களத்தில் சந்திப்போம்
ரெண்டு ஹீரோக்கள். டைட்டிலிலேயே விஷயம் இருக்கு... என்று நினைத்து சென்றால்... படத்தில் கதையும் களைகட்டுகிறது. ராதாரவியின் ஃபைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்யும் ஜீவாவும், அருள்நிதியும் திக் ஃப்ரெண்ட்ஸ். இருவருமே கபடி ப்ளேயர்ஸ். வேறு யாரிடமும் தோற்கக் கூடாது என்பதற்காக இருவருமே எதிரெதிர் அணியில் விளையாடக்கூடியவர்கள்.
 இதில் ‘சீக்கிரம் எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்க’ என்பவர் ஜீவா. ‘எனக்கு கல்யாணமே வேணாம்’ என்கிறார் அருள்நிதி. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் நட்புடன் இருக்கும் இவர்களின் வாழ்க்கையில் மஞ்சுமா மோகனால் ஒரு பிரச்னை தலைதூக்குகிறது.
இதற்கிடையே ஜீவாவின் பூர்வீக வீடு ஏலத்திற்கு வருகிறது. மஞ்சுமாவினால் என்ன பிரச்னை... இன்னொரு ஹீரோயின் ப்ரியா பவானி சங்கர் யார்? அருள்நிதி திருமணத்தை வெறுக்க என்ன காரணம்? ஜீவாவுக்கு திருமணம் ஆனதா... என்பதெல்லாம் கலகலப்பான மீதிக்கதை.மிடில் கிளாஸ் பையனாக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் ஜீவா. மஞ்சுமாவின் பிறந்தநாளுக்கு அவர் பேனர் வைப்பதும், மொக்கையாக காதல் கவிதை சொல்லி ஜோக் அடிப்பதும் ஹாஹ்ஹா ரகம்.
அமைதியான நடிப்பில் அசரடிக்கிறார் அருள்நிதி. காதல் தோல்வி, கொஞ்சம் கோபக்காரன், நட்பை விட்டுக் கொடுக்காதவன், உறவை மதிப்பவன் என அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை உணர்ந்து ஸ்கோர் செய்திருக்கிறார்.மஞ்சுமாவின் கண்கள் கவிதை பேசுகின்றன. ஹோம்லி மல்லிகையாக மணக்கிறார்.
ப்ரியா பவானி சங்கர் மௌனப் பூங்கொத்து. அருளை ஆசை ஆசையாக காதலிப்பதும், அந்தக் காதல் நிராசையாகிப் போன பின்னர், வெறுமை நீர் கோர்ப்பதுமாக மனசை அள்ளுகிறார்.
எல்லா ரீலிலும் ஸ்கோர் செய்ய முயற்சிக்கிறார்கள் ரோபோ சங்கரும், பால சரவணனும். ராதாரவி ‘ஆடுகளம்’ நரேன், இளவரசு, வேல ராமமூர்த்தி என அத்தனை பேருமே கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் இரு ஹீரோக்களையும் திரைக்கதையில் திருபதிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் என்.ராஜசேகர். இதற்கு முன் ‘மாப்பிள்ளை சிங்கம்’ கொடுத்தவர்.
தயாரிப்பு சூப்பர் குட் என்பதால், கதையும் ‘ஃபீல் குட்’. வசனங்கள் சில இடங்களில் ஊசிப் பட்டாசு. வெடித்துச் சிரிக்க வைத்திருக்கிறார் ஆர்.அசோக். அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவில் காரைக்குடி குளுகுளுக்கிறது. யுவன் சங்கரின் இசையில் பா.விஜய்யின் வரிகளில் ‘உன்னைப் பார்த்த நாள்...’ மெலோடி வாலண்டைன்ஸ் டே ட்ரீட்டாக இனிக்கும்.இந்தக் களத்தை குடும்பத்தோடு சந்திக்கலாம்.
குங்குமம் விமர்சனக் குழு
|