வெள்ளைப் புலி
‘நெட்பிளிக்ஸி’ன் டாப் 10 டிரெண்டிங் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் படம், ‘தி ஒயிட் டைகர்’. இந்தி, ஆங்கிலம், தமிழில் காணக்கிடைக்கிறது.
 நவீன இந்தியாவின் குக்கிராமத்தில் பிறந்த ஒருவன் எப்படி வெற்றிகரமான தொழில் அதிபராக விஸ்வரூபம் எடுக்கிறான் என்பதே படத்தின்ஒன்லைன். அரவிந்த அடிகா எழுதிய ‘தி ஒயிட் டைகர்’ என்ற நாவலைத் தழுவியது இப்படத்தின் கதை. இந்த நாவல் ‘புக்கர்’ பரிசை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள லக்ஷ்மங்கர் என்ற சிற்றூரைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ஒரு நிலப்பிரபு. அங்கே உள்ள ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் பல்ராம். காட்டில் அரிதாக கண்ணுக்கு அகப்படும் வெள்ளைப் புலியைப் போல, அவனுடைய வம்சத்திலேயே திறமைசாலி; அரிதானவன்.
ஆங்கிலத்தில் அவனுக்கு இருக்கும் புலமையைப் பார்த்து தில்லியில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. இந்நிலையில் பல்ராமின் அப்பா நிலப்பிரபுவிடம் வாங்கிய கடனைத் திருப்பித்தராமலேயே இறந்துபோகிறார். அதனால் பல்ராமைப் படிக்க போக வேண்டாம். டீக்கடையில் வேலை செய்து அப்பாவின் கடனை அடை என்று பாட்டி உத்தரவிடுகிறார். கல்விக் கனவை மூட்டைகட்டிக்கொண்டு டீக்கடையில் வேலைக்குச் சேர்கிறான். அவனது அண்ணனும் அங்கேதான் வேலை செய்கிறான்.எப்படியாவது வறுமை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறான் பல்ராம்.
அவன் வளர்ந்து இளைஞனாகிறான். நிலப்பிரபுவின் மகன் அசோக் தனது மனைவியுடன் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புகிறார். அவருக்கு கார் ஓட்ட ஒரு டிரைவர் தேவை என்ற விஷயம் பல்ராமிற்குத் தெரிய வருகிறது.
இரண்டே நாளில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு, அசோக்கிற்கு டிரைவராக வேலைக்குச் சேர்கிறான். நிலப்பிரபுவின் குடும்பத்தினரால் பலராம் ஓர் அடிமை போல நடத்தப்படுகிறான். அவனும் தன்னை அடிமை போலவே எண்ணுகிறான்.
அசோக்கும் அவரது மனைவியும் பல்ராமை மரியாதையுடன் நடத்துகிறார்கள். அசோக்கின் மனைவி நன்றாக குடித்துவிட்டு, ஒரு குழந்தையின் மீது காரை ஏற்றி கொன்றுவிடுகிறாள். ‘நான்தான் காரை ஏற்றிக் குழந்தையைக் கொன்றேன்’ என்று பல்ராமிடமிருந்து பொய்யான வாக்கு மூலத்தை வாங்கி அவனை பலிகடாவாக்குகிறது நிலப்பிரபுவின் குடும்பம்.
இதிலிருந்து பல்ராம் எப்படி தப்பித்தான்... அவன் எப்படி பெரிய தொழில் அதிபர் ஆனான்... என்பதே சுவாரஸ்யமான திரைக்கதை. இந்தியாவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்களின் நிலையை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறது இந்தப்படம்.
அதே நேரத்தில் ஏழ்மையில் பிறந்தவன் ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டுத்தான் முன்னேற முடியும் என்று காட்டியிருப்பது விமர்சனத்தைக் கிளப்பியிருக்கிறது. பல்ராமாக நடித்த ஆதர்ஷ் கௌரவ் தன்னுடைய நடிப்பில் படத்தை தாங்கிப்பிடித்துள்ளார். ஈரானிய - அமெரிக்க இயக்குநர்களில் முக்கியமானவரான ரமின் ப்ஹ்ரானிதான் இப்படத்தின் இயக்குநர்.
|