டூல்கிட் என்றால் என்ன..?
மண்டையைக் குடையும் வினா இதுதான்.இந்தியா முழுக்க இக்கேள்வியை எழுப்பியவர், ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான கிரெட்டா துன்பெர்க்.தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகிறார்கள் அல்லவா..? விவசாயிகளை ஆதரித்து கிரெட்டா துன்பெர்க் பதிந்த டுவிட்டில், டூல்கிட்டை இணைத்திருந்தார்.
 அந்த டூல்கிட் தொடர்பான சர்ச்சைகள் வெடிக்கவே இப்பொழுது நாடு முழுவதும் ‘டூல்கிட் என்றால் என்ன’ என்று தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.கிரெட்டா துன்பெர்க் பதிந்த டுவிட் இதுதான்: ‘மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்துக்குத் தொடர்ந்து ஆதரவு தருவேன்...’இதில்தான் டூல்கிட் ஒன்றை இணைத்திருந்தார். ரைட். அதென்ன டூல்கிட்..?
ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின் தொகுப்பே, ‘டூல்கிட்’. பொதுவாக ‘டூல்கிட்’ என்பது குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக வழிகாட்டும் ஆவணமாக கருதப்படுகிறது. இது தகவல்கள் அடங்கிய காகித கோப்பாக அல்லது டிஜிட்டல் கோப்பாக அமையலாம்.
போராட்டத்துக்கான ‘டூல்கிட்’களில், குறிப்பிட்ட போராட்டத்தைப் பற்றிய செய்திகள் மற்றும் போராடுவதற்கான முறைகள் பற்றி வழிகாட்டப்பட்டிருக்கும்.
‘டூல்கிட்’டின் பயன்பாடு பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும், சமூக வலைத்தளங்கள் பரவலான பிறகு பகிர்வுகள் முக்கியத்துவம் பெற்றன. அந்த வகையில், சுற்றுச்சூழலை காப்பதற்கான போராட்டங்கள் முதல் சமீபத்திய ஹாங்காங் போராட்டம்வரை, பல போராட்டங்களிலும் ‘டூல்கிட்’கள் போராட்ட நகர்வை ஒருங்கிணைப்பதில் பெரும் பங்கு வகித்தன.
அதாவது சர்வதேச அளவில் எங்கு போராட்டம் நடைபெற்றாலும் அவர்களுக்கான வழிகாட்டி நெறியாக ‘டூல்கிட்’ செயல்படும்.போராட்டக்காரர்கள் எங்கு, எத்தனை மணிக்குக் கூடவேண்டும், சோஷியல் மீடியாவில் என்ன ஹேஷ்டாக் பயன்படுத்த வேண்டும், காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் செல்ல நேர்ந்தால் அந்தச் சூழலை எப்படிக் கையாள வேண்டும்... உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ‘டூல்கிட்’கள் வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள் மற்றும் பெர்சனல் மெசேஜ்கள் மூலம் போராட்டத்தில் பங்கெடுப்பவர்களுக்கு பகிரப்படும். இதுதான் ‘டூல்கிட்’!
காம்ஸ் பாப்பா
|