Family Tree-398 வருடங்களாக ஜால்ரா தயாரிக்கும் நிறுவனம்
இசை உலகில் ஜால்ரா (cymbals)வுக்கு இன்னொரு பெயர், ‘ஜில்ஜியான்’. இசைக் கருவிகளைத் தயாரிக்கும் பழமையான குடும்ப நிறுவனம் இது. உலகப் புகழ்பெற்ற இசை மேதை மொசார்ட் முதல் இசை பயில ஆரம்பிக்கும் குழந்தை வரை இதன் வாடிக்கையாளர்களின் பட்டியல் நீள்கிறது. 400 வருடங்களுக்கு முன்பு துருக்கியில் வேர் பிடித்த இந்நிறுவனம், இப்போது அமெரிக்காவில் வானளவு உயர்ந்து நிற்கிறது.
 எந்த ஒரு சூழலிலும் துவண்டு போகாமல் ஒரு நிறுவனம் தொடர்ந்து இயங்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கு ‘ஜில்ஜியானி’ன் வரலாறு நல்ல வழிகாட்டி. அவேடிஸ் ஜில்ஜியான்ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் கீழ் கான்ஸ்டான்டிநோபிள் இருந்த காலகட்டம் அது. துருக்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான இஸ்தான்புல்தான் ஒரு காலத்தில் கான்ஸ்டான்டிநோபிள் என்று அழைக்கப்பட்டது.
 பதினாறாம் நூற்றாண்டின் இறுதி வருடங்கள். ஆர்மீனியாவைச் சேர்ந்த ஒரு கொல்லரின் மகனாகப் பிறந்தார் அவேடிஸ். சின்ன வயதிலேயே உலோகங்களை உருக்கி வார்க்கும் கலையை தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டார். 15 வயதிலேயே தகரத்தை தங்கமாக மாற்றும் ரசவாதி என்ற புகழ் அவரைப் பிரபலப்படுத்தியது.
 அவேடிஸின் ரசவாதத் திறமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஆடிப்போனார் ஒட்டோமானின் அரசரான இரண்டாம் ஒஸ்மான். உடனே அவேடிஸைத் தனது அரண்மனைக்கு அழைத்து தகரம், செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களைக் கொடுத்து தங்கமாக மாற்றித்தரும்படி கோரிக்கை வைத்தார். பல்வேறு பரிசோதனைகளைச் செய்து பார்த்த அவேடிஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
 அந்த உலோகங்கள் தங்கமாக மாறவில்லை. அவேடிஸை அரசர் உற்சாகப்படுத்த, அந்த ஏமாற்றத்திலும் ஒரு நல்லது நடந்தது. ஆம்; அந்தப் பரிசோதனையில்தான் ஜால்ரா செய்வதற்கான அற்புதமான ஓர் உலோகக் கலவையை அவேடிஸ் கண்டுபிடித்தார். அது வெண்கலத்திலேயே உயர்ந்த ரகமாக இருந்தது. அந்தக் கலவையில் செய்த ஜால்ராக்கள் அதுவரைக்கும் இல்லாத ஓர் இசையை எழுப்பியது. மகிழ்ச்சியடைந்த அரசர், அவேடிஸை தன்னுடனே வைத்துக்கொண்டார். அரண்மனையில் நடந்த திருமணங்கள், பிரார்த்தனைகள், விருந்துகளில் அரங்கேறும் இசை நிகழ்ச்சிகளில் அவேடிஸின் ஜால்ராக்கள் முக்கிய அங்கமாகின.
தங்கத்தை உருவாக்க வந்த ரசவாதி, இசைக்கருவியைச் செய்யும் கலைஞனாக பரிணமித்தார்.அவேடிஸின் ஜால்ராக்கள் அரண்மைனையைத் தாண்டி வெளியிலிருக்கும் இசைக்கலைஞர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றன. 1622ம் வருடம் அவேடிஸுக்கு 80 தங்கக் கட்டிகளைப் பரிசாகக் கொடுத்து, அவர் குடும்பத்துக்கு ‘ஜில்ஜியான்’ என்று பெயரும் வைத்தார் அரசர். அதுவே ‘அவேடிஸ் ஜில்ஜியான்’ என்று நிறுவனத்தின் பெயராக மாறி, இன்று சுருக்கமாக ‘ஜில்ஜியான்’ என்று அழைக்கப்படுகிறது.
ஆர்மீனியன் மொழியில் ‘ஜில்ஜியான்’ என்றால் ஜால்ரா செய்பவர்கள் என்று அர்த்தம்.1623ம் வருடம் அரசரின் ஆசீர்வாதங்களுடன் அரண்மனையிலிருந்து வெளியேறிய அவேடிஸ், கான்ஸ்டான்டிநோபிளில் உள்ள ஒரு கடற்கரையோரத்தில் ‘ஜில்ஜியான்’ நிறுவனத்தை முறையாகத் தொடங்கினார். கப்பலில் வரும் உலோகங்களை கழுதை, ஒட்டகங்கள் மூலம் சுலபமாக எடுத்து வருவதற்காக கடற்கரையோரத்தை அவர் தேர்ந்தெடுத்தது தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பாடம்.
ஜால்ரா செய்வதற்கான உலோகக் கலவையை அவர் அரசருக்குக் கூட வெளிப்படுத்தாமல் ரகசியமாக பாதுகாத்தார். அதனால் அவருக்கு இணையாக யாராலும் ஜால்ராவைத் தயாரிக்க முடியவில்லை. இந்த உலோகக் கலவையின் ரகசியமே ‘ஜில்ஜியான்’ நீண்ட வருடங்கள் நிலைத்து நிற்க மூல காரணம்.
முக்கிய நிகழ்வுகள்
1651ம் வருடம் ஜால்ராவுக்குபயன்படுத்தப்படும் உலோகக் கலவையின் ரகசியங்களை தனது மூத்த மகன் ஆக்கத்திடம் ஒப்படைத்தார் அவேடிஸ். அன்றிலிருந்து அந்த ரகசியம் ‘ஜில்ஜியான்’ குடும்பத்துக்குள் பாதுகாக்கப்பட்டு ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது. ‘ஜில்ஜியானை’ப் பற்றிக் கேள்விப்பட்ட ஜெர்மனியின் இசை மேதை ஸ்ட்ரங்க், 1680ல் ஜால்ராவுக்கு ஆர்டர் கொடுத்தார். இசைத்துறையைச் சேர்ந்த ஜாம்பவான் ஒருவர் ‘ஜில்ஜியானுக்கு’க் கொடுத்த முதல் ஆர்டர் இதுதான்.
பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ஐரோப்பிய இசைக்குழுக்களிடம் ஜால்ரா இசைக்கருவி பிரபலமாகியது. ‘ஜில்ஜியானி’ன் ஜால்ரா மொசார்ட்டைக் கவர, வரிசையாக இசை மேதைகள் இதன் வாடிக்கையாளர்களாகினர்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸின் ரொமான்டிக் இசை மேதை ஹெக்டர் பெர்லியோஸும் ஜெர்மன் இசை மேதை வாக்னரும் தங்கள் இசைப் படைப்புகளில் ஜால்ராவுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.
இதன்மூலம் ஆர்க்கெஸ்ட்ராவில் முக்கியமான, நிரந்தரமான ஓர் இடத்தைப் பிடித்தது ஜால்ரா. இசைக் கலைஞர்கள் ‘ஜில்ஜியானி’ன் ஜால்ராதான் வேண்டும் என்று நிபந்தனை வைக்கும் அளவுக்கு இதன் மவுசு கூடியது.1865ல் இரண்டாம் அவேடிஸ் மறைந்தார். அவருடைய வாரிசுகள் சிறுவர்கள் என்பதால் நிறுவனத்தின் பொறுப்பு அவரது சகோதரர் கெரோப்பின் கைக்கு வருகிறது.
வருடத்துக்கு 1,300 ஜோடி ஜால்ராக்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனமாக ‘ஜில்ஜியானை’ வளர்த்தெடுத்தார் கெரோப். இவர் காலத்தில் பாரிஸ், வியன்னா, பாஸ்டன், சிகாகோ என பிசினஸ் விரிவடைந்தது. அத்துடன் இசைக் கலைஞர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்தி நிறுவனத்துக்கு நற்பெயரையும் கவுரவத்தையும் சம்பாதித்துக் கொடுத்தார் கெரோப்.
1868ல் நிகழ்ந்த தீவிபத்தில் ‘ஜில்ஜியானு’க்குப் பெருத்த நஷ்டம். அப்போது ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் அரசராக இருந்தார் அப்துல் - அஜீஸ்.ஜில்ஜியான் குடும்பத்துக்கும் ஒட்டோமானுக்கும் உள்ள உறவை அறிந்த அரசர், நிறுவனம் மீண்டு வர அனைத்து உதவிகளையும் செய்து தந்தார்.
1909ல் கெரோப் மறைய, இரண்டாம் அவேடிஸின் மகன் ஆரமின் கைக்கு தொழில் ரகசியங்கள் சேர்ந்தன. ஆனால், கான்ஸ்டான்டிநோபிளில் நடந்த அரசியல் மாற்றங்களால் நிறுவனத்தை நடத்த ஆரம் திணறினார்.
ஆர்மீனியன் நேஷனல் மூவ்மென்ட்டில் அவர் இணைந்த பிறகு, புகாரெஸ்ட்டில் ஒரு கிளையைத் திறந்து திறமையாக செயல்பட ஆரம்பித்தார்.
கான்ஸ்டான்டிநோபிளில் நிலைமை சரியான பிறகு உற்சாகமாக சொந்த இடத்துக்குத் திரும்பினார். உலகமெங்கும் ஜால்ராக்களை ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனமாக ‘ஜில்ஜியானை’ வடிவமைத்தார். முக்கியமாக அமெரிக்கா ‘ஜில்ஜியானி’ன் முதன்மை வாடிக்கையாளராகியது.
‘ஜில்ஜியான்’ குடும்ப வாரிசுகளில் ஒரே ஆண் மகனான மூன்றாம் அவேடிஸ் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். வயதாகிவிட்ட ஆரம், 1927ல் மூன்றாம் அவேடிஸுக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘‘குடும்ப நிறுவனத்தை நீ கையில் எடுக்கும் நேரம் வந்துவிட்டது...’’ என்று அந்தக் கடிதத்தில் ஆரம் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், மூன்றாம் அவேடிஸ் துருக்கிக்கு வர மறுத்துவிட்டார். வேண்டுமானால் குடும்ப பிசினஸை அமெரிக்காவுக்கு மாற்ற முடியுமா என்று கேட்க, அமெரிக்காவில் ‘ஜில்ஜியானி’ன் முதல் கிளை திறக்கப்பட்டது. அவேடிஸுக்கு உதவ ஆரமும் அமெரிக்கா வந்தார். அடுத்த இரண்டு வருடங்களில் இசைக் கருவிகளைத் தயாரிக்கும் கார்ப்பரேட் நிறுவனமாகப் பரிணமித்தது ‘ஜில்ஜியான்’.
அதே ஆண்டில் ஜாஸ் மியூசிக்கின் சகாப்தம் தொடங்கியது நிறுவனத்துக்கு மேலும் வலு சேர்த்தது. இசைக் கலைஞர்களின் யோசனைகள் மற்றும் அவர்களின் தேவைக்கு ஏற்றபடி ஜால்ராக்களை வடிவமைக்க ஆரம்பித்தார் மூன்றாம் அவேடிஸ். பலவிதமான ஜால்ராக்களைத் தயாரிக்கும் நிறுவனமாக வளர்ந்தது ‘ஜில்ஜியான்’.
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா நுழைந்தபோது செம்பு மற்றும் தகரத்தை உருக்கி பாதுகாப்புக் கருவிகள் செய்வதற்கான தேவைகள் எற்பட்டன. உலோகத்தை உருக்குவதில் வல்லவர்களான ‘ஜில்ஜியான்’ போர் பாதுகாப்புக் கருவிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. அதனால் நிறுவனம் தன் இருப்பைத் தக்க வைத்துக்கொண்டது.
14 வயதிலேயே தந்தையிடமிருந்து தொழில் ரகசியங்களைக் கற்றுக்கொண்டார் அர்மாண்ட். ‘ஜில்ஜியான்’ தலைமுறைகளிலேயே பெரும் இசைக்காதலன் இவர்தான். 1950களில் வருடத்துக்கு 70 ஆயிரம் ஜால்ராக்களைத் தயாரிக்கும் நிறுவனமாக ‘ஜில்ஜியானை’ உயர்த்தினார். புதிதாக ஜால்ராக்களை உருவாக்கும் பொருட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலுக்காக மில்லியன் கணக்கில் முதலீடு செய்தார்.
இரண்டு உலகப் போர்களுக்குப் பின் மக்கள் மத்தியில் மாடர்ன் ஜாஸ் இசை பிரபலமாக, ஜில்ஜியான் காட்டில் மழை. ஆர்டர்கள் குவிந்தன. 1973ல் மசாசூசெட்ஸில் தலைமையகத்தைத் திறந்து 350வது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது ‘ஜில்ஜியான்’. அத்துடன் இசை உலகுக்கு நவீன ரக ஜால்ராக்களை அறிமுகப்படுத்தியது. வருடத்துக்கு ஜால்ரா உற்பத்தியின் எண்ணிக்கை 90 ஆயிரமாக உயர்ந்தது.
1988ல் டிரம் ஸ்டிக்குகள் தயாரிப்பில் இறங்கியது. 1996ல் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற முதல் இசைக்கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் என்று புகழடைந்தது. 2010ல் டிரம் ஸ்டிக் தயாரிப்பில் முன்னோடியான ‘விக் ஃபர்த்’தையும் 2018ல் மல்லட் தயாரிப்பில் ஜாம்பவானான ‘பால்டர் மல்லட்ஸை’யும் தன் வசப்படுத்தியது.
தயாரிப்புகள்
அனைத்து வகையான ஜால்ராக்கள், டிரம் செட், டிரம் ஸ்டிக்ஸ், மல்லட்ஸ், இசைக்கருவிகளை எடுத்துச்செல்லும் பேக்குகள்.
இன்று
அர்மாண்டின் மகள்களான கிரேஜீயும், டெப்பியும் நிறுவனத்தை வழிநடத்தி வருகின்றனர். அவரது பேத்தியும் பதினைந்தாம் தலைமுறையைச் சேர்ந்தவருமான கேடி முக்கிய பொறுப்பை வகிக்கின்றார். 398 வருட வரலாற்றில் பெண்களின் நிர்வாகத்தின் கீழ் ‘ஜில்ஜியான்’ நிறுவனம் இயங்குவது இதுவே முதல்முறை. கடந்த வருடத்தின் ஆண்டு வருமானம் சுமார் 180 கோடி ரூபாய்!
த.சக்திவேல்
|