2 பேராசிரியர்கள்...24 நூலகங்கள்...



‘ஒரு நூலகம் திறக்கப்பட்டால் நூறு சிறைச்சாலைகள் மூடப்படும்...’ என்பார்கள். ஏனெனில், வாசிப்பு ஒரு மனிதனை பண்பட்டவனாக மாற்றிவிடும்.
அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள், ஒன்றோ… இரண்டோ அல்ல, 24 நூலகங்களை இந்தியா முழுவதும் கிராமப்புறப் பகுதிகளில் திறந்திருக்கிறார்கள். மட்டுமல்ல, இன்னும் திறப்பதற்காக பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘‘எங்க நூலகத்தின் முக்கிய நோக்கமே, அறிவியல் சிந்தனையையும், பகுத்தாயும் சிந்தனையையும் குழந்தைகள்கிட்ட வளர்க்கிறதுதான். குழந்தைப் பருவத்திலேயே சிந்தனைகள் சிறப்பாகிட்டால் அவங்க எதிர்காலமும் சிறப்பானதா இருக்கும்…’’ என அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார் நூலகத்தின் காரணகர்த்தாவான சிவசங்கர்.

‘‘நான் பிறந்தது மதுரைல. ஆனா, வளர்ந்ததெல்லாம் இந்தியாவின் பல நகரங்கள்ல. அப்பா சங்கர் நாராயணன் ஏர்போர்ஸ்ல வேலை செய்தார். அதனால, அவர் எங்கெல்லாம் வேலை செய்தாேரா அங்கெல்லாம் என் பள்ளிப் படிப்பு இருந்துச்சு. பிறகு, தில்லி ஐஐடியில் எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் முடிச்சேன். பம்பாய் ஐஐடியில் பேராசிரியரா வேலை பார்த்தேன். அப்புறம், சென்னை மேதமெட்டிக்கல் இன்ஸ்டிடியூட்ல வேலை செய்து இப்ப வெளியே வந்திட்டேன்.

அப்பா நேருவின் சோஷலிசக் கொள்கையில் பிடிப்புள்ளவர். ஆனா, நான் 17 வயசுல இருந்தே புத்த மதத்தையும், அம்பேத்கரியத்தையும் பின்பற்றிட்டு வர்றேன். எல்லோரும் சமம்கிற கொள்கை உடையவன். அப்பா, புனாவில் செட்டிலானார். அங்கிருந்து ஒரு முறை சென்னை வந்தார். அப்ப, அம்பேத்கரின் புத்தமும் அவரின் தம்மமும் நூலைப் படிச்சார். அதுக்குப் பிறகு அவர் ரொம்ப மாறிட்டார்.

அஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி அவர் புனாவுல இருந்து சென்னைக்கே வந்துட்டார். அப்ப புனாவில் இருந்த சொந்த வீட்டை வித்திட்டு, ‘இந்தப் பணத்தை தலித் மக்களின் கல்விக்கு பயன்படுத்திக்கோ’னு சொன்னார். சில நாட்கள்ல அவர் இறந்திட்டார். அந்தப் பணத்துலதான் இப்ப நான் நூலகம் ஏற்படுத்திட்டு வர்றேன்...’’ என்கிற சிவசங்கருக்கு வயது 64. அவரைத் தொடர்கிறார் இன்னொரு பேராசிரியரான ஆசைத் தம்பி. இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பணியாற்றுகிறார்.

‘‘என் சொந்த ஊர் திருச்சி மாவட்டத்துல உள்ள புறத்தாக்குடினு பழமையான கிராமம். அங்க நூலகம் அணுக முடியாதபடி பூட்டியே வச்சிருப்பாங்க.
அப்ப திருச்சி மாவட்டத்துல மொபைல் லைப்ரரி இருந்தது. அது வாரம் ஒருமுறை எல்லா கிராமங்களுக்கும் வரும். கேரவன்ல நூலகத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டிருக்கேன். எப்படி நூல்கள் கொடுப்பாங்க, எப்படி பராமரிப்பாங்கனு யோசிப்பேன்.

நான் பள்ளிக்கு போகிற நேரம் தவிர மற்ற நேரங்கள்ல ஆடு, மாடு மேய்க்கிறதா இருக்கும். காட்டுல வேலையும் செய்வோம். அதனால, ஞாயிற்றுக்
கிழமை மட்டும் கொஞ்சம் ஃப்ரீ பண்ணிட்டு அந்த நூலகத்தைப் பார்க்கப் போவேன். அங்கிருந்து நூல்கள் எடுத்திட்டு வருவேன்.
அதனால, சின்ன வயசுலயே நூலகம் மேல ஆர்வம் வந்திடுச்சு. நூலகம் போனதாலயே நான் சீக்கிரமே வேலைக்கும் வந்தேன். நமக்குக் கிடைச்ச வாய்ப்பு மற்ற குழந்தைகளுக்கும் கிடைக்கணும்னு நினைச்சேன்.

அப்பதான் சமூக செயற்பாட்டாளர்களாக இருக்கிற என்னுடைய  நண்பர்கள் வழியா சிவசங்கர் சாரின் அறிமுகம் கிடைச்சது. இரண்டு பேரின் அலைவரிசையும் ஒண்ணா இருந்துச்சு. முன்னாடியே அவர் சில இடங்கள்ல நூலகங்கள் திறந்திருந்தார். பிறகு, அவருடன் இணைஞ்சு பயணிக்க ஆரம்பிச்சேன்...’’ என்கிற ஆசைத்தம்பிக்கு வயது 29.

இந்த இளைஞரும், அனுபவம் வாய்ந்த சிவசங்கரும் சேர்ந்து இப்போது நூலகங்களை பல்வேறு இடங்களில் திறந்து வருகிறார்கள்.
‘‘அப்பா எனக்கு கொடுத்த பணத்துல ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதிகள்ல நூலகங்கள் திறக்கிற ஐடியா தோணுச்சு. புத்தர் இறந்த இடமான குஷிநகர்ல முதல் நூலகம் தொடங்கினேன். அங்க என் நண்பர் வித்யா ராவத், முசாஹர் சமூக மக்களுக்காக ஒரு மையம் ஆரம்பிச்சு இருந்தார்.

அவங்க ரொம்ப கஷ்டப்படுற மக்கள். அதனால, அங்க தொடங்கினேன். நான் அதற்கு அம்பேத்கர் நூலகம்னு பெயர் வைக்கலாம்னு நினைச்சேன்.

ஆனா அவர், ‘இது உங்க அப்பாவின் பணம். அதனால, அவர் பெயர்ல இந்த நூலகம் இருக்கட்டும்’னு சொன்னார். மட்டுமல்ல; இதன்வழியா அடக்குமுறைச் சாதியைச் சேர்ந்தவர்களும் அடக்குமுறைக்கெதிரா போராடுறாங்கன்னு மக்களுக்குத் தெரியட்டும்னு சொன்னார்.

அதனால, ‘சங்கர் நாராயணன் நினைவு நூலகம்’னு பெயர் வச்சேன். பிறகு, பெங்களூர்ல நான்கு நூலகம், கேரளாவுல ஒரு நூலகம், சென்னையில் நான்கு நூலகம் ஆரம்பிச்சேன். இதன்பிறகுதான் ஆசைத்தம்பியை சந்திக்கிற வாய்ப்பு அமைஞ்சு அவருடன் இணைஞ்சேன். அவர் தமிழ்நாட்டுல உள்ள கிராமப்புறப் பகுதிகளில் 13 நூலகங்கள் அமைச்சார். அந்த நூலகங்கள் இன்னைக்கு ரொம்ப சிறப்பா செயல்பட்டுட்டு வருது...’’ என்கிற சிவசங்கரைத் தொடர்ந்தார் ஆசைத்தம்பி.

‘‘இந்தியா முழுவதும் பண்ணணும்னு செயல்படுகிறோம். எங்களுக்கு நண்பர்கள் எங்கெல்லாம் இருக்காங்களோ அவங்க மூலம் அங்கெல்லாம் நூலகங்கள் திறந்துட்டு வர்றோம். இது ஒரு கூட்டு முயற்சி. ஆனா, இங்க ஒரு நூலகம் ஆரம்பிக்கிறது சாதாரண விஷயமில்ல. சவால்கள் நிறைஞ்சது. முதல்ல மக்கள் அதற்கு இடம் தரணும். ஆனா, தரமாட்டாங்க. சில கிராமங்கள்ல நூலகம் வருதுனா அதை ஒரு கெட்ட குறியீடா பார்த்தாங்க; பார்க்கறாங்க.

என் கிராமத்துல நூலகம் ஆரம்பிக்கிறப்பவே நிறைய பிரச்னைகளை நான் சந்திச்சேன். சிலர் ஆதாயத்திற்காக எதிர்த்தாங்க. அதை சரி செய்த பிறகே என் கிராமத்துல நூலகம் அமைக்க முடிஞ்சது.

இதுதான் தமிழகத்தில் கிராமப்புறப் பகுதியில் நாங்க அமைச்ச முதல் நூலகம். அப்புறம், சில இடங்கள்ல வேணுமா வேண்டாமா என்பதில் மக்கள் அமைதி காத்தாங்க. விவரிச்ச பிறகே ஆதரவு கொடுத்தாங்க. வடஇந்தியாவுல ஓர் இடத்துல புக்ஸ், புக் செல்ஃப்னு எல்லாத்தையும் திருடிட்டு போயிட்டாங்க. அதனால, முதல்ல ஒரு கிராமத்துக்கு நூலகம் தேவையா? அதுக்கு இடம் இருக்கா? பாதுகாக்க ஆட்கள் இருக்காங்களா... சிறப்பா நடத்த மாணவர்கள் எல்லாம் இருக்காங்களானு பார்ப்போம்.

அது ஓகேனு எனக்கு தோணுச்சுனா அந்த கிராமத்துக்கு ஃபீல்டு விசிட் போவேன். அங்குள்ள மக்களிடம் பேசுவேன். குழந்தைகள் எவ்வளவு ஆர்வமா இருக்காங்கனு பார்ப்பேன். பிறகுதான் நூலகம் அமைக்க சிவசங்கர் சாரும் நானும் முடிவெடுப்போம். அப்புறம், அந்தக் கிராமத்து மக்கள் இடம் கொடுத்து நூலகத்தைப் பராமரிக்க வேண்டியதுதான்.

இதுல நூலகத்திற்கான இடம் முக்கியமானது. அதை நண்பர்கள்கிட்ட கேட்போம். அது அவங்களுக்கு சொந்தமான இடமா இல்லாமல் பொது இடமா இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்வோம். ஏன்னா, யாரும் எந்த நெருடலும் இல்லாமல் போயிட்டு வரணும். அதுக்கு பொது இடம்தான் சிறந்தது.

நிறைய கிராமங்கள்ல பொது இடங்கள் இருக்கு. உதாரணத்துக்கு சமூக நலக்கூடம் இருக்கும். சில கிராமங்கள்ல வேளாண் துறையில் இருந்து தானியக் கிடங்கு கட்டித் தந்திருப்பாங்க. அது பயன்பாட்டுல இல்லாமல் இருக்கும். சில இடங்கள்ல தன்னார்வக்  குழுக்களுக்கான கட்டடம் பயன்படுத்தாமல் இருக்கும்.

இந்த மாதிரி இடங்களைக் ேகட்டு நூலகத்திற்கு பயன்படுத்துறோம். சில கிராமங்கள்ல வனத்துறைக்குச் ெசாந்தமான கட்டடத்தையும் பயன்படுத்தியிருக்கோம். துறையூர் பக்கத்துல முருங்கப்பட்டினு ஒரு கிராமம். அது மலையடிவார கிராமம். அங்க வனத்துறை அந்த மக்களுக்கு ஒரு கட்டடம் கட்டித் தந்திருக்காங்க. அதை நூலகமா பயன்படுத்துறோம்.  

கர்நாடகாவுல யாதகிரினு ஒரு கிராமம். அங்க ஒரு நண்பர் மூலம் நூலகம் தொடங்கலாம்னு இருந்ேதாம். அங்க நூலகம் வைக்க இடம் கேட்டோம். அவங்க அம்மன் அனுமதி கொடுத்தால்தான் நூலகம் அமைக்க இடம் தருவோம்னு சொன்னாங்க. நாங்க அம்மன்கிட்ட பேசி, அம்மன் எங்ககிட்ட பேசினு ஒரு சடங்கு நடந்தது. ஓர் ஆளுதான் அம்மன்மாதிரி பேசுவார். நம்மூர்ல சாமியாடி குறி சொல்ற மாதிரி. அப்புறம்தான் இடம் கொடுத்தாங்க. இப்ப அங்க நூலகத்துக்காக பில்டிங் கட்டிட்டு இருக்காங்க.

நூலகத்திற்கான ஃபர்னிச்சர்ஸை நாங்களே வாங்கி நூலக இடத்துக்கே அனுப்பிடுவோம். அப்புறம், நூல்கள் வாங்கி அனுப்புவோம். இதுல பாடப்புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள்னு எல்லாமே இருக்கும். மொத்தமா, ஒரு நூலகம் அமைக்க ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும். பிறகு, அவங்க வேறு ஏதாவது கேட்டாலும் உதவி செய்றோம்.  

பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கிற பகுதிகள்ல இந்த நூலகத்தை அமைக்கிறோம். அதுவும் அந்தக் கிராமத்தின் மையப் பகுதியில் இந்த நூலகம் அமையிற மாதிரி செய்றோம். அப்பதான் எல்லாரும் எப்போதும் போய் வரமுடியும். இந்த விஷயத்தை நண்பர்கள்கிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமா பகிர்ந்துகிட்டேன்.

அவங்க வழியா துறையூர், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, தேனி, சிவகங்கை, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர்னு 13 இடங்கள்ல நூலகம் தொடங்கினோம். இன்னும் நிறைய இடங்கள்ல இருந்து அழைப்பு வருது. ஒவ்வொண்ணா பார்த்து செய்யணும்...’’ என்கிற ஆசைத்தம்பி, நூலகத்தில் ஆய்வகம் எல்லாம் தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்.

‘‘என் கிராமத்துல உள்ள நூலகத்துல பயாலஜி லேப் ஏற்படுத்தினோம். இதுக்கு ரெண்டு மைக்ரோஸ்கோப் வாங்கினோம். அங்குள்ள எம்.எஸ்சி தாவரவியல் படிச்ச மாணவர்களை வச்சு குழந்தைகளுக்கு எப்படி மைக்ரோஸ்கோப்ல பார்க்குறதுனு சொல்லித் தர்றோம்.

அடுத்து, வானியல் லேப், பிலிம் கிளப் எல்லாம் கொண்டு வரலாம்னு இருக்கோம். இதனால, குழந்தைகளுக்கு சின்ன வயசுலயே இயற்கை மேல ஆர்வம் வரும். அறிவியல் சிந்தனை வளரும். எதையும் மூடத்தனமாக நம்பாமல் அதுக்குப் பின்னாடி இருக்குற விஷயத்தை கேள்வி கேட்குற மனப்பான்மை வளரும்...’’ என்கிற ஆசைத்தம்பி இன்னும் சில மாதங்களில் லிபர்டி லைப்ரரி ஐடியாவைக் கொண்டு வரப்போவதாகச் சொல்கிறார்.

‘‘அதாவது, நூலகம் அமைக்கணும்னு நினைக்கிறவங்க எல்லாரையும் சேர்க்கிற ஒரு கூட்டமைப்பு. இப்ப சிவசங்கர் சார் அவங்க அப்பா பெயர்ல நடத்துறார். இது அவருக்கே பிடிக்கல. சிலர் இதுக்குள்ள வரத் தயங்குவாங்க. அதுக்காக, பொதுப் பெயர்ல ஆரம்பிக்கிற ஐடியா இது.

இப்ப ஒருத்தர் நூலகம் ஆரம்பிக்க நினைச்சா இந்த லிபர்டி லைப்ரரி கூட்டமைப்புல சேர்ந்துக்கலாம். இதன்வழியா அவர் நூலகம் தொடங்கலாம். அதுக்கு இந்தக் கூட்டமைப்பு உதவி செய்யும். அப்ப நிறைய நூலகங்கள் உருவாகும்...’’ என்கிற ஆசைத்தம்பியைத் தொடர்கிறார் சிவசங்கர்.   ‘‘எங்க குறிக்கோளே நூறு நூலகங்கள் அமைக்கிறதுதான். அதுக்காக தொடர்ந்து பயணிச்சிட்டு இருக்கோம்...’’ கனவுடன் சொல்கிறார் சிவசங்கர்.

பேராச்சி கண்ணன்