ரத்த மகுடம்-137
பிரமாண்டமான சரித்திரத் தொடர்
‘‘வாருங்கள் சாளுக்கிய மன்னரே...’’ பாறை மீது கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்த பல்லவ இளவரசி அவர்களை வரவேற்றாள். ‘‘தங்கள் வருகைக்காகத்தான் காத்தி ருக்கிறேன்...’’புன்னகையுடன் தலையசைத்து அந்த வரவேற்பை ஏற்றார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்.பின்னால் வந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர், முன்னால் வந்து மன்னருக்கு அருகில் நின்றார்.
 ‘‘அட... சாளுக்கிய போர் அமைச்சரும் உடன் வந்திருக்கிறாரா..?’’ புருவத்தை உயர்த்திய பல்லவ இளவரசி, இருவரையும் ஒருசேர பார்த்தாள்.நான்கு விழிகளும் தன்னையே அலசி ஆராய்வதைக் கண்டதும் அவள் உதட்டோரம் இளநகை பூத்தது. நிதானமாக தன் கால் மேல் இருந்த மற்றொரு காலை எடுத்து தரையில் ஊன்றினாள். எழுந்து நின்று இருவரையும் வணங்கினாள்.
அந்த வணக்கத்தை ஏற்றுக்கொண்டதற்கான எந்த சொல்லையும் விக்கிரமாதித்தர் உதிர்க்கவில்லை. அவரது உடல்மொழியிலும் ஏற்றதற்கான எந்த அறிகுறியும் வெளிப்படவில்லை. நிதானமாக அந்த மலைக் குகையை ஆராய்ந்தார்.அவரது கருவிழிகள் பயணப்படும் திசைகளைக் கண்ட பல்லவ இளவரசியின் முகம் மலர்ந்தது.
‘‘எனது வருகைக்காகத்தான் காத்திருக்கிறாயா..?’’ குரலை உயர்த்தாமல், அழுத்தமும் கொடுக்காமல் சகஜமாக உரையாடலைத் தொடங்கினார் சாளுக்கிய மன்னர்.‘‘ஆம் மன்னா...’’ பல்லவ இளவரசியின் குரலிலும் அதே சகஜ ‘பா’வனை.‘‘உடன் நான் வருவேன் என்று...’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் முடிப்பதற்குள் பல்லவ இளவரசி இடைமறித்தாள்.‘‘உறுதியாக நினைக்கவில்லை... வரலாம் அல்லது வராமலும் போகலாம் என்றே நினைத்தேன்...’’‘‘வந்தது லாபமா நட்டமா..?’’
‘‘யாருக்கு போர் அமைச்சரே..?’’ பல்லவ இளவரசியின் புருவம் உயர்ந்தது.ராமபுண்ய வல்லபர் திரும்பி மன்னரைப் பார்த்தார். விக்கிரமாதித்தரின் பார்வை பல்லவ இளவரசியின் மீதே படிந்திருந்தது.‘‘எனக்கு என்றால்...’’ பல்லவ இளவரசியே தொடர்ந்தாள். ‘‘உங்கள் வருகையால் எனக்கு லாபமும் இல்லை நட்டமும் இல்லை...’’ பல்லவ இளவரசியின் அரிசிப் பற்கள் பளீரிட்டன. ‘‘அப்படியானால் எனது வருகை..?’’
கேட்ட விக்கிரமாதித்தரை இமைக்காமல் நிமிர்ந்து பார்த்தாள். ‘‘உங்கள் போர் அமைச்சருக்கு சொன்ன அதே பதில்தான் மன்னா... உங்கள் வருகையால் எனக்கு லாபமும் இல்லை நட்டமும் இல்லை...’’ ‘‘அப்படியிருந்தும் என் வருகைக்காகக் காத்திருக்கிறாய்...’’‘‘ஆம் மன்னா...’’‘‘எதற்கு..?’’‘‘நீங்கள் லாபமடைய!’’‘‘எனது லாபம் குறித்து நீ அக்கறைப்படுகிறாயா..?’’‘‘அக்கறைப்படுபவர் அப்படிக் கருதுகிறார்... எனவே உங்கள் வினாக்கள் அனைத்துக்கும் விடையளிக்கும்படி...’’‘‘... கேட்டுக் கொண்டிருக்கிறாரா..?’’‘‘கட்டளையிட்டிருக்கிறார் மன்னா!’’‘‘இளவரசியையே கட்டளையிடும் அளவுக்கு ஒருவர் இருக்கிறாரா..?’’‘‘தட்சிண பாரதத்தின் மன்னரையே தன் விருப்பத்துக்கு ஏற்ப அவர் அசைக்கும்போது, சொந்த நாட்டையே பறிகொடுத்தவரின் மகள் நான்... எனக்கு அவர் கட்டளையிட மாட்டாரா..?’’ நகைக்காமல் நகைத்தாள். ‘‘யார் அவர்..?’’ விக்கிரமாதித்தரின் கண்கள் கூர்மையடைந்தன.
‘‘எந்த திதி, கிழமையில் உங்களை படைகளுடன் ஆரவாரமின்றி ரகசியமாக சாளுக்கிய நாட்டில் இருந்து புறப்படச் சொன்னாரோ அவர்! எந்த திதி, கிழமையில் பல்லவ நாட்டுக்குள் அடியெடுத்து வைக்கும்படி சொன்னாரோ அவர்! எந்த திதி, கிழமையில் போரின்றி, குருதி சிந்தாமல் காஞ்சியை நீங்கள் கைப்பற்றும்படி பார்த்துக் கொண்டாரோ அவர்!’’ ‘‘அவரா..?’’
‘‘அவரேதான் மன்னா!’’ கம்பீரமாக அறிவித்தாள் பல்லவ இளவரசி. ‘‘இந்த திதி, கிழமையில்... இத்தனை நாழிகையில் கேள்விகளுடன் என்னை வந்து சந்திப்பீர்கள் என முகூர்த்தம் குறித்து இப்பாறையில் நான் எப்படி அமர்ந்து உங்களை வரவேற்க வேண்டும் என்று படம் வரைந்து விளக்கியதும் அவர்தான்!’’ வாய்விட்டுச் சிரித்தார் விக்கிரமாதித்தர்.கண்கள் இடுங்க அவரையே பார்த்தாள் பல்லவ இளவரசி.
சிரித்து முடித்ததும் தன் அருகில் நின்றிருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபரின் தோளில் கை போட்டார் சாளுக்கிய மன்னர். ‘‘இப்பொழுது என்ன சொல்கிறீர்கள் போர் அமைச்சரே..?’’
‘‘சொல்வதற்கு என்ன இருக்கிறது மன்னா...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் மலர்ந்தார். பல்லவ இளவரசியை ஏறிட்டார். ‘‘நீ மயக்கத்தில் இருக்க மாட்டாய்... பாறை மீது கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருப்பாய் என்றார் மன்னர். பார்த்தால் அப்படித்தான் காட்சியளித்தாய்...’’ பல்லவ இளவரசி அதிர்ந்தாள்.‘‘அதேபோல் எங்களை வரவேற்று இப்படித்தான் பேசுவாய் என்றார் மன்னர். அச்சு அசலாக அப்படித்தான் பேசுகிறாய்! அதுவும் ஒரு சொல்... ஒரேயொரு எழுத்து கூட மாறாமல்!’’ பல்லவ இளவரசி அதிர்ந்தாள்.
‘‘இளவரசி...’’ அழைத்த விக்கிரமாதித்தரின் குரலில் கம்பீரம் வழிந்தது. ‘‘ரத்த உறவின் அடிப்படையில் நீ பல்லவ இளவரசியா அல்லது பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மனின் வளர்ப்பு மகள் என்ற அடிப்படையில் நீ பல்லவ இளவரசியா என்பது குறித்து எனக்கு அக்கறையில்லை... உன்னை இளவரசி என பல்லவர்கள் அழைப்பதால் அப்படியே நானும் அழைக்கிறேன்...’’சொன்ன விக்கிரமாதித்தர் குகைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். அவர் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன. சட்டென நின்று திரும்பினார்.
‘‘பூடகமாகப் பேசி விளையாடியது போதும் என நினைக்கிறேன் இளவரசி... விஷயத்துக்கு வருவோம். கரிகாலன் எழுதிய, எழுதும் நாடகத்தின் கதாபாத்திரங்களாக பல்லவர்களும் சாளுக்கியர்களும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதானே நீ நினைக்கிறாய்..?’’
பல்லவ இளவரசி நிமிர்ந்து சாளுக்கிய மன்னரைப் பார்த்தாள். ‘‘ஒன்றும் பிரச்னையில்லை. அப்படியே நினைத்துக் கொள். ஆனால், இழுத்த இழுப்புக்கு ஏற்ப அசைய சாளுக்கிய மன்னன் ஒன்றும் பொம்மையில்லை. ரத்தமும் சதையுமான மனிதன். முக்கியமாக பல்லவர்களை வேரோடு அழிக்க சபதம் செய்திருக்கும் வெறி பிடித்தவன். அப்படிப்பட்டவன் பல்லவ உபசேனாதிபதி குறித்து தந்த திதி, கிழமையிலா சாளுக்கிய நாட்டில் இருந்து புறப்பட்டிருப்பான்..?
சற்றே சிந்தித்துப் பார்... உன்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு பெண் சாளுக்கிய தேசத்தில் தட்டுப்படுகிறாள்... எங்கள் போர் அமைச்சரின் பார்வையில் படுகிறாள்... அவரது நம்பிக்கையைப் பெறுகிறாள்... சாளுக்கிய ஒற்றர் படைத் தலைவியாக உயர்கிறாள்... சொல்லி வைத்ததுபோல் இவை எல்லாம் அடுத்தடுத்து நடக்கின்றன. இந்த இடத்திலேயே பல்லவர்கள் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டாமா?!’’ ‘‘அப்படியானால்..?’’ பல்லவ இளவரசி இழுத்தாள்.
‘‘கரிகாலனின் நாடகத்தில் நடிப்பது போலவே எங்கள் நாடகத்தை அரங்கேற்றி வருகிறோம்... உண்மையில் கரிகாலனின் இழுப்புக்கு ஏற்ப நாங்கள் அசையவில்லை... எங்கள் அசைவுக்கு ஏற்பவே அவனை இழுக்க வைக்கிறோம்!’’ இடைமறித்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘பெயருக்கு நான்கு வீரர்களுடன் வந்த உன்னை சிறை செய்து இந்தக் குகையில் அடைத்துவிட்டு அவளை... அதுதான் அந்த சிவகாமியை... பல்லவ இளவரசியாக பல்லவர்கள் மத்தியில் ஊடுருவச் செய்ததெல்லாம் எதற்கு என்று எண்ணுகிறாய்..?
வேட்டையாடத்தான்! ஓடவிட்டு துரத்தித் துரத்தி வேட்டையாடத்தான் எந்தவொரு வேட்டுவனும் விரும்புவான்!’’இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள் இளவரசி.‘‘வரலாற்றில் இருந்து பாடம் கற்பவன்தான் மன்னனாகவே முடியும்...’’ அழுத்திச் சொன்னார் விக்கிரமாதித்தர். ‘‘ஆயனச் சிற்பி யின் மகளும் நாட்டியத் தாரகையுமான சிவகாமியை என் தந்தை வாதாபியில் சிறை வைத்தார்... அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம்... இதைப் பார்த்து வளர்ந்த நான், அதேபோன்ற செயலைச் செய்வேன் என்று கரிகாலன் நினைத்தான் பார்... அந்த இடத்திலேயே அவன் தோற்றுவிட்டான்.
அரச குடும்பத்து மகளிர் என்றில்லை... எந்தவொரு பெண்ணையும் சிறை வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. நேருக்கு நேர் போரிட்டு வெற்றி பெறவே விரும்புகிறேன். அப்படியிருந்தும் கரிகாலனின் நாடகப்படி உன்னை இந்தக்குகையில் சிறை வைத்தேன்... மயக்கத்திலேயே இருக்கும்படி செய்தேன்... இன்று உனக்கு மயக்க மருந்து தர வேண்டாம் என்று சொன்னேன்... ஏன் தெரியுமா..?’’இளவரசி நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.
‘‘பதிலை அவனையே கண்டறியச் சொல்! இனி இந்தக் குகையில் நீ இருக்க வேண்டியதில்லை. இதுநாள் வரை உன்னை இங்கு அடைத்துவைத்து நாங்கள் சாதிக்க வேண்டியதைச் சாதித்து விட்டோம்! இதற்கு மேல் நீ எங்களுக்கு அவசியமில்லை. எங்கு செல்ல வேண்டுமோ தாராளமாக அங்கு செல். சாளுக்கிய வீரர்கள் உன்னைப் பின் தொடர மாட்டார்கள்...’’ சொல்லிவிட்டு விக்கிரமாதித்தர் குகையை விட்டு வெளியேறினார்.
ராமபுண்ய வல்லபர் அவரைத் தொடர்ந்து சென்றார்.தான், முன்பு அமர்ந்த பாறையின் மீது மீண்டும் அமர்ந்தாள் பல்லவ இளவரசி. அவளால் வியப்பை அடக்கவே முடியவில்லை. பொங்கிப் பொங்கி வழிந்தது.‘எவ்வளவு துல்லியமாக நாடகத்தை எழுதி எங்கள் அனைவரையும் நடிக்க வைக்கிறார்...’ எண்ணியவள் தன் இடுப்பில் இருந்து ஓலை நறுக்குகளை எடுத்தாள்.
சாளுக்கிய மன்னர் இப்பொழுது பேசிய அனைத்துச் சொற்களும் அதில் அப்படியே எழுதப்பட்டிருந்தன. ‘மன்னர் இப்படிச் சொல்லி நிறுத்தியதும் திகைப்பை வெளிப்படுத்து... ராமபுண்ய வல்லபர் இதைச் சொன்னதும் முகத்தில் அதிர்ச்சியைக் காட்டு...’ என அவளது உணர்ச்சிகள் எந்தெந்த இடங்களில் வெளிப்பட வேண்டும்... எப்படி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
அந்த ஓலை நறுக்குகளை எழுதி அனுப்பியது கரிகாலன் அல்ல! ‘‘சமயம் அறிந்து சரியாக நடித்தீர்கள் ஸ்ரீராமபுண்ய வல்லபரே...’’ குகையை விட்டு வெளியேறியதும் விக்கிரமாதித்தர் அமைதியைக் கிழித்தார்.‘‘புறப்படும்போதே கரிகாலன் நெய்த இழைகளைப் பிரிக்கப் போகிறோம் என்று சொல்லிவிட்டீர்களே... அதனால்தான் என்னால் அப்படி நடிக்க முடிந்தது... தெரியாததை எல்லாம் தெரிந்தது போல் காட்டிக் கொள்ள முடிந்தது...
ஆனாலும் பல்லவ இளவரசி அப்படி பேசுவாள் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை... அதிர்ச்சியாக இருக்கிறது மன்னா... எந்தளவுக்கு நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்...’’‘‘நடந்ததைக் குறித்து யோசிப்பதில் பயனில்லை போர் அமைச்சரே... நடக்கவிருப்பதைக் குறித்து பேசுவோம்... இதுவரை நம்மை கரிகாலன் ஏமாற்றினான்... இனி அவன் ஏமாறுவான்...’’
‘‘தேவ மூலிகைகளால் நெய்யப்பட்ட கச்சையை எரித்து சாம்பலாக்கிய கணம் முதல் இருப்பு கொள்ளாமல் தவிக்கிறேன்... பல்லவர்களுடன் நடைபெறவிருக்கும் போரைவிட சாளுக்கியர்களின் பொக்கிஷங்கள் முக்கியம் மன்னா...’’ ‘‘பொக்கிஷங்களுக்கு எந்த ஆபத்தும் நேராது ராமபுண்ய வல்லபரே... நமக்கு சொந்தமான நவரத்தினங்களும் வைர வைடூரியங்களும் இப்பொழுது சாளுக்கிய தேசத்திலேயே இல்லை...’’‘‘எங்கிருக்கிறது மன்னா..?’’‘‘என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத பாதுகாப்பான இடத்தில்!’’ ‘‘அப்படியானால் எந்த தைரியத்தில் கரிகாலன் அவற்றை களவாடப் போவதாகச் சொல்கிறான்..?’’
‘‘அதுதான் குழப்பமாக இருக்கிறது...’’ சொன்ன விக்கிரமாதித்தரின் முகத்தில் சிந்தனை படர்ந்தது. ‘‘எது ஒன்றையும் சொல்லிவிட்டுத்தான் கரிகாலன் செய்கிறான்... அப்படி நம் பொக்கிஷங்களைக் களவாடப் போவதாக நமக்கே தகவல் கொடுத்திருக்கிறான்... அவன் குறிப்பிட்டிருக்கும் பொக்கிஷங்கள் என்பவை நவரத்தினங்கள்...
வைர வைடூரியங்கள் அடங்கிய கற்களா அல்லது வேறு ஏதேனுமா..?’’‘‘எல்லோர் வீட்டிலும்தான் கூழ் தயாரிக்கிறார்கள்... ஆனால், உன் தயாரிப்புக்கு ஈடு இணையே இல்லை...’’ சப்புக்கொட்டியபடி கோட்டைக் காவல் வீரர்கள் மண்சட்டியில் இருந்து கூழைக் குடித்தார்கள். ‘‘சரி... சரி... உள்ளே போ...’’பணிப்பெண் புன்னகைத்தபடியே கூழ் பானை கூடையுடன் சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபிக்குள் நுழைந்தாள்.
(தொடரும்)
கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்
|