பழைய டிரெஸ் ஸை விற்கலாம்...இல்லாதவர்களுக்கு உணவளிக்கலாம்!விலை உயர்ந்த ஆடை களை எத்தனை முறை அணிவீர்கள்..? இரண்டு, மூன்று முறைக்கு மேல் அணியாத ஆடைகளை என்ன செய்வீர்கள்..?
இந்த இரு கேள்விகளுக்கும் நீங்கள் விடையளிப்பீர்கள்.ஆனால், நீங்கள் அளிக்கும் பதில்களையே தனது மூலதனமாக மாற்றியிருக்கிறார் ஸ்ரேயா
சவுஹான்.‘‘நோ ரிப்பீட். மக்களோட இந்த அணுகுமுறைதான் ஏழை மாணவர்களுக்கு நாங்க உதவுவதற்கான புள்ளி.

ஒரு கிராண்டான உடையை அதிகபட்சம் மூணு முறைக்கு மேல நாம யாருமே அணியறதில்ல. அப்படியே அணிந்தாலும் ‘உன்கிட்ட வேற டிரெஸ்ஸே இல்லையா’னு ஃப்ரெண்ட்ஸ் கேட்க ஆரம்பிச்சுடுவாங்க.இது செல்ஃபி யுகம். எந்த புது டிரெஸ் போட்டுக்கிட்டாலும் உடனே செல்ஃபி எடுத்து சோஷியல் மீடியாவுல பகிர்ந்துக்கறோம். அதனால நம்மைச் சுத்தி இருக்கற... நம்ம சோஷியல் மீடியா பக்கங்களைப் பார்க்கற எல்லாருக்குமே நம்மகிட்ட என்னென்ன டிரெஸ்ஸஸ் இருக்குனு தெரியும்.

தவிர செல்ஃபில எப்பவும் நாம புதுசா தெரியணும்னு புதுப் புது ஆடைகளையே அணிவோம்; அணியறோம். நம்மை ஃப்ரெஷ்ஷா வைச்சுக்கணும்னு எப்பவும் நினைக்கறோம்.இந்த மேஜிக்கைதான் நான் கைல எடுத்தேன். சும்மா தூங்கிட்டு இருக்கற நம்ம நல்ல உடைகளை ஏன் மறுவிற்பனை செய்யக் கூடாது..? அதன் வழியா வரும் பணத்தை வைச்சு பலருக்கு உதவலாமே..?

இந்த எண்ணத்துலதான் https://www.thecausewear.com/ தளத்தை ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல ஒண்ணு ரெண்டு நண்பர்கள் அவங்களுடைய உடைகளை விற்பனைக்குக் கொடுத்தாங்க. மெல்ல மெல்ல அந்த கான்செப்ட் அப்படியே செயின் மாதிரி விரிவடைய ஆரம்பிச்சு இன்னைக்கு பலரும் எங்ககிட்ட ஒர்க்கிங் பார்ட்னரா சேரும் அளவுக்கு விரிவாகி இருக்கு.

தொடக்கத்துல செகண்ட் சேல்ஸை எப்படி வாங்குவாங்கனு சின்னதா தயக்கம் இருந்தது. ஆனா, நாங்களே ஆச்சர்யப்படற அளவுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கறாங்க.உதாரணத்துக்கு, ஒரு லேடீஸ் காலேஜுல செகண்ட் சேல்ஸ் போட்டோம். நம்ப மாட்டீங்க... 600 + உடைகள் சட்டுனு விற்பனையாச்சு!’’ சந்தோஷமாகச் சொல்லும் ஸ்ரேயா ‘த காஸ்வேர்’ இணையதளத்தில் நாம் இணைய என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கினார்.

‘‘நல்ல நிலைல இருக்கற, அதேநேரம் நாம அணிஞ்சது போதும்... இனி வேண்டாம்னு நினைக்கற  உங்க உடைகளை அழகா விரிச்சு வெச்சு செல்போன்ல ஒரு போட்டோ எடுத்து எங்களுக்கு வாட்ஸ்அப் செய்யுங்க. கூடவே, எப்ப வாங்கினது... எத்தனை முறை பயன்படுத்தினதுனு சொல்லி அந்த உடைக்கான விலையையும் நீங்களே குறிப்பிடுங்க.

போட்டோவை பார்க்கும்போதே அந்த உடையோட தன்மை எங்களுக்கு புரிஞ்சுடும். நீங்க குறிப்பிட்டிருக்கிற விலை சரியா இருந்தா அதையே ஃபிக்ஸ் பண்ணிடுவோம். நீங்க விற்கும் உடை எங்ககிட்ட வந்ததும் அதை டிரை க்ளீன் செய்வோம். அந்த உடைல இருக்கற வேலைப்பாடுகள் கொஞ்சம் சிதைஞ்சிருந்தாலும் அதை நாங்க பாலீஷ் பண்ணுவோம்.

அப்புறம் மாடல்கள் அதை அணிவாங்க. போட்டோஷூட் எடுத்து எங்க தளத்துல விலையோட போடுவோம். விற்பனைல வரும் பணம் முழுக்க எங்களுக்குதான். அதை நாங்க அந்த மாதத்துக்கான நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துவோம்.அதாவது ஒரு பைசா கூட உங்களுக்கோ எங்களுக்கோ கிடைக்காது. பதிலா ஏழை எளிய மாணவர்களுக்குதான் அது முழுமையா போய்ச் சேரும்...’’ என்னும் ஸ்ரேயாவின் குழு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் படிக்கத் தேவையான மொபைல் போன்களை சமீபத்தில் வாங்கிக் கொடுத்துள்ளது.  

‘‘முத்தம்மானு 52 வயதான திருநங்கைக்கு வேலை கிடைக்கலை. அவங்களுக்கு சமைக்கப் பிடிக்கும். அதை அடிப்படையா வெச்சு அவங்களுக்கு ஒரு இட்லிக் கடை வெச்சுக் கொடுத்தோம். இப்ப மாசம் ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கிறாங்க.

ஆட்டோ டிரைவரான சுபாஷினி கொரோனா பொது ஊரடங்கு காலத்துல சவாரி கிடைக்காம கஷ்டப்பட்டாங்க. குழந்தைகளின் படிப்பு, சாப்பாடுனு எதையும் அவங்களால நிறைவேத்த முடியலை. அவங்க குழந்தைகளுக்கான படிப்புச் செலவையும், குடும்பத்துக்குத் தேவையான சாப்பாட்டுச் செலவையும் நாங்க பார்த்துக்கிட்டோம்.

இப்படி நிறைய நாங்க செய்திருக்கோம்... செய்துட்டும் வர்றோம். இதுக்காக நாங்க செலவு பண்ற பணம் எல்லாமே செகண்ட் சேல்ல வரும் தொகைதான்...’’ என்னும் ஸ்ரேயாவுக்கு சென்னைதான் சொந்த ஊர்.

‘‘சின்ன வயசுல இருந்தே எனக்கு ஃபேஷன் மேலே ஆர்வம். 18 வயசுல ஃபேஷன் வேர் பிஸினஸ் ஆரம்பிச்சேன். அடுத்து நகைகள் செய்றது. என் குடும்பத்துல எப்பவும் மனிதநேயம் தொடர்பான பேச்சுகள் இருந்துகிட்டே இருக்கும். அதுதான் எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தி ‘த காஸ்வேர்’ தொடங்க வைச்சிருக்கு. முதல்ல இன்ஸ்டாலதான் சின்னதா தொடங்கினோம். இப்ப வெப்சைட் வைச்சு பிசினஸ் பண்ற அளவுக்கு வளர்ந்திருக்கோம்...’’ புன்னகைக்கிறார் ஸ்ரேயா.

ஷாலினி நியூட்டன்