சைபர் க்ரைம் காவலர்கள்... மக்களை உளவாளிகளாக்கும் மத்திய அரசு!இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு மாபெரும் அச்சுறுத்தல் என்றால் அது சைபர் க்ரைம் குற்றங்கள்தான்.

நம் நாடு என்றில்லை. உலகம் முழுதும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடிக்க இயலாமல் தடுமாறிக்கொண்டுதான் இருக்கின்றன. இப்படியான சூழலில்தான் மத்திய அரசு சைபர் குற்றவாளிகளைப் பிடிக்க மக்களையே உளவாளிகளாக்க முடிவெடுத்துள்ளது.

அரசு இதற்கு வைத்துள்ள பெயர் ஐ4சி (இந்தியன் சைபர் க்ரைம் கோஆர்டினேஷன் சென்டர்). Foresee என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தொலைநொக்கு என்ற பொருள் உள்ளது. அரசு இந்தத் திட்டம் மூலம் எதனைத் தொலைநோக்குகிறது..? இந்த திட்டம் என்பது என்ன..? இதன் பின் உள்ள செயல்திட்டம் என்ன..?ஐ4சி என்பது மக்களைக் கண்காணிக்க மக்களைக் கொண்டே கண்காணிப்புப் படைகளை உருவாக்குவது.

ஆர்வம் உள்ள தன்னார்வப்பணியாளர்கள் இப்படியான பணிக்கு உறுப்பினராகத் தன்னைப் பதிவு செய்துகொள்ளலாம். இவர்கள் இணையவெளிகளில் உலவும் சக குடிமக்களைக் கண்காணித்து அவர்களில் சமூக விரோத சக்திகள் இருந்தால் அதனை அரசுக்கு தெரியப்படுத்தலாம். அரசு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும்.

இந்திய இறையாண்மையையும் ஒற்றுமையையும் கெடுக்கும் பதிவுகள் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்தால் அதனை அரசுக்குத் தெரியப்படுத்தலாம். இதன் மூலம் இந்திய இராணுவத்துக்கு எதிரான பதிவுகள், நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான பதிவுகள், அந்நிய நாடுகளோடு நட்புறவாய் இருப்பதற்கு எதிரான பதிவுகள், பொது அமைதியைக் குலைக்கும் வகையிலான பதிவுகள், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பதிவுகள், சாதிகளுக்கு இடையில் அமைதியைக் குலைக்கும் பதிவுகள், மதக் கலவரங்களைத் தூண்டும் பதிவுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பதிவுகளை... எல்லாம் கண்காணித்து தன்னார்வலர்கள் அரசுக்குச் சொல்வார்கள்.

அரசு அப்பதிவுகளை நீக்கும். அவசியம் எனில் அப்பதிவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும். கடந்த வாரம் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஐ4சி திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான துண்டுப் பிரசுரம் அம்மாநில காவலர்களால் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்களை தன்னார்வலர்களாகப் பதிவு செய்ய கேட்கப்பட்டுள்ளார்கள்.

இதைப்பற்றி அம்மாநில போலீஸ் தரப்பில் விசாரித்த போது, சைபர் தன்னார்வலர்கள், சட்டத்துக்கு எதிரான பதிவுகளைக் காட்டும் ஆர்வலர்கள், சைபர் தன்னார்வலர் நிபுணர் என மூன்று வகையான பிரிவுகளில் எதில் வேண்டுமானாலும் ஒருவர் தன்னை தன்னார்வலராகப் பதிவு செய்துகொள்ளலாம் என்கிறார்கள்.இதில் முதல் தரப்பு தன்னார்வலர்கள், குழந்தைகள் பாலியல் வல்லுறவு, கூட்டுப் பாலியல் வல்லுறவு, தீவிரவாதம், அடிப்படைவாதம், அரசு விரோத செயல்கள் தொடர்பான பதிவுகளை இனம் காணப் பயன்படுவார்கள்.

இரண்டாம் தரப்பினர் இது தொடர்பான விழிப்புணர்வுகளை உருவாக்கப் பயன்படுவார்கள். மூன்றாம் தரப்பான சைபர் வல்லுநர்கள் சைபர் குற்றங்கள் நடக்கும் குறிப்பிட்ட டொமைன்களை கண்காணிப்பது, கண்டறிவது, கைரேகை தடயவியல் ஆய்வுகள், வைரஸ்களை ஆராய்வது, கிரிப்டோ கிராஃபி என்னும் கணிதவியல் சமன்பாடுகளை உருவாக்குவது ஆகிய பணிகளைச் செய்வார்கள்.

இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வலர்களில் மேலே சொன்ன முதல் வகையினருக்கு எந்தவிதமான பரிசோதனைகளும் இல்லை. ஆனால், இரண்டு மற்றும் மூன்றாவது வகையினருக்கு பெயர், முகவரி போன்ற அடிப்படைத் தகவல்கள் விசாரிக்கப்பட்ட பிறகே இந்தப் பணியில் ஈடுபட அனுமதியளிக்கப்படும். கேட்பதற்கு நல்ல திட்டம் போல்தான் இது தெரிகிறது. ஆனால், ஒரு மோசமான சர்வாதிகார அரசின் செயல்திட்டங்களில் இதுவும் ஒன்று என்பதை சற்றே வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பதோடு தேசம் தொடர்பான விவகாரங்களையும் இணைத்திருப்பது விஷமத்தனமானது. ஏற்கெனவே ஆளும் பாஜக ஆட்கள் அரசை விமர்சிப்பவர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்தி தனிமைப்படுத்தும் சூழலில் இதை ஒரு சட்ட நடவடிக்கையாக மாற்ற முயல்வது பேராபத்தில்தான் முடியும்.

எது தேசப் பற்று என்பதற்கும் எது தேச விரோதம் என்பதற்கும் வரையறைகள் என்ன? அரசை விமர்சித்தால் அது தேச விரோதம் ஆகி விடுமா?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதிலே இல்லை. ஹிட்லர் ஆட்சியில் ஜெர்மனியில் இப்படியான மக்கள் உளவுப் படைகள் உருவாக்கப்பட்ட போது கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் இன்னொருவரால்  கண்காணிக்கப்பட்டார்கள். மனைவியே கணவனைக்காட்டிக் கொடுக்கும் கொடுமை எல்லாம் நடந்தது. தொழில் போட்டியாளர்கள், தனிப்பட்ட பகைவர்கள், பிடிக்காதவர்களை எல்லாம் தேசத்தின் பெயரால் காட்டிக்கொடுத்தார்கள்.

காவல்துறை மற்றும் இராணுவத்தின் கை எல்லையற்ற வலிமையானது. ஒவ்வொரு மனிதருமே சக மனிதனிரைக் கண்டு அஞ்சினார்கள். தேசத்தின் பெயரால் அதிகாரம் நரவேட்டை ஆடியது. யாரும் எதையும் கேட்க முடியவில்லை. அரசுக்கு எதிரான சிறியதொரு அதிருப்திகூட குற்றம் எனப்பட்டது. ஒரு கட்டத்தில் மக்களாட்சி என்பதே ஒழிக்கப்பட்டு, அதிபராட்சி, சர்வாதிகார ஆட்சி கொண்டு வரப்பட்டது.

மக்கள் என்பவர்கள் குற்றம் செய்யப் பிறந்தவர்கள் என்ற காவல் துறையின் ரகசிய உளவியல் மாபெரும் உண்மை போல் சமூகத்தில் முன்வைக்கப்பட்டது. அதைக் கொண்டு ஒரு மனிதன் இன்னொரு மனிதனை எளிமையாகச் சந்தேகப்பட்டான். அவனை அழிக்க விரும்பினான்.
இதுதான் காண்காணிப்புச் சமூகங்களின் இறுதி நிலை. இவை எல்லாம் யாருடைய கற்பனையும் இல்லை. கடந்த காலங்களில் நடந்தவை. இவை எல்லாம் இங்கும் நடக்கும் என்று அச்சமூட்டவில்லை. நடந்துவிடக் கூடாது என்றே பதற்றப்படுகிறோம்.

காண்காணிப்புகள் குறைந்த சமூகங்களில்தான் மனிதர்கள் விடுதலை உணர்வோடு இருக்க இயலும். குற்றமற்ற சமூகம் என்பது நல்ல கருத்துதான். ஆனால் அதைவிட நிம்மதியற்ற சமூகம் என்பது ஆபத்தானது. மக்கள் தங்களைத் தாங்களே கண்காணிப்பது என்பது எப்போதும் சிக்கலானது.

இளங்கோ கிருஷ்ணன்