கையளவு இடத்தில் விவசாயம் செய்யலாம்...கை நிறைய காய்கறிகளை வளர வைக்கலாம்!
வெறும் மீன் தொட்டி வைக்கும் அளவுக்குதான் உங்களிடம் இடம் இருக்கிறதா..? கவலை வேண்டாம். அதற்குள் கூட நான்கு விதமான கீரைகள் வளர்க்கலாம். சத்தான காய்கறிகளை அள்ளிக் கொடுக்கும் செடிகளை அமைக்கலாம். அதுவும் மண், சூரிய ஒளி இல்லாமல் பயிரிடலாம்.நம்ப முடிகிறதா? இதைத்தான் ஹைட்ரோஃபோனிக் தோட்டம் என்கின்றனர்.
 ‘‘அதிக பட்சமா 40லி - அதாவது ரெண்டு கேன் வாட்டர் இருந்தா போதும். ஒரு வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கும்...’’ என்கிறார் பல வருடங்களாக இதில் சாதித்து வரும் இளைஞரான ராகுல். ‘கிரீன் ரஷ்’ என்ற பெயரில் இதற்காகவே நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவரின் குரலில் அவ்வளவு உற்சாகம்.
 ‘‘ஹைட்ரோஃபோனிக் தாவரங்கள்தான் கடந்த சில வருடங்களா உலகளவுல டாப்ல இருக்கு. நகரமயமாக்கல், அதிகரிக்கும் அபார்ட்மெண்ட்ஸ், மொட்டை மாடிகள்னு உலகமே மாறியிருக்கு.இந்த சூழல்ல தண்ணீரை மட்டுமே கொண்டு வளரும் விதமான தோட்ட முறையைப் பத்தி ஆராய்ச்சி செஞ்சு இந்த ஹைட்ரோஃபோனிக் தாவர முறையை கண்டுபிடிச்சிருக்காங்க.
 ரூ.300ல இரண்டு கீரைகள் அல்லது காய்கறிகள் சகிதமா தொடங்கும் இதன் பட்ஜெட், லட்சங்கள் வரை நீளுது. இதை அடிப்படையா வைச்சு மாசம் ரூ.30 ஆயிரம் வரை சம்பாதிக்கும் உறுப்பினர்கள் எங்ககிட்டயே இருக்காங்க. உங்க கிட்ட எவ்வளவு இடம் இருக்கோ அதுக்கு தகுந்தா மாதிரி செடி வளர்க்கலாம்.
இதுதான் இதன் கான்செப்ட். பூச்சி மருந்தோ, கெமிக்கலோ கலக்காம ஆரோக்கியமான ஆர்கானிக் காய்கறிகள் நம் வீட்டுலயே கிடைக்கும் என்பது இதன் மிகப்பெரிய ப்ளஸ்...’’ என்னும் ராகுல், ஹைட்ரோஃபோனிக் தோட்டங்கள் மூலம், தான் எந்த அளவுக்கு பயனடைந்திருக்கிறேன்... எப்படி இதை பிசினஸாக மாற்றினேன் என்று விளக்கத் தொடங்கினார்.
‘‘பக்கா சென்னை பையன். டான் போஸ் கோ ஸ்கூல்ல படிச்சுட்டு அண்ணாபல் கலைக்கழகத்துல பயோடெக்னாலஜி முடிச்சேன். ஐரோப்பால மாஸ்டர்டிகிரி. அப்படியேஅங்கயே எம்பிஏ. சிலகாலம் ஐரோப்பாவுல வேலையும் செஞ்சேன்.அப்புறம் இங்க வந்து ‘கிரீன் ரஷ்’ என்கிற ஆர்கானிக் பிஸினஸை ஆரம்பிச்சேன். கலப்படம் இல்லாத, கெமிக்கல் இல்லாத சர்க்கரை, பயறு வெரைட்டிகள், காய்கறிகள், அரிசினு 100 பொருட்களுக்கு மேல ஆர்டரின் பேரில் விற்பனை செய்தேன்.
ஏற்கனவே ஹைட்ரோஃபோனிக் தோட்டங்கள் மேல ஆர்வம் இருந்தது. அது வேர் விட்டு வளர்ந்தது. முதல்கட்டமா என் வீட்டு மாடில எங்க குடும்பம், உறவினர்கள், நண்பர்களுக்குத் தேவையான காய்கறிகளை பயிரிட்டேன். நல்ல பலன் கிடைச்சது. பிராக்டிகலா அதுலயே ஆய்வு நடத்தி 150 சதுர அடி அளவுல 6 ஆயிரம் செடிகள் கொண்ட தோட்டத்தை அமைச்சேன்!
உண்மைல இந்த ஹைட்ரோஃபோனிக் முறை மூலமா எல்லாரும் குறைஞ்சது ரூ.5 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். இட வசதி, முதலீட்டுக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் வரை மாசம் கிடைக்கும்.எதிர்கால விவசாய முறையே இதுவாகத்தான் இருக்கும்னு நம்பறேன். ஏன்னா இருந்த - இருக்கற விவசாய நிலங்களை எல்லாம் ப்ளாட் போட்டு வித்துட்டு இருக்காங்க. ஸோ, மண் விவசாயம் இனி குறையும். இதையே வருங்காலத்துல மண் விவசாயம்னா அது ஹைட்ரோஃபோனிக் தோட்டங்கள்தான்னு சொல்ற நிலை ஏற்படும்னு சொல்லலாம்.
ஒவ்வொரு குடிமகனும் தனக்குத் தேவையான உணவை, தானே விளைவிப்பான்!’’ அழுத்தமாகச் சொல்லும் ராகுல், எப்படி ஹைட்ரோஃபோனிக்ஸ் தோட்டம் அமைக்கலாம் என பகிர்ந்தார். ‘‘இதை செங்குத்து விவசாயம்னு கூட சொல்வோம். சின்னச் சின்ன துளைகள் அடங்கிய பிவிசி சட்டங்களைத்தான் நாங்க பயன்படுத்துறோம். வாடிக்கையாளர்களிடம் இருக்கும் இடம், வசதி பொறுத்து பிவிசி சட்டங்களின் எண்ணிக்கையும், செடிகளின் எண்ணிக்கையும் இருக்கும்.
துளைகள் இடப்பட்ட பிவிசி சட்டங்களை ஸ்டாண்ட் அல்லது ஸ்டூல் போல நிறுத்தி நீர் நிரப்பி விதைகள் போடுவோம். மண்ணுல இருந்து என்னென்ன கனிம வளங்கள், வைட்டமின்கள் செடிகளுக்கு கிடைக்குமோ அதையெல்லாம் தனியா நீர்லயே கலந்துடுவோம். இதுல என்ன சிறப்புனா... மண் விவசாயத்துல கூட நாம கொடுக்குற ஊட்டச்சத்துகள் பயிர்களுக்கு முழுமையா, சீரா கிடைக்காம போகும். ஒரு செடி நல்ல விளைச்சல் கொடுக்கும். இன்னொரு செடி வளராமலேயே இருக்கும்.
ஹைட்ரோஃபோனிக்கில் அப்படியில்ல. உங்க தோட்டம் உங்க கையருகே இருக்கும். அதனால ஊட்டச்சத்துகள் முழுமையா, சீரா எல்லா செடிகளுக்கும் கிடைக்கும். எந்தவித பூச்சிகொல்லிகளோ, கெமிக்கலோ இல்லாத ஆர்கானிக் விவசாய முறை இது. பல பிரபலங்கள் எங்களுக்கு வாடிக்கையாளர்களா இருக்காங்க. பல பிரபலங்கள் ஹைட்ரோஃபோனிக்ஸ் தோட்டம் அமைக்க ஆர்வம் காட்டறாங்க. அதுல சுஹாசினி மணிரத்னம் முக்கியமானவர்.
அவ்வளவு ஏன்... ஹைட்ரோபோனிக் முறைல அரிசியை விளைவிக்கிற வாடிக்கையாளர்கள் கூட எங்களிடம் இருக்காங்க. இதற்கு ஒரு கேன் வாட்டரை வெச்சு மோட்டார் ஃபிக்ஸ் செய்துட்டா போதும். மீன் தொட்டில மோட்டார் ஓட விட எவ்வளவு மின்சாரம் தேவைப்படுமோ அவ்வளவு தான் இதற்கும் தேவை.
அச்சோ... எங்ககிட்ட ஒரேயொரு சுவர்தான் இருக்குனா அங்கயும் இதே சிஸ்டத்தை ஃபிக்ஸ் பண்ணி தோட்டம் அமைக்கலாம். சூரிய ஒளியே விழாத இடமா இருந்தா கூட எல்.இ.டி. லைட் மூலமா செடிகளுக்குத் தேவையான ஒளியைக் கொடுக்கலாம்!’’ என்கிறார் ராகுல்.
ஷாலினி நியூட்டன்
|