அணையா அடுப்பு - 38
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 கடை விரித்தோம்! கொள்வாரில்லை!!
எவ்வகையிலாவது எவரை வேண்டுமானாலும் நல்வழிக்கு வரச்செய்துவிடக் கூடிய ஆற்றல் பெற்றிருந்த வள்ளலாரால், தானே முன்னின்று உருவாக்கிய ஞானசபையை நிர்வகித்தவர்களை மட்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
எனவேதான் - அவர் வடலூரில் தங்காமல் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்துக்கே இடம் பெயர்ந்தார்.
இருப்பினும் - வடலூரில் நடந்துகொண்டிருந்த சம்பவங்கள் அவ்வப்போது அவரது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன.அருட்பெருஞ் சோதியைக் காண வரும் அன்பர்கள் முறையாக நடத்தப்படவில்லை. அவர்களிடம் பலவாறாக பணம் பறிக்கப்படுகிறது போன்ற புகார்களை அவர் அடுத்தடுத்து கேட்க வேண்டியிருந்தது.சபையை எப்படி நடத்த வேண்டும் என்று வள்ளலார் வரையறுத்திருந்த விதிகளும் காற்றில் பறந்தன.
எவ்வளவு நாட்கள்தான், தான் உருவாக்கிய கோட்டை தன் முன்பாகவே ஒவ்வொரு செங்கல்லாக உருவப்பட்டு வீழ்ந்துகொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும்?
நிர்வாகிகளை அழைத்து பல முறை எச்சரித்தார்.“பெருமானே! நாங்கள் என்ன செய்வது? எவரும் எங்கள் கட்டுப்பாட்டிலும் இல்லையே!” என்று கைவிரித்தார்கள் அவர்களும்.அவர்களுக்குள்ளும் ஊழல்வாதிகள் இருந்தார்கள் என்றாலும், ஒருவகையில் அவர்கள் சொன்னது உண்மைதான்.
எல்லோரும் சமம் என்கிற கோட்பாடு நல்லதுதான். எனினும் ஓர் அமைப்பை நிர்வாகம் செய்யும்போது எவர் வழிகாட்ட வேண்டியவர், எவர் செயல்பட வேண்டியவர் என்பது போன்ற வரையறைகளில்லையெனில் அவரவர் சுதந்திரமாக அல்லது தான்தோன்றித் தனமாகத்தான் செயல்படுவார்கள்.நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது.எவருமே எதிர்பாராத ஓர் அதிரடி முடிவை எடுத்தார் வள்ளலார். நேராக ஞானசபைக்கு விரைந்தார்.
பெரிய திண்டுக்கல் பூட்டு கொண்டு பூட்டினார்.வள்ளலார் இப்படி தடாலடியாக முடிவெடுப்பார் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. இனிமேல் எந்தத் தவறுகளும் நடக்காது; இந்த முடிவிலிருந்து பின்வாங்குங்கள் என்று கெஞ்சினார்கள்.வள்ளலாரோ, “இது எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் தண்டனை...” என்றார்.அதன்பிறகு வள்ளலார் உயிரோடு இருந்தவரை அந்தப் பூட்டை திறக்கவே இல்லை.அவர் இயற்கையோடு இணைந்த பிறகு, சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து அவரது சீடர்கள் சிலர் பெருமுயற்சி செய்து மீண்டும் ஞானசபையைத் திறந்தார்கள்.
ஞானசபையின் பூட்டை பூட்டிவிட்டு மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்துக்கு வந்தார் வள்ளலார்.அங்கு அவரைக் காண அன்பர்கள் பெரும்பாலானோர் கூடியிருந்தார்கள்.சபையின் அருட்பெருஞ்சோதியை வணங்க முடியவில்லையே என்கிற ஆற்றாமை அவர்களிடத்தில் இருந்தது.வாடிய அவர்களது முகங்களைக் கண்டு வருந்திய வள்ளலார், திடீரென தன்னுடைய அறைக்குள் இருந்த விளக்கு ஒன்றை எடுத்து வந்து, மாளிகை வாசலில் வைத்தார்.“இந்த விளக்கு எப்போதும் தடையின்றி எரிந்துகொண்டிருக்கட்டும். இதை வணங்குங்கள். நான் இப்போது அறைக்குள் போகப் போகிறேன். சில காலத்துக்கு கதவையே திறக்க மாட்டேன். இந்த விளக்கின் ஒளியில் ஆண்டவர் இருக்கிறார். அவரை ஆராதியுங்கள்...” என்று கூறிவிட்டு அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டார்.
வள்ளலார் அன்று ஏற்றிவைத்த அருள் விளக்கு இன்றும் கூட வடலூரில் சோதியாய் எரிந்துகொண்டேதான் இருக்கிறது.ஞானசபையில் வழிபாடு நின்றுவிட்டதால் வாட்டமுற்றவர்களுக்கு சித்தி வளாக மாளிகை வாசலில் வள்ளலார் ஏற்றி வைத்த திருவிளக்கே ஆறுதல் தந்தது. அவ்விளக்கைக் காண பல்லாயிரக்கணக்கானோர் மேட்டுக்குப்பத்துக்கு வரலாயினர்.
விளக்கை வழிபட்ட வெளியூர் அன்பர்கள் பலரும் வள்ளலாரைக் காண முடியவில்லையே என்ற ஆற்றாமையில் இருந்தார்கள். இறைவனோடு இரண்டறக் கலப்பதற்கான முன்முயற்சிகளில் வள்ளலார் ஈடுபட்டிருக்கிறார் என்று பொதுமக்களிடம் தகவல்கள் பரவின. எனினும் -அன்பர்களின் அன்பையே தனக்கு ஆறுதலாகக் கருதும் வள்ளலார், அவ்வப்போது கதவைத் திறந்துகொண்டு வந்தார். தன்னுடைய சீடர்களிடமும், அன்பர்களிடமும் மனம் விட்டு பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் சென்னையிலும், கருங்குழியிலும் வசித்த காலக்கட்டத்தில் சொன்ன பல கருத்துகளில் இருந்து இப்போது முற்றிலுமாக மாறுபட்டிருந்தார். எனவேதானோ என்னவோ வடலூரிலும், மேட்டுக்குப்பத்திலும் அவர் இருந்தபோது பாடிய பாடல்களை உடனடியாக அச்சாக்க வேண்டாம் என்று அனுமதி மறுத்து வந்தார்.‘திருவருட்பா’வுக்கு அப்போது ஐந்து திருமுறைகள்தான் இருந்து வந்தன.
அவருடைய கடைசி ஏழாண்டுகளில் பாடியவைதான் ஆறாம் திருமுறை.இந்த ஆறாம் திருமுறையில் ‘பிள்ளைச்சிறு விண்ணப்பம்’, ‘பிள்ளைப் பெரு விண்ணப்பம்’, ‘அருள்விளக்க மாலை’, ‘அனுபவ மாலை’, ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’ போன்றவற்றில் வள்ளலாரின் தனிப்பட்ட அனுபவத் தகவல்களும், குறிப்புகளும் உண்டு.மதம், சாதி உள்ளிட்ட அமைப்புகள் மீதான அவரது எதிர்க்கருத்துகளைக் கொண்டவை இந்தக் காலக்கட்டத்து பாடல்கள்தான்.
வள்ளலார் உயிரோடு இருந்தவரை ஆறாம் திருமுறை அச்சாகவே இல்லை.அவர் மறைவுக்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்தே அன்பர்களின் பெருமுயற்சியால் அவை வெளிவந்தன.சித்திவளாகத்துக்கு வந்து விளக்கை வழிபடுவோர், சில சமயம் அதிர்ஷ்டவசமாக வள்ளலாரைத் தரிசிக்க முடிந்தது.அவர்களில் பலரும் “அய்யா, ஞானசபையைத் திறக்கலாமே? காலில் புண்ணென்றால் காலையே வெட்டிவிடுதல் தகுமா?” என்று கேட்டார்கள்.
அவர்களிடம்தான் வள்ளலாரின் புகழ்பெற்ற அந்த சொல்லாடல் சொல்லப்பட்டது.“கடை விரித்தோம், கொள்வாரில்லை; கட்டிவிட்டோம்!”இதில் வள்ளலார் அப்போது எவ்விதமான மனவேதனையில் இருந்தார் என்பதை அறிய முடிகிறது.தன்னுடைய சன்மார்க்கக் கருத்துகள் சரிவரப் புரிந்து கொள்ளப்படவில்லையோ என்கிற எண்ணமும் அவருக்கு இருந்தது.
ஒருமுறை, “இந்த உடம்பில் இருக்கிறோம்; இனி எல்லோர் உடம்பிலும் இருப்போம்...” என்று வள்ளலார் சொல்ல, அவர் வேறெதையோ குறிப்பால் உணர்த்துகிறார் என்பதை அன்பர்கள் புரிந்துகொண்டார்கள்.அதன் நேரடி அர்த்தத்தை உணர்ந்த சீடர்களோ கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
(அடுப்பு எரியும்) தமிழ்மொழி
ஓவியம்: ஸ்யாம்
|