் அப்பாதான். அதுதான் வெல்வெட் ஷாம்பூ. பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்கிற விஷயங்களை ஏழைகளும் அனுபவிக்கணும்னு நினைச்சார். செய்தார். அவர் அப்படித்தான். இப்படி வரிசையா ஏதாவது ஆராய்ச்சி செய்துட்டே இருப்பார்.

‘இந்தியாவை புரட்சிகரமாக மாற்றிய 50 புதுமைகள்’னு அப்ப ‘இந்தியா டுடே’ ஒரு லிஸ்ட் வெளியிட்டது. அதுல அப்பாவுடைய வெல்வெட் ஷாம்பூவுக்கு எட்டாவது இடம் கிடைச்சது.  இந்த வெல்வெட் ஷாம்பூதான் எங்க அப்பா வெளியிட்ட கடைசி ப்ராடக்ட். தன் 48வது வயசுல அவர் காலமானார். ‘இனி நான்தான் உங்களுக்கு அப்பா அம்மா எல்லாமே’னு எங்கம்மா சொன்னாங்க. சொன்னபடியே அடுத்த 35 வருஷங்கள் எங்க எல்லாரையும் தாங்கினாங்க. அம்மா செய்யாத பிஸினஸ் இல்லை. டெய்லரிங், பேக்கரி, ஸ்கூல், கம்பெனினு அத்தனை வேலையும் செய்தாங்க. கொஞ்சம் கடன் இருந்தது. அந்த சமயத்துல ரெண்டு லட்சம். அது இப்ப ரூ.25 கோடிக்கு சமம்.

சொத்து இருந்தும் அம்மா, தான் சம்பாதிச்ச பணத்துலதான் கடனை அடைச்சாங்க. அதே சமயம் தனக்கான வாழ்க்கை சந்தோஷங்களை அவங்க விடலை. நடனம், பாட்டுனு தன்னை எப்பவும் உற்சாகமாகவே வைச்சுகிட்டாங்க. அப்படியொரு இரும்பு மனுஷி. அப்பா காலமானப்ப எனக்கு 13 வயசு. அம்மா ஹேமலதா, தமிழே தெரியாம ஆந்திராவில் இருந்து சென்னை வந்தாங்க. 9ம் வகுப்பு வரைதான் படிச்சிருக்காங்க. ஆனா, பிஸினஸை அப்படி கட்டிக்காப்பாத்தி வளர்த்தாங்க.

இப்ப மூத்த அண்ணன் டாக்டர் ராஜ்குமார்தான் வெல்வெட் ஷாம்பூவை பார்த்துக்கறார். அடுத்து அஷோக் குமார். சி.கே., கல்லூரி நடத்துறார். அடுத்து சி.கே.ரங்கநாதன். அவர்தான் கெவின்கேர் நிறுவனத்தை பார்த்துக்கறார். அடுத்து ரெண்டு அக்காக்கள். ஒருத்தர் டாக்டரா இருக்கும் விஜயலட்சுமி, அடுத்தவர் ஆண்டாள், நெல்லூரில் ஸ்கூல் நடத்துறாங்க.

நான் ஆறாவதா பிறந்த பையன். முதல்ல பெரிய அண்ணா கூட இருந்தேன். அடுத்து சின்ன அண்ணா கூட வேலை. ஏதாவது புதுசா ஐடியா சொன்னா ‘சின்னப் பையன் உனக்கு ஏதும் தெரியாது’னு சொல்லிடுவாங்க.  ஆனா, எனக்கோ புதுசா ஏதாவது செய்துட்டே இருக்கணும்னு ஓர் எண்ணம். அப்பா எப்பவும் ‘Business success English related’னு சொல்லிட்டே இருப்பார். அதாவது நாம செய்யற தொழில் சர்வதேச அளவுக்கு போகணும்னா ஆங்கில அறிவு நிச்சயம் தேவை.

நான் படிச்சது தமிழ் மீடியத்துல. ஆனாலும் அப்பா சொல்ற வாசகம் எனக்குள்ள ஓடிட்டே இருந்தது. அதனால தினமும் ஆங்கில செய்தித்தாளை படிக்க ஆரம்பிச்சேன்.கோவைலதான் கல்லூரிப் படிப்பு. அங்க முழுக்க இங்கிலீஷ் மீடியம். Co-education வேறு. கண்ணைக்கட்டி காட்டுல விட்டா மாதிரி இருந்துச்சு. ரெண்டாவது வருஷம் படிக்கிறப்ப எம்.எஸ்.உதயமூர்த்தி எங்க கல்லூரில பேச வந்தார். காந்தி ஜெயந்தியை ஒட்டி மகாத்மா காந்தியடிகள் பத்தி பேசினார்.

அப்ப ஒரு சம்பவம் சொன்னார். அமெரிக்க பார்லிமெண்ட்டில் காந்தி புகைப்படம் இருக்கு... அதுக்கு கீழ ‘A single man can make a difference’னு எழுதப்பட்டிருக்குனு சொன்னார்.அதுவரை காந்தி பத்தி அதிகம் தெரியாம இருந்தவன் நிமிர்ந்து உட்கார்ந்தேன். எனக்குள்ள விழுந்த முதல் விதை அதுதான். அதுவே சாதிக்கணும் என்கிற வெறியாச்சு. ரிஸ்க் எடுத்தாதான் தொடர்ந்து மாற்றங்களை நிகழ்த்த முடியும்னு புரிஞ்சது. எப்பவும் ஒரு விஷயத்தைப் பத்தி பேசிக்கிட்டே இருக்கிறவன் முடிவு எடுக்கவே மாட்டான். முடிவு எடுக்கிறவன் அதைப்பற்றி பேசவே மாட்டான். நான் முடிவு எடுக்கிறவனா இருக்கணும்னு முடிவெடுத்தேன்.

முதல் முயற்சி ராகா சீயக்காய் பவுடர். முதல் அஞ்சு வருஷங்கள் பிசினஸ் பிரமாதமா போச்சு. அடுத்த மூணு வருஷங்கள் தொழில்ல சில தோல்விகளை சந்திச்சேன். இதுக்கு இடைல வீட்ல பார்த்து திருமணம் முடிச்சாங்க. மனைவி பேரு வீணா. அவங்களுக்கு இயற்கையான முறைல ஃப்ரூட் ஃபேஷியல் போன்ற விஷயங்கள் செய்றதெல்லாம் ரொம்ப பிடிச்சிருந்தது. இதையே கைல எடுத்துகிட்டு நாம ஏன் ஹைடெக் சலூன் மற்றும் பார்லர் திறக்கக்கூடாதுனு நினைச்சோம். அப்படி உருவானதுதான் இந்த ‘நேச்சுரல்ஸ்’.

எங்களுடைய மிகப்பெரிய பலம், இந்தத் துறைல எங்களுக்கு எதுவும் தெரியாது என்பதுதான். அதனாலயே எங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. ஒரு துறைல இதுதான் ரூல்ஸ்னு தெரிஞ்சுட்டா அந்த வட்டத்துக்குள்ளயேதான் சுத்துவோம். அதுவே தெரியாத துறைனா எல்லா ஆராய்ச்சியையும் எந்த கட்டுப்பாடும் இல்லாம செய்வோம்.

அப்படித்தான் செய்யறோம். தொடக்கத்துல சலூன் & பார்லர் கிளைகள் தொடங்க எங்களுக்கு இடம் கிடைக்கல. தரமாட்டேன்னு பலரும் சொன்னாங்க. ‘முடி வெட்டறதுக்கு இடம் தர்றியே’னு சொந்தக்காரங்க கிண்டல் செய்வாங்கனு காரணம் சொன்னாங்க.
இதையெல்லாம் மீறி முதல் கிளையை காதர் நவாஸ்கான் சாலைல ஆரம்பிச்சோம். அடுத்து நாங்க குடியிருந்த வீட்டையே சலூனா மாத்தினோம்.
எந்த சலூனை... எந்த பார்லரை... எந்த முடி வெட்டும் தொழிலை மக்கள் ஒதுக்கினாங்களோ அதே தொழிலை ஹைடெக் கமர்ஷியலாக மாத்தினோம். முடிவெட்டும் தொழிலாளிகளை ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆகவும், பியூட்டீஷியனாகவும் மாற்றினோம்.

அடுத்தடுத்து நிறைய கிளைகள் ஆரம்பிச்சோம். ஒரு தொழிலை நாமே உருவாக்கணும்னு நினைச்சா நிச்சயம் அதுல போதுமான வேகம் இருக்காது. அதனால எங்க கூட சேர்ந்து நிறைய மக்களையும் கூட்டிச்செல்ல நினைச்சோம். முதற்கட்டமா அந்தந்த ஊர்களில் இருக்கிற எங்க உறவினர்களையே கிளைகள் ஆரம்பிக்க வைச்சு பங்குதாரர்களாக்கினோம். பாதிக்குப் பாதி பணம் நாங்களே போட்டு ஒவ்வொருவருக்கும் நேச்சுரல்ஸ் கிளைகள் திறக்க உதவி செய்தோம்.

எங்களுடைய முதல் டார்கெட் மால்கள்தான். அப்படிதான் ஸ்பென்சர்ல ஆரம்பிச்சோம். அடுத்து நீல்கிரீஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகள். காரணம் அங்கதான் மேல்தட்டு மக்களும், மேல்மட்ட மிடில் கிளாஸ் மக்களும் அதிகம் வருவாங்க. அவங்கதான் எங்க டார்கெட். நேச்சுரல்ஸ்க்கு முன்புவரை ஒரு சலூன், ஸ்பா அல்லது பார்லர் சேவை எல்லாம் ஒவ்வொரு ஊர்லயும் நட்சத்திர ஹோட்டல்கள்லதான் இருக்கும். அதை மொத்தமா உடைச்சு மிடில் கிளாஸ் மக்களும் ஹைஜீனிக்கா பயன்படுத்தும் சலூன்ஸை தொடங்கினோம்.

‘உங்களாலதான் இன்னைக்கு இந்தக் கிளையின் தலைமை ஹேர் ஸ்டைலிஸ்ட்டா இருக்கேன். இதுக்கு முன்னாடி என்னையும் என் குடும்பத்தினரையும் சமூகத்துல ஒதுக்கி வைச்சிருந்தாங்க... தேங்க்ஸ் சார்’னு ஒரு பணியாளர் நேரடியா என்னை சந்திச்சு நெகிழ்ந்தார். அன்னைக்கு முடிவுசெய்தேன்... இந்த மாதிரி சின்னச் சின்ன தொழில்கள்... அதுவும் அன்றாடம் தேவைப்படும் தொழில்களுக்கு கமர்ஷியல் முகம் கொடுத்து அதை லைம்லைட்டுக்கு கொண்டு வரணும்னு.

அப்படி என் வழில என் மகள் தமயந்தி ‘நம்ம கஃபே’ என்னும் ரோட்டோர டீக்கடையை ஹைடெக்கா கொண்டு வந்திருக்காங்க. பெண்களையும் டீக்
கடைக்கு டீ குடிக்க வரவைச்சிருக்காங்க.எனக்கு உணவுத் தொழில் பிடித்தமானது. அதை என் மகனும் மகளும் கைல எடுத்திருக்காங்க. இந்த ‘நேச்சுரல்ஸ்’ முழுக்கவும் என் மனைவியுடைய திட்டமிடல்தான். அவங்க போட்ட சார்ட்தான் இன்னைக்கு 600 கிளைகளா விரிஞ்சிருக்கு.

அந்த பாணில ‘நம்ம கஃபே’ டீ, காபி, ஸ்நாக்ஸ்னு வளருது. இதன் ஒரு பகுதிதான் சைக்கிள் டீ கேன்ஸ். சாதாரண சைக்கிள்ல டீ விற்கும் ரீடெயில் தொழில்தான். ஆனா, அதுக்கும் ஒரு கலர் கொடுத்திருக்கோம்.என் மகன் படிச்சது சிங்கப்பூர்ல. அங்க சீன உணவுகள் அவருக்கு பிடிச்சுப் போச்சு. சைனீஸ் உணவுல வேஸ்ட் என்பதே கிடையாது. ஏன்னா, ஆர்டர் கிடைச்சாதான் செய்வாங்க. கார், டூ வீலர்ல போறப்ப பாக்சை பிரிச்சு சுலபமா சாப்பிடவும் முடியும். இந்த அவசர உலகத்துல சோறு, அதுல சாம்பார் ஊத்தி பிசைந்து சாப்பிடுவதெல்லாம் டைம் வேஸ்ட்டுனு பலரும் நினைக்கறாங்க.

இதை மனசுல வைச்சு ரெட்பாக்ஸ் கான்செப்ட்டை உருவாக்கினோம். தமிழ்நாடு, பாண்டிச்சேரி, பெங்களூர்ல இப்ப 29 கிளைகள் தொடங்கியிருக்கோம். இதுல 6தான் சொந்த உருவாக்கம். மீதி 23, ஃபிரான்சைஸ். ‘நம்ம கஃபே’ மற்றும் ‘ரெட் பாக்ஸ்’ இரண்டுமே இன்னும் சில வருஷங்கள்ல தலா ஆயிரம் கிளைகளைக் கடக்கும்னு நம்பறோம். அதை நோக்கிதான் குடும்பமா பயணிக்கிறோம்.

எந்தத் தொழில்ல போதுமான அறிவும் அனுபவமும் இல்லையோ அந்தத் தொழிலை எந்த கட்டுப்பாடும் இல்லாம நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு முன்னெடுத்துச் செல்ல முடியும். இதுதான் என் அனுபவ பாடம். ஒரு துறை உங்களுக்கு தெரியலைனா வருத்தப்படாதீங்க. நல்லா தெரிஞ்சவனைவிட தெரியாத உங்களால அதிகமான சவால்களைச் சந்திக்க முடியும். தவறுகள் செய்து கத்துக்க முடியும்.

ஒரு தொழில்ல முன்னேற அதனுடைய ஃபார்முலாவை நம்மை சுத்தியிருக்கறவங்களுக்கு சொல்லிக்கொடுத்து அவங்களையும் நம்ம கூட சேர்ந்து ஓட
வச்சா மட்டும்தான் அந்தத் தொழில் வளரும்.இதுதான் பிஸினஸ் சீக்ரெட்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்