பொங்கலும் தமிழ் சினிமாவும்ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் சினிமாவைப் பொறுத்தவரையில் முக்கியமான இடத்தை வகிப்பது தீபாவளியும், பொங்கலும்தான்.இதில் தீபாவளியை விட பொங்கலுக்கு சற்று கூடுதல் சிறப்பு உண்டு. ஏனென்றால், தீபாவளி மாதிரி பொங்கல் ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல, மூன்று நாள் கொண்டாட்டம்.

பொங்கலன்று குறைந்தபட்சம் மூன்று திரைப்படங்களைப் பார்க்காமல் எந்தத் தீவிர தமிழ் சினிமா ரசிகனின் அன்றைய நாளும் முழுமையடையாது. பொங்கலைப் பொறுத்தவரையில் புதுத் துணி, கரும்பு, சர்க்கரைப் பொங்கல் இவற்றிற்கெல்லாம் எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அதற்கு சற்றும் குறையாத முக்கியத்துவம் நம் தமிழ் சினிமாவிற்கு உண்டு.

1931ம் ஆண்டிலே வெளிவந்த முதல் தமிழ் சினிமாவான ‘காளிதாஸ்’ படத்தைத் தொடர்ந்து 1939ம் ஆண்டு வரை வெளியான படங்களில் எந்தெந்த படங்கள் எப்போது வெளியாகின என்ற விவரமான குறிப்புகள் எந்த இணையதளத்திலும் தெளிவாக இல்லை. 1940ம் ஆண்டு முதல்தான் அதுபோன்ற பதிவுகள் காணக்கிடைக்கின்றன.

அந்த குறிப்புகளின் அடிப்படையில் பார்த்தால் தமிழ் சினிமா உலகின் பிதாமகர் என்று போற்றப்படுகின்ற இயக்குநர் கே.சுப்ரமணியம் அவர்களின் இயக்கத்தில் உருவான ‘பக்த சேதா’ என்ற படம் 1940ம் ஆண்டு பொங்கலன்று வெளியாகி உள்ளது தெரியவருகிறது.

1941ம் ஆண்டு பொங்கலன்றும் கே.சுப்ரமணியம் இயக்கத்தில் ஒரு படம் வெளியானது. அது ‘கச்ச தேவயானி’. தமிழ் சினிமா உலகின் முதல் கவர்ச்சிக் கன்னியான டி.ஆர்.ராஜகுமாரியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. அவரது தாக்கத்திலிருந்து தமிழ் ரசிகர்கள் மீள வெகு நாட்கள் ஆனது என்பது வேறு விஷயம்.

இன்று ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோர் தமிழ் சினிமாவில் முதல் நான்கு இடங்களில் இருப்பதைப் போல தமிழ் சினிமா பேசத் தொடங்கிய காலகட்டத்திலே இருந்த இரு முன்னணி நட்சத்திரங்கள் எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும்தான். தமிழ் சினிமாவினுடைய முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே,டி. முதல் இடத்திலும், அதற்கடுத்த இடத்தில் பி.யு.சி.யும் அப்போது இருந்தார்கள்.

மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடிய மாபெரும் வெற்றிச் சித்திரமான ‘ஹரிதாஸ்’ படத்தைத் தந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் அவரது படங்களில் ஒன்று கூட பொங்கலன்று வெளியாகாதது ஏன் என்று தெரியவில்லை.ராஜா சாண்டோவின் இயக்கத்தில் உருவான ‘சந்திரகாந்தா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பி.யு.சின்னப்பா நடித்த 28 படங்களில் இரண்டு படங்கள் பொங்கல் வெளியீடாக அமைந்துள்ளன.

அதில் முதல் படம் 1944ம் ஆண்டு வெளியான ‘ஹரிச்சந்திரா’. நடிகை கண்ணாம்பாவின் தயாரிப்பில் உருவான படம் அது. அந்தப் படத்தைத் தொடர்ந்து 1949ம் ஆண்டில் சின்னப்பா நடித்த ‘கிருஷ்ண பக்தி’ என்ற திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தது.‘சதிலீலாவதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அடி எடுத்து வைத்த புரட்சி நடிகர் எம்ஜிஆர் கதாநாயகனாக உயர்ந்ததற்குப் பின்னாலே பொங்கல் வெளியீடாக வெளிவந்த, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் அவர் நடித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்துக்கு பெரும் பங்குண்டு.

எம்ஜிஆர், பானுமதி ஜோடியாக நடித்த அந்தப் படம்தான் தமிழில் வெளியான முதல் வண்ணப்படம். அது கேவா கலரில் உருவாக்கப்பட்டிருந்தது.
‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ பற்றி ருசிகரமான தகவலும் ஒன்று உண்டு. அந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோது அதன் படப்பிடிப்பிற்காக அப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான டி.ஆர்.சுந்தரம் கேட்ட தேதிகளை எம்ஜிஆர் சரியான நேரத்துக்கு ஒதுக்கித் தராததால்
 எம்ஜிஆருக்குப் பதிலாக ஒரு டூப்பை வைத்து, கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்து நடிக்கவேண்டிய ஒரு பாடல் காட்சி உட்பட அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாவற்றையும் படமாக்கி முடித்து விட்டார் டி.ஆர்.சுந்தரம்.

அந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு வந்த எம்ஜிஆர், ‘எப்போது படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம்?’ என்று டி.ஆர்.சுந்தரத்திடம் கேட்டபோது, ‘படப்பிடிப்பா?’ என்று சிரித்தபடியே அவரைப் பார்த்துக் கேட்ட டி.ஆர்.சுந்தரம், ‘நான் கூப்பிட்டபோது நீங்கள் வராததால் உங்களுடைய காட்சிகள் எல்லாவற்றையும் டூப்பை வைத்து படமாக்கிவிட்டேன்’ என்று சொன்னதுடன், படமாக்கப்பட்ட அந்தக் காட்சிகளை எல்லாம் அவருக்குப் போட்டுக் காட்டினார்.

அந்தச் சம்பவம் காரணமாக டி.ஆர்.சுந்தரம் மீது ஆத்திரமடைந்த எம்ஜிஆர் அதற்குப் பின்னாலே மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் உருவான எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தைத் தொடர்ந்து பொங்கலன்று வெளியான எம்ஜிஆர். படங்களில் ‘சக்கரவர்த்தித் திருமகள்’, ‘பணத்தோட்டம்’. ‘வேட்டைக்காரன்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘அன்பே வா’, ‘தாய்க்குத் தலை
மகன்’, ‘ரகசிய போலீஸ் 115’, ‘மாட்டுக்கார வேலன்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன.

1965ம் ஆண்டு சாணக்யாவின் இயக்கத்தில் வெளியான ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். வாகினி ஸ்டூடியோவின் சார்பிலே தயாரிக்கப்பட்ட அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அது மட்டுமின்றி வசூலிலும் பல புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் பல திரைப்பட விநியோகஸ்தர்கள் எம்ஜிஆரை வைத்து படம் எடுக்கும்படி ஏவிஎம் நிறுவனத்தினரை வற்புறுத்தத் தொடங்கினார்கள்.

அந்த சமயத்தில் ஏவிஎம் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குநரான ஏ.சி திருலோகச்சந்தர், எம்ஜிஆருக்கு ஏற்ற ஒரு கதையை உருவாக்கி வைத்திருந்ததால் தங்களுடைய தந்தையுடைய அனுமதியோடு எம்ஜிஆரை சந்தித்த ஏவிஎம் குமாரர்கள் தங்கள் நிறுவனத்திற்காக அவர் ஒரு படம் நடித்துத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

அப்படி ஒரு வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருந்ததைப் போல உடனடியாக அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட எம்ஜிஆர் அந்தப் படத்தில் நடிப்பதற்காக கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? மூன்று லட்சம் ரூபாய்!

வாகினியின் தயாரிப்பான ‘எங்க வீட்டுப் பிள்ளை’ 65ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானதால் 66ம் ஆண்டு பொங்கலுக்கு தங்களது தயாரிப்பில் எம்ஜிஆர். நடிக்கின்ற படமான ‘அன்பே வா’ வெளியாக வேண்டும் என்ற ஆசை நிறுவனத்திற்கு ஏற்பட்டது. அப்போது எம்ஜிஆருடன் மிகவும் நெருக்கமான பழக்கத்தில் இருந்தவர் மெய்யப்ப செட்டியாரின் மூன்றாவது மகனான எம்.சரவணன். அடிக்கடி படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று
எம்ஜிஆரை சந்தித்துப் பேசுவதை அவர் வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்.

அந்த உரிமையில் தங்களது படம் பொங்கலுக்கு வெளியாக வேண்டும் என்று எம்ஜிஆரிடம் அவர் கேட்டபோது, தனது நிர்வாகியாக பணியாற்றிக் கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பனின் தயாரிப்பில் அப்போது உருவாகிக் கொண்டிருந்த ‘காவல்காரன்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக முதலில் சரவணனிடம் சொன்ன எம்ஜிஆர், ‘எதற்கும் வீரப்பனிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்’ என்று சரவணனிடம் தெரிவித்தார்.

அதன் பின்னர் ஆர்.எம்.வீரப்பனின் சம்மதத்துடன் ‘அன்பே வா’ படத்தை பொங்கலுக்கு வெளியிட ஒப்புக் கொண்ட எம்ஜிஆர் அதற்காக தன்னுடைய சம்பளத் தொகையில் 25 ஆயிரம் ரூபாயை அதிகரித்துத் தருமாறு மெய்யப்ப செட்டியாரிடம் கேட்டுக்கொண்டார். ‘எங்க வீட்டுப்பிள்ளை’ படத்தைப் போலவே ‘அன்பே வா’ திரைப்படமும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

1952 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான ‘பராசக்தி’ படத்தில் அறிமுகமான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரையுலக வாழ்க்கையில், அவர் நடித்து பொங்கலன்று வெளியான முதல் படமாக 1955ல் வெளியான ‘காவேரி’ படம் அமைந்தது. சிவாஜியுடன் எண்ணற்ற படங்களில் இணைந்து நடித்த பத்மினி, சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அந்தப் படத்தில் பத்மினியின் சகோதரிகளான லலிதா, ராகினி ஆகியோரும் நடித்திருந்தனர்.

நூறு நாட்களைக் கடந்து ஓடிய அந்த படத்தின் கதையை ‘ராஜகுமாரி’ என்ற படத்தின் மூலம் எம்ஜிஆரை கதாநாயகன் ஆக்கிய இயக்குநரான ஏ.எஸ்.ஏ. சாமி எழுத டி.யோகானந்த் அந்த படத்தை இயக்கியிருந்தார். சிவாஜி நாயகனாக நடித்த, ‘நல்ல வீடு’, ‘நான் பெற்ற செல்வம்’, ‘இரும்புத்திரை’, ‘கர்ணன்’, ‘எங்க மாமா’, ‘இரு துருவம்’, ‘மனிதனும் தெய்வமாகலாம்’, ‘அவன் ஒரு சரித்திரம்’, ‘உருவங்கள் மாறலாம்’, ‘சாதனை’, ‘ஞானப் பறவை’ ஆகிய பல படங்கள் பொங்கலுக்கு வெளியாகி இருக்கின்றன.

ஆனாலும் அந்தப் படங்களில் ‘இரும்புத்திரை’, ‘கர்ணன்’ போன்ற ஒருசில படங்களைத் தவிர மற்ற படங்கள் வெற்றியைக் குவிக்கவில்லை என்பதுதான் உண்மை. மாறாக தீபாவளியன்று வெளியான சிவாஜி படங்களில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகின் மூவேந்தர்களாக இருந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய மூவரில் பொங்கல் பண்டிகை ஜெமினி கணேசனுக்கு ஒரு ராசியான பண்டிகையாகவே இருந்தது.

அவருடைய திரைப்பட வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களான ‘மிஸ்ஸியம்மா’, ‘கொஞ்சும் சலங்கை’ ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் அன்று வெளியான படங்கள்தான். அவருடைய காதல் மனைவியான சாவித்திரி இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்த ‘குழந்தை உள்ளம்’ படமும் ஒரு பொங்கல் தினத்தன்றுதான் வெளியானது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜெயலலிதாவின் நூறாவது படமான ‘திருமாங்கல்யம்’ படம் 1974ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகியது.வசூலில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்த இடத்தில் இருக்கின்ற விஜய் நடித்து 1996ம் ஆண்டிலே வெளியான அவருடைய முதல் பொங்கல் வெளியீட்டுப் படமான ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை.

ஆனாலும் விஜய்யைப் பொறுத்தவரையில் பொங்கல் பண்டிகை அவருக்கு மிக ராசியான பண்டிகை என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. பொங்கல் அன்று வெளியாகி வசூலை வாரிக் குவித்த விஜய்யின் முதல் படம் என்ற பெருமை சித்திக்கின் இயக்கத்தில் உருவான ‘பிரண்ட்ஸ்’ படத்திற்கு உண்டு.

இதைத் தொடர்ந்து ‘திருப்பாச்சி’, ‘போக்கிரி’, ‘காவலன்’, ‘நண்பன்’ என்று பொங்கலன்று வெளியான விஜய்யின் பல படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

தமிழ்த்திரை ரசிகர்களால் ‘தல’ என்று செல்லமாக அழைக்கப்படுகின்ற அஜித்தின் படங்களில் பொங்கலன்று வெளியான அவரது முதல் படம் என்ற பெருமையை அகத்தியனின் இயக்கத்தில் உருவான ‘வான்மதி’ பெறுகிறது.

பொங்கலுக்கு வெளியான அஜித்தின் படங்களில் ‘தீனா’, ‘வீரம்’ போன்ற பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன என்றாலும் அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் மிகப்பெரிய வெற்றியைக் குவித்த அஜித்தின் திரைப்படம் என்றால் அது சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பிலும் சிவாவின் இயக்கத்திலும் உருவான ‘விஸ்வாசம்’ படம்தான்.

அஜித்தின் திரையுலக வரலாற்றில் மைல்கல்லாக அமைந்த படம் அதுமணிவண்ணனும் சத்யராஜும் இணைந்து எண்ணற்ற படங்களில் பணியாற்றி இருந்தாலும் அவர்களுடைய திரைப்பட வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்த ‘அமைதிப் படை’ வெளியானது 1994ம் ஆண்டு பொங்கல் தினத்தன்றுதான்.  

எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் இடையே இருந்த நேசத்தையும் பின்னர் ஒரு காலகட்டத்தில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரிவையும் சித்தரிக்கும் விதமாக மணிரத்னம் உருவாக்கிய திரைப்படமான ‘இருவர்’ பல பிரச்னைகளைச் சந்தித்து விட்டு அதன் பின்னர் 1997ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியானது.

அந்த வருடம் பொங்கல் தினத்தன்று விஜயகாந்த் நடித்த ‘தர்ம சக்கரம்’, பிரபுதேவா நாயகனாக நடிக்க ராஜீவ்மேனன் இயக்கிய முதல்படமான ‘மின்சாரக்கனவு’, என்னுடைய இயக்கத்தில் பிரபுவும் நக்மாவும் ஜோடியாக நடித்த ‘பெரியதம்பி’ ஆகிய படங்கள் வெளியாகின. இதில் என்னுடைய தயாரிப்பில் பொங்கல் தினத்தன்று வெளியான ஒரே படமாக ‘பெரியதம்பி’ அமைந்தது.

சூர்யாவின் தந்தையான சிவகுமார் நடித்த படங்களில் பொங்கலன்று வெளியான அவரது முதல் படம் ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா ஆகிய இருவருடனும் அவர் ஜோடியாக நடித்த ‘கந்தன் கருணை’தான். அவருடைய மூத்த மகனான சூர்யாவின் முதல் பொங்கல் சித்திரமாக 1998ம் ஆண்டிலே வெளியான ‘காதலே நிம்மதி’ அமைந்தது. அவரது தம்பியான கார்த்தியின் முதல் பொங்கல் வெளியீடாக அமைந்த படம் செல்வராகவனின் இயக்கத்தில் உருவான ‘ஆயிரத்தில் ஒருவன்’.

தேசிய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை இயக்குநர் வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் பெற்றுத்தந்த ‘ஆடுகளம்’ வெளியானதும் ஒரு பொங்கல் நன்னாளில்தான். சிம்புவின் முதல் பொங்கல் வெளியீடாக அமைந்த படம் ‘சரவணா’ என்றால் சந்தானத்தை கதாநாயகனாக ஆக்கிய ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் வெளியானதும் ஒரு பொங்கல் தினத்தன்றுதான்.

பொங்கல் பண்டிகை நல்ல திரைப்படங்களை மட்டுமின்றி நல்ல பல கலைஞர்களையும் இந்த சினிமா உலத்துக்குத் தந்துள்ளது. 1958ம் ஆண்டிலே ஒரு பொங்கல் தினத்தன்று வெளியான ‘கன்னியின் காதலி’ என்ற படம்தான் தமிழ் சினிமா உலகமும், இலக்கிய உலகமும் இன்றும் போற்றுகின்ற மாபெரும் கவிச்சக்கரவர்த்தியான கண்ணதாசனை தமிழ் சினிமா உலகிற்குத் தந்தது.

‘மக்கள் கலைஞர்’ என்று இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் போற்றப்படுகின்ற ஜெய்சங்கர் 1965ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியான ஜோசப் தளியத்தின் ‘இரவும் பகலும்’ படத்தின் மூலம்தான் அறிமுகமானார். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று மொத்த தென்னிந்திய படவுலக மும் கொண்டாடுகின்ற நடிகையாக இன்று விளங்குகின்ற நயன்தாராவை தமிழ்ப் பட உலகிற்கு (‘ஐயா’) அறிமுகப்படுத்திய பெருமையும் பொங்கல் பண்டிகைக்கே உரித்தானது.

அரை நூற்றாண்டுக்கு முன்னாலே பொங்கல் பண்டிகையை திரை ரசிகர்கள் கொண்டாடிய முறைக்கும் இப்போது கொண்டாடும் முறைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். அப்போது பண்டிகை நாட்களில் படங்கள் வெளியாகின. ஆனால், இப்போது அதற்கு மாறாக ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடைய படங்கள் வெளியாகின்ற நாட்களை திரை ரசிகர்கள் பண்டிகை நாட்களாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள்!

படங்கள் உதவி: ஞானம்

செய்திகள்:சித்ரா லட்சுமணன்