பக்கா ஆக்‌ஷன் என்டர்டெயினர்!



ரைட்டர் ரத்னகுமார் சொல்லும் ‘மாஸ்டர்’ சுவாரஸ்யங்கள்

பொங்கல் விருந்து ரெடி. திருவிழா எஃபெக்ட்டில் கலர்ஃபுல்லாக களைகட்டுகிறது திரையரங்குகள். விஜய்யின் ரசிகர்களும், விஜய்சேதுபதியின் ரசிகர்களும் அதிரிபுதிரி உற்சாகத்தில் மின்னுகிறார்கள். இந்நிலையில் ‘மாஸ்டர்’ ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யங்களை இங்கே ஆனந்தம் பொங்க அள்ளித் தெளிக்கிறார் அதன் ரைட்டர்களில் ஒருவரான ரத்ன குமார். படத்தின் இயக்குநர் லோகேஷின் நண்பர் இவர் + ‘மேயாத மான்’, ‘ஆடை’ என கவனம் ஈர்த்த இயக்குநர்!

‘‘விஜய் சாரைப் பத்தி சொல்றதுக்கு எனக்கு மட்டுமில்ல, ‘மாஸ்டர்’ல ஒர்க் பண்ணின அத்தனை பேர்கிட்டேயும் சுவாரஸ்யமான கன்டன்ட் நிறைய இருக்கும். ஸ்பாட்டுல கூப்பிட்டு விஜய் சார் என் தோள்ல கைபோட்டு பேசுவார்னு யார் பிரமிப்பா சொன்னாலும் ‘இதென்னா பிரமாதம், என்கிட்ட எப்படி பழகினார் தெரியுமா’னு தங்கள் பங்குக்கு மற்றவர்களும் சொல்வாங்க.

அந்தளவுக்கு ஒவ்வொருத்தர்கிட்டயும் நிறைய மகிழ்ச்சியான இன்ஸிடென்ட்ஸ் இருக்கு. ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பையன் என்கிட்ட, ‘விஜய்ணா எங்கிட்ட முக்கால் மணி நேரம் பேசினார். நான் பண்ணின யூடியூப் வீடியோவையும் பாத்து ரசிச்சார்’னு சொன்னான்.

இப்படி செட்ல இருந்த யார்கிட்ட பேசினாலும் அருவி மாதிரி விஜய் சாரைப் பத்தி கொட்டுவாங்க. பாரபட்சமே இல்லாம இப்படி யூனிட்ல இருந்த ஒவ்வொருத்தர்கிட்டயும் சார் அவ்ளோ அன்பா, அக்கறையா பழகியிருக்கார். அவர் நம்மளோட பேசும், பழகும் தருணத்தை மறக்க முடியாத தருணமா ஆக்கிடுவார். அப்படி ஒரு மேஜிக் அவர்கிட்ட இருக்கு...’’ விஜய் ரசிகராக ரசனை பொங்க பேசுகிறார் ரத்னகுமார்.

நீங்க எப்படி இதுல..?

என்னோட முதல் ஷார்ட்ஃபிலிமின் மியூசிக் டைரக்டர்கிட்டதான் லோகேஷின் குறும்பட ஒர்க்கும் போச்சு. அங்கதான் லோகேஷின் நட்புகிடைச்சது. அப்புறம், என் முதல் படம் ‘மேயாத மான்’ ரிலீஸ் டைம்ல நான் கொடுத்த ஒரு இண்டர்வியூ பார்த்துட்டு அவர் பாராட்டினார்.
அப்ப முதல் ‘நீங்க... வாங்க...’ போய், ‘மச்சான்’னு பேச ஆரம்பிச்சார். ‘நான் படம் பண்ணும் போது நீ எழுதணும், நீ படம் பண்ணினா நான் எழுதணும்’னு ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டோம்.  

ஆனா, அவர் ‘மாநகரம்’ பண்ணும் போது, நான் ‘மேயாத மான்’ல இருந்தேன். ஸோ, ஒர்க் பண்ண முடியாமப் போச்சு. அப்புறம் அவர் ‘கைதி’ பண்ணும் போது நான் அதோட டிஸ்கஷன்ல இருந்தேன். எனக்கும் ‘ஆடை’ ஷூட் இருந்ததால, அதுல முழுசா எழுத உட்கார முடியல. ஸோ, சில சீன்களுக்கு சின்னச் சின்ன இன்புட்ஸ் கொடுத்தேன். கார்த்தி சாருக்கும் சில டயலாக்ஸும் ஒர்க் பண்ணினேன்.

‘கைதி’ ரிலீஸுக்கு முன்னாடியே அவர் ‘மாஸ்டர்’ல கமிட் ஆனார். நான் விஜய் சாரோட ஃபேன்னு லோகேஷுக்கு நல்லாத் தெரியும். ஏன்னா, ‘மேயாத மான்’ வரும்போது ‘மெர்சலு’ம் வந்திருந்தது. நான் ‘மெர்சலை’த்தான் முதல்ல பார்த்தேன். அப்படி ஒரு ரசிகன். இதை மனசுல வச்சுதான் லோகேஷ் என்னை இதுல ஒர்க் பண்ண வச்சார். நைஸ் ஜர்னி.  

படத்துல அரசியல் தெறிக்கும்னு சொல்றாங்களே..?

விஜய் சாரோட படங்கள்ல டயலாக்ஸ் அவ்ளோ பவர்ஃபுல்லா இருக்கும். ரசிகர்களும் அப்படி எதிர்பார்ப்பாங்க. அரசியல் இருக்கானு தேடிப் பார்ப்பாங்க. நாங்க அந்த வழக்கமான பாணிக்குள்ள போகாம, ஆனா, அதே டைம்ல அது கொடுக்கற கிக்கும் மிஸ் ஆகாம பார்த்துக்கணும்னு மெனக்கெட்டிருக்கோம்.

அந்த பவர்ஃபுல் கொடுக்கற பிரளயத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கோம். இதை சவாலா ஏத்துகிட்டுதான் செய்திருக்கோம்.படத்தைப் பத்தி டைரக்டர் லோகேஷ் சொல்லும் போது கூட, ‘இது ஃபிஃப்டி பர்சன்ட் விஜய் சார் படம், மீதி ஃபிஃப்டி பர்சன்ட் லோகேஷ் படமா இருக்கும்’னார். ரசிகர்களை குஷிப் படுத்துற ஒரு ஆக்‌ஷன் என்டர்டெயினரா படம் வந்திருக்கு.

இதுல ஃபிஃப்டி பர்சன்ட் விஜய் சார் பார்ட்லதான் என்னோட பங்களிப்பும் இருக்கு. என்னோட சேர்ந்து டயலாக் ரைட்டர் பொன்.பார்த்திபன் சாரும் சேர்ந்து எழுதியிருக்கார். படத்துல அரசியல் பத்தி, குடி பத்தி, தேர்தலோட அவசியம்... ஏன் ஓட்டுப் போடணும்... இப்படி நிறைய விஷயங்கள் பேசியிருப்பார்.  

ஆனா, எதுவும் நேரிடையா ஆடியன்ஸை பார்த்து பேசுற சீன் இல்ல. கதையோட ஒரு கேரக்டர்கிட்ட பேசுறது போல அமைஞ்சிருக்கும்.

அதே போல விஜய்சேதுபதி கேரக்டருக்கு தெலுங்கு நானியைக் கூட யோசிச்சோம். ஆனா, சேது அண்ணாதான் கரெக்ட்டான சாய்ஸா இருந்தார். அவர்கிட்ட நாங்க கேட்க தயங்கியது தெரிந்து அவரே படத்துக்குள்ள வந்தார். மாளவிகா மோகனன், டைரக்டரின் சாய்ஸ். விஜய் சாருக்கு ஜோடியா ஃப்ரெஷ்ஷான ஜோடியா அவங்களும் இருப்பாங்க.

என்ன சொல்றார் ‘மாஸ்டர்’ விஜய்..?

இதோட ஷூட் தொடங்குறதுக்கு முன் விஜய் சாரின் லுக் டெஸ்ட் ஷூட் போச்சு. அங்கே தான் முதன்முதல்ல சாரைப் பார்த்தேன். மச்சான் லோகேஷ்தான் என்னை கூப்பிட்டு விஜய் சார்கிட்ட அறிமுகம் செய்து வச்சார். என்னைப் பார்த்து ஹேப்பியான விஜய் சார் கூப்பிட்டு உட்காரவச்சு, ‘ரொம்ப தேங்க்ஸ்ங்க, என் படத்துல நீங்க ஒர்க் பண்றதுக்கு’ன்னார். எனக்கு தூக்கிவாரிப் போட்டுடுச்சு. ‘கலாய்க்காதீங்க சார். உங்களோட ஒர்க் பண்றதுக்கு நான்தான் தேங்க்ஸ் சொல்லணும்’னு சொன்னேன்.

உடனே அவர், ‘அப்படி இல்லீங்க. எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. ரெண்டு படங்கள் பண்ணியிருக்கீங்க. அப்படி இருந்தும் இதுல ஒர்க் பண்ண வந்திருக்கீங்க. அந்த அன்புக்கு நன்றி சொல்லிக்கறேன்’னு நெகிழ்ந்தார்.

அவர்கிட்ட கை கொடுக்கும்போதும், அன்பா கட்டி அணைச்சு பேசுறதையும் கவுண்ட் வச்சு அதைச் சொல்லி கலாய்ப்பார். நல்ல பண்பாளர். நான் இயக்கின ரெண்டு படங்களையும் அவர் பார்த்திருக்கார். அதிலும் ‘மேயாத மான்’ பாடல்கள் அவருக்கு பிடிக்கும்னார். அந்தப் பாடல்களை விசில் அடிச்சு ஹம் பண்ணுவேன்னு சொன்னார்.

சமீபத்துல என்னோட ரெண்டாவது குழந்தை பிறந்தப்ப கூப்பிட்டு வாழ்த்தினார். பர்சனலாகவும் நம்ம நலனில் அக்கறை செலுத்தறார். சகோதரனா பாத்துக்கறார்.உங்கள ஸ்பாட்டுல விஜய் செமையா கலாய்ச்சார்னு கேள்விப்பட்டோமே..?

என்னோட ‘ஆடை’ படத்துல பிராங்க் பண்றதைப் பத்தி பேசியிருப்பேன். அதே மாதிரி எனக்கு பிராங்க் பண்ணிட்டாங்க. ‘குட்டி ஸ்டோரி’ ஸாங் ஷூட் அப்ப, எனக்கும் ஒரு பிராங்க் நடந்துச்சு. நான் ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணிட்டிருந்தப்ப, விஜய் சார், ‘கைதி’ தீனா, இன்னும் ரெண்டு பேர்னு எல்லாருமா சேர்ந்து, ‘நாங்க சிம்பு சார் ஆபீஸ்ல இருந்து பேசுறோம். அவர் உங்கள பார்க்கணும்னு சொன்னார். கதை கேட்கணும்னார். நல்ல மைண்ட்ல இருக்கார். டக்குனு நீங்க கிளம்பி வாங்க’ன்னார்.

நான் அதை உண்மைனே நம்பி, ‘எனக்கு இப்ப விஜய் சார் பட வேலைகள் போயிட்டிருக்கு. ரெண்டு நாள் கழிச்சு, சொல்லட்டுமா’னு அவங்ககிட்ட பேசினேன். அவங்க உடனே, ‘என்ன நீங்க, சிம்பு சார் கூப்பிடுறார்னு சொல்றோம். நீங்க இப்படி பேசுறீங்க’ன்னாங்க.
அந்த அதட்டல்ல நான் பேச தடுமாற, எதிர்முனையில் சிரிப்புச் சத்தம். உடனே விஜய் சார் அவங்ககிட்ட இருந்து போனை வாங்கி, ‘என்னப்பா உண்மைனு நம்பிட்டியா’னு கேட்டு சிரிச்சார்!

அதைப்போல ‘மாஸ்டர்’ ஷூட் தில்லில பரபரத்த போது, நான் சென்னைல வீட்ல இருந்தேன். அன்னிக்கு என்னோட பர்த்டே. லோகேஷ் பேசுற வாய்ஸ்ல, ‘என்ன மச்சி எப்படி இருக்கே? ஹேப்பி பர்த்டே டா’னு சொல்லவும் எனக்கு டவுட் ஆச்சு.

லோகேஷ் காலைலதானே விஷ் பண்ணினார். மறுபடி அவர் எப்படி விஷ் பண்ணுவார்... யாரோ கலாய்க்கறாங்கனு நினைச்சு நான் சிரிச்சுட்டேன்.உடனே விஜய் சார், ‘என்ன கண்டுபிடிச்சிட்டீங்களா’னு சொல்லி விஷ் பண்ணினார்! அதோட உடனே தில்லிக்கு வரச்சொல்லி கூப்பிட நானும் அங்கே கிளம்பிப் போய்ட்டேன். சர்ப்ரைஸா சார் எனக்கு கேக் வரவழைச்சு, என் பிறந்தநாளை செலிபிரேட் பண்ண வச்சார்! மறக்க முடியாத பர்த்டேவாகிடுச்சு!

மை.பாரதிராஜா