கிடாவுக்கு பதிலாக ஆண்டுக்கு 100 நாடகங்கள்!



*கலை வளர்க்கும் அதிசய கிராமம்

*விநோதமான கோயில் நேர்த்திக்கடன்


ஒவ்வொரு மனிதனின் இறை நம்பிக்கையும்
வித்தியாசமானது. நினைத்த காரியம்
நடந்துவிட்டால் கோயிலுக்கு கிடாவெட்டுவது,
முடிகாணிக்கை தருவது, தங்கத்தேர் இழுப்பது,
பொற்கூரை அமைப்பது என
ஒவ்வொருவரின் வேண்டுதலும் அவர்களின்
பொருளாதாரப் படிநிலை, பரம்பரை
பழக்கவழக்கங்கள், தனிப்பட்ட
விருப்பங்களின்படி மாறி வருகிறது.

இதில் ஒரு கோயிலில் மட்டும் விநோதமான நேர்த்திக் கடன் வழக்கத்தில் உள்ளது. மதுரை அருகே ஒரு கிராமத்தில் எவ்வளவு வசதி படைத்தவர் என்றாலும், அவர்கள் நினைத்தது நிறைவேறிவிட்டால், நேர்த்திக் கடனாக கோயிலுக்கு முன் நாடகம்தான் போட வேண்டும். நாடகம் என்றால் ஒன்றிரண்டு அல்ல. வருடத்துக்கு 100 நாடகங்கள். என்னடா, இப்படி ஒரு கிராமமா என நீங்கள் ஆச்சரியப்படலாம். இதைவிட ஆச்சரியமான விஷயம், வருடத்துக்கு 100 நாடகங்களை சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கிராம மக்கள் நடத்திவருகின்றனர் என்பதுதான்!

வாசம் வீசும் வலையங்குளம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் நான்கு வழிச்சாலையில் 25 கி.மீ தொலைவில் உள்ளது வலையங்குளம் கிராமம். மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மதுரை என்றவுடன் மல்லிகை எனப்பெயர் வர இந்த கிராமமும் காரணம். இங்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை விவசாயம் நடைபெறுகிறது. 48 கிராமங்களின் தாய் கிராமமான வலையங்குளம் கிராமத்தின் நடுவே சுயம்புவாய்த் தோன்றி காட்சி தரும் தனலிங்கப் பெருமாளுக்கு கம்பீரமாய் ஒரு கோயில் உள்ளது. இங்குதான் நடக்கிறது இந்த அதிசய நேர்த்திக் கடன்.

விடிய விடிய நாடகம்

இந்தக் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதில்லை. கோயில் வாசலில் இருந்துதான் வழிபட வேண்டும். மேலும், இந்தக் கோயில் மந்தைப் பகுதி யில் யாரும் செருப்பு அணிவது கிடையாது. அதன் அருகிலேயே நாடக மேடையில்தான் முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழ் வருடத்துக்கு 100 நாட்கள் நிகழ்கிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடக்கும் இந்த நாடகத்தை தனலிங்கப் பெருமாள் பார்ப்பதாக கிராம மக்கள் நம்புகிறார்கள். இதனால், இந்த மேடையில் நாடகத்தைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படுவதில்லை என்பதுதான் சிறப்பு.

நாடகப்பிரியர் பெருமாள்

ஒவ்வொரு கிராமத்து கோயில் திருவிழாக்களிலும் ஆடல், பாடல், இசைக் கச்சேரி, பட்டிமன்றம், திரைப்படம் என  நடத்திக்கொண்டிருக்கும்போது ஏன் இந்த கிராமத்தில் மட்டும் நாடகம் போடுகிறீர்கள் என்று வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பந்தல் அமைப்பாளரான சின்னக்காளையிடம் கேட்டோம்.

``400 வருஷங்களுக்கு முன் எங்கள் முன்னோர்கள் நாடகம் போட்டார்கள். எங்கள் முன்னோர்கள் வழியில் நாங்களும் தொடர்ந்து நாடகம் போடுகிறோம். சிவராத்திரி அன்றுதான் வருடத்தின் முதல் நாடகம். ஊர் வரி விதித்து அந்தப் பணத்தின் மூலம் அதை நடத்துவோம். அதன் பின், 99 நாட்கள் நடைபெறும் நாடகங்களை நேர்த்திக் கடன்  நிறைவேறியவர்கள் நடத்துவார்கள். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் சித்ரா
பவுர்ணமியன்று நாடகம் நிறைவு பெறும். இவ்வருடம் தற்போது வரை 20 நாடகங்கள் நடத்த பதிவு செய்திருக்கிறார்கள்.  

எங்கள் ஊரில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழா நடக்கும்போது நாடகங்களின் எண்ணிக்கை குறையும். அப்போது பணம் கட்டியவர்கள் நாடகம் அடுத்த ஆண்டு நடத்தப்படுகிறது. இது தொன்றுதொட்டு நடைபெறுகிறது...’’ என்று கூறினார்.

``ஏன், நாடகம் தவிர வேறு எதுவும் நடத்தமாட்டீர்களா?’’ என்று கேட்டதற்கு, ``நாடகம் போடும் அன்று விடிய விடிய கோயில் திறந்திருக்கும். அதில் வீற்றிருக்கும் பெருமாள் நாடகப் பிரியர். அவர் கண் முன் நாடகம் நடைபெறவேண்டும் என்பதற்காக கோயில் முன் நாடக மேடை கட்டப்பட்டுள்ளது. எனவே, வேறு நிகழ்ச்சிகளை இந்த மேடையில் நடத்தமாட்டோம்...’’ என்று பதிலளித்தார்.

பஞ்சம் தந்த நாடகம்

வலையங்குளத்தைச் சேர்ந்த விவசாயி பிச்சை கூறுகையில், ``எங்கள் ஊரில் மல்லிகை விவசாயம் நடைபெறுகிறது. அதுவும் ஆழ்குழாய்களை நம்பித்தான் நடக்கிறது. பெருங்குடி கண்மாய் நிறைந்து எங்களுக்குத் தண்ணீர் கிடைத்தால்தான் விவசாயம் செய்ய முடிகிறது. தொடர்ந்து தண்ணீர் கிடைத்தால் விவசாயமும் செழிக்கும், எங்கள் மக்களின் கஷ்டம் தீர்ந்து நாடகங்களின் எண்ணிக்கையும் கூடும். அதற்கு அரசுதான் உதவிட வேண்டும்...’’ என்று வேண்டுகோள் வைக்கிறார்.

``இந்த விநோத நேர்த்திக்கடன் பற்றி...?’’ என்று பிச்சை என்பவரிடம் கேட்டோம். ``வெகு காலத்துக்கு முன்பு இந்தக் கிராமத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மழை பெய்தால் நாடகம் போடுகிறோம் என்று சுயம்புவாகத் தோன்றி குடிகொண்டிருக்கும் தனலிங்கப் பெருமாளிடம் கிராமத்தினர்  வேண்டிக்கொண்டனர். இதன் பின், கடும் மழை பெய்து எங்கள் ஊர் செழிப்பானது. அதனால், அன்று முதல் இன்று வரை எங்கள் கிராமத்தில் எந்த வேண்டுதல் நிறைவேறினாலும் பெருமாளுக்கு உகந்த நாடகத்தைப் போடுகிறோம்.

இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் வேண்டுதல் நிறைவேறினால் கட்டாயம் நாடகம் போடுவார்கள். இதன் காரணமாகவே தொடர்ந்து எங்கள் கிராமத்தில் நாடகம் நடைபெற்று வருகிறது. ஒரு நாடகம் நடத்த சுமார் 60 ஆயிரம் ரூபாயாகிறது. சிலர் 10 பேராகச் சேர்ந்து நாடகம் நடத்துகிறார்கள்...’’ என்று கூறினார்.

வலையங்குளம் கிராமத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். நாடகம் நிறைவுபெறும் சித்ரா பவுர்ணமியன்று சமபந்தி உணவுடன் திருவிழாவை முடிப்பதை கிராமத்தினர் தொன்றுதொட்டு நடத்தி வருவதே இதற்கு சாட்சி. நக்கீரனின் தமிழோடு சிவன் விளையாட வந்ததாகக் கருதப்படும் மதுரையில், முத்தமிழில் மூன்றாவது தமிழான நாடகத்தை வளர்த்து வரும் இந்த கிராமமும் ஓர் அதிசயம்தான்.

செய்திகள்: ப.கவிதா குமார்

படங்கள்: டி.ஏ.அருள்ராஜ்