பத்மநாபசுவாமி முதல் இந்திய ஜனாதிபதிகள் வரை...பூக்களால் ஒரு மாணிக்க மாலை
அசத்தும் தோவாளை முத்தும்பெருமாள் குடும்பம்
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பூக்கள் மணக்கும் கிராமம் தோவாளை.
பூக்கள் மட்டுமல்ல, பூ கட்டும் கலைஞர்களும் நிறைந்தது இந்த கிராமம். இங்கு எல்லா வீடுகளிலும் பூ மணக்கும். ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் எல்லோருக்கும் பூ கட்டத் தெரிந்திருக்கும். எல்லோரது வாழ்விலும் பூக்கள் ஓர் அங்கமாக உள்ளன. தலைமுறை தலைமுறையாக பூ கட்டும் தொழில் இங்கு செழித்தோங்கிவருகிறது.
கேரளாவுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இங்கிருந்து பூக்கள், மலர் மாலைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பூத்துப் பறித்த ஒரு சில மணி நேரங்களில் வாடி வதங்கிப் போகின்ற பூக்கள்தான் இங்குள்ள மக்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறது. ஒரு கொத்து பூக்களை முன்னே கொட்டி வைத்தால் சில நிமிடங்களில் விதவிதமான மாலைகளாகக் கட்டி வியக்க வைக்கின்றனர். காலையிலேயே தோவாளை மலர்ச் சந்தையில் வியாபாரம் களை கட்டும். சுற்றுவட்டாரங்களில் இருந்தும், அருகே உள்ள மாவட்டங்களில் இருந்தும் பறிக்கப்படுகின்ற பூக்கள் வந்து குவிந்திருக்கும். அரளி, பிச்சி, முல்லை, சாமந்தி, சம்பங்கி, கேந்தி, ரோஜா, தாமரை, நொச்சி, துளசி என்று மணக்கும் பூக்களையும் இலைகளையும் இங்கே கொண்டுவந்து குவித்து வைத்துவிடுவார்கள்.
வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள். பண்டிகைக் காலங்களில் பூக்களுக்குக் கடும் கிராக்கி இருக்கும். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வியாபாரமும் நடக்கும். சந்தையில் இருந்து மணக்க மணக்க பூக்களை வாங்கிவந்து வீடுகளில் மாலையாகக் கோத்துத் தயார் செய்வார்கள். காவல்கிணறு - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள கடைகளில் அவற்றைத் தொங்கவிட்டு விற்பனை செய்வர்.
தோவாளையில் எல்லோரும் எல்லாவிதமான மாலைகள் கட்டினாலும் ‘மாணிக்க மாலை’ யார் கட்டுகிறார்கள் என்று கேட்டால், அவர்கள் முத்தும்பெருமாள் வீட்டைக் கை காட்டுகின்றனர். அத்தகைய சிறப்பு அந்த மாலைக்கு இருக்கிறது. அவரது தந்தை மாடசாமி முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமனிடம் இருந்து பூ கட்டும் கலைக்கான தேசிய விருதைப் பெற்றவர். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைக்க கொண்டு வரப்பட்டபோது அந்த வாகனத்தை அலங்கரித்தது மாடசாமி கட்டிய மலர் மாலைகள்தான் என்று முத்தும்பெருமாள் நினைவுகூருகிறார்.
தோவாளையில் உள்ள வீட்டில் அதிகாலையே பூ கட்டும் பணியைச் செய்து கொண்டிருந்தனர் முத்தும்பெருமாளின் குடும்பத்தினர். பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் உற்சவ மூர்த்திக்கு மாணிக்க மாலைகள் தயாராகிக் கொண்டிருந்தன. ‘‘தினமும் எங்கள் வீட்டில் இருந்து தயார் செய்யப்படுகின்ற மாணிக்க மாலைகள் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டு உற்சவ மூர்த்திக்கு சாத்தப்படுகிறது...’’ என்கிறார் குடும்பத்தில் மூத்தவரான முத்தும்பெருமாள்.
மாணிக்க மாலை பற்றிக் கேட்டதும் மனமகிழ்ச்சியுடன் விவரிக்கிறார்: ‘‘அரளிப் பூக்கள், நொச்சி இலைகள் ஆகியவற்றைக் கொண்டு மாணிக்க மாலை கட்டப்படுகிறது. வெள்ளை, சிவப்பு அரளிப் பூக்கள் இதில் பிரதானம். பச்சை நிறத்தை வெளிப்படுத்தும் வாசனையுள்ள நொச்சி இலைகளைப் பயன்படுத்துகிறோம். நான்கு நார்களைக் கொண்டு பின்னி தயார் செய்யப்படுகிறது. நான்கு நார்களையும் முடிச்சுப் போட்டு இணைத்து இரண்டு இரண்டாகச் சேர்த்து இந்த மாலை தொடுக்கப்படுகிறது.
அரளிக்கு பதில் ரோஜா இதழ்களும் பயன்படுத்தப்படுகின்றன. கோயிலுக்கு மட்டுமே மாணிக்க மாலைகள் கட்டப்பட்டுவந்தன. இப்போது திருமண விழாக்களிலும் மணமக்களுக்கு கழுத்தில் அணிகின்ற மணமாலைகளாக மாணிக்க மாலைகளும் இருக்கின்றன. ரோஜாப் பூக்களில் ஏழு விதமான வண்ணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு மணமாலைக்கு ஏற்ற பல டிசைனில் கட்டுகிறோம்.
இதன் டிசைனை அதன் அடுக்கு எண்ணிக்கையைப் பொறுத்து ‘பகளம்’ என்கிறோம். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு ஐந்து பகளம், ஒன்றே கால் அடி நீளத்தில் மாலை தொடுக்கிறோம். இங்கு வருடத்துக்கு இரண்டு திருவிழாக்கள் உள்ளன. தமிழ் மாதத்தில் பங்குனி அல்லது சித்திரையிலும், புரட்டாசி அல்லது ஐப்பசியிலும் வரும். அப்போது இரண்டு, ஐந்து, எட்டு, ஒன்பது, பத்தாம் நாள் விழாக்களில் மூன்று கடவுள் வாகனங்கள் எழுந்தருளச் செய்வர். அந்த வாகனங்களின் அலங்காரங்களில் நாங்கள் வழங்குகின்ற மாணிக்க மாலைகள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும். மாணிக்க மாலை கட்டுவதில் ஐந்து தலைமுறைகளாக நாங்கள்தான் எக்ஸ்பர்ட். அதிக அளவில் ஆர்டர் வரும்போது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து மாலைகளைத் தயார் செய்து கொடுப்போம்.
இதில் பூச்சாந்திரம், சிவலிங்கம், ஏழு தாமரை, காக்காகூடு பூசாந்திரம், அறுகோணம் என்று பல வடிவங்கள் உள்ளன. இப்போது தோவாளைக்கு சேலத்தில் இருந்து அரளிப்பூக்கள் வருகின்றன. அதனைக் கொண்டுதான் மாணிக்க மாலைகள் கட்டப்படுகின்றன. அந்தக் காலத்தில் எங்களது ஆச்சிதான் இந்த மாலைகளைக் கட்டிவந்தார். அதற்குப் பிறகு, அப்பா மாடசாமி, நான், எனது மனைவி தமிழரசி, எனது மகள்கள், பேரப் பிள்ளைகள் என்று மாணிக்க மாலைகள் ஐந்து தலைமுறைகளைத் தாண்டி தொடுக்கப்படுகின்றன.
எங்களது ஆச்சி சண்முகத்தம்மாள் மாலைகள் கட்டி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு அனுப்பிவைப்பார். அந்தக் காலத்தில் வாகன வசதி இல்லை. இதனால் ஆட்கள் நடந்தே மாலைகளைக் கொண்டு செல்வர். முதலில் திருவனந்தபுரம் அரண்மனையைச் சென்றடையும். அங்கிருந்துதான் கோயிலுக்கு எடுத்துச் செல்வர். இந்த மாலைகளைப் பார்க்கும்போது மாணிக்கப் பரல்களைக் கோர்த்துவைத்தது போன்று இருக்கும்.
இதனைப் பார்த்த மன்னர் இது என்ன மாலை? மாணிக்கங்களைக் கோர்த்தது போன்று இருக்கிறதே என்று மன்னரே அதனை மாணிக்க மாலை என்று அழைக்கத் தொடங்க அதுவே பின்னர் இதன் பெயராகிவிட்டது. ஒரு மாலை கட்ட நான்கு முதல் ஐந்து மணி நேரமாவது ஆகும். சிறிய மாலை ரூ.400 வரை விலை உண்டு. பொறுமையுடனும் நேர்த்தியுடனும் கட்ட வேண்டும்...’’ என்று விவரித்தார்.
அவ்வப்போது பள்ளி மாணவ மாணவியருக்கு பூ கட்டும் கலை தொடர்பாகப் பயிற்சி அளிப்பதையும் முத்தும்பெருமாள் வழக்கமாகக் கொண்டுள்ளார். திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் இவரது தலைமையில் 60 பேர் கொண்ட குழுவினர் நான்கு நாட்கள் தங்கியிருந்து மாணிக்க மாலை உட்பட பல்வேறு மாலைகளைத் தயார் செய்து வழங்குகின்றனர். முகேஷ் அம்பானியின் திருமண விழாவிலும் மாணிக்க மாலை இடம்பெறத் தவறவில்லை.
முத்தும்பெருமாள் தனது மனைவி தமிழரசியுடன் சென்று நான்கு நாட்கள் மும்பையில் தங்கியிருந்து மாணிக்கமாலைகள் கட்டிக்கொடுத்ததைப் பெருமையாகக் கூறுகிறார். அப்போது முகேஷ் அம்பானி வீட்டின் பூஜை அறையை இவர்களது மாணிக்க மாலைகள் அலங்கரித்தன. தமிழகத்தில் நெல்லையப்பர் கோயில், மதுரை மீனாட்சி யம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் என்று பல்வேறு கோயில்களில் இவர்களின் மாணிக்க மாலைகள் இடம்பிடித்துள்ளன.
முத்தும்பெருமாளின் மகள் வனிதா அண்மையில் சென்னையில் சீன அதிபர் ஜிங்பிங் - பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பின்போது மாணிக்க மாலை கட்டி காட்சிக்கு வைத்து தலைவர்களை வியக்க வைத்தவர். வனிதாயின் மகள், மகனும் தாய்க்கு உதவியாக மாணிக்கமாலை கட்டுகின்றனர். வனிதா கூறுகையில், ‘‘நான் பி.டெக், எம்.பி.ஏ படித்துள்ளேன். பனிரெண்டு வயதில் இருந்தே பூ கட்டும் வேலை செய்துவருகிறேன். கல்லூரி படிக்கும் காலத்தில்தான் முழுமையாகப் பூ கட்ட கற்றுத் தேர்ந்தேன். பூ கட்டும் தொழிலில் எங்களது குடும்பத்தினர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளனர். அப்பா ‘வாழும் கைவினை பொக்கிஷம்’ விருதைப் பெற்றுள்ளார்.
அம்மாவுக்கு மாவட்ட விருது கிடைத்துள்ளது. பூம்புகார் கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகத்தில் இருந்து பூ கட்டும் கலைஞர்களுக்காக எங்களது குடும்பத்தை சென்னை நிகழ்வுக்காகத் தேர்வு செய்தனர். தஞ்சாவூர் தட்டு, கல் சிற்பம், சந்தனமரச் சிற்பம், விளக்கு சிற்பம் போன்றவை தயாரித்தல் என்று ஏழு வகையான கலைகளில் சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். பூ கட்டும் கலைக்காக அம்மாவும், நானும் அழைக்கப்பட்டு சென்னை சென்றோம். பல ஒத்திகைகளுக்குப் பின்னர் நான் அமரவைக்கப்பட்டேன்.
மகாபலிபுரத்தில் அங்கு எல்லாவிதமான பூக்களையும் கொண்டுள்ள கடை அமைப்பை ஏற்படுத்தி காட்சிக்குவைக்க கேட்டுக்கொண்டனர். அதில் மாணிக்க மாலைகளும் இடம் பெற்றிருந்தது. பிரதமர் மோடி எங்கள் பகுதிக்கு வந்தபோது நமது பூக்களின் சிறப்பைப் பற்றியும், வழிபாடுகளிலும், விழாக்களிலும் பூக்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தையும் சீன அதிபருக்கு விளக்கியதை அறிய முடிந்தது.
சீன அதிபரும் சீனாவில் பூக்களின் விசேஷங்கள் பற்றி அப்போது தெரிவித்தார். பல்வேறு விதமான மாலைகளை அங்கேயே அமர்ந்து கட்டினேன். அப்போது கடையில் அமர்ந்து பிச்சிப்பூ கட்டிக்கொண்டு இருந்தேன். இதுபோன்ற நிகழ்வுகள் இந்தக் கலையைத் தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற உத்வேகத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது...’’ என்றார்.
எம்.இராஜகுமார்
ஆ.வின்சென்ட் பால்
|