ட்ரிப்
அடர்ந்த காட்டிற்குள் ஜாலி ட்ரிப்பாக கிளம்பிப் போனவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் படத்தின் ஒன்லைன் கதை. சுனைனாவும் அவரது ஃப்ரெண்ட்ஸும் ஒரு காரில் ஜாலி ட்ரிப்பாக காட்டிற்குள் செல்கிறார்கள். அதே காட்டின் நடுவே இருக்கும் ஒரு பாழடைந்த பங்களாவிற்கு பெயிண்டிங், கார்பென்ட்ரி வேலையாக யோகி பாபுவும், கருணாகரனும் கிளம்பிப் போகிறார்கள்.
அந்தக் காட்டில் சுனைனா அண்ட் கோவினர் ஒருவர் பின் ஒருவராக கொலையாகிறார்கள். அந்தக் கொலைகளைச் செய்வது யோகிபாபுதான் என நினைத்து மிரள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அத்தனை பேருமே ஒரு பெரும் ஆபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆபத்து? அந்தக் கொலைகளைச் செய்வது யார்? மீதமிருப்பவர்கள் உயிரோடு திரும்பினார்களா என்பதெல்லாம் மீதிக்கதை.
 போஸ்டரில் எல்லாம் யோகிபாபு திகிலைத் தெறிக்கவிட்டதால், அவர்தான் ஹீரோ என நினைத்து போனவர்களுக்கு ஒரு ஷாக். புதுமுகம் பிரவீன்குமார்தான் ஹீரோ. ஆனால், அவரை விட ஸ்கோர் செய்வது யோகிபாபுதான். க்ளைமாக்ஸ் ஃபைட்டில், ‘அதோ ஹீரோ வந்தாச்சு. அவரோட போறேன்’ என அவர் பன்ச் அடித்து, தான் ஹீரோ இல்லை என ஆடியன்ஸுக்கு புரிய வைத்துவிடுகிறார். அவரோடு கருணாகரன் அடிக்கும் லூட்டி காமெடி பியூட்டி. ஒர்க் அவுட் ஆகும் காம்பினேஷனாக களைகட்டுகிறது.
சுனைனாவிற்கு இது செகண்ட் இன்னிங்ஸ். கொடுத்த கேரக்டருக்கு காடுமேடு எல்லாம் ஓடி உழைத்திருக்கிறார். நான்சி, ஜெனிஃபர், ‘கல்லூரி’ வினோத், ‘மொட்டை’ ராஜேந்திரன் என கதைக்கான ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
‘ஸோம்பி’ ஜானர் முடிந்து விட்டதால், ‘கேனிபல்’ (நரமாமிசம் உண்பவர்கள்) ஜானரில் மிரட்ட நினைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத். நினைத்த கதையை எடுத்திருப்பார் போலும்..! உதயஷங்கர் ஜி.யின் ஒளிப்பதிவும், சித்துகுமாரின் இசையும் த்ரில்லருக்கு கை கோர்த்திருக்கின்றன.ரத்தம் தெறிப்பதை குறைத்து காமெடியை அதிகப்படுத்தியிருந்தால் நைஸ் ‘ட்ரிப்’ ஆகியிருக்கும்.
குங்குமம் விமர்சனக் குழு
|