பாரம்பரியம் மாறாத சித்தோரி மலைசனங்கள்
விதைத்து... வளர்த்து...ரசித்து... ருசிக்கும்...சுவாரஸ்யம்
இயற்கையோடு தொடரும் வாழ்க்கைப் பயணம்...
ஓலைக் குடிசைகளும், ஒட்டுத் திண்ணைகளும், ஒற்றையடிப் பாதைகளும், ஒப்பனையில்லா முகங்களும் மலைக் கிராமங்களின் அடையாளங்கள். நாகரிகச் சுழற்சியில் நாடு தள்ளாடும் நேரத்திலும், ரசாயனம் கலக்காத இயற்கை விவசாய யுக்தி, வனங்களை அழிக்காமல் நிலங்களை வளப்படுத்தும் சக்தி, கூட்டுக் குடும்பங்களாய் இணைந்து வாழும் புத்தி என்று இயற்கையோடு இயற்கையாய் இயங்குகிறது இங்குள்ள மக்களின் வாழ்க்கைப் பயணம். நாம் நகரத்தில் இருந்து கூவிக்கொண்டிருக்கும் பண்பாடு, கலாசாரம், மனிதநேயம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் என்று அனைத்தையும் கடைப்பிடித்து, இன்றுவரை அதற்கான ஆணிவேராய் இருப்பவர்கள் இவர்கள்.
தமிழகத்தின் பூர்வகுடிகளாகக் கருதப்படும் பழங்குடியின மக்கள் தமிழகத்தின் மலைப் பகுதிகளில் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடர்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலை, விழுப்புரம் மாவட்டத்தின் பெரியகல்வராயன், சின்னகல்வராயன் மலைகள், சேலம் மாவட்டத்தின் சேர்வராயன் மலை, பச்சை மலை, பாலமலை, நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை, ேபாதமலை, தர்மபுரி மாவட்டத்தின் சித்தேரி மலை, வத்தல் மலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி என்று இவர்களின் வாழ்விடங்கள் நீண்டுகொண்டே போகின்றன.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மலைக் கிராம மக்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. மலைக் கிராமங்களின் வனப் பகுதியில் சிறிய அளவிலான நிலங்களில் சாகுபடி செய்யும் பயிர்களைச் சமவெளிக்குக் கொண்டு வந்து விற்று, அதில் கிடைக்கும் வருமானமே இவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுகிறது. ஆனாலும் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறாமல், கண்டிப்பாக விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்க்ைகயை நகர்த்தி வருகின்றனர்.
இவர்கள் நினைத்தால் நிச்சயமாக நகரங்களுக்குக் குடி பெயர்ந்து, கிடைத்த வேலைகளைச் செய்து, வயிற்றுப் பசி தீர்த்து, நவீனங்களுக்கு அடிமையாகி நம்மில் ஒருவராக நிச்சயம் வாழ முடியும். ஆனால், இதற்கான முயற்சிகளை இந்த மக்கள் எப்போதும் எடுத்ததில்லை. நம் சமூகம் மறந்துேபான, புறந்தள்ளிய பண்பாடு, கலாசாரம், சகோதரத்துவம், மனிதநேயம் என்று அனைத்ைதயும் மனங்களில் பதித்து வாழும் பெருமைக்குரிய மனிதர்களாகவே இன்றுவரை இருக்கின்றனர்.
இந்த வகையில் ‘இயற்கையை நேசிப்போம், தூய காற்ைற சுவாசிப்போம், பாரம்பரிய உணவுகளை உண்போம்’ என்று வார்த்தைகளில் மட்டும் ஜாலம் காட்டாமல், இன்றளவும் அதனை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்கள் தர்மபுரி மாவட்டத்தின் சித்தேரி மலைக் கிராம மக்கள்.
மிக்ஸியும், கிரைண்டரும் இலவசமாகக் கிடைத்த பின்பும் ஆட்டுக் கல்லில் இடித்து, அம்மியில் அரைத்து, மண்பாண்டத்தில் வைத்து, விறகு அடுப்பில் சமைத்து உண்டு, உதாரணமாய்த் திகழ்பவர்கள் என்பது இவர்களின் பெருமைக்குரிய அடையாளம்.
தருமபுரி மாவட்டத்தின் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூன்றாயிரம் ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது சித்தேரி மலை. மாவட்டத்தின் பெரிய மலை இது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்டது என்றாலும், 30 கி.மீ தொலைவிலுள்ள அரூர்தான் இவர்களுக்கு ‘அருகாமை நகரம்’. சித்தேரி ஊராட்சியில் தோல்தூக்கி, ஜல்லூத்து, தேக்கல்பட்டி, சூரியக் கடை, பாரவளவு, குண்டல்பட்டி, பேரேரி, கலசப்பாடி, அரசநத்தம், கோட்டக்கல், கருக்கம்பாறை, மண்ணூர், கல்நாடு, எருமக்கடை, தெக்கல்தாம்பு, மாங்கடை, சண்முகபுரம், கீழநொச்சிக்குட்டை, ஜக்கம்பட்டி, அழகூர், மூலேரிக்காடு, செக்கிழுத்தாம்பூர், ஊமத்தி, குண்டல்மடுவு, சேலூர், அம்மாபாளையம் உள்ளிட்ட 62 மலைக்கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் திண்ணை உள்ளது. அந்தத் திண்ணைகளில் அம்மிக் கல்லும், ஆட்டும் உரலும், உலக்கையும் தென்படுகின்றன. முற்றங்களில் எல்லாம் விறகு அடுப்புகளில் மண்பாண்டங்களில் சமையல் மணமணத்துக் கொண்டிருக்கிறது. நொடிப் பொழுதில் வேலைகளை முடித்துக் ெகாடுக்கும் இயந்திரங்கள் எல்லாம் வீட்டு மூலைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. புதிதாக இந்த மலைக் கிராமத்துக்குச் ெசல்லும் இளைய தலைமுறை, இந்தக் காலத்தில் இப்படி ஒரு ஊரா என்று வியந்து நிற்கிறது.
இதுகுறித்து சித்தேரி மலைக்கிராம மக்கள் கூறுகையில், ‘‘இன்றைய நவீன இயந்திரங்கள் அனைத்தும், மலை கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் உள்ளன. ஆனாலும் யாரும் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. அந்த இயந்திரங்கள் நம்மை ேசாம்பேறியாக்கிவிடும் என்பதோடு, உடல்நலத்துக்கும் ேகடு விளைவிக்கும் என்பது முக்கியக் காரணம். பொதுவாகவே எங்களிடம் உள்ள மேட்டு விளை நிலங்களில் சாமை, வரகு, கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அதிகளவில் பயிரிடுகிறோம். மேலும் மூங்கில் அரிசியும் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடுகிறோம். மலைக் கிராமங்களில் இருந்து வெளியில் உள்ள வயல் வெளிகளுக்கு வேலைக்குச் சென்றால் அதற்கு சம்பளமாக ெநல்லைப் பெறுகிறோம். அதனைக் கொண்டு வந்து அரிசியாக்கிச் சமைக்கிறோம்.
இங்குள்ள கிராம மக்களைப் பொறுத்தவரை முன்னோர்களே தெய்வம். அவர்களின் சொல்லே வேதவாக்கு. அவர்கள் பின்பற்றிய உணவு முறைகளே எங்களுக்கான ஆரோக்கியம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்த வகையில்தான் அனைத்து வீடுகளிலும் அம்மிக் கல்லும், உரலும், உலக்கையும், ஆட்டுக்கல்லும் இருக்கின்றன. சமைப்பதற்குக்கூட பெரும்பாலும் கிணற்று நீரையே பயன்படுத்துகிறோம்.
எளியவர், வலியவர் என்று எல்லா மனிதரும், வாழ்க்கையின் எல்லா வசதிகளையும் பெற வேண்டும் என்பதற்காகவே உழைத்து வருகின்றனர். ஆனால், அந்த உழைப்புக்கும், வாழ்க்கையின் ஓட்டத்துக்கும் முக்கியமானது உணவு. அந்த உணவானது வயிற்றுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் நிறைவானதாக இருக்க வேண்டும். அது மனதுக்கு நிறைவாக இருக்க வேண்டுமானால் நாமே அரைத்து, நாமே சமைத்து அன்புடன் பரிமாறி உண்ண வேண்டும். இதில் முடிந்தவரை எந்த இயந்திரத்துக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதன் காரணமாகவே, ேபாதிய மருத்துவ வசதிகள் இல்லாத நிலையிலும் எங்களது உடல்நலம் அதிகம் பாதிக்காமல் இருக்கிறது என்று நம்புகிறோம்’’ என்றனர்.
நோ வரதட்சணை
முதியவர் சின்னாண்டி கூறுகையில், ‘‘மலைக் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருந்தாலும், எல்லாரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். வறுமை, பிரச்சினை என்று வரும்போது எல்லோரும் சேர்ந்து அவங்களுக்கு உதவியாக இருப்போம். இதேபோல் வரதட்சணை வாங்கும் வழக்கமும் எங்களிடம் கிடையாது. பொண்ணு மாப்பிள்ளை சம்மதத்தைக் கேட்போம்.
அவர்களுக்குப் பிடித்திருந்தால் திருமணம் முடிப்போம். பெற்றவர்கள் சொல்லும் வரன்களுக்கு எந்த பெண்ணோ, ஆணோ மறுப்பு சொல்வதில்லை. திருமணத்துக்கு அப்புறமும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்கிறோம். தவிர்க்க முடியாமல் வேலை தேடி ெவளியூர் செல்பவர்கள் மட்டுமே, எங்கள் இனத்தில் தனிக் குடித்தனம் நடத்துவார்கள்...’’ என்றார்.
சிசேரியன் அறவே இல்லை!
மலைக் கிராமப் பெண்மணி முத்துமணி கூறுகையில், ‘‘இப்போ எல்லாம் எங்க பார்த்தாலும் கர்ப்பிணிகளை ஆபரேஷன் செஞ்சுதான், குழந்தையை எடுக்கிறதா சொல்றாங்க. எங்க ஊருல, கர்ப்பம் தரிக்கிற யாருக்கும் இதுவைரை ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியமே வந்ததில்ைல. எல்லாருக்குமே சுகப்பிரசவம்தான். உரலில் ஆட்டி, அம்மியில் அரைத்து, உலக்கையில் இடிச்சு சாப்பாடு செய்கிறோம். மலையடிவாரத்தில் இருந்து இடுப்பில் தினமும் தண்ணிய தூக்கிட்டு வருகிறோம். இந்த வேலையெல்லாம் அதிகாலையில் முடிச்சிட்டு அப்படியே காட்டு வேலைக்குப் போகிறோம். இந்த வேலைகள் எல்லாத்துக்கும் ஆண்களும் துணையா இருக்காங்க. அதனால எந்த குடும்பத்திலயும் பிரச்சினைகளும் இல்லை...’’ என்றார்.
மூத்தவர்கள்தான் எங்கள் வழிகாட்டி
மலைவாழ்மக்கள் குழு நிர்வாகி வெங்கடேஷ் கூறுகையில், ‘‘எங்கள் மலைக் கிராமத்தைப் பொறுத்தவரை எந்த சூழலிலும் செயற்கை உரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் வளர்க்கும் கால்நடைகள் கொடுக்கும் சாணம் மற்றும் இலைகள், சருகுகளின் கழிவுகள் போன்றவற்றையே உரமாகப் பயன்படுத்துகிறோம். அதே போல் நெல்லைவிட, உடலுக்கு வலு சேர்க்கும் சாமை, ராகி, கம்பு ேபான்றவற்றை அதிகளவில் உணவாக பயன்படுத்துகிறோம். இதேபோல் வருடத்துக்கு ஒரு முறை கிடைக்கும் மூங்கில் அரிசியையும் சமைத்து உண்ணுகிறோம். இதனால் எங்கள் கிராமத்தில் 95சதவீதம் பேர், உடல்நலப் பாதிப்புகள் குறித்த எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்கின்றனர். பெரியவர்களின் உணவு முறையும் ஆரோக்கியமும் எங்களுக்கு நேரடி வழிகாட்டியாக இருப்பதால், அதைப் பின்பற்றி வாழ்கிறோம்...’’ என்றார்.
குழந்தைகள் பாலினப் பாகுபாடு பார்ப்பதில்லை
மூதாட்டி உண்ணாமுலை கூறுகையில், ‘‘கரியராமரும், திருவண்ணாமலையாரும் எங்கள் குலதெய்வங்கள். மலைக் கிராமங்களின் காவல் தெய்வங்களாகவே அவர்களைக் கருதுகிறோம். இதன் காரணமாக ஒவ்வொரு குடும்பத்திலும் பிறக்கும் ஆண் குழந்தைக்கு அண்ணாமலை என்று பெயர் வைப்போம். பெண் குழந்தை பிறந்தால் உண்ணாமுலை என்று பெயர் வைப்போம். இதனால் ஊரில் 70 சதவீதம் பேருக்கு பெயர் அண்ணாமலை, உண்ணாமுலை என்றே இருக்கும். கருவில் இருக்கும் குழந்தையை ஆணா? பெண்ணா? என்று டாக்டர்களிடம் கேட்கும் வழக்கும் இதுவரை எங்களிடம் இல்லை. எல்லா குழந்தையும் கடவுளின் வடிவம் என்பது எங்களின் நம்பிக்கை...’’ என்றார்.
முன்னுதாரணம்
பட்டதாரி வாலிபர் பிரதாப் கூறுகையில், ‘‘மலைக் கிராம இளைஞர்கள் நன்றாகப் படித்து முடித்து பட்டம் வாங்குவது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. ஆனால், எங்களுக்குரிய இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடாக உள்ளது. இதனால் வேலை கிடைப்பது பெரும் சிரமம். இதன் காரணமாகக் கூலி வேலைகளுக்கே செல்கிறோம். அதேபோல் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களும் அது குறித்த விழிப்புணர்வும் இல்லாதது வேதனை. ஆனாலும், இன்று சமூகத்துக்குத் தேவையாக உள்ள அனைத்து விழிப்புணர்வுகளுக்கும் நாங்கள் முன்னுதாரணமாக இருப்பதும், அதைப் பின்பற்றி வாழ்வதும் மிகவும் பெருமையாக உள்ளது...’’ என்றார்.
செய்திகள்: ஜி.காந்தி, ஹெச்.மாது
படங்கள்: ஜெகன்
|