இந்தியக் காதலர்களின் புது வில்லன்கள்!



அண்மையில் வட மாநிலங்களில் இஸ்லாமிய இளைஞர்களுக்கு எதிராக இயற்றப்பட்ட லவ் ஜிகாத் சட்டங்களும், இங்கே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் காதலை, நாடகக் காதல் என்று ஆண்ட பரம்பரை என தங்களைத் தாங்களே கூறிக் கொள்பவர்கள் குற்றம் சாட்டி வருவதும் இந்திய சமூகத்தினரது காதலுக்குப் புதுவிதமான வில்லன்களை உருவாக்கியிருக்கிறது.

இந்தியக் காதல் எத்தனையோ வில்லன்களைப் பார்த்திருக்கிறது. இந்தப் புது வில்லன்களைக் காதலர்கள் வெற்றிகொள்வார்களா அல்லது அவர்களது அடாவடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் துவண்டுபோவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இஸ்லாமிய இளைஞர்கள் இந்துப்பெண்களை மதம் மாற்றி காதல் திருமணம் செய்வதால் இந்து சமூகம் ‘மைனாரிட்டி’ நிலைக்குத் தள்ளப்படும் என்று பிரசாரம் செய்யப்பட்டே லவ் ஜிகாத் முன்னெடுக்கப்படுகிறது.

இதேபோல ஒடுக்கப்பட்ட சாதியில் உள்ள ஆண்கள் பிற்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களைக் காதலித்து திருமணம் செய்து, கைவிடுவதால் அது நாடகத்தனமான காதல் என்று ஆண்ட பரம்பரை என தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
மேற்சொன்ன இரண்டுகூற்றுகளுக்கும் உண்மைத்தன்மை இருக்கிறதா என்று அறிய இதுதொடர்பான ஆர்வலர்களைச் சந்தித்தோம்.

‘‘காதல் என்பது தனிப்பட்ட நபர்களின் உறுதிப்பாடு. இது ஒருவிதமான விடுதலை. இந்த விடுதலை மதம், சாதி போன்றவற்றை எல்லாம் கடந்து நிற்கிறது. ஒரு நாட்டை ஆள ஓர் இனம் பெரும்பான்மையாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. உதாரணமாக, இந்தியாவின் மக்கள் தொகையில் வெறும் 3 சதவீதமாக இருக்கும் பிராமணர்கள்தான் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, ஆட்சி என்பது அறிவு சார்புடையதாகத்தான் இருந்துவருகிறது...’’ என்று ஆரம்பித்தார் ஜெயராஜ். எம்ஐடிஎஸ் என்னும் சென்னை வளர்ச்சிக்கான ஆராய்ச்சி குழுமத்தின் முன்னாள் பேராசிரியர் இவர்.

‘‘வெற்று இடத்தில் ஒரு மூடநம்பிக்கை முளைக்காது. அதற்கு சில அடிப்படைகள் வேண்டும். உதாரணமாக, இஸ்லாமியர்கள் பலதார மணமுடையவர்கள் என்ற கருத்து நீண்ட காலமாக நிலவி வருகிறது. உண்மையில் இது ஒரு பொய்யான பிரசாரம். இந்திய மக்கள்தொகையில் ஆண்களுக்கு நிகராகவே பெண்களின் எண்ணிக்கையும் உள்ளது. இப்படியிருக்க ஓர் இஸ்லாமியர் ஐந்து பெண்களைத் திருமணம் செய்துகொள்வார் என்றால் பெண்களின் எண்ணிக்கை ஐந்து மடங்காக இருக்கவேண்டுமே!

அதேபோல இஸ்லாமிய சமூகம் மட்டும்தான் பலதார மணமுடையவர்கள் என்ற ஒரு பிம்பமும் கட்டுக்கதைதான். இந்திய வரலாற்றில் இந்து மன்னர்கள், அமைச்சர்கள், சேனாதிபதிகள் நிறைய மனைவிகள் வைத்திருந்தார்கள் என்பது பலருக்கும் தெரியும். ஆகவே, பலதார மணம் எந்த சமூகத்தில் அதிகமாக இருந்தது என்பதை  நம்மால் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. ஒருகாலத்தில் எல்லா சமூகத்திலுமே இது இருந்திருக்கிறது...’’ என்கிற ஜெயராஜ், இஸ்லாமியர்களின் இன்றைய நிலையை விவரித்தார்.

‘‘2001ம் வருடம் வரை இஸ்லாமிய சமூகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகம். ஆனால், 2011ல் இந்தப் பிறப்பு விகிதத்திலும் வீழ்ச்சி. காரணம், சிறுகுடும்பம் என்ற அறிவை அவர்களும் கற்றுக்கொண்டனர். குடும்பக்கட்டுப்பாடு போன்றவை மத நம்பிக்கைகளைத் தாண்டி வேலை செய்தது.
ஒருகாலத்தில் இஸ்லாமிய சமூகத்தினரில் சில பிரிவினர் வசதியாகத்தான் இருந்தனர். போகப்போக இந்த நிலை மாறியது. இப்போது தாழ்த்தப்பட்ட மக்களையும்விட பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகளில் பின்தங்கிய நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.

கல்வி இல்லாத, வறுமையில் வாடிய தாழ்த்தப்பட்டவர்களிடையேதான் ஒருகாலத்தில் குழந்தைபிறப்பு விகிதம் அதிகம். படித்தவர்கள், வசதிபடைத்தோர் சிறுகுடும்பத்தையே ஆதரித்தார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்றாலும் கொஞ்சம் படித்த தாழ்த்தப்பட்டவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் தங்கள் குடும்பங்களையும் சிறுகுடும்பங்களாக சுருக்கிக்கொள்ள முடிவெடுத்தனர்.

இந்திய சமூகத்தில் பலதார மணம் வெறும் 5 சதவீதம்தான் எனும்போது லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டங்களை இயற்றுவது இருட்டைப் பார்த்து பேய் என்று சொல்வதாகும்...’’ என்று ஜெயராஜ் முடிக்க, தமிழகத்தில் நாடகக் காதலின் இன்றைய நிலையைப் பற்றி விளக்கினார் எவிடன்ஸ் கதிர். ஒடுக்கப்பட்டவர்களுக்கான தன்னார்வ அமைப்பை இவர் நடத்தி வருகிறார்.

‘‘இந்திய சமூகத்தில் 18 வயதுடைய ஒரு பெண்ணும், 21 வயதுடைய ஓர் ஆணும் தனிப்பட்ட ரீதியில் விருப்பப்பட்டு திருமணம் செய்துகொள்வதை ஓர் அடிப்படை உரிமை என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. இப்படியிருக்க காதல் திருமணங்களைப் பெற்றோரிடம் சொல், ஆட்டுக்குட்டியிடம் சொல் என்று நிர்ப்பந்திப்பது எல்லாம் சட்டத்தைக் காலில் போட்டு மிதிப்பதற்குச் சமம்...’’ என்கிற கதிர், ஆண்ட பரம்பரை என தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை புள்ளிவிவரங்களுடன் மறுக்கிறார்.

‘‘சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசிடம் இருந்த சில புள்ளிவிவர ஆய்வறிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வாங்கினோம். அதன்படி, காதல் திருமணம் செய்து ஏமாற்றப்பட்ட பெண்களில் கிட்டத்தட்ட 84 சதவீதப் பெண்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை அறிந்துகொண்டோம்.

நாடகக் காதல் என்றால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அல்லவா அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கவேண்டும்! இதையெல்லாம் வைத்துக்கொண்டு ‘நாடகக் காதல் மூலம் தலித் சமூகத்தினர் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று நாங்கள் அல்லவா கொடி பிடித்திருக்கவேண்டும்! ஆனால், அதை நாங்கள் செய்யவில்லை. காரணம், காதல் என்பது ஒரு தனிப்பட்ட விஷயம்.

அது ஓர் இயற்கையான உணர்வு. அதை ஒரு சமூகமாக எதிர்கொள்வது கடினம். ஆனால், தனிப்பட்ட நபர்களுக்கு காதலில் உள்ள பிரச்னைகளை எடுத்துச்சொல்வதில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம்...’’ என்ற கதிர், மேலும் இந்தப் பிரச்னைகளைப் பற்றிப் பேசினார்.

‘‘தலித் பெண்கள் அதிகமாகக் காதலில் பாதிக்கப்படுவதைப்போல, நிச்சயிக்கப்பட்ட திருமணங்களால் எல்லா சமூகத்துப் பெண்களும் பாதிப்படைகின்றனர். குறிப்பாக கணவன்களால் கொல்லப்படும் மனைவிகளின் எண்ணிக்கை வருடத்துக்கு சராசரியாக 150. அதேபோல ஆணவக்கொலையால் பாதிக்கப்படும் தலித் ஆண்களின் எண்ணிக்கை வருடத்துக்கு 150. சாதி ஆணவத்தால் தற்கொலை செய்துகொள்பவர்கள், சித்திரவதைக்கு உள்ளாகும் ஆண்கள், பெண்கள் எத்தனை பேர் இருப்பார்கள்!

ஆகவே, நாடகக் காதல் என்ற குற்றச்சாட்டு தமிழ் சமூகத்தின் உண்மை நிலையை அறிந்து சொன்னதாகத் தெரியவில்லை. வாய்போன போக்கில் பேசுவது உள்ளீடு அற்ற ஒரு பேச்சு...’’ என்கிற கதிர், காதல் - சாதி குறித்து மேலும் பேசினார்.‘‘உண்மையைச் சொன்னால், காதலுக்கு சாதி ஒருபோதும் தடையாக இருக்கமுடியாது. காதல்தான் சாதிக்குத் தடை. என் சாதியில் வெட்டு, குத்து, கொலை நடந்தால் பிரச்னை இல்லை என்று பல சாதிகள் நினைக்கின்றன. அதைப்பற்றி பேசுவது கூட இல்லை. அதை நீக்க முயற்சிப்பதும் கிடையாது.

ஆனால், மற்ற சாதிகளில் ஒரு சிறு பிரச்னை என்றால் அதை ஊதிப் பெருக்குவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறது சில சாதிகள். சாதிக்கான சங்கம் வைத்துக்கொள்வது தவறில்லை. ஆனால், அந்த சாதிச் சங்கங்கள் முதலில் தன் கண்ணில் உள்ள அழுக்கை போக்கிக்கொள்ள பாடுபடவேண்டும்.

இன்றைய நிலையில் எல்லா சமூகத்துப் பெண்களும் வளர்ச்சி யடைந்திருக்கிறார்கள். அவர்களைப் பிடித்து வைப்பது அவ்வளவு சுலபமல்ல. தன் சாதியில் உள்ள ஒரு படிக்காத காட்டுமிராண்டியைக் கட்டிக்கொள்வதைவிட, சாதி தாண்டி தன்னெழுச்சியாக உருவாகும் காதலில் ஒரு பெண் வெற்றிபெறவேண்டும் என்று நினைப்பது ஒரு முற்போக்கான விஷயமே. என்னைப் பொறுத்தளவில் சாதி இறுக்கத்தை உடைக்கும் திறன் மற்ற எல்லாவற்றையும்விட காதலுக்குத்தான் இருப்பதாக நம்புகிறேன்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் எவிடன்ஸ் கதிர்.

டி.ரஞ்சித்