சிறுதானிய பொங்கல் நாள் ரெசிப்பி!



பொறியியல் பட்டதாரியான சுரேஷ், சிறுதானிய உணவின் மீதுள்ள ஆர்வத்தால் சமைக்க கற்றுக் கொண்டார். இப்போது சிறுதானிய உணவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும்பாங்காற்றி வருகிறார். தமிழகத்தின் முதல் சிறுதானிய மல்ட்டி குசைன் ரெஸ்ட்டாரண்ட் வடிவில் ‘திருக்குறள் உணவக’த்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். விருதுகளையும் குவித்து வருகிறார்.

ஆம். 2016ல் யுவசக்தி அமைப்பின் ‘இளம் சாதனையாளர்’ விருதையும், 2017ல் இலக்கு அமைப்பின் ‘அறிவுநிதி’ விருதையும் பெற்றிருக்கிறார். மட்டுமல்ல. இவரது ‘திருக்குறள் உணவகம்’, ‘சிறந்த பாரம்பரிய உணவகம் 2018’ விருதையும் பெற்றிருக்கிறது.

கடந்த ஆறு வருடங்களாக வீடு மற்றும் பொது திருமண நிகழ்ச்சிகளுக்கு வழக்கமான உணவுகளுக்கு மாற்றாக பாரம்பரிய உணவு வகைகளை மாடர்ன் ஆக செய்து சமைத்து வருகிறார். உடலுக்கு ஆரோக்கிமான சிறுதானிய உணவுகளை தொடர்ந்து பரிந்துரைத்து வரும் சுரேஷ், பொங்கலுக்கான ஸ்பெஷல் ரெசிப்பிகளை இங்கே தருகிறார்...

குதிரவாலி ஃப் ரைட் ரைஸ்

* தேவையான பொருட்கள்: குதிரவாலி அரிசி - 1 கப், நறுக்கிய வெங்காயம் - 1/2 கப், நறுக்கிய காரட் - 1/2 கப், பச்சை பட்டாணி - 1/2 கப், கோஸ் - 1/2 கப், பீன்ஸ் - 1/2 கப், இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
* முன் தயாரிப்பு: குதிரவாலி அரிசியை அலசி 10 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 5 மடங்கு தண்ணீர் எடுத்து அதில் கலந்து முக்கால் பாகம் வெந்தவுடன் உதிரி சாதமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
*செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கிளறவும். பின் அதில் நறுக்கிய காரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, கோஸ் சேர்த்து வதக்கவும். காய்கறி வதங்கியவுடன் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் குதிரவாலி சோற்றை கலந்து பிரட்டவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.

தினை கோவா

* தேவையான பொருட்கள்: தினை - 1 கப், வெல்லம் - 1/2 கப், நெய் - 4 தேக்கரண்டி, தண்ணீர் - 1/2 கப், ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி, பாதாம் உடைத்தது - 1 தேக்கரண்டி

* செய்முறை: வெல்லத்தை சம அளவு தண்ணீரில் கரைத்து, அதனோடு ஏலக்காய் பொடி சேர்த்து கம்பி பதத்தில் பாகு காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தினை மாவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின் அதில் வெல்லப் பாகினை ஊற்றி கலக்கவும். இந்தக் கலவையை பால்கோவா பதத்திற்கு வரும் வரை நெய் ஊற்றி நன்றாகக் கிளறவும்.

பின் இந்தக் கலவையை சூட்டுடன் ஒரு தட்டில் ஊற்றவும். இதன் மேல் உடைத்த பாதாமை தூவி ஆற விடவும். இது நன்கு ஆறியவுடன் இதை கத்தியால் சிறு சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

கம்பு பூரி

* தேவையான பொருட்கள்: கம்பு - 1/2 கப், கோதுமை மாவு - 1/2 கப், ரவை - 1 தேக்கரண்டி ,உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு
* செய்முறை: கோதுமை மாவு, கம்பு மாவு இரண்டையும் உப்பு சேர்த்து கலக்கவும். பின் இந்தக் கலவையில் 1 தேக்கரண்டி எண்ணெயும், 1 தேக்கரண்டி ரவையும் சேர்த்து சூடான தண்ணீர் கலந்து பூரி மாவு பதத்திற்கு பிசையவும்.
இதை 20 நிமிடங்கள் வைத்திருந்து உருண்டைகளாக பிடிக்கவும். பின் இந்த உருண்டைகளை வட்டமாக தேய்க்கவும். பின் வட சட்டியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் பொரித்து எடுக்கவும்.பூரி தேய்க்கும்போது சற்று கனமாக இருக்குமாறு தேய்த்தால் பூரி எழும்பி வரும்.

தொய்யல் கீரை வடை

l தேவையான பொருட்கள்: தொய்யல் கீரை - 1 கட்டு, சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி, பூண்டு - 7 பல்,
உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் - சிறிது, சீரகம் - 1 தேக்கரண்டி, மிளகு (பொடித்தது) - 2 தேக்கரண்டி, நெய் - 3 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி
l செய்முறை: கீரையை சுத்தப்படுத்தி, பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், சீரகம், மிளகுத் தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேகவிடவும். வெந்ததும் உப்பு சேர்த்து நன்கு கடைந்து, நெய்யில் கடுகை தாளித்து கொட்டவும்.

கேழ்வரகு அல்வா

* தேவையான பொருட்கள்: கேழ்வரகு - 250 கிராம், வெல்லம் - 500 கிராம், நெய் - 100 கிராம், முந்திரி - 20 நம்பர், உலர் திராட்சை - 10 நம்பர், ஏலக்காய் - 4 நம்பர், தண்ணீர் - தேவைக்கேற்ப

* செய்முறை: கேழ்வரகை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை அரைத்து 3 முறை பால் எடுக்கவும். பின் அந்தப் பாலை 2 மணி நேரம் தனியாக வைக்கவும். 2 மணி நேரம் கழித்து பிரிந்திருக்கும் தண்ணீரை வடிகட்டவும். இப்போது மீதமுள்ள கேழ்வரகின் அளவில் இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

வெல்லத்தை சம அளவு தண்ணீர் சேர்த்து பாகு போல் காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது ஓரடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் கேழ்வரகு கலவையை சேர்க்கவும். இதனோடு வெல்லப்பாகை கலந்து கைவிடாமல் கிண்டவும். அவ்வப்போது கூடுதல் நெய் சேர்த்து அல்வா பதம் வரும் வரை நன்றாகக் கிளறவும். இறுதியாக முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை இவற்றையெல்லாம் நெய்யில் வறுத்து இதனுடன் சேர்த்து இறக்கவும்.

கடுகு குழம்பு

* தேவையான பொருட்கள்: கடுகு - 40 கிராம், சீரகம் - 1 தேக்கரண்டி, மிளகு - 1 தேக்கரண்டி, பால் பெருங்காயம் - 1 தேக்கரண்டி மல்லி விதை - 50 கிராம், வெந்தயம் - 1/2  தேக்கரண்டி, மஞ்சள் தூள் - சிறிதளவு, புளி - எலுமிச்சையளவு
சின்ன வெங்காயம் - 1 கையளவு, பூண்டு - 1 கையளவு, நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி,

கறிவேப்பிலை - 2 கொத்து, கல் உப்பு - தேவையான அளவு

* செய்முறை: கடுகை சிவக்க வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். சீரகம், மிளகு, பெருங்காயம், மல்லி விதை, வெந்தயம், மஞ்சள் தூள் இவை அனைத்தையும் தனித்தனியாக எண்ணெயில்லாமல் சிவக்க வறுத்து, சின்ன வெங்காயம், பூண்டுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையுடன் புளிக் கரைசலைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து சிறிதளவு சுண்டி, பச்சை வாசனை போனதும் கடுகுப் பொடியை சேர்த்து கலக்கவும். கடுகை சேர்த்தபின் கொதிக்க விடக்கூடாது.சூடான எண்ணெயில் கறிவேப்பிலை தாளித்து குழம்புக்குள் ஊற்றவும். தாய்மார்கள் புழுங்கலரிசி சோற்றுடன் இக்குழம்பை சாப்பிடலாம்.

கூட்டு குழம்பு

* தேவையான பொருட்கள்: கம்பு - 1 கைப்பிடி, சீரகம் - 1/2  தேக்கரண்டி, மிளகு - 1 தேக்கரண்டி, பூண்டு - 10 பல், இஞ்சி - சிறு துண்டு, மஞ்சள் கிழங்கு - சிறு துண்டு, சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி, மல்லி விதை - 2 தேக்கரண்டி, பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி, புளி  - எலுமிச்சை அளவு, கொத்தவரங்காய் - 1 கோப்பை, கத்தரிக்காய் - 3

* தாளிக்க: நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு - சிறிதளவு, கறிவேப்பிலை - 2 கொத்து, உப்பு - சுவைக்கு

* செய்முறை: சுத்தப்படுத்திய கம்புடன், சீரகம், மிளகு, பூண்டு, வெங்காயம், இஞ்சி, மஞ்சள், பெருங்காயம், கொத்தமல்லி... என அனைத்தையும் மைய அரைத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்ததும் நறுக்கிய கொத்தவரங்காய், கத்தரிக்காயை வேக வைக்கவும். பாதி வெந்த பிறகு புளிக் கரைசலையும் உப்பையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பச்சை வாசனை போகும் வரையிலும், காய் வேகும் வரையிலும் வேகவிடவும். பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டவும்.கைக்குத்தல் அரிசி சோற்றுக்கும், கம்பு சோறு, சோள சோற்றுக்கும், பொங்கலுக்கு சமைக்கப்படும் குழைந்த சாதத்துக்கும் கூட்டு குழம்பு  சுவையாக இருக்கும்.

பொன்னாங்கண்ணி சாறு குழம்பு

* தேவையான பொருட்கள்: பொன்னாங்கண்ணி இலை சாறு - 300 மில்லி, புளித்த சோற்று வடிகஞ்சி - 100 மில்லி, பூண்டு - 4 பல், சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி, சீரகம் - கால் தேக்கரண்டி, மிளகு - 1 தேக்கரண்டி, இஞ்சி - சிறு துண்டு, மஞ்சள் - 2 சிட்டிகை, கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி, உப்பு - சுவைக்கு, நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி, கடுகு - சிறிதளவு, கறிவேப்பிலை - 1 கொத்து

* செய்முறை: சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, மஞ்சள், உப்பு, கொத்தமல்லி, மிளகு, சீரகம் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். இரண்டு மேசைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

பொன்னாங்கண்ணி சாறையும், புளித்த வடிகஞ்சியையும் சேர்த்து நன்கு கலக்கவும். இக்கலவை நன்கு கொதித்து பச்சை வாசனை போன பிறகு, மீதமுள்ள எண்ணெயில் கடுகு,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

மணத்தக்காளி வெஜ் ேரால்

*தேவையான பொருட்கள்: பொன்னாங்கண்ணி இலை சாறு - 300 மில்லி, புளித்த சோற்று வடிகஞ்சி - 100 மில்லி, பூண்டு - 4 பல், சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி, சீரகம் - கால் தேக்கரண்டி, மிளகு - 1 தேக்கரண்டி, இஞ்சி - சிறு துண்டு, மஞ்சள் - 2 சிட்டிகை, கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி, உப்பு - சுவைக்கு, நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி, கடுகு - சிறிதளவு, கறிவேப்பிலை - 1 கொத்து

* செய்முறை: சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, மஞ்சள், உப்பு, கொத்தமல்லி, மிளகு, சீரகம் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். இரண்டு மேசைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

பொன்னாங்கண்ணி சாறையும், புளித்த வடிகஞ்சியையும் சேர்த்து நன்கு கலக்கவும். இக்கலவை நன்கு கொதித்து பச்சை வாசனை போன பிறகு, மீதமுள்ள எண்ணெயில் கடுகு,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

தொகுப்பு: திலீபன் புகழ்