மனோகரம்



குறைந்த பட்ஜெட் என்பதால் குறைவான திரையரங்குகளில் மட்டுமே வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளிய மலையாளப் படம், ‘மனோகரம்’. இப்போது அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.நல்ல திறமையிருந்தும் சரியான அங்கீகாரம் கிடைக்காத ஒரு கலைஞனின் கதைதான் இப்படம்.

கேரளாவில் உள்ள சிட்டிலம்சேரி என்னும் அழகான கிராமம். அந்தக் கிராமத்திலேயே திறமையான ஓவியன் மனோகரன். ஆனால், அவனுக்கு உண்டான மரியாதையோ, அங்கீகாரமோ துளிகூட கிடைப்பதில்லை. இருந்தாலும் சுவர்களில் ஓவியம் வரைந்து பிழைப்பை ஓட்டுகிறான். ஃப்ளக்ஸ் பிரிண்டிங் வந்த பிறகு அந்த வேலையும் இல்லை.

இந்நிலையில் மனோகரனுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. எந்த வருமானமும் இல்லாத மனோகரனைக் கல்யாணம் செய்தால் கஷ்டப்பட வேண்டும் என்று மணப்பெண் வேறு ஒருவருடன் ஓடிவிடுகிறாள். மிகுந்த அவமானத்துக்குள்ளாகிறான் மனோகரன்.

இந்நிலையில் சின்ன வயதிலிருந்து மனோகரனின் எதிரியாக இருக்கும் ராகுல், சிட்டிலம்சேரியில் ஃப்ளக்ஸ் பிரிண்டிங் கடை திறக்க முயற்சி செய்கிறான். அதற்காக ஓர் இடத்தையும் பார்த்திருக்கிறான். ராகுலுக்கு முன்பு அந்த இடத்தில் கடை திறக்க வேண்டும் என்று சபதம் எடுக்கிறான் மனோகரன். அதனால் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் போட்டோஷாப் கற்றுக்கொள்கிறான்.

அந்த சென்டரில் ஆசிரியையாக வேலை செய்யும் ஸ்ரீஜாவுக்கு போட்டோஷாப்பைப் பற்றி எதுவுமே தெரிவதில்லை. ஊரிலேயே போட்டோஷாப் தெரிந்த ஒரே ஆள் ராகுல். வேறு வழியின்றி ஸ்ரீஜாவும் மனோகரனும் ராகுலிடம் போட்டோஷாப் கற்றுக்கொள்கிறார்கள்.

இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. டிஜிட்டலிலும் தேர்ந்த கலைஞனாக உருவெடுக்கிறான் மனோகரன். கோவையிலிருக்கும் அலிபாய் என்பவரிடம் ஃப்ளக்ஸ் பிரிண்டர் ஆர்டர் கொடுத்து, லட்சக்கணக்கில் அட்வான்ஸும் கொடுக்கிறான். பணத்தைச் சுருட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார் அலிபாய்.

வங்கியில் கடன் வாங்கி கடை ஆரம்பிக்க அட்வான்ஸ் கொடுத்துவிட்டதால் அலிபாய் இடத்திலிருக்கும் ஒரு பழைய பிரிண்டரை எடுத்துவந்து கடையைத் திறக்கிறான் மனோகரன். கடையில் ஃபிளக்ஸ் பிரிண்டர் இருப்பதாக பாவனை செய்கிறான். நிறைய ஆர்டர்கள் வருகின்றன. வெளியே பிரிண்ட் செய்து தன் கடையில் செய்ததைப் போல ஏமாற்றுகிறான். ஒரு கட்டத்தில் அவனுடைய ஏமாற்றுவேலை தெரிய வர, பிரச்னை வெடிக்கிறது.

வாங்கிய கடனை அடைக்க வேண்டும். அவனுடைய கடை மூடப்படுகிறது. இந்நிலையில் மனோகரன் என்ன செய்தான்... ஸ்ரீஜாவுடனான காதல் கைகூடியதா... என்பதே சுவாரஸ்யமான திரைக்கதை. நிச்சயிக்கப்பட்ட திருமண நிறுத்தம், கடன் வாங்கி கடை ஆரம்பிக்கும்போது நிகழும் ஏமாற்றம், அவமானங்கள் என பல தோல்விகளைக் கடந்து இறுதியில் அவன் அமரும் இடம் துவண்டு போன மனங்களுக்கு நம்பிக்கையைத் தரும் மருந்து. மனோகரனாக வாழ்ந்திருக்கிறார் வினீத் சீனிவாசன். படத்தின் இயக்குநர் அன்வர் சாதிக்.

தொகுப்பு: த.சக்திவேல்