சொந்த வீட்டுக்கு குடியேறிய இசை!
* கோடம்பாக்கம் லிபர்டி பாலத்தை கடப்பவர்களுக்கு இனி புது லேண்ட் மார்க்... இளையராஜாவின் புது ரெக்கார்டிங் ஸ்டூடியோ. தங்க எழுத்துகளில் தகதகக்கிறது.
 * இப்போது ஸ்டூடியோவாக மாறியிருக்கும் இடம், ஒரு காலத்தில் எம்.எம். ப்ரிவியூ தியேட்டர் கோலோச்சிய இடம். இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளிவந்த பிறகு தனி ஸ்டூடியோ தொடங்கும் எண்ணமில்லாமல்தான் இருந்தார். ஆனால், இந்த இடத்துக்காரர்களே ராஜாவிடம், ‘உங்களுக்குனு ஸ்டூடியோ வேணும் ஆரம்பிங்க’ என உத்வேகம் கொடுத்ததில் ஆனந்தமாக ஆரம்பித் திருக்கிறார்.
 * இசை உலகின் லேட்டஸ்ட் டெக்னாலஜி வசதிகள் அனைத்தும் கொண்டதாக ஸ்டூடியோவை வடிவமைத்துள்ளார். இன்டீரியர் வேலைகள் இன்னும் முழுமை பெறாவிட்டாலும், நல்ல நாளாக இருந்ததால் பிப்ரவரி 3 அன்று பூஜையுடன் தன் பணியைத் தொடங்கிவிட்டார்.
 * ஒரு காலத்தில் செய்தித்தாள்களில் ‘இன்று பாடல் பதிவுடன் இனிதே ஆரம்பம்’ என்று வரும் வாக்கியத்தைப் போல சென்டிமென்ட்டாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் ஒரு பாடலைப் பதிவு செய்து, அமர்க்களமாக தன் ஸ்டூடியோவில் குடியேறிவிட்டார்.
* ‘‘என் சொந்த உழைப்பில் சம்பாதிச்ச பணத்துல இந்த இடத்தை வாங்கி ஸ்டூடியோ ஆரம்பிச்சிருக்கேன். உலகமே மாறிக் கொண்டிருக்கிறது. மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகத்துல மாறாத ஓர் இடத்தை என் இசை பிடித்ததைப் போல... அது தலைமுறையாகத் தொடர்ந்து செல்லவேண்டும் என்பதற்காகவே இந்த ஸ்டூடியோவை ஆரம்பிச்சிருக்கேன்...’’ என்கிறார் மேஸ்ட்ரோ.
* இசைஞானியின் பூஜைக்கு வந்து வாழ்த்தி மகிழ்ந்த இயக்குநர் பாரதிராஜா, ப்ளாக் அண்ட் வொயிட் காலத்தில் அவர்கள் இருவரும் அன்பொழுகக் கட்டி அணைத்து புன்னகைத்த தருணத்தை கலர்ஃபுல் புகைப்படமாக்கி பரிசளித்திருக்கிறார் - அதுவும் உயிர்த்தோழன் என கையெழுத்திட்டு!
* எளிமையாக நடந்த இந்த விழாவிற்கு இயக்குநர் வெற்றிமாறன் பட டீமிலிருந்து விஜய்சேதுபதியும், சூரியும் வந்திருந்து வாழ்த்தினர்.
மை.பாரதிராஜா
|