யார் இந்த ரியானா?
இரண்டு மாதங்களுக்கு மேலாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். தில்லியில் நடந்து வரும் இப்போராட்டம் பெரிய அளவில் வெளி உலகின் கவனத்துக்கு உள்ளாக வில்லை. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதாரவாக ரியானா பதிவிட்ட ஒரேயொரு டுவிட், இந்தப் போராட்டத்தை உலகம் முழுவதும் முக்கிய பேசு பொருளாக மாற்றிவிட்டது.
 ஒரு பக்கம் இந்திய கிரிக்கெட் வீரர்களும் பாலிவுட் நடிகர்களும் ரியானாவின் டுவிட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, இன்னொரு பக்கம் டாப்ஸி முதல் கிரேட்டா தன்பர்க் வரையிலான உலகின் முக்கிய பிரபலங்கள் ரியானாவின் பக்கம் நிற்பதோடு விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.
யார் இந்த ரியானா?
சரியாக 32 வருடங்களுக்கு முன்பு பார்படோஸ் என்னும் ஒரு குட்டித் தீவில் பிறந்த ரியானாவின் முழுப்பெயர் ராபின் ரியானா ஃபென்டி. ஓரளவு வசதியான குடும்பம். போதையில் அம்மாவை அப்பா அடிப்பதும், அவருக்கு வேறு சில பெண்களு டன் இருந்த தொடர்பும் ரியானாவின் குழந்தைப் பருவத்தை வெகுவாகப் பாதித்தது.
 தவிர, கடுமையான தலைவலியால் அவதிப்பட்டார். ரியானாவுக்கு 14 வயதான போது அவரின் பெற்றோர் பிரிந்துவிட்டனர். சிறுமி ரியானாவின் தலைவலியும் காணாமல் போய்விட்டது. மிகுந்த உற்சாகத்துடன் அவரது வாழ்க்கை இசையின் பக்கம் திரும்பியது. ‘ரெஹே’ வகை இசையைக் கேட்க, ரியானாவின் உலகமே புதிதாக மலர்ந்தது. பாடுவதும், பாடல்களைக் கேட்பதும், எழுதுவதும் என 24 மணி நேரங்கள் அவருக்குப் போதவில்லை.
16 வயதிலேயே ஆல்பம் வெளியிட ‘Def Jam Records’ என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தக் கையெழுத்திட்டார். அன்றிலிருந்து ரியானாவின் காட்டில் புகழ், பண மழைதான்.பாப், ரெஹே, ஹிப் ஹாப் என கலந்து கட்டி இசை ஆல்பங்களை வெளியிட, ரியானாவுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் குவிந்தனர்.
இவரது ஆல்பங்கள் 25 கோடி ரெக்கார்டுகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இதுபோக அவ்வப்போது ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் செய்கிறார். முக்கிய நகரங்களுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்துவது ரியானாவின் விருப்பப்பட்டியலில் முதன்மையானது.
இசைத் துறையில் ஏராளமான விருதுகள், டுவிட்டரில் 10 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்கள், கரீபியன் குயின், ‘பாப்’ உலகின் முடிசூடா ராணி, கின்னஸ் சாதனை, பாடகி, பாடலாசிரியர், பிசினஸ் வுமன், ‘டைம்’ பத்திரிகையின் செல்வாக்கு மிகுந்த 100 பேர்களில் ஒருவர், பார்படோஸ் அரசின் கல்வி, சுற்றுலா, முதலீட்டுத் துறைக்கான அம்பாஸிடர்... என ரியானாவின் புகழும் அடையாளங்களும் நீண்டுகொண்டே செல்கின்றன. இவரது சொத்து மதிப்பு சுமார் 4,400 கோடி ரூபாய்!
ஆல்பங்கள்
Music of the Sun, A Girl like Me, Good Girl Gone Bad, Rated R, Loud, Talk That Talk, Unapologetic, Anti.
படங்கள்
Bring it On: All or Nothing, Battleship, This is the End, Home, Valerian and the City of a Thousand Planets, Ocean’s 8, Guava Island.
த.சக்திவேல்
|