காதல் சொல்லும் டிரெஸ்.. அன்பே அன்காரா!
‘நாங்க ரெண்டு பேரும் டீப்பா லவ்வுறோம்... எங்களை யாராலும் பிரிக்க முடியாது...’
இந்த வாக்கியத்தை இனி எந்த மொழியிலும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டாம். டிரெஸ் அணிந்தால் போதும்! யெஸ். ஒரே கலர் சிங்கிச்சா, சேம் டிசைன் கஜாகஜா! இது புதிதில்லை. சேம் டிசைன் குர்தாக்கள், சேலை - குர்தி காம்போக்கள், டி ஷர்ட்கள், காதலைச் சொல்லும் ‘மை குயின் - மை கிங்’ மாதிரியான வாசகங்கள் தாங்கிய உடைகள்... என காலத்துக்கு ஏற்ற படையெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.
 ஆனாலும் நம்மூர் பெண்கள் ஓரளவு ஆண்களுக்கு என்ன கலர் செட்டாகுமோ, என்ன டிசைன் போட முடியுமோ அதை மனதில் கொண்டுதான் இந்த ஒரே கலர் சிங்கிச்சாவை தேர்வு செய்கின்றனர். ஆனால், ஆப்பிரிக்க நாடுகளில் ஆண், பெண் இருவரும் தங்கள் காதலை பகிரங்கமாகச் சொல்ல கலர்ஃபுல் கலக்கல் காம்போ உடைகளைத்தான் தேர்வு செய்கின்றனர். அதிலும் இந்த அன்காரா கப்புள் உடைகளைக் கொண்டு காதலைக் கொண்டாடும் வழக்கத்தைப் பார்த்தால் நம்மூர் சிங்கிள் பசங்க முட்டை மந்திரித்து வைத்துவிடுவார்கள்!

‘‘ஆமா... நமக்கே பொறாமையா இருக்கும்...’’ சின்ன ஏக்கத்துடன் ஆரம்பித்தார் டிசைனர் ஃபரிதா ஃபர்சூன். ‘‘இந்த அன்காரா ஃபேஷன்கள்ல எப்படி அந்த நாட்டு ஆண்கள் எல்லாம் இந்த மாதிரி பூப்போட்ட சட்டைகள், கிளிப்பச்சை, கத்தரிப்பூ, ரேடியம் கலர்களைப் போட்டுக்கறாங்கன்னு தோணும்.
நம்ம ஊரு பசங்க கிட்ட ஒரு சின்ன பூ டிசைன்... ‘‘பைரவா’ படத்துல விஜய்யே போட்டுட்டு வருவாரு... போட்டுக்கோ’ன்னு சொன்னா, ‘இதென்ன சீட்டிப் பாவாடை டிசைன்’னு தூக்கிப் போட்டுட்டு போயிடுவாங்க. ஆனா, ஆப்பிரிக்காவுல ‘அன்காரா’ தான் காதலின் வெளிப்பாடு!
 அன்காரா என்பது ஒருவித மெட்டீரியல். பாலியெஸ்டர் போலவே லுக் கொடுக்கும். ஆனா, காட்டன் டைப் மென்மையான மெட்டீரியல். எப்படி பாலியெஸ்டர் மெட்டீரியல்கள்ல என்ன பிரிண்ட் வேணாலும் பயன்படுத்தலாமோ அப்படி அன்காரா மெட்டீரியல்கள்ல நினைச்ச டிசைன்கள், கலர்களைக் கொடுக்கலாம்.
 இந்தோனேஷிய டெக்ஸ்டைல் மார்க்கெட்களுக்காக டட்ச் நாடுகள்ல உற்பத்தி செய்யற மெட்டீரியல்தான் இந்த அன்காரா. இதுல கலர்ஃபுல் டிரைபல் டிசைன்களைப் புகுத்தினது மேற்கு ஆப்பிரிக்க நாடுகள். குறிப்பா ஆப்பிரிக்க டட்ச் வேக்ஸ் பிரிண்ட் செய்கிற பிரபல டட்ச் நிறுவனம் விலிஸ்கோதான் இதிலே கிங்.
எப்படி நம்மூர் வெயிலுக்கு காட்டனோ, அப்படி ஆப்பிரிக்க பாலைவன வெயிலுக்கு அன்காரா. மென்மையா, வெயிலுக்கு தகுந்த மாதிரி இருக்கும். கூடவே கோடிக்கணக்கான டிசைன்கள், கலர்கள்ல கிடைக்கும். பிரிண்ட் ஒயில்ட் ஸ்டைலா, நிறைய டிசைன்கள் சூழ, இந்த மெஹெந்தி மாதிரியான டிசைன்களா இருக்கும். டிரெஸ்ஸும் உடல் அளவுகளுக்கு ஏத்தா மாதிரி சரியான சைஸ்ல கச்சிதமான ஃபிட்டிங்ல போடுவாங்க. நம்மூர் பெண்கள் அணியற நைட்டிகள்ல இருக்குற அத்தனை டிசைன்களையும் இதுல பார்க்கலாம். நினைச்ச டிசைன்களையும் கட் செய்து தைக்க முடியும்.
அதைக் கொண்டுதான் ஒரே மெட்டீரியலில் ஜோடிகள் அங்க சேம் பின்ச்னு சுத்தி வராங்க. அதிலேயும் கவனமா பெண்களுக்கு முழு டிசைன்கள்ல காக்டெயில் உடைகள், மேக்ஸிகள், பென்சில் ஸ்கர்ட்டுகள், மேட்ச்சிங்கான டாப்கள்னு டிசைன் செய்தாலும் அந்த டிசைன்ல எந்த கலர் பிரதானமா இருக்கோ அதுல ஆண்களுக்கு பிளைன் உடைகள்ல டிசைன் செய்து, மெயின் டிசைன்கள்ல காலர், பாக்கெட் அல்லது பாட்டம், டாப் மட்டும்னு பேட்ச் வொர்க் செய்துக்கறாங்க.
சில ஆண்கள் பெண்களுக்கு நிகரா குர்தாக்கள், சைனீஸ் காலர் குர்திகள், பாட்டம் - டாப்னு அசத்தவும் செய்யறாங்க.அன்காரா ஜோடி உடைகள்ல தம்பதிகள் பார்ட்டி, கல்யாணங்கள் தொடங்கி எல்லா விழாக்கள்லயும் கலந்துக்கறதைப் பார்க்கலாம்!’’ என அங்கலாய்த்தபடியே அன்காரா பெருமைகளைச் சொல்லி முடித்தார் டிசைனர் ஃபரிதா ஃபர்சூன்.
ஷாலினி நியூட்டன்
|