அணையா அடுப்பு-33



கொடி பறக்குது!

கொடி கட்டி வாழ்ந்த நாடு தமிழ்நாடு.சோழர்களின் புலிக்கொடி, பாண்டியர்களின் மீன் கொடி, சேரர்களின் வில் கொடி என்று நம் தமிழ் மூவேந்தர்களின் சரித்திரத்தை பெருமிதத்துடன் புரட்டிப் பார்க்கும்போது கொடி, மிகவும் முக்கியமான ஓர் அடையாளமாக விளங்கியதைப் புரிந்துகொள்ள முடிகிறது.மன்னர்களுக்கு மட்டுமின்றி படைத்தலைவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் படையினருக்கு தனிக்கொடி கண்டே களம் கண்டார்கள் என்பது வரலாறு.

இன்றும் சர்வதேச நாடுகளை அடையாளம் கண்டுகொள்ள கொடியே உதவுகிறது.ஆன்மீகமோ, அரசியலோ.. இன்றைய தேதி வரை கொடி எந்தவொரு அமைப்புக்கும் அத்தியாவசியமானது.நம் கலாச்சாரத்தில் கடவுளருக்கும் கொடி உண்டு.தமிழ் மண்ணில் முருகப் பெருமானின் வேல் கொடிக்கு என்றுமே வெற்றிதான்.
சிவபெருமான் ரிஷபக்கொடி ஏந்தியிருக்கிறார்.திருமாலுக்கு கருடக்கொடி.ஒவ்வொரு கோயில் வாசலிலும் கொடிமரம் கட்டாயம்.

கொடியேற்றமின்றி திருவிழா ஏது?
இவ்வளவு கொடிப் பெருமை பேசக் காரணம்..
வள்ளலாரின் கொடி!
சன்மார்க்கக் கொடி என்று அழைக்கப்படும் கொடியை மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் அக்டோபர் 22, 1873ம் ஆண்டு அறிமுகம் செய்தார் வள்ளலார்.

அந்தக் கொடியேற்ற நாள் வள்ளலாரின் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாளாகவும் அமைந்தது.கொடி கட்டிய அவ்வைபவத்தில் கலந்துகொண்ட அன்பர்களுக்கு அவர் ஆற்றிய உரையை ‘மஹோபதேசம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
என்கிற அருள் மந்திரத்தை அழுத்தமாக வள்ளலார் முழங்கியது இந்த உபதேசத்தின் போதுதான்.

நமது உடலில் தொப்புளில் தொடங்கி புருவ மத்தி வரை ஒரு நாடி இருக்கிறது. இந்த நாடியே கொடிமரம். புருவ மத்தியில் ஒரு சவ்வு இடம் பெற்றிருக்கிறது. அதுவே கொடி. அந்த சவ்வின் அடிப்புறம் வெள்ளை, மேற்புறம் மஞ்சள். நம் உடலில் இடம்பெற்றிருக்கும் நரம்பு, புருவமத்தி சவ்வு இவற்றைக் குறிக்கும் வண்ணமாகவே சன்மார்க்கக் கொடி மஞ்சள், வெள்ளை நிறத்தில் வள்ளலாரால் அறிமுகப்படுத்தப் பட்டது. அகத்தின் அனுபவத்தை புறத்தே காட்டும் அடையாளம் என்று வள்ளலார் விளக்கினார்.

வள்ளலாரின் கொடியை பட்டொளி வீசி இன்றும் பறக்கச் செய்துகொண்டிருக்கும் அந்த ‘மஹோபதேசம்’ மூலமாகவே வள்ளலார் யார் என்பதை வாசகர்கள் அறிய முடியும். சன்மார்க்கத்தின் சாரத்தைப் புரிந்துகொள்ளவும் உதவும்.அமெரிக்காவின் சிகாகோ நகரில் விவேகானந்தர் பேசிய உரை எப்படி இந்திய ஆன்மீகத்தின் அற்புதத்தை சர்வதேசத்துக்கும் தரிசனப்படுத்தியதோ, அதைப் போன்ற மிகவும் சிறப்பான உரை இது.

வள்ளலாரின் அந்த உரையை, அவர் பேசிய மொழியிலேயே முக்கியத்துவம் கருதி அப்படியே தருகிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கால தமிழ்தான். எனினும் ஊன்றி வாசித்தால் நன்கு புரியும்.“இங்குள்ள எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற  பத்துத் தினமாகிய கொஞ்ச காலம்  வரையில் நீங்களெல்லவரும் நல்ல விசாரணையில் இருந்துக் கொண்டிருங்கள். அந்த விசாரணை எதுவென்றால், நம்முடைய நிலை எப்படிப்பட்டது என்று விசாரிக்க வேண்டியது.

அதற்குத் தக்கபடி நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்கள் அறிவிற்கும், ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது அல்லது  வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்யத் தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார்  அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையில் இருங்கள். அல்லது தனியாகவும் விசாரிக்கலாம்.

இவ்விசாரணை முகத்திலிருந்தால் நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத் திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத் திரை முதலில் நீங்கி விடும். அது நீங்கினால் மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும்.

அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டது என்றால் கருமைக்கு முதல் வர்ணம் பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்க வேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும்  இவ்வண்ணமாக, இருக்கின்ற போதும் படுக்கின்ற போதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டுமென்கிற முயற்சியுடன் இருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்துக் கொள்ளலாம்.

அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையாய் இருக்கின்றது. இவற்றில் பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசாரமல்ல. சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்துக் கொண்டிருக்கின்றானே என்றால், அவ்விசாரம் விசாரமாகாது. உண்மை விசாரமும் அல்ல.

ஏனெனில் விசாரமென்கிறதற்குப் பொருள், வி  சாரம் என்பதில் வி  சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது.ஜலத்தில் இருக்கின்ற பாசியை நீக்குவது போல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தால் அல்லது மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்யத் தரத்தில் உண்டு பண்ணுவதற்குத் தெரியாது.

அந்த விசாரத்தை விட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும், தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம், மலை, முழை முதலியவற்றுக்குப் போய் நூறு, ஆயிரம் முதலிய வருஷகாலம் தவம் செய்து இவ்வுஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள்.

இப்படி தவம் செய்து உஷ்ணத்தை உண்டுபண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும் தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும்  இதைவிடக் கோடிப் பங்கு பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.

எவ்வாறெனில்…..?”
முகிலைக் கிழித்துக் கொண்டு மாரி பெருவாரியாய் பெய்தது போல பேசிக்கொண்டிருந்த வள்ளலார், சற்றே நிறுத்தி கூட்டத்தைக் கவனித்தார்.
அனைவரும் திறந்தவாய் மூடாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

(அடுப்பு எரியும்)

- தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்