சிறுகதை-‘திரு’விளையாடல்



கரண்ட் கட் ஆகிவிட்டது.‘சே’ என்றிருந்தது செல்வத்திற்கு. தூர்தர்சனில் அன்றைக்கு ‘திருவிளையாடல்’ திரைப்படம். நாகேஷ் தருமியாக வந்து “சொக்கா…’’ என்று புலம்ப ஆரம்பித்த நேரம் பார்த்து கரண்ட் கட் ஆகிவிட்டது.சுற்றி அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தான் செல்வம். கொஞ்சம் தள்ளி மணி உட்கார்ந்திருந்தான்.
அவர்கள் வீட்டிலும் டிவி இல்லை. எல்லா வாரமும் படம் பார்க்க அவனுக்கும் பஞ்சாயத்து போர்ட் டிவிதான். மணி இவனைப் பார்த்த மாதிரி தெரியவில்லை. அவன் பார்வை எதிரே பஞ்சாயத்து போர்ட் கட்டட வாசலில் போடப்பட்டிருந்த டேபிள் மீதிருந்த டிவி மேல் இருந்தது.

செல்வம் பின்னால் திரும்பி சிமெண்ட் பென்ச்சில் இருந்த ஆட்களைப் பார்த்தான். பெரியவர்கள் மட்டுமே சிமெண்ட் பென்ச்சில் அமரலாம். செல்வம் மாதிரி சிறுவர்கள் எல்லாம் தரைதான். திடீரென்று போன கரண்ட் வந்துவிடாதா என்ற ஏக்கம் அங்கிருந்த எல்லோர் முகத்திலும் இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தான் தூர்தர்சனில் படம் போடுகிறான். இன்சார்ஜ் மதியழகன், பஞ்சாயத்து போர்ட் கட்டடத்தில் இருந்து மேஜையோடு டிவியை வெளியே எடுத்து வைத்தால்தான், அந்தப் படத்தையும் பார்க்க முடியும்.

அதற்காக எல்லா ஞாயிறும் காலையில் இருந்தே மதியழகனுக்கு ஒரே டிமாண்ட்.பார்க்கும் எல்லோரும் ஸ்பெஷலான விசாரிப்பொன்றை மதிக்கு தெரிவிப்பதும், அதை அப்படியே, கடைவாயில் புகையும் பீடி சகிதம், ஒரு மேலான புன்னகையோடு ஏற்றுக்கொண்டபடி மதி போவதும் வாராவாரம் வாடிக்கையான ஒன்று.

ஞாயிறு காலைகளில் சாப்பிட்டவுடன் செல்வம் நேராக பஸ் ஸ்டாண்டை ஒட்டியிருந்த சலூனுக்குப் போவான். ‘தினத்தந்தி’ பேப்பரில் சினிமா செய்தி
களோடு அன்று டிவியில் என்ன படம் என்பதைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வருவான். அன்றையதிரைப்படம் ‘திருவிளையாடல்’ என்று பார்த்ததில் இருந்தே செல்வத்துக்கு நிலை கொள்ளவில்லை.

ஏழாம் வகுப்பு அரையாண்டுப் பரீட்சை, நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது. சாயந்திரம் ஐந்து மணி போல, “படம் பார்க்கப் போறேன்...” என்று கிளம்பின செல்வத்திடம் ‘‘டே… பரீட்சை வருதேடா?’’ என்ற அம்மாவிடம் “அதெல்லாம் படிச்சிட்டேன்மா...’’ என்றபடியே ஓடி வந்திருந்தான் செல்வம்.

“டிவியை எடுத்து உள்ள வைக்கலாமா? கரண்ட் வர மாதிரி தெரியல…’’சிமெண்ட் பெஞ்ச் பகுதியில் இருந்து மதியழகன் குரல் கேட்டது. குரல் வந்த திசையில், இருட்டில் புகைந்துகொண்டிருந்த பீடி தெரிந்தது. கூடவே ஒரு குரல் ‘‘இருப்பா... கொஞ்ச நேரம் பார்க்கலாம்... நாகேஷ் காமெடி சூப்பரா இருக்கும்பா...’’ என்றது.

செல்வத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.இதற்குள் நகர்ந்து நகர்ந்து செல்வத்தின் பக்கத்தில் வந்து உட்கார்ந்த மணி “ஐயர் கோட்டர்ஸுக்கு போலாமாடா?” என்றான்.“கொஞ்ச நேரம் பார்ப்போம்டா...” என்றான் செல்வம்.‘ஐயர் குவாட்டர்ஸ்’ என்பது ஸ்டாஃப் குவாட்டர்ஸ். செல்வம், மணி இரண்டு பேர் அப்பாக்களும் வேலை செய்யும் பஞ்சாலையின் மேனேஜர்கள், அக்கவுண்ட்ஸ் ஆட்கள் தங்கியிருக்கும் பகுதி. அங்கு ஜெனரேட்டர் உண்டு.

‘ஐயர் குவாட்டர்ஸ்’ என்ற பெயர் ஏன் வந்ததென்று தெரியாது. அங்கு தங்கியிருந்தவர்களில் ஒருவர் கூட ஐயர் இல்லை.அங்கு போவதில் இருந்த சங்கடங்கள் அவர்களுக்கு பழகிய ஒன்று. அவ்வளவு சுலபத்தில் உள்ளே விட மாட்டார்கள். ரெண்டு மூன்று தடவை இடைவெளி விட்டு கதவைத் தட்டிவிட்டு நின்று கொண்டிருந்தால், ஏதோ ஒரு சமயத்தில் கதவு திறந்து வா என்பார்கள்.

பெரும்பாலும் அந்த வீட்டு ஆச்சியே உள்ளே வா என்று அழைப்பார். நிறைய நாட்கள் பாதி படம் ஓடிமுடியும் வரை கூட உள்ளே போக முடியாமல் வாசலில் இருந்தே ஒலிச்சித்திரம் கேட்டுக் கொண்டிருக்க நேர்ந்திருக்கிறது. ‘ராமன் எத்தனை ராமனடி’ படம் இப்படி பாதிக்கு மேல் பார்த்ததுதான். கதவு தட்டி காத்திருந்து, உள்ளே போனபோது, அப்பாவியாய் பாட்டியின் சூட்டுக்கு பயந்த சிவாஜி, பெரிய சினிமா நடிகராக மாறியிருந்தார்.
இன்றைக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. உடனே விட்டால் நன்றாக இருக்கும்.

நேரம் போய்க் கொண்டிருந்தது. கரண்ட் வருவது போல் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கலைய ஆரம்பித்தது. ‘‘கரண்ட் வர மாதிரித் தெரியல... அடுத்த வாரம் பார்ப்போம்...’’ என்றபடி டிவியை நோக்கி மதி நடக்க ஆரம்பிக்க, “டே… போவோம். வாடா…” என்றான் மணி.

“சரி வா...” என்றபடி செல்வமும் மணியும் நடக்க ஆரம்பித்தனர். இரண்டு வீடு தள்ளி செடிகள் அடர்ந்த ஒரு வீட்டுவாசலில் மீனாட்சி நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. மீனாட்சி சுந்தரம். போன மாதம் அவர்கள் வீட்டில் டிவி வாங்கியதற்கு முன்பு வரை, இவர்களோடு ‘ஐயர் குவாட்டர்ஸு’க்கு அவனும் வந்து கொண்டிருந்தான்.

இவர்களைப் பார்த்துக் கையசைத்தபடி “என்ன ஐயர் கோட்ரஸுக்கா?” என்ற மீனாட்சிக்கு ‘‘ஆமாண்டா… வரியா?’’ என்றான் மணி.“இல்லைடா... நீங்க போங்க” என்றான் மீனாட்சி.செல்வமும் மணியும் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தனர்.

குவாட்டர்ஸுக்குள் நுழைந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது மாதிரி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.அங்கிருந்த வரிசை வீடுகளில் எந்த வீட்டுக் கதவைத் தட்டுவது என்று முடிவெடுக்க வேண்டிய தருணம். இரண்டு பேரையும் ஒரே வீட்டில் விடுவது ஆகாத காரியம். தனித்தனியேதான் முயல வேண்டும்.

செல்வத்திற்கு முதல் வரிசைதான் எப்போதும் ராசி. குறிப்பாய் தனம் ஆச்சி வீடு. நேரமானாலும் எப்படியும் உள்ளே விடுவார்.“நான் மூணாவது வரிசையில ட்ரை பண்றன்டா...” என்று சொல்லியபடி மணி இவனை விட்டுப் பிரிந்து போனான். அவனுக்கு ராசியான வீடு அங்கு இருக்கிறதோ என்னவோ?

ஆச்சரியம் தாளவில்லை செல்வத்துக்கு. முதல் தட்டலிலேயே கதவு திறந்து வந்த ஆச்சி ‘‘என்னடா... அம்மா என்னவாச்சும் சொல்லி உட்டாங்களா..?’’ என்றார்.“இல்லை ஆச்சி... படம் பார்க்கலாம்னு...” என்று இழுத்தான். “சரி வா...” என்று இவனை உள்ளே வர விட்டுவிட்டு கதவை உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு இவன் பின்னே வந்தார் ஆச்சி.

ஹாலில் போய் தரையில் உட்கார்ந்தான். ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்த சுசீலா, செல்வத்தைப் பார்த்து லேசாகச் சிரித்தாள். சுசீலாவும் ஏழாவது இவன் செக்சனில்தான் படிக்கிறாள்.அவளை நோக்கி லேசாக சிரித்துவிட்டு, டிவியில் நக்கீரனோடு சண்டை போட்டுக்கொண்டிருந்த சிவாஜியைப் பார்க்க ஆரம்பித்தான். மணி எங்காவது நுழைந்திருப்பானா தெரியவில்லை. படத்தின் மும்முரத்தில் அதை அப்படியே மறந்து போனான்.

படம் முடிந்ததும் எழுந்து வாசலை நோக்கிப் போனவனை ‘‘டே... இவனே... இருடா. தோ வரேன்...’’ என்ற ஆச்சி உள்ளே அறைக்குள் போய்விட்டு திரும்பி வந்தவர், ‘‘இதை அம்மாகிட்ட கொடுறா… நான் குடுத்தேன்னு சொல்லு... நல்லாப் படிடா...’’ என்றபடி அவன் கையில் கொடுக்கப்பட்டதைப் பார்த்தான். பணம். எவ்வளவு என்று தெரியவில்லை. மடித்திருந்த நோட்டுகளைப் பிரித்துப் பார்த்தான்.

“பத்தரமா பையிலே வைடா...” என்று மீண்டும் நோட்டுகளை மடித்து இவன் கையில் தந்த ஆச்சி, “ஜாக்கிரதையா கொண்டு போ...’’ என்றபடி கதவைத் திறந்தார்.டிரௌசர் பாக்கெட்டில் பணத்தை வைத்தபடி வெளியில் வந்தவன், தூரத்தில் கேட் அருகே மணி நிற்பதைப் பார்த்து அவனை நோக்கி நடந்தான்.

“இருக்கியா… இன்னும் கொஞ்சம் பார்த்துட்டு போலாம்னு இருந்தேன்... ஏண்டா லேட்டு?” என்ற மணிக்கு பதில் எதுவும் சொல்லாமல் “சீக்கிரம் வாடா… ரொம்ப லேட்டாயிடுச்சு...” என்றபடி நடையை எட்டிப் போட்டான் செல்வம்.குவாட்டர்ஸ் காம்பவுண்டை விட்டு வெளியே வந்ததும் தெரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கரண்ட் வந்து விட்டது போல.வீட்டுக்குள் நுழைந்த செல்வத்தைப் பார்த்து “எங்கடா போன?” என்றாள் அம்மா.

அப்பா ஒன்பது மணி நைட் ஷிஃப்ட்டுக்கு கிளம்பிப் போயிருந்தார். முன்னறையில் அண்ணா சாப்பிட்டபடியே இவனை ஒரு பார்வை பார்த்தான். அவனும் இவன் மாதிரி ஓடி ஓடி படம் பார்த்தவன்தான். ஆனால், இப்போது பதினொன்றாவது படிக்கையில் சினிமா போவதை எல்லாம் அறவே நிறுத்திவிட்டிருந்தான்.

“கரண்ட் கட்டாயிடிச்சுமா. ஐயர் குவாட்டர்ஸ் போயி ஆச்சி வீட்டில படம் பார்த்துட்டு வரேன்...” என்றான் செல்வம்.வயிறு கபகபவென்று பசித்தது. அண்ணாவின் பக்கத்தில் உட்கார்ந்தான். தட்டில் விழுந்த தோசைகளைச் சாப்பிட ஆரம்பித்தான்.
சாப்பிட்டு முடித்து எழுந்த அண்ணன், “ஸ்கூல் பீஸ் இன்னும் ரெண்டு நாள்ல கட்டணும்மா...” என்றான்.

“ஞாபகம் இருக்குடா... ரெண்டு மூணு இடத்தில கேட்டிருக்கேன், கிடைச்சதும் கட்டிரலாம்டா...’’ என்றாள் அம்மா.அப்போதுதான் ஆச்சி கொடுத்த பணம் நினைவில் வந்தவனாய் எழுந்த செல்வம், ‘‘அம்மா... ஆச்சி வீட்டுக்கு படம் பார்க்கப் போனப்போ, இந்தப் பணத்தைக் கொடுத்தாங்க...’’ என்று பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான்.

பணத்தை கையில் வாங்கிய அம்மா, அதிலிருந்து ஒரு பகுதியை எண்ணி அண்ணனிடம் கொடுத்து, “இந்தா நாளைக்கே பீஸ் கட்டிரு...’’ என்று கொடுத்துவிட்டு மிச்ச பணத்தோடு சமையல் அறைக்குப் போனாள்.

சாப்பிட்டுவிட்டு பாயை விரித்துப் படுத்த செல்வம் கொஞ்ச நேரம் ஆச்சி கொடுத்த அந்தப் பணத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். கண்கள் செருகி உறங்க ஆரம்பித்தவன் கனவில் சிவனின் திருவிளையாடல்கள் ஒன்றடுத்து ஒன்றாய் மாறி மாறி வந்து போய்க் கொண்டிருந்தன.

செல்வராஜ் ஜெகதீசன்