அணையா அடுப்பு-39



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

ஜோதிமயமானார்!

ஞானசபையை பூட்டு போட்டு மூடியது, அடிக்கடி அறைக்குள் கதவைத் தாழிட்டுக்கொண்டு நாட்கணக்கில் எவர் கண்ணிலும் படாமல் தனித்திருப்பது, மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் ஜோதி வழிபாட்டை தொடங்கியது, கடை விரித்தோம், கொள்வாரில்லை என்று வேதனைப்பட்டது என்று அடுத்தடுத்து நடந்த நிகழ்வு களின் உச்சமாக ஜனவரி 30, 1874ம் ஆண்டு வெள்ளிக்கிழமை இரவு ஓர் சம்பவம் நிகழ்ந்தது.‘எல்லோரையும் சந்திக்க விரும்புகிறேன்...’ என்று வள்ளலாரே தகவல் அனுப்பியிருந்தார்.

அவருடைய அன்பர்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தார்கள்.வள்ளலார் பேச ஆரம்பித்தார்.“நான் உள்ளே சில நாட்கள் இருக்கலாமென்று நினைக்கிறேன். எவரும் என்னை எதிர்பார்த்து அவநம்பிக்கை கொள்ளாதீர்கள். ஒருவேளை அறைக்குள் என்னைப் பார்க்க முயற்சித்தாலும் நான் அங்கிருப்பது எவர் பார்வையிலும் புலப்படாது. அதும் வெறும் வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்வார். என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார்...”
எடுத்தவுடனேயே வள்ளலார் இப்படிப் பேச ஆரம்பித்ததும், அன்பர்களில் சிலர் தேம்பியழ ஆரம்பித்தனர்.

அவர்களை ஆறுதல் படுத்தும் வண்ணம் வள்ளலார் தொடர்ந்தார்.“ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என்றால் என் உடலை எவர் கண்ணுக்கும் காட்ட மாட்டார் என்று அர்த்தம். இதுநாள் வரை நாம் கூறியபடி நடந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபட்டு வாழுங்கள்...” என்று சொல்லிவிட்டு அமைதியாக அனைவரையும் நோக்கினார்.

கூட்டத்தில் கனத்த அமைதி நிலவியது.வள்ளலார் எழுந்தார்.திரும்பி அறைக்கு நடந்தார்.அவர் நடையில் லேசான தயக்கம் இருந்தது.

தலையை மட்டும் மெதுவாகத் திருப்பி, அனைவரையும் மீண்டும் பார்த்தார்.அவர் பார்வையில் வழக்கமாகத் தென்படும் கனிவைக் காட்டிலும் கூடுதலான தேஜஸ் மிளிர்ந்தது.மிகச்சரியாக இரவு 12 மணிக்கு அறைக்குள் நுழைந்தார்.கதவைத் தாழிடும் சத்தம் கேட்டது.

அன்பர்கள் கலைய மனமில்லாது அங்கேயே குழுமியிருந்தார்கள்.அறைக்குள் எரிந்த விளக்கொளியின் வெளிச்சம் அறை சன்னல்களில் தெரிந்தது.நேரமாக நேரமாக அவ்வெளிச்சம் பிரகாசமடையத் தொடங்கியது.சில மணித்துளிகளுக்குப் பிறகு மின்னலை யொத்த வெளிச்சமாக அது மாறியது.இந்நிகழ்வுக்குப்பின் வள்ளலாரைக் கண்டவர் எவருமில்லை.

அவர் சித்தி பெற்றார்; ஜோதிமயமானார்; அருட்பெருஞ்ஜோதியாக அவரே மாறி அருளத் தொடங்கினார் என்று அவரது அன்பர்கள் பலரும் பல மாதிரியாக சொல்லத் தொடங்கினார்கள்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளலார் ஜோதிமயமாகி விட்டார் என்று அவரது அன்பர்கள் நம்பினாலும், அதை அப்போதைய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஓர் அறைக்குள் நுழைந்தவர், வெளியே வராமல் காற்றில் கரைந்தது போல எப்படி மறைய முடியுமென அப்போதைய தென்னாற்காடு மாவட்ட ஆட்சியரான ஜே.எச்.கார்ஸ்டின் என்கிற வெள்ளைக்கார ஐசிஎஸ் அதிகாரி, சம்பவம் நடந்து நான்கு மாதங்களுக்குப் பின்னால் நேரடி விசாரணைக்கு வந்தார்.

அவரோடு ஜார்ன் பான்பரி என்கிற இன்னொரு ஐசிஎஸ் அதிகாரியும், வெங்கட்ராம அய்யர் என்கிற தாசில்தாரும் வந்தார்கள்.மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் வள்ளலார் மறைந்த அந்த அறைக்கதவு ஆட்சியரின் மேற்பார்வையில் திறக்கப்பட்டது.
உள்ளே?

ஏற்கனவே வள்ளலார் குறிப்பிட்டது போல அது வெறும் வீடாகத்தான் இருந்தது.உள்ளே ஒரு மனிதர் இருந்ததற்கான எவ்வித தடயமும் இல்லை.

உள்ளூர் மக்களிடம் வள்ளலார் மறைந்தது குறித்து இக்குழு தீவிரமான விசாரணையை நடத்தியது.சந்தேகத்திற்குரிய எவ்விதமான சாட்சியங்களும் கிடைக்காத நிலையில், தங்களையே நம்ப முடியாமல் அந்த அற்புத நிகழ்வையே கிராம மக்கள் சொன்னதின் அடிப்படையில் விசாரணை அறிக்கையாக மேலிடத்துக்கு அனுப்பினார்கள்.

“வள்ளலார் உங்களுக்கெல்லாம் என்ன சொன்னார்?” என்று அங்கிருந்த கிராமத்து மக்களிடம் ஆட்சியர் கேட்டபோது, “பசியில் எவரும் வாடாதிருக்க அனைவருக்கும் அன்னதானம் செய்யச் சொன்னார்...” என்றார்கள்.இந்த பதிலில் நெகிழ்ந்துபோன அந்த ஐசிஎஸ் அதிகாரிகள் இருவரும், “அந்த சிறந்த அறப்பணிக்கு எங்களுடைய பங்கு...” என்று கூறி, ஆளுக்கு இருபது ரூபாய் அளித்தார்கள் (அப்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை இருபது ரூபாயைவிட குறைவு).

அரசின் கெஜட்டில் தங்கள் விசாரணை குறித்த விவரத்தை தந்த மாவட்ட ஆட்சியர் -“In 1874 he locked himself in a room (still in existence) in Mettukuppam(hamlet of Karunguli), which he used for Samadhi or mystic meditation, and instructed his disciples not to open it for some time. He has never been seen since, and the room is still locked. It is held by those who still believe in him that he was miraculously made one with his god and that in the fullness of time he will reappear to the faithful...” - என்று குறிப்பிட்டார்.

தருமச்சாலையின் தொடக்கநாளில் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா ஜோதி, சித்தி வளாகத்தில் இருந்தபோது தன் அறையில் இருந்து எடுத்து வந்த விளக்கால் ஏற்றிய ஜோதி, ஞானசபையின் தொடக்க நாளில் ஜோதி தரிசனத்துக்காக வள்ளலார் ஏற்றிய அணையா ஜோதி ஆகியவை இத்தனை ஆண்டுகள் கழித்தும் வள்ளலாரின் ஜோதி உருவை நினைவுபடுத்தும் வகையில் எரிந்துகொண்டேதான் இருக்கின்றன.

எனினும் -வள்ளலார் ஏற்றிவைத்த ஜோதிகளிலேயே தலையானதாகவும், உலகமே போற்றும் ஒப்பற்றதாகவும் விளங்குவது தருமச்சாலை அடுப்பில் அவர் பற்றவைத்த நெருப்பு.

இந்த நெருப்பு இதுநாள் வரையிலும் பல கோடிப் பேரின் பசியாற்றியுள்ளது.உலகம் உள்ள காலம் வரையும் வள்ளலாரின் பசி தீர்க்கும் அடுப்பின் அனல் அணையவே அணையாது.ஏனெனில் -அந்நெருப்பு இன்று மாந்தர்களின் உள்ளத்தில் அகல்விளக்காய் ஒளிர்கிறது.

(முற்றும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்