நான் - நீனா ரெட்டி (த சவேரா ஹோட்டல் & சவேரா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்)
சென்னையிலேயே முதல் முறையா 1968ல் ஆரம்பிச்ச ஸ்டார் ஹோட்டல் ‘த சவேரா’தான். நான் இந்த ஹோட்டல் பிஸினஸுக்குள்ள 1980ல வரும்போது பெண்கள் படிக்கவே அப்பதான் வெளியே வர ஆரம்பிக்கிறாங்க. அந்த சூழல்ல ஹோட்டல் பிஸினஸை ஒரு பெண் நடத்துவதைப் பத்தி எல்லாம் யோசிச்சுப் பாருங்க. எங்க ஹோட்டல்லயே என்னைச் சுத்தி வெறும் ஆண்கள் கூட்டம்தான். என்னதான் குடும்ப பிஸினஸ்னாலும் ஒரு பெண்ணா உள்ள நுழையும்போது நிறைய சவால்கள் இருந்துச்சு.
 ‘உனக்கு என்ன பிடிக்குமோ அதை செய்’னு சொல்ற குடும்பத்துலதான் பிறந்தேன். படிப்பு முதல் என் விருப்பத்தை தேர்ந்தெடுக்கக்கூடிய அத்தனை சுதந்திரமும் எனக்கு இருந்தது. ஹைதராபாத்துல பிஏ ஹானர்ஸ் படிச்சிட்டு இருந்தேன். அப்போவே திருமணத்துக்கு நாள் குறிச்சு திருமணமும் முடிஞ்சிடுச்சு. ஆனாலும் படிப்பை விடக்கூடாதுன்னு ஹைதராபாத் போயி பரீட்சை எழுதினேன். ஒரு டிகிரியாவது முடிக்கணும்னு தீர்மானமா இருந்தேன்.

பிறகு சென்னைதான் வாழ்க்கை. எனக்கு மனிதர்களைப் படிக்கப் பிடிக்கும். அதனாலயே ஹானர்ஸ் எடுத்தேன். எனக்கு முன்னாடி யாராவது உட்கார்ந்து பேசினா அவங்களை முழுமையா பேசவிட்டு ஸ்டடி பண்ணுவேன்.பெரிய குடும்பத்துலதான் பிறந்து வளர்ந்தேன். என்னைச் சுத்தி விதவிதமான மனிதர்கள் இருப்பாங்க.  இப்படிப்பட்ட சூழல்லதான் என் குழந்தைப் பருவம் கழிந்தது. பாட்டி வீட்டுல வேலை செய்கிற பணியாளர்களுக்கு எல்லாம் வீட்டுக்கு பின்னாடியே வீடு இருந்தது. அதனால என்னைச் சுத்தி குழந்தைகள் கூட்டம் இருக்கும். ‘இவங்க கூட சேரக்கூடாது... விளையாடக் கூடாது’னு எல்லாம் எந்தக் கட்டுப்பாடும் யாரும் விதிக்கலை.  இதை என் அதிர்ஷ்டம்னு சொல்வேன். அங்க இருந்தே என் வாழ்க்கைப் பாடம் ஆரம்பிச்சிடுச்சு. மனுஷங்களை மனுஷங்களா நடத்தணும். இதுதான் எங்க வீட்டு மந்திரம். நான் வீட்டுக்கு பெரிய பொண்ணு. எனக்கு ஒரு தங்கை பிரசுனா. ஒரு தம்பி ராஜேஷ். அப்பா பிஸினஸ்மேன். அவர் பெயர் சீதாராம் ரெட்டி. நெல்லூர்க்காரர். அம்மா ஊர்மிளா, ஹைதராபாத்தைச் சேர்ந்தவங்க. அதனால படிப்பளவிலும், நாகரிகத்திலும் அம்மா அதீத முன்னேற்றம் அடைஞ்சிருந்தாங்க.
 குடும்பத்துக்குள்ள அம்மா வந்ததும் அப்பா குடும்பமும் படிப்பு, நாகரீகம்னு வளர்ந்தாங்க.அப்பா கூட பிறந்தவங்க 10 பேர். 1979ல் எனக்கு திருமணமாச்சு. பிஸினஸ் செய்யணும் என்கிற எண்ணமே எனக்கு கிடையாது. சின்னச் சின்னதா சிம்பிள் பிஸினஸ் செய்திட்டு இருந்தேன். மத்தபடி எனக்கு எல்லாமே என் குடும்பம்தான். இப்படித்தான் ஒரு வருஷம் போச்சு. அப்பறம்தான் சவேரா.
சவேரால நான் அடியெடுத்து வைக்கும்போது ஹோட்டல் ஊழியர்கள் தொடங்கி வருகிற கஸ்டமர்கள் வரை எல்லாருமே ஆண்கள்தான். அரசியல் முக்கியஸ்தர்கள், சினிமா பிரபலங்கள்னு எல்லாரும் வருவாங்க. சாப்பிட வரும் கஸ்டமர்கள்ல கூட பெண்கள், குழந்தைகளை அதிகம் பார்க்க முடியாது.
ரொம்ப அந்நியமா ஃபீல் பண்ணினேன். இதை மாத்த முடிவு செஞ்சு முதற்கட்டமா பெண் ஊழியர்களை பணிக்கு அமர்த்தினேன். இதுக்குப் பிறகு பெண் கஸ்டமர்கள் அதிகளவுல வர ஆரம்பிச்சாங்க.என் கணவர் விஜய்குமார், தன் சகோதரர் ரவிகுமார் கூட சேர்ந்து மிடில் கிளாஸ் மக்களுக்கான ரெஸ்டாரண்ட் தொடங்க நினைச்சார். அதாவது ஸ்டார் ஹோட்டலுக்கும் ரோட்டோர கையேந்தி பவனுக்கும் இடைப்பட்ட உணவகம்.
அடிப்படைல என் கணவருக்கு விதவிதமா ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கப் பிடிக்கும். எனக்கு அதை வடிவமைக்கவும், முறைப்படுத்தவும் பிடிக்கும்! இப்படி ரெண்டு பேர் ஆசையும் ஒரேவிதமா இருந்ததால ‘ஷியாம் ஹாஸ்பிடாலிட்டி’, தில்லில ‘தி புரூ ரூம்’, ஹைதராபாத்திலே ‘மால்குடி’னு அடுத்தடுத்து பிஸினஸை விரிவு படுத்தினோம்.
அவர் எதையும், தான் ஆரம்பிக்கணும், சொந்தமா எடுத்த முதல் முயற்சியா இருக்கணும்னு நினைப்பார். அப்படி ஆரம்பிச்சதுதான் ‘அமராவதி’. இந்தியா முழுக்க பல இடங்கள்ல ஆரம்பிச்சார். திருமண வாழ்க்கை வெற்றி பெற அடிப்படையான விஷயம் என்ன தெரியுமா..? ஒருத்தர் இன்னொருத்தருடைய ஆர்வத்துல தலையிடக் கூடாது, ஒருத்தர் இன்னொருத்தருடைய திறமையை முழுசா புரிஞ்சுக்கணும்.
இந்த வகைல நாங்க ரெண்டு பேருமே லக்கி. ரெண்டு பேரும் எங்களுடைய பயணத்திலே மாறி மாறி உதவி செய்துக்கிட்டோம். அதே சமயம் ரெண்டு பேர் ஆலோசனைகளும் சேர்ந்துதான் இந்த பிஸினஸ். நான் பெண்களை வேலைக்குக் கொண்டு வரணும்னு சொல்லும்போது என் மாமனார் ஷியாம் சுந்தர் ரெட்டி, கணவர், அவருடைய சகோதரர்னு யாருமே நோ சொல்லலை. அங்கயே என் கரியர் அழகான ஆரம்பம்.
அதேபோல பெண்களை வேலைக்கு வைக்கிறது அவ்வளவு சுலபம் இல்ல. அவங்க வீட்டுப் பொறுப்பை எல்லாம் முடிச்சுட்டுதான் வேலைக்கு வருவாங்க. இதைப் புரிஞ்சுகிட்ட கம்பெனி ஸ்பீட் பிரேக்கே இல்லாம சரளமா ஓடும். ஒண்ணு ரெண்டு நாட்கள்ல அவங்க பணிக்கு வர தாமதமாகும். வீட்டு வேலை, குழந்தை பராமரிப்புல லேட் ஆகும். மாதவிடாய் காலங்கள்ல சிலருக்கு லீவு தேவைப்படும்.
இதையெல்லாம் நான் மனசுல வெச்சுக்கிட்டுதான் வேலைக்கு பெண்களை எடுத்தேன். ஆனா, இன்னைக்கு பெரும்பாலான கம்பெனிகள் இதையெல்லாம் செய்யறதில்லை. எத்தனை பெரிய பதவில இருந்தாலும், சுத்தி எத்தனை வேலையாட்கள் இருந்தாலும், இரவு என்ன டின்னர், லன்ச் என்ன, காலை டிபன் என்னனு எல்லாம் வீட்டுத் தலைவிதான் முடிவு செய்யணும். ஆபீஸ் முடிஞ்சு வந்ததும் ‘அப்பாடா’னு ஆண்கள் சாய்வாங்க. ஆனா, பெண்களால அப்படி ஓய்வெடுக்க முடியாது.
இதையெல்லாம் ஒவ்வொரு நிறுவனமும் புரிஞ்சுக்கணும். நான் புரிஞ்சுக்கிட்டேன். அதேபோல இந்தியா ஏழை நாடுனு சொல்றோம். ஆனா, இந்தியாவுலதான் பணக்காரர்களும் அதிகம் இருக்காங்க. ஒவ்வொரு பணக்காரங்களும் அவங்களைச் சுத்தி இருக்கற 50 குடும்பங்களைப் பார்த்துக்கிட்டாலே ஏழ்மை ஒழிஞ்சுடும். அள்ளிக் கொடுக்க சொல்லலை. உங்களைச் சுத்தி இருக்கவங்களை கவனிங்க. அதுவே போதும். இல்லாமைய ஒழிக்கலாம்.
நான் அப்படி கொடுக்கறேன். அதேசமயம் ஒரு பிஸினஸ் நபரா கணக்கில்லாம அள்ளி இறைக்கவும் மாட்டேன். அதனால்தான் இத்தனை வருஷங்களா எங்களால இந்த பிஸினஸில் தாக்குப் பிடிக்க முடியுது. அதேபோல் கல்யாணம், குழந்தைக்குப் பிறகு வாழ்க்கையே முடிஞ்சிட்டா மாதிரி சில பெண்கள் மாறிடறாங்க. அது ஏன்னு எனக்கே தெரியலை.
உங்களை நீங்களே நேசிங்க. ஆரோக்கியமா, அழகா நம்மை வெச்சிக்கறதுல என்ன தப்பு இருக்கு..? நீங்க உங்களை கவனிக்க ஆரம்பிச்சாலே உங்க வீட்டு வேலை துவங்கி, அலுவலக வேலை உட்பட எல்லாமே அழகா மாறும். எத்தனை வருஷத்துக்கு ஹார்ட் ஒர்க் செய்வீங்க. ஸ்மார்ட் ஒர்க் செய்யப் பாருங்க.இதுதான் என் அனுபவத்துல நான் கத்துக்கிட்டது. சுலபமா துவண்டு போகவே கூடாது.
என் கணவரும் நானும் சேர்ந்து நிறைய பிஸினஸ் பத்தி அப்பப்போ ஆராய்ச்சி செய்திட்டே இருப்போம். சில விஷயம் வெற்றியடையும், சில விஷயம் தோல்வியாகும். அதை எல்லாம் நல்ல பாடமாதான் எடுத்துக்கணும். உடைஞ்சி உட்கார்ந்திடக் கூடாது. அதேசமயம் நமக்குப் பிடிச்சதை முயற்சி செய்திட்டே இருக்கணும். என்னைப் பொறுத்தவரைக்கும் எதுவுமே பிரச்னை இல்லை. எல்லாமே சவால்கள்தான்.
என்னை நானே கவனிச்சிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பதான் ஜிம் போயிட்டு உடற்பயிற்சி செய்யணும்னு நினைச்சேன். ஆனா, அந்த நேரம் பெண்களுக்குன்னு தனியா ஸ்பா, ஜிம் இதெல்லாம் இல்ல. அட ஏன் இதை நாம யோசிக்கவே இல்லைனு ‘ஓ2’ ஜிம், ஸ்பா ஆரம்பிச்சேன். சில கிளைகளும் ஆரம்பிச்சு நல்லாவே போகுது. இன்னைக்கு அதே ஸ்டைல்ல ஏகப்பட்ட ஜிம், ஸ்பா வந்திருக்கு. பரவால்ல... நாமதான் அதுக்கு முதல் புள்ளி வெச்சோம் என்கிற சந்தோஷம் இருக்கு.
இப்ப நிறைய பெண்கள் தங்களு டைய ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதோ என் பொண்ணு இப்ப ‘புரூ ரூம்’ ஆரம்பிச்சிட்டாங்க. அதாவது ஓபன் டாப் கார்டன் ஸ்டைல் பேக்கரி ரெஸ்டாரண்ட். வெளிநாடுகள்ல எப்பவோ வந்திடுச்சு. இங்க இப்பதான் இந்த டிரெண்ட் வர ஆரம்பிச்சிருக்கு. இன்னும் சில ஐடியாக்கள் இருக்கு.
எங்களுக்கு நிவ்ருதி (34), ரித்திகா(30)னு ரெண்டு பொண்ணுங்க. அவங்க என்னவாக நினைச்சாங்களோ அதைத்தான் செய்ய விட்டோம். மார்க் பின்னாடியெல்லாம் நாங்க பெற்றோர்களா போகவே இல்ல. அவங்க திறமை என்னவோ, என்ன ஆர்வமோ அதன் பின்னாடிதான் போனோம்.
பெரிய பொண்ணு படிப்புக்காக வெளிநாடு போகணும்னு நினைச்சாங்க. அவங்கதான் எங்க வீட்டிலேயே வெளிநாடு போயி மாஸ்டர் டிகிரி செய்த முதல் நபர். குழந்தைகளை அவங்க போக்குல விட்டுட்டா ஜாலியா மேலே வருவாங்க. நம்ம செய்ய முடியாததை எல்லாம் அவங்க மேலே திணிக்கக் கூடாது.
என்னை நான் நேசிக்கிறேன். அதனாலயே என்னால நான் செய்கிற பிஸினஸ் துவங்கி அத்தனையையும் நேசிச்சு செய்ய முடியுது. உங்களை நேசிங்க... பார்த்துக்கோங்க. மத்ததெல்லாம் தானா நடக்கும். இதுதான் நான் கத்துக்கிட்ட‘ நான்'!
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|