கலர் காலிஃபிளவர்!மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியைச் சேர்ந்த 42 வயதான விவசாயி ஒருவர் ரூ.16 லட்சம் மதிப்புள்ள வண்ண காலி ஃபிளவர் என்ற புதிய வகை கலப்பின பயிரை வெற்றிகரமாக பயிரிட்டுள்ளார்.  இந்த தனித்துவமான விதைகளை புனேயில் உள்ள சின்கெண்டா இந்தியா லிமிடெட் உருவாக்கியுள்ளது.
இந்த விதைகளை ரூ.40,000க்கு வாங்கிய மஹிந்திர நிகாம் தனது ஐந்து ஏக்கர் பண்ணையில் விதைத்துள்ளார். அவ்வாறு விதைக்கப்பட்ட விதையானது இப்போது 20,000 கிலோ ஊதா மற்றும் மஞ்சள் நிற காலிஃபிளவராக மாறியுள்ளது.

விதைகள், நீர்ப்பாசனம், உரங்கள், பண்ணைத் தொழிலாளர்கள் என சுமார் ரூ.2 லட்சம் செலவிட்டுள்ள மஹிந்திர நிகாம்தான், மகாராஷ்டிராவில் சிறப்பாக காலிஃபிளவர்களை வளர்த்த ஒரே விவசாயி. இந்த வண்ணமயமான காலிஃபிளவர் விற்பனையில் அவர் சம்பாதித்த தோராயமான வருமானம் சுமார் ரூ.16 லட்சம்! அதாவது ஒரு கிலோ ரூ.80 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வண்ண காலிஃபிளவர் விதைகளின் சோதனைகள் சுவிட்சர்லாந்து, அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பின்னர், அரியானாவில் உள்ள கர்னல் சோதனைப் பண்ணையில் சிறிய காலிஃபிளவர் நாற்றுகள் அதிக அளவில் பெருக்கப்பட்டன. இந்த கலப்பின காலிஃபிளவரின் ஊட்டச்சத்து மதிப்பு மிக அதிகமாம். சாதாரண காலிஃபிளவருடன் ஒப்பிடும்போது வைட்டமின் ஏ உள்ளடக்கம் அதிக அளவில் இதில் உள்ளது என்கிறார்கள்.

தொகுப்பு: அன்னம் அரசு