தல Sixers Story-33



மேட்ச் ஓவர்!

கடந்த அத்தியாயத்தின் தொனியிலேயே வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.அடித்து ஆடிய ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தை நாம் நெருங்கி விட்டோம்.தோனியுடைய தனிப்பட்ட மற்றும் கிரிக்கெட் வாழ்வின் எண்ணற்ற தருணங்கள் இத்தொடரில் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை.உலகக் கிரிக்கெட் வரலாற்றின் போக்கை மாற்றிய ஒரு வீரரை பறவைப் பார்வையில் பொதுவாகப் புரிந்துகொள்வதே இத்தொடரின் நோக்கம்.

அந்நோக்கத்தை கிட்டத்தட்ட எட்டிவிட்டோம்.குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் தோனியின் சாதனைகளைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்று பல வாசகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.அதைச் சொல்ல வேண்டுமானால் தோனியின் கிரிக்கெட் வாழ்வின் கறைகளையும் பேசியாக வேண்டும்.அவர் கேப்டனாக வழிநடத்திய அணி முறைகேடுகள் தொடர்பான புகாரால் சில ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டதன் பின்னணியையும் அலசியாக வேண்டும்.

இது கல்யாண வீடு. ஒப்பாரி எதுக்கு?

ஓகே.கமிங் டூ தல.உலகக் கோப்பை சாம்பியனாகவே தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் நடந்த 2015 உலகக் கோப்பையையும் சந்தித்தது.இம்முறை எதிர்பார்ப்பு எக்கச்சக்கம்.அதற்கேற்ப தோனி தலைமையிலான இந்திய அணி, தான் ஆடிய ஆறு லீக் மேட்ச்சுகளிலுமே வென்றது.காலிறுதியில் வங்கதேசத்தை 109 ரன்கள் வித்தியாசத்தில் நொறுக்கியது.

ஆனால் -அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் எவருமே எதிர்பார்க்கா வண்ணம் 95 ரன்கள் வித்தியாசத்தில் நொறுங்கியது.2015 உலகக்கோப்பைக்குப் பிறகே தோனி கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிக் கொள்ள ஆரம்பித்தார்.2019ம் ஆண்டு விராத் கோஹ்லி தலைமையில் தன்னுடைய கடைசி உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடினார் தோனி.லீக் மேட்ச்சுகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான அரை செஞ்சுரி தவிர்த்து தோனி, பெரிதாக எடுபடவில்லை.

எனினும் -ரவுண்ட் ராபின் முறையில் நடந்த போட்டிகளில் பத்து அணிகளில் முதலிடம் இந்தியாவுக்கே.நேரடியாக செமி ஃபைனல்தான்.உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றிலேயே 28 மணி நேரம் 24 நிமிடங்களுக்கு நீடித்த போட்டி இது.ஆமாம்.வருணபகவானின் கருணையால் ஒருநாள் போட்டி, இருநாள் நடந்தது.முதலில் ஆடிய நியூஸிலாந்தை 239 ரன்களிலேயே இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்தி விட்டனர்.
சுலபமான இலக்குதானென்று இந்திய வீரர்கள் சற்று மெத்தனமாக இருந்து விட்டார்கள்.

விளைவு?

5 ரன்களை எட்டுவதற்குள்ளாகவே கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி என்று 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா அஸ்திவாரமே இல்லாமல் தள்ளாடத் தொடங்கியது. மூன்று பேருமே சொல்லி வைத்தது மாதிரி 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்கள்.தோனி, களத்துக்கு வரும்போது 92 ரன்களுக்கு 6 விக்கெட் என கிட்டத்தட்ட இந்தியா தோல்வி அடைந்து விட்டது.தோனி ஒரு முனையிலும், ரவீந்திர ஜடேஜா மறுமுனையிலும் நங்கூரமாக நிலைகொண்டு போராடத் தொடங்கினார்கள்.

தோனி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஜடேஜா, நியூஸிலாந்து பவுலர்களை சிக்ஸரும், பவுண்டரிகளுமாக தண்டிக்கத் தொடங்கினார்.
இந்த ஜோடி 200 ரன்களைக் கடந்தபோது, இந்தியாவுக்கான வெற்றிவாய்ப்பு மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியது.48வது ஓவரின் கடைசிப் பந்து.பவுல்ட் வீசிய பந்தை லாங்-ஆஃப் திசையில் சிக்ஸருக்கு விரட்டும் முயற்சியில் வில்லியம்சனிடம் கேட்ச் ஆனார் ஜடேஜா.இந்தியாவின் உலகக் கோப்பை நம்பிக்கையாக தோனி மட்டுமே களத்தில் நின்றார்.

12 பந்துகளில் 31 ரன்கள் தேவை.தோனியால் முடியுமா என்று யோசித்து முடிப்பதற்குள்ளாகவே ஃபெர்குஸன் வீசிய பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். அந்த சிக்ஸரின் மூலமாக தன்னுடைய 73வது அரை செஞ்சுரியை எட்டினார்.அடுத்த பந்தில் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை.அதற்கும் அடுத்த பந்தை தட்டிவிட்டு தோனி ஓட, பந்தை கைப்பற்றிய குப்தில் குறிவைத்து எறிந்த பந்து, நேரடியாகவே ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது.
தோனி க்ரீஸை எட்டியதும், பந்து ஸ்டெம்பை தாக்கியதும் ஒரே கணத்தில் நிகழ்ந்த நிகழ்வு.

நினைவிருக்கிறதா?

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 23, 2004 அன்றும், தான் விளையாடிய முதல் சர்வதேசப் போட்டியிலும் இதே போல்தான் ரன் அவுட்டுக்காக மூன்றாவது நடுவரின் முடிவுக்கு அவர் காத்திருக்க வேண்டியிருந்தது.வங்கதேசத்துடனான அப்போட்டியில் தோனி டக்-அவுட்டும் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.தோனி விளையாடிய கடைசி சர்வதேசப் போட்டியான 2019 உலகக் கோப்பை அரையிறுதியிலும் அதே நிலைமைதான்.

ஆனால் -இம்முறை தோனி, மூன்றாவது நடுவரின் முடிவுக்கெல்லாம் காத்திருக்காமல் பெவிலியன் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.மைதானத்திலிருந்த பெரிய திரையில் ரீப்ளே முறையில் காட்சி ஒளிபரப்பப்பட்டு அவர் அவுட்டா இல்லையா என்கிற விவாதம் நடந்துகொண்டிருந்தது.வழக்கத்துக்கு மாறாக தோனியின் நடை வெகு சோர்வாக இருந்தது.இந்தியாவுக்காக 350 ஒருநாள் போட்டிகள் விளையாடிய களைப்பை அவரிடம் உணர முடிந்தது.

அவர் முகத்தில் ‘போதும்’ என்கிற தன்னிறைவு உண்டாகி விட்டதாகத்தான் காண்பவர்களுக்குத் தோன்றியது.தோனி, பெவிலியனை அடையும்போது ரிசல்ட் வந்து விட்டது.ஒரு இன்ச் இடைவெளியில் தோனி ரன் அவுட்.அந்தக் கணத்தில் இந்தியா இழந்தது, அந்த உலகக் கோப்பையை வெல்லும் கனவை மட்டுமல்ல.

இந்திய கிரிக்கெட்டின் ‘பாகுபலி’ தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஆட்டத்தையும்தான்.
முன்பு ஒரு முறை பத்திரிகையாளர் ஒருவர் தோனியிடம் கேட்டார்.
“நீங்கள் எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள்?”
“நான் சரியா ஆடலைன்னு நெனைக்கிறீங்களா?”
“அப்படியில்லை. வயசு….”

“என்னைக்கு என்னாலே சரியா ஆட முடியலைன்னு நெனைக்கிறேனோ, அப்பவே ஓய்வு பெற்றிடுவேன்…”நல்லவருக்கு அழகு சொல்லாமல் போவது.அந்தப் போட்டிக்குப் பிறகு தோனி ஆடவேயில்லை.ஏன் ஆடவில்லை என்கிற கேள்வி பலத்து ஒலித்தபோது, தான் ஓய்வு பெற்றுவிட்டதாக சிம்பிளாக அறிவித்தார்.

(ஆட்டம் முடிந்தது)

- யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்