7வது வரை மட்டுமே படித்த 102 வயது ஆசிரியருக்கு பத்மஸ்ரீ!



“மாணவர்களுக்கு போதிப்பதுதான் என் வாழ்நாளில் நான் பெற்ற சிறந்த விருது…” என குழந்தைச் சிரிப்புடன் சொல்கிறார் நந்தா கிஷோர்.
ஒடிஷா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சுகிந்தா வட்டத்தின் கந்திரா கிராமத்தைச் சேர்ந்தவர் 102 வயதான நந்தகிஷோர் பிருஸ்டி.
கடந்த  1946 முதலே தனது கிராமத்தில் சாட்டசாலி என்ற பள்ளிக்கூடத்தை நடத்தி  வருகிறார். ஏழாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடத்தின் பக்கம் செல்லாத அவர்,  மாணவர்களுக்கு வாழ்க்கைப் பாடத்தை போதித்து வருகிறார்.

அவரது பணியைப் பாராட்டி  இந்தாண்டு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டுள்ளது. “பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வடமொழி நாளிதழ்களின் சில  நிருபர்கள் இந்த விருது குறித்தும் கவுரவத்தைப் பற்றியும் என்னிடம் கூறும்வரை இது பற்றி எனக்குத் தெரியாது. இந்த விருது எனக்கு வழங்கப்படும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை...’’ புன்னகைக்கிறார் நந்தா.

சாட்டசாலி  பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  காலை 9 மணி வரையும், பின்னர் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மாணவர்களுக்கு  வகுப்புகள் நடத்தி வருகிறார். மட்டுமல்ல... ஒருபோதும் பள்ளிக்குச்  செல்ல வாய்ப்பு கிடைக்காத முதியவர்களும் நந்தாவின் மாணவர்கள்தான்.

அவர்கள்  மாலை 6 மணிக்கு மேல் நந்தாவின் வீட்டுக்குச் சென்று கையெழுத்துப் போடுவது  எப்படி என்பதை கற்றுக் கொள்கிறார்கள். அவரிடம் பயின்ற மாணவர்கள் பலர்  மருத்துவர், பொறியாளர் மற்றும் அரசு அதிகாரிகளாக பல்வேறு பகுதிகளில்  பணியாற்றி வருகின்றனர்.

“மாணவர்களுக்குப் போதிப்பதுதான் என் வாழ்நாளில்  நான் பெற்ற சிறந்த விருது. அவர்கள் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்ப்பேன்.  அந்தச் சிறுவர்கள் அனைவரும் கல்வியறிவு அற்றவர்கள். எனக்கு பெரியதாக வேலை  இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து அச்சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க  ஆரம்பித்தேன்.

அந்த காலக்கட்டத்தில் பள்ளிகள் எல்லாம் இல்லை. அதனால்  ஆரம்பத்தில் நான் அவர்களைத் தேடி ஓட வேண்டியிருந்தது. பின்னாட்களில்  அவர்களே வந்து படிக்கத் தொடங்கினர்....” என்று கூறும் நந்தா, ‘‘என் உடல்நலம்  அனுமதிக்கும் வரை நான் தொடர்ந்து குழந்தைகளுக்கு கற்பிப்பேன்...”  என்கிறார்.

தொகுப்பு: அன்னம் அரசு